Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
செப்டம்பர் 2006
நட்வரை வீழ்த்திய அமெரிக்க ஜால்ராக்கள்
ஜே.பி. அர்ச்சனா

ஈராக் எண்ணைக்கு உணவு திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அதில் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் வெளியான வால்கர் கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து எழும்பிய அமளி; அது குறித்து ஆராய இந்தியாவில் அமைக்கப்பட்ட பாதக் கமிட்டி தன் அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்பித்ததன் மூலம் புத்துயிர் பெற்றுள்ளது.

ஐ.நா. அமைப்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டறிய அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் வால்கர் கமிட்டி தன் அறிக்கையில் உலகின் பலநாடுகளின் தலைவர்களையும் அந்த ஊழலில் தொடர்புடையதாகக் கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பலநாடுகள் அவ்வறிக்கையை அலட்சியப்படுத்திய நிலையில் இந்தியாவில் இப்பிரச்சனை பெரும் விவாதத்தினை கிளப்பியுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சிகளில் அலசல்கள், விவாதங்கள் என தூள்பறக்க பிரதான எதிர்க்கட்சி பா.ஜ.க. ‘வெளிநாட்டு’ சோனியாவை குறிவைத்து காய் நகர்த்துகிறது.

இத்தனை பரபரப்புக்கிடையே எதார்த்த பிரச்சனை குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சதாம் உசேனிடமிருந்து எண்ணெய் வாங்கிக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு முதல் பணம் கைமாறியது குற்றமல்ல; ஆனால் வருமானவரி செலுத்தவில்லை என்பது வரையிலான குற்றச்சாட்டுகள் நட்வர்சிங் மீதும், பணம் பெற்றுக் கொண்டு சதாம் உசேனை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது எனவே அதற்கு அதன் தலைவி சோனியா பொறுப்பேற்க வேண்டும் என்பது முதல் சோனியா நாட்டை விட்டு வெளியேறினால்தான் பிரச்சனை தீரும் என்பது வரையும் விவாதங்கள் நீள்கின்றன.

அமெரிக்கா ஈராக்கை எதிர்த்து ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடங்குவதற்கு கூறிய பிரதான காரணங்கள்; * ஈராக் பேரழிவு ஆயுதங்களை பெருமளவு வைத்துள்ளது. * அந்நாடு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. * எண்ணெய்க்கு உணவு திட்டத்தை துஷ்பிரயோகம் செய்தது போன்றவையாகும்.

இவற்றுள் பேரழிவு ஆயுதங்கள் குறித்த குற்றச்சாட்டு இட்டுக் கட்டப்பட்ட பொய் குற்றச்சாட்டு என சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு விட்டது. இங்கிலாந்து நாட்டு இராணுவ உளவுத் துறையின் தகவலடிப்படையில் ஈராக்மீது குற்றம் சாட்டியதாக அமெரிக்காவும், தாங்கள் அமெரிக்க சி.ஐ.ஏ. அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டதாக இங்கிலாந்தும் தங்களுக்கிடையில் நெஞ்சிலடித்துக் கொள்கின்றன.

ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு பின் அமெரிக்க / அமெரிக்க சார்பு ஈராக் ஆட்சிக் காலத்தில்தான் ஈராக்கில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் எழுச்சி பெற்றிருக்கின்றன. இது அமெரிக் காவின் இரண்டாவது குற்றாச் சாட்டை பொய்த்து விட்டது.

எனவே குறைந்த பட்சம் எண்ணெய்க்கு உணவு ஊழல் குற்றச்சாட்டையாவது நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக் காவுக்கு. அத்துடன் தம்மிடம் மிகக் குறைந்த அளவிலாவது முரண் பட்டு தர்ம சங்கடத்தை உருவாக்கும் ஜ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும். அதற்காக அது தேர்ந்தெடுத்த ஆயுதமே வால்கர் கமிட்டி.

வளைகுடாவில் குவைத் ஈராக் யுத்தத்திற்குப் பின் குவைத்திற்கு ஆதரவாக போரிட்ட அமெரிக்க தலைமையிலான நேசநாடுகள் சதாம் உசேனை பதவி விலகச் செய்ய பல்வேறு உத்திகளை மேற் கொண்டன. அதிலொன்று ஐ.நா. சபை மூலமாக ஈராக்கிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பொருளாதாரத் தடை. சுமார் எட்டு ஆண்டுகள் நீடித்த இந்த தடை காலத்தில் ஈராக்குடன் மற்ற உலகநாடுகள் வர்த்தகம் செய்வது தடை செய்யப்பட்டது. உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட எந்தப் பொருளையும் ஈராக்கிற்கு விற்பதோ, வழங்குவதோ தடை செய்யப்பட்டது.

வளைகுடாவினை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் அமெரிக்க கப்பல்கள் சுற்றிவந்து அவ்வழியே வரும் கப்பல்களை சட்டாம் பிள்ளைத் தனமாக வழிமறுத்து ஈராக்கிற்கு பொருள் கொண்டு செல்லப்படுகிதறதா என சோதனை இட்ட காலகட்டமிது.

இந்த வியாபாரத் தடை காரணமாக ஈராக்கிய மக்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத கடுந்துயர்களை சந்தித்தனர். உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்தும் ரேசன் மூலமாக வழங்கப்பட்டது. ஈராக்கிய மக்கள் தொகையில் 60ரூ பேர் இவ்வகை ரேசன் மூலமாக உயிர் வாழ்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில் உணவு மருந்து கிடைக்காமல் இரண்டு கோடியே அறுபது லட்சம் மக்களில் சுமார் பதினைந்து லட்சம் பேர் உயிரிழந்தனர். இதில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள், ஐந்து வயதிற்கு குறைவான பிஞ்சுக் குழந்தைகள் இறந்தனர். இந்தக் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தவுடன் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாக முற்றிலும் பொருளாதாரத் தடை நீக்கப்பட்டு உணவுக்கு எண்ணெய் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. ஈராக் ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெய்யை விற்க அனுமதிக்கப் பட்டது. அதில் கிடைத்த தொகை ஐ.நா. சபை வசம் இருக்கிறது. இத்தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு ஈராக்கிற்கு உணவு மற்றும் மருந்து வாங்கவும், மூன்றில் ஒரு பங்கு ஈராக் மீது போர் தொடுத்தால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட செலவை ஈடுகட்டவும் ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு விற்கப்பட்ட எண்ணெய் உலகச் சந்தையின் எண்ணெய் விலையை விட மிகக் குறைவானதாக இருந்ததும் இதில் கிடைத்த வருமானம் செலவுகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லாததாலும் ஈராக் அரசு எண்ணெய் விற்பனை மீது சில வரிகளை விதித்தது. இந்த வரிகளை ஐ.நா. அங்கீகரிக்காததால் தனக்கு ஆதரவானவர்களுக்கு, அவர்கள் வரியை செலுத்த தயாராக இருந்தால், ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெய்க்கான கோட்டாவினை ஈராக்கிய அரசு ஒதுக்கியது.

இந்த வரிகளை செலுத்தியவர்களைத்தான் லஞ்சம் வழங்கியவர்கள் என வால்கர் அறிக்கை குறிப்பிடுகின்றது. ஈராக்குடன் வர்த்தகத்துடன் ஈடுபட்டவர்களில் அமெரிக்க, பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனங்கள், இந்தியாவின் ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம், அரசு வர்த்தகக் கழகம் ஆகியவையும் அடங்கும். இவ்வாறான எண்ணெய் வர்த்தகத்தில் நட்வர்சிங் மகனின் நண்பர் ஒருவர் ஈடுபட்டார் என்பதுதான் நட்வர்சிங் மீதான குற்றச்சாட்டு.

தனக்கு இது தொடர்பான பண பரிவர்த்தனையில் தொடர்பில்லை என்ற விளக்கத்தினை அளிக்க போதுமான அவகாசம் தரப்படவில்லை என்பது நட்வர் சிங்கின் வாதம்.

மேலும் நிகழ்ச்சி நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தது பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி. அக்கூட்டணி ஆட்சியின் சார்பாக ஈராக்குடனான வர்த்தகத்தை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவிலிருந்து கோதுமை, தேயிலை போன்றவை ஈராக்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பாரதீய ஜனதா ஆட்சியின் பெட்ரோலிய துறை அமைச்சர் ஈராக்கிற்கு விஜயம் செய்தார்.

வால்கர் அறிக்கையைத் தயாரித்த மூவர் குழுவின் தலைவர் பால் அடால்ஸ் வால்கர். ஓர் அமெரிக்க அரசு அதிகாரி. அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவராக அமெரிக்க பொருளாதார கொள்கைகளை வகுப்பதிலும் செயலாக்குவதிலும் முக்கிய பங்காற்றியவர். மற்றொரு உறுப்பினர் ரிச்சர்டு கோல்டு ஸ்டோன். தென் ஆப்பிரிக்க நீதிபதியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்று அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்று கிறார். ‘அமெரிக்காவில் வாழ்வதற்காக விருப்ப ஓய்வு பெறுவதாக’ தன்னுடைய பிரிவு உபச்சார விழாவில் புளகாங்கிதத்தோடு கூறியவர். மூன்றாவது உறுப்பினர் மார்க் பியத் என்பவரும் அமெரிக்க கொள்கைகளுக்கு ஆதரவாளர்.

இக்குழுவில் பணியாற்றிய மற்ற அலுவலர்களும் பெரும்பாலானர்கள் அமெரிக்கர்கள். சிலர் அமெரிக்க உளவு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். வால்கர் கமிட்டி அறிக்கையானது அமெரிக்க இராணுவம் மற்றும் ஈராக்கிய பொம்மை அரசு; அரசு ஆவணங்கள் எனக் கொடுத்தவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. மேலும் இக்கமிட்டியின் கைக்கு வரும் முன் ஆவணங்கள் எர்னெஸ் & யங். எல்.எல்.பி. என்ற அமெரிக்க நிறுவனத்திடம் தணிக்கைக்கு என்ற பெயரில் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு பல கைகள் மாறி வந்துள்ள ஆவணங்களின் அடிப்படையிலான இவர்களது அறிக்கை எந்த அளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பது கேள்விக்குறியே.

இந்தப் பின்னணியில் நட்வர் சிங் பிரச்சனையை அணுகினால் இது ஒரு சாதாரண வணிக நிகழ்வு என்பது புலப்படும். நட்வர்சிங் அல்லது அவருக்கு நெருக்கமான ஒருவர் ஈராக்கிய எண்ணெய் வியாபாரத்தில் பங்கெடுத்திருப்பது நிரூபிக்கப்பட்டால் கூட அதில் எந்தக் குற்றமும் சொல்லப்படுவதற்கில்லை. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பு எதுவுமில்லை. பாதக் கமிட்டி நட்வர் பொருளாதார ரீதியாக பயனடைந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை எனத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது.

அப்படியானால் நட்வர்சிங் பிரச்சனை பாராளுமன்றத்தை ஆட்டிப் படைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு நட்வர்சிங்கின் அரசியல் நிலைபாட்டில் பதில் இருக்கிறது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி காலம் தொடங்கி நட்வர்சிங் நிலைபாடு அமெரிக்க உறவில் கவனமாக செயல்பட வேண்டும் என்பதாகும். தற்போதைய எரிசக்தி உடன்பாடு தொடங்கி ஈரானிய எரிவாயு குழாய் சர்ச்சை உட்பட எதிலும் அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு எதிர் நிலைபாடு கொண்டவர் நட்வர்சிங்.

சென்ற பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கு ஆதரவாக ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்ப ஆலோசனை செய்யப்பட்ட போது, அதனை கடுமையாக எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் நிலைப் பாட்டினை வடிவமைத்ததில் நட்வர் சிங் பிரதான பங்கு வகித்தார். உலகின் எந்த நாடும் தனக்கு சமமாகக் கருதப்படுவதையோ, எந்த நாட்டுத் தலைவர்களும் தன்னாட்டு தலைவர்களுக்கு சமமாக கருதப் படுவதையோ அமெரிக்காவினால் ஜீரணிக்க முடியாது. (சமீபத்தில் இங்கிலாந்து பிரதமரை புஷ் ‘யோ பிளேயர்’ என அழைத்ததாக செய்தி வெளியானது ஞாபகம் இருக்கலாம்) அப்படிப்பட்ட நாட்டின் வெளியுறவு அமைச்சரை, பலநாடுகளின் தலைவர்களும் கண்டால் பயந்து நடுங்கும் காண்டலீசா ரைசை, ‘காண்டி’ என்று செல்லப் பெயரிட்டு அழைக்கும் நட்வரை அமெரிக்க ஆளும் வர்க்கம் வெறுப்பதில் ஆச்சர்யமில்லை. சமீபத்தில் நடந்த இந்திய அமெரிக்க எரிசக்தி ஒப்பந்தம் குறித்த அமெரிக்க பாராளுமன்ற விவாதத்தின் போது நட்வருக்கு எதிராக தரம்தாழ்ந்த வார்த்தை பிரயோகங்கள் நடந்தேறின.

இந்தியாவிலும் அமெரிக்க அரசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சியின் ஒரு சில பிரினருக்கும் நட்வர் தொண்டையில் சிக்கிக் கொண்ட முள்ளாகவே இருந்து வந்தார். நட்வர் விலகல் மற்றும் மணிசங்கர அய்யர் பெட்ரோலிய துறையிலிருந்து மாற்றப்பட்டது ஆகியவை இப்பிரினருக்கு கிடைத்த வெற்றி.

எதிர்கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி, பணமோ / வேறு எதிர் பார்ப்புகளோ உண்டு என்பது நிரூபிக்கப்படாத நிலையில் ஒரு சிபாரிக் கடிதம் கொடுப்பது வேறு எங்கும் நடைபெறாத காரியமுமல்ல. ஓர் உறுதிப்படுத்தப் பட்ட ரயில் பயணச்சீட்டுக்கே பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசு கடிதம் தேவைப்படும் நம்நாட்டில் ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதியின் சிபாரிசு கடிதம் இவ்வளவு கொந்தளிப்பை ஏற்படுத்துவது ஆச்சரியம் தான்.

அரசியல்வாதிகள் வணிக நிகழ்வுகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான அரசியலில் கவலை தரக்கூடிய விசயம். ஆனால் நம் நாட்டு அரசியலில் குறிப்பாக தாராளமய தத்துவம் கோலோச்ச தொடங்கிய பின் அரசியலுக்கும் வணிகத்துக்குமான இடைவெளி குறுகி வருகிறது.

எந்தப் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் அதில் நாட்டு மக்களின் நலன் என்பதைவிட வணிகத்துறையை பாதிக்குமா? நேரடி முதலீட்டை பாதிக்குமா என்ற அடிப்படையிலேயே விவாதங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

சமீபத்திய கொக்கோ கோலா விவகாரம் ஒரு சரியான எடுத்துக்காட்டு. பூச்சிக் கொல்லி மருந்து மக்கள் நலனுக்கு ஆபத்து என்பதை விட நேரடி அமெரிக்க முதலீடு குறையும் என்ற அமெரிக்க எச்சரிக்கை ஆட்சியாளர்களை நடுங்க வைத்துவிட்டது. சமீப காலமாக பெரு முதலாளிகள் ஆட்சியாளர்களை ஆட்டிப் படைக்கும் நிலைமாறி, முதலாளிகளே நேரடி அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் மாறி அரசின் செயல்பாடுகளையும் திசை வழியையும் தீர்மானிப்பவர்களாக மாறி வருகிறார்கள்.

அரசியல்வாதி வணிகர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுப்பதை கண்டிக்கும் அதே வேளையில் அரசியலின் இப்போக்கும் கவலை தரக்கூடியது. எனவே நட்வர் சிங் பிரச்சனையை தனிமைப்படுத்திப் பார்க்காமல் ஒட்டு மொத்த பிரச்சனை குறித்து யோசிப்பதே சரியானதாக இருக்கும். அதற்கு இடதுசாரிகள் தவிர்த்த எத்தனை அரசியல் வாதிகள் முன்வருவார்கள்?

வால்கர் அறிக்கையில் கூட நட்வர் தவிர இந்திய ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரும் பலனடைந்தவர் பட்டியலில் உள்ளது. நட்வர் பரிந்துரைத்த நிறுவனத்திற்கு நாற்பது லட்சம் பீப்பாய்கள் ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது; அவர்கள் கொள்முதல் செய்தது இருபது லட்சம் பீப்பாய்கள். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் பீப்பாய்கள் ஒதுக்கப்பட்டன; அது கொள்முதல் செய்தது ஒரு கோடி 50 லட்சம் பீப்பாய்கள். நட்வர்சிங் பரிந்துரைத்தது அந்தலீ செகாலுக்கு. ரிலையன்சுக்கு பரிந்துரைத்தது யார்? நட்வர் மீதான குற்றச்சாட்டினை அமலாக்கத்துறை முதல் வருமான வரித்துறை வரையிலான பல்வேறு துறைகள் விசாரிக்கும் என பாரத் கமிட்டி அறிக்கையின் மீதான மத்திய அரசின் நடவடிக்கை தெரிவிக்கிறது.

அப்படி விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் ரிலையன்ஸை யார் விசாரிப்பார்கள்? அரசியல் வாதிகளும் கவலைப்படவில்லை. ஆட்சியாளர்களும் யோசிக்க வில்லை, பாதக் கமிட்டியும் இது குறித்து ஆராயவில்லை. அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுக்கும் ஓர் அரசியல்வாதியின் சிபாரிசு கடிதம் குறித்து இவ்வளவு அக்கரை கொள்ளும் நமது அமெரிக்க ஜால்ராக்கள் தாராள மயம் தொடங்கிய காலகட்டம் முதல் எடுக்கப்பட்ட வணிக நிர்பந்தத்திற்கு உள்ளானது என குற்றஞ்சாட்டப் பட்ட அனைத்து முடிவுகளையும் அரசு நிறுவன பங்கு விற்பனை முதல் பன்னாட்டு ஓப்பந்தங்கள் வரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோருவார்களா? சமீபத்தில் வெளியான இந்திய அரசு தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் கடந்த பா.ஜ.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற தனியார் மயமாக்க நடவடிக்கைகளில் ஊழல் நடந்துள்ளதாகவும் அரசுக்கு பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தப்பட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இடது சாரிகள் தவிர்த்த எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறக்கவில்லை.

எனவே வால்கர் அறிக்கை மற்றும் பாதக் அறிக்கை தொடர்பாக ஏதேனும் விவாதம் நடத்தப்பட வேண்டுமென்றால் அது அரசியல்வாதிகளுக்கும் வணிக நிறுவனங்களுக்குமான தொடர்பு குறித்தும், மற்றும் சமீபத்திய போக்கான பெரு முதலாளிகள் அரசியல் கட்சிகளின் ஆதரவோடு பொதுமக்களை சந்திக்காமலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்வது குறித்தும்தான் இருக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com