Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
செப்டம்பர் 2006
புளூட்டோ

செந்தீ நடராஜன்

இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடில்லை. அறிவியல் அச்சில் ஒரு போலி அறிவியல் (pseudo science) பேசப்பட்டு வருகிறது. அது படிப்பவர்களை நம்பவைத்து விடுகிறது.

Solar System பகுத்தறிதல் என்ற முறையியல் - அறிவியல் அணுகுமுறை நம் பாடத் திட்டத்தில் இடம் பெறவில்லை. இப்போது ஒரு செய்தி வலம் வருகிறது. வானியல் அறிஞர்கள் ‘புளூட்டோ’வை கிரகம் என்ற அந்தஸ்த்தில் இருந்து நீக்கி விட்டார்கள். நம் நாட்டில் செய்தி பத்திரிகைகளுக்கு இது ஒரு தீனி. நம் சோதிடம் என்னாவது என்ற கேள்வி. நவகிரகத்தில் ஒன்று குறைந்து விட்டதே என்னாகும் என்ற பதைபதைப்பு.

சோதிடம், வானியல் அறிவியல் இரண்டும் ஒன்று என்ற மாயாவாதமே இதற்கு காரணம்.

முதலில் அறிவியல் கோணத்திலிருந்து இதை அணுகலாம். புளூட்டோ கிரமில்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டதால், நிச்சயமாக புளூட்டோ ‘இனி நான் சூரியனை சுற்றமாட்டோன்’ என்று கோவித்துக் கொண்டு சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே போய்விடப் போவதில்லை. அது சூரியனிடம் டூ விட்டுக் கொண்டு சூரியனைப் போன்று வேறொரு நட்சத்திரத்தைத் தேடி குடித்தனம் போகப் போகிறேன் என்று கோபித்துக் கொள்ள போவதில்லை. அது தொடர்ந்து சுற்றிவரத்தான் போகிறது.

கிரகம் அல்லது கோள் என்பதற்கான வரையறை சூரியனை சுற்றி வருவது என்பதே. ஒரு கிரகத்தை சுற்றிவருது துணைக்கோள் எனப்படும் நம் சந்திரனைப் போல. இந்தத் துணைகோளும் கோளை சுற்றிக் கொண்டே சூரியனையும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

சூரியனை சுற்றிவரும் கோள்கள் ஒன்பது என்று நாம் சொல்லி வருகிறோம். (சோதிடம் சொல்கின்ற நவகிரகத்துக்கு பின்னர் வருவோம்) அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ இதுதவிர ஏராளம் சிறு துகள்கள் பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை மிகச்சிறியவை. சில நூறு, இருநூறு கிலோ மீட்டர் குறுக்களவு உடையவை. ஆகையால் அவற்றை கிரகக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. வசதிக்கு சிறுகிரகம் என்று சொல்வதுண்டு.

அதே வரையறையின் அடிப்படையில் தான். மிகச்சிறியதாக இருக்கும் புளூட்டோவுக்கு கிரக அந்தஸ்து அளிக்கத் தேவையில்லை என்று வானியிலார் மாநாடு கூட்டி முடிவு செய்திருக்கிறார்கள் அவ்வளவே. இதில் சூரியனை சுற்றும் பிறகோள்கள் தனித்தனி சுற்றுப் பாதையில் சுற்றுகின்றன. அவற்றின் சுற்றுப் பாதைகள் ஒன்றையொன்று குறுக்கிடுவதில்லை. ஆனால் புளூட்டோவின் சுற்றுப்பாதை நெப்டியூனின் சற்றுப்பாதையை குறுக்கிடுகின்றது. அதாவது இப்பொழுது புளூட்டோ நெப்டியூனுக்கும் யுரேனசுக்கும் உள்ளே வந்திருக்கின்றது. இந்தக் காரணத்துக்காகவும் அதை கிரகமாக கருத விரும்பவில்லை. இவ்வாறு நீள்வட்ட கோள்களாக கிரகங்களின் வட்டப்பாதையை குறுக்கிட்டு சுற்றிவரும் மற்றொரு வானியல் கோள் வால் நட்சத்திரங்கள்.

இனி நம்மூர் விசயத்துக்கு வருவோம். நம் சோதிடம் - நவகிரக வழிபாடுகளில் குறிப்பிடப்படும் நவகிரகங்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் (வெள்ளி), செவ்வாய், வியாழன் (குரு), சனி, ராக, கேது ஆகியவை.

இவற்றுள் சூரியன் நட்சத்திரம். சந்திரன் உபகிரகம், ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்களே தவிர உண்மையான கிரகங்கள் அல்ல. எனவே நம்மூர் நவகிரகத்தில், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்கள்தான் வானியல் கிரக கணக்குப்படி கிரகங்களாகின்றன. உண்மையான கிரகங்களாக இருக்கின்றன.

கிரகங்களில் ஒன்றான பூமி நவகிரக கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. திருக்கணி பஞ்சாங்கத்தார் யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவை இணைத்து கணித்துக் கொண்டிருப்பதாக அறிகிறோம். அதன் முழுவிபரமும் தெரியவில்லை. இன்னொன்றையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய வானியல் அறிவுப்படி மற்றும் சேதிட அறிவுப்படி இவையெல்லாம் பூமியை மையமாகக் கொண்டு சுற்றுவதாக கருதுகிறோம். அதாவது ஜியோ சென்டிரிக் (Geo Centric). ஆனால் சூரியக் குடும்பம் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றுவது (Solar Centric). வானியல் அறிவிலும் கூட கி.பி. 1500 வரை ஜியோ சென்ட்டிரிக் அடிப்படையிலேயே இருந்தது.

எனவே நம்மூர் ஜோதிட கணிதங்களில் புளூட்டோவை நாடு கடத்தியது ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. முழு பூசணிக்காயாக பூமியையே நவகிரகங்களில் சேர்த்துக் கொள்ளாதது நம்முடைய சோதிடம். கிரகமாய் இல்லாத சூரியனையும், சந்திரனையும் பொருளாக இல்லாத நிழலாகிய ராகுவையும் கேதுவையும் இணைத்துக் கொண்டிருப்பது உள்ளூர் நவகிரகங்கள். எனவே நம்முடைய சோதிடங்கள் தொடர்ந்து தம்முடைய ‘திருப்பணிகளை’செய்து கொண்டிருப்பதில் தடையேதும் வரப்போவதில்லை.

அவர்களின் சோதிட கணக்குப்படி சோதிடமானது வானியல் அறிவியலைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடங்குகிறது. ஆனால் அவற்றில் மனிதனை முடிச்சுப் போடும் விதத்தில் முற்றாக கற்பனை வாதமாக அல்லது ஆன்மீக வாதமாக முடிந்து போய்விடுகிறது.

பனிரெண்டு ராசிகளால் ஆன நட்சத்திர கூட்டங்களின் ஊடே. சூரியனின் பயணத்தை மற்றும் கிரகங்களின் பயணத்தை, கணிப்பதெல்லாம் சரி. அவை எப்படி தனிமனிதனை பாதிக்கிறது என்பதற்கு அறிவியல் விளக்கம் கிடையாது. கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இயங்கும் கிரகங்கள் அதைவிட பலகோடி மடங்கு தூரங்களில் உள்ள நட்சத்திரங்கள் என்னும் நெருப்புக் கோள்கள் மனிதனின் சமூக செயல்பாடுகளில், குடும்ப உறவுகளில், பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பேச வேண்டுமானால் அவற்றை தெய்வமாக்கித்தான் பார்க்க வேண்டும் வானியல் பொருட்களாக பார்க்க இயலாது.

கோள்கள் பூமியைப் போல் மண், கல் போன்றவற்றால் ஆனவை. நட்சத்திரங்கள் நெருப்பு வாயு கோளங்கள் ஆனவை என்ற அறிவியலை ஒப்புக் கொள்வதானால் கோள பகவான்களை அங்கீகரிக்க முடியாது.

இந்து இரண்டுங்கெட்டான் தன்மையிலிருந்து போலி அறிவியல் பேசுபவர்கள் விடுபடுவது நல்லது. இல்லையென்றால் இவர்கள் சமூகத்தில் வழிபடும் திருப்பணிக்கு அறிவியல் முகமூடி அணிகிறார்கள் என்றாகிறது. மொத்தத்தில் புளூட்டோ செய்தி அறிவியலிலும் எந்த பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நம்மூர் சோதிடத்திலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com