Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
செப்டம்பர் 2006
சாதாசிவம் கமிஷன் அறிக்கையும் காலதாமதமாகும் நிவாரணமும்

ராஜசேகரன்

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத மானியக் கோரிக்கைகள் மீதான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப் பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் பட்ஜெட் மீதான கருத்துக்களையும் உடனடியாக உள்வாங்கிக் கொண்டு பெரும்பாலான கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்களை முதல்வர் அளித்து வருகிறார்.

இந்நிலையில் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவபுண்ணியம் அவர்கள், ‘தமிழக கர்நாடக கூட்டு அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிபதி சதாசிவம் கமிஷன் பரிந்துரைத்த நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்’என்றொரு கோரிக்கையை முன்வைத்தார்.

பின்னர் உரை நிகழ்த்திய முதல்வர் அவர்கள் ‘அதிகாரிகளை கலந்து பேசி, தமிழக நிதிநிலையைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு உதவி செய்யும்’என்று தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்கள் யார் யார் என்பதை அடையாளம் காண்பதில் பல்வேறு பிரச்சினைகள் இன்றைக்கு எழுந்திருக்கிறது. ஏனெனில் கூட்டு அதிரடிப்படையினரின் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளான பலர் அவமானம் கருதியும் அரசு இயந்திரத்தின் கொடூரம் கருதியும் தங்களை மறைத்துக் கொண்டனர். 197 பேரை மட்டுமே விசாரித்து, அதனடிப்படையில் அறிக்கை தயார் செய்து, சதாசிவம் கமிஷன் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தனது அறிக்கையை அளித்தது. 2003ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகள் இன்று வரைக்கும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறது.

தமிழக எல்லையான மேட்டூரிலிருந்து 30கி.மீ. தொலைவில் கர்நாடகத்தின் எல்லைக்குள் உள்ளது மாதேஸ்வரன் மலை எனும் கிராமம். ‘வீரப்பன் காடு’என்று அதிரடிப்படையினரால் அறிவிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 12 லட்சம் மக்கள் வசித்து வந்துள்ளனர். இந்த ஊர் தமிழ் மக்களின் குல தெய்வமான மாதேஸ்வரன் கோயிலுக்குப் பின்புறமுள்ள கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் தான் ‘ஒர்க் ஷாப்’எனும் சித்திரவதைக் கூடம் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டனர்.

மாதேஸ்வரன் மலைப்பகுதி மக்கள் மீதான தொடர்ச்சியான மீறல்களையும், கொடூரங்களையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அஞ்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற பெண்மணி மற்றும் ‘டெக்கான் ஹெரால்டு’என்ற பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு பெங்களூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் ஆகியோர் மனித உரிமை ஆணையத்திற்கு புகார் மனுவை அனுப்பினர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் (பவானி), கர்நாடக மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழக மக்கள் சிவில் உரிமைக் கழகம், கர்நாடகாவைச் சேர்ந்த ‘சிகரம்’அமைப்பு, சோகோ அறக்கட்டளை, பெங்களூரைச் சேர்ந்த இந்திய சமூக நிறுவனம் (மனித உரிமைப் பிரிவு), மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகம் - தமிழ்நாடு போன்ற அமைப்புகள் தொடர்ந்து கள ஆய்வு செய்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார்களை அனுப்பி வைத்தது. இதைப் பரிசீலித்த ஆணையம் நீதிபதி சதாசிவம் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்தது. இதைத் தொடர்ந்து 2000ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இக்கமிஷன் தனது பணியைத் தொடங்கியது.

1999ஆம் ஆண்டு ஜுலை மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் முன் வாக்குமூலம் அளித்தவர்களைப் பொறுத்த வரை அதிரடிப் படையினரால் பாதிப்புக் குள்ளானவர்களில் ஒரு பகுதியினரே.

கண், காது, மூக்கு, மார்பு, பிறப்புறுப்பு என உடலின் துவாரப் பாகங்களிலெல்லாம் மின்சார ஷாக் கொடுக்கப்பட்டும், கை, கால்களை கட்டிப்போட்டு நிர்வாணப் படுத்தி, பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்டதும் இந்த ‘ஒர்க் ஷாப்’ எனப்படும் சித்திரவதைக் கூடத்தில் தான். உடல் மற்றும் மனரீதியான இக்கொடூரத் தாக்குதலில் இருந்து இப்பகுதி மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ‘வீரப்பனுடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக்’கூறி கொலை செய்யப் பட்டவர்களின் குடும்பம் இன்றைக்கு நடுத் தெருவில் நிற்கிறது. விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளான இளம் பெண்கள் வாழ வழியின்றி அலைவது வேதனையின் உச்சகட்டம்.

1000க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில், ‘தடா’கைதியாக தமிழக காவல் துறையால் 122 பேர் மட்டுமே அறிவிக்கப் பட்டனர். சுட்டுக் கொன்றும் சித்திரவதையால் இறந்தும் போன குடும்பங்கள் காவல்துறை அறிக்கையால் பதிவு செய்யப் படாமல் வீரப்பன் கும்பலாகவே அடையாளப்படுத்தப்பட்டனர். வீரப்பன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின்னர் அதிரடிப் படையினருக்கு பதவி உயர்வும், வெகுமதியும் வழங்கப்பட்டது. ஆளும் வர்க்கத்தால் வீரப்பன் கும்பலை அழிப்பதாகக் கூறி, அப்பாவிப் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் களை வேடிக்கை பார்த்தன ஊடகங்கள்.

மலைப்பகுதி மக்கள் மீது குற்றம் எதுவுமில்லை என நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு உண்டான மன உளைச்சலுக்கு காவல் துறை என்ன பதில் சொல்லப் போகிறது?

‘வீரப்பனுக்கு உதவியவர்கள்’, ‘தகவல் கொடுத்தவர்கள்’என்று அதிரடிப்படையினரால் குற்றம் சுமத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இன்று தவறிழைக்காதவர்கள் என நிரூபணம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் வாழ்க்கையை இழந்து விட்ட அவர்களுக்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது?

கொடூர தாக்குதலுக்கு உள்ளான மாதேஸ்வரன் மலை மக்களை அவர்களின் உறவினர்களே வெறுத்து ஒதுக்கும் நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறு வாழ்வு குறித்து பிரச்சாரம் செய்யும் ஜனநாயக அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர்.

1. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

2. மனித உரிமை மீறல் குற்றம் செய்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.

3. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

4. வீரப்பன் இறந்து விட்ட சூழலில் மக்களை இன்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய சிறப்பு அதிரடிப்படை உடனடியாக கலையப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முக்கியமானவை.

ஆனால் இன்றைக்கு வரைக்கும் குற்றமிழைத்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே போல் சிறப்பு அதிரடிப்படை கலைக்கப்படாமல் தர்மபுரி, மேட்டூர் போன்ற முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். வீரப்பனைத் தொடர்ந்து தமிழ்த் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் என்று கூறிக் கொண்டு தர்மபுரி காடுகளில் சோதனை மேற் கொள்ளப்படுவதும் அப்பகுதி மக்களை அச்சுறுத்துவதும் நடந்து கொண்டேயிருக்கிறது.

தமிழக அரசும் கர்நாடக அரசும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது, தலா 5 கோடி சிறப்பு ஒதுக்கீடு செய்து, சிறப்பு அதிரடிப் படையினரின் சித்திரவதையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு தருவதாக உறுதியளித்தன. ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்ட பிறகு, பல வகையில் பலருக்கும் பணம் கைமாறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இன்றைக்கு வரைக்கும் அரசுத் தரப்பிலிருந்து எந்த உதவியும் பாதிக்கப்பட்ட அந்த மக்களைச் சென்றடையவில்லை.

மேலும் சிறப்பு அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்டோருக்கு எந்தவொரு நன்மையும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் மூலமாகவோ, மாநில மனித உரிமை ஆணையத்தின் மூலமாகவோ, நீதிபதி சதாசிவம் விசாரணைக் குழுவின் மூலமாகவோ, இருமாநில அரசுகளின் மூலமாகவோ போய்ச் சேரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த உண்மைகளை கலைஞர் தலைமையிலான தமிழக அரசு கவனத்தில் கொண்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்ய வேண்டும். அதே நேரம் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மக்களை சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக மாற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டு வாழவழியின்றி நிர்க்கதியாய் நிற்கும் அவர்களை சொந்தக்காலில் சுயமாக நிற்க வைத்து, விடுதலை பெற்ற மனிதர்களாக, சித்திர வதைகளை எதிர்க்கும் மனிதர்களாக மாற்ற வேண்டியது சமூகத்தில் அக்கறையுடையோரின் வேண்டுதலாக உள்ளது. அதை இச்சமூக மனிதர்கள் செய்ய வேண்டும். செய்வார்கள் என்றே நம்புவோம்.

சதாசிவம் கமிஷன் அறிக்கை

1. தமிழக - கர்நாடக எல்லைப்புற மாவட்டங்களான ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 1990ல் வீரப்பனின் நடவடிக்கைகள் அதிகரிப்பு.

2. 1993ல் தமிழக - கர்நாடக கூட்டுச் சிறப்பு அதிரடிப்படை அமைப்பு. (அதன் தமிழகத் தலைவர் வால்டர் தேவாரம், கர்நாடகம் - சங்கர் பித்ரி)

3. 1997ல் மைசூர் சிறையில் வீரப்பன் கூட்டாளிகள் என அதிரடிப்படையால் கூறப்பட்ட 121 நபர்கள் தடா குற்றச்சாட்டில் கைது.

4. இதில் 70 நபர்கள் 3 ஆண்டு சிறைக்குப் பின் பிணையில் விடுவிப்பு.

5. மற்ற 51 நபர்கள் சிறையிலேயே வைக்கப்பட்டனர்.

6. இவர்களுக்கு விசாரணை பிணை மற்றும் பரோல் போன்ற உரிமைகள் மறுப்பு.

7. 1998ல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 3 எம்.பிக்கள் 3 எம்.எல்.ஏக்கள் வேண்டுகோளுடன் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனுச் செய்தார்.

8. 1999ல் நீதிபதி சதாசிவா கமிஷன் அமைப்பு.

9. 2000 ஜனவரியில் முதல் கட்ட விசாரணை, ஈரோடு, கோபியில் துவக்கம்.

10. 2000 பிப்ரவரியில் மேட்டூர், கொளத்தூரில் நடைபெற்றது.

13. 3.2000ல் கர்நாடகத்தின் மாதேஸ்வரன் மலையில் விசாரணை துவங்கும் நேரம் கர்நாடக அதிரடிப் படையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரி முத்தரைய்யா சதாசிவா கமிஷன் விசாரணை நடைபெற தடையுத்தரவு பெற்று சமர்பித்தார்.

30.7.2000 கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் கடத்தல்.

8.8.2000 நீதிபதி சதாசிவா குழு விசாரிக்க இருந்த தடை விலக்கப்பட்டது. மீண்டும் தடையாணை பிறப்பிப்பு.

10.8.2000 மைசூர் சிறையிலிருந்த 51 தடா கைதிகள் உள்ளிட்ட 121 பேரின் தடா வழக்கு திரும்பப் பெறுவதாக கர்நாடக அரசு அறிவிப்பு.

19.8.2000 மைசூர் சிறப்பு நீதிமன்றம் தடா வழக்கை அரசு திரும்பப் பெற ஒப்புதல்.

25.8.2000 மைசூர் சிறையிலிருந்த 51 தடா கைதிகளுக்கு பிணை - ராஜ்குமார் விடுவிப்பு.

2003ல் நீண்ட விசாரணைக்குப் பின் நீதிபதி சதாசிவா குழு தேசிய மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை சமர்பித்தது.

2004 - மைசூர் தடா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை. 121 பேரில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு. 108 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுதலை.

2004 ஜனவரி தண்டனை பெற்ற 8 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.

29.1.2004 - உச்ச நீதிமன்றம் பாலாறு வெடிகுண்டு தொடர்பான மேல் முறையீட்டில் 4 நபர்களுக்கு தடா நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்ததுடன், அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தண்டனையை அதிகரித்தது.

2004 பிப்ரவரி - கர்நாடக ஆளுநரிடம் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட 4 கைதிகள் சிறை அதிகாரிகள் மூலம் கருணை மனு சமர்பித்தல்.

2004 ஏப்ரல் - உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு சமர்பித்தல். இதன் காரணமாக மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

2006 ஜுலை - தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் சி.பி.ஐ. உறுப்பினர் சிவபுண்ணியம் அதிரடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க தமிழக அரசிடம் கோரிக்கை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com