Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
அறியாத ஊர் தெரியாத சேதி

ஊர் முழுக்க புதையல் ஒருவரும் எடுப்பாரில்லை
ராஜசேகரன்

சமீபத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே கல்குவாரி ஒன்றில் அரியவகை ரத்தினக் கற்கள் இருப்பதாக நம்பி, கல்குவாரி முழுமைக்கும் பொதுமக்கள் தோண்டிப் பார்த்ததை பத்திரிகைகள் செய்திகளாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. ஒரு இடத்தில் புதையல் இருப்பது தெரிந்தால் போதும்; ஊரே திரண்டு வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஊர் முழுக்க புதையல் இருந்தும் இதுவரை யாரும் தோண்டிப் பார்க்கக் கூட நினைத்ததில்லை என்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாகத் தானே இருக்கும்? ஆனால் அந்த ஊர்க்காரர்களுக்கோ இது சாதாரணமான விஷயம்.

அப்படிப்பட்ட புதையல்கள் கொட்டிக் கிடக்கும் குக்கிராமம் தான் ‘பிராமணக்குறிச்சி’. சிவகங்கை மாவட்டத்தின் தென்கடைக்கோடி கிராமம். இளையான்குடி ஒன்றியத்தின் மானாமதுரை-பரமக்குடி விரிவுச்சாலையில் அமைதியாய் நீண்டு கிடக்கிறது இவ்வூர். அது என்ன பிராமணக்குறிச்சி? பேரைக் கேட்டதுமே பலருக்கும் இந்தக் கேள்வி எழுகிறது.

பிராமணர்கள் குடியிருக்கும் ஊரோ என்ற தயக்கத்துடன் ஊருக்குள் நுழைகிறோம். ஊரை விட்டு 1கி.மீ. தூரம் ஒதுங்கிய நிலையில் பரமக்குடி போகும் வழியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஊருக்குச் செல்லும் சாலையில் காலடி வைத்ததும், ஊரை நோக்கியபடி இரண்டு குதிரையில் நீண்ட அரிவாள்களோடு ஒய்யாரமாய் நிற்கிறார் ஊரைக் காவல்காக்கும் தடியார் உடையார் அய்யனார். அப்போது தான் கோவிலில் நேர்த்திக் கடன் நடந்திருக்கும் போல் தெரிகிறது. அரிவாள்களிலிருந்து எலுமிச்சம் பழச்சாறும் செந்தூரம் சிவப்பும் குதிரையின் மீது வழிந்து கொண்டிருக்கிறது. ‘அந்நியர்’ எவரும் பிரவேசிக்கக்கூடாது என்ற போர்டு எதுவும் தென்படாதது மனதுக்கு நிறைவைத் தருகிறது.

புதையல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அய்யனார் கோயில் திடல் முழுமைக்கும் கரிவேல் மரங்கள் முளைத்துக் கிடக்கின்றன. ஆங்காங்கே உளிகளால் செதுக்கப்பட்ட பளிங்குக்கற்களும் கை, கால் உடைந்த போர் வீரன் சிலைகளும் சிதிலமடைந்து மூளிகளைப் போல உடைந்து கிடக்கின்றன.

பெரிய புதையல் இருக்கும் புளிய மரத்தடிக்கு அருகில் கம்பை ஊன்றியபடி நின்று கொண்டிருக்கும் சித்ராயி பாட்டி, ஊருக்குள் ‘புது ஆட்கள் வருகிறார்களே’ என்று பார்த்து மிரள்கிறார். ‘புதையலை எடுக்க வருகிறார்களோ’ என்ற பயத்தில் அவரது கண்கள் விரிகின்றன. நெத்தி மேல் கை வைத்தபடி ‘யாரு சாமி அது’ என்கிறார்.

நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் ‘எல்லாம் பரமக்குடிக்காரங்களா?’ என்றபடி பெருமூச்சு விடுகிறாள். “எமனேஸ்வரம், பரமக்குடியில இருக்கிற எல்லாப் பிராமணக்காரங்களும் இங்கேயிருந்து போனவங்கதான் சாமி. பத்து, இருபது தலைமுறைக்கு முன்னாடி இந்தச் சாமி இருக்கிற களத்து மேட்டுல தான் அவங்க குடியிருந்தாங்க. இராமநாதபுரத்து ராஜா சேதுபதி காலத்தில் அரண்மனையிலிருந்த ஒரு பகுதிச் சொத்தை இங்க தான் ஒளிச்சு வச்சிருந்தாங்க. அந்த கணக்கு வழக்கையெல்லாம் பார்க்குறதுக்குத் தான் பிராமணக்காரங்களை எங்கிருந்தோ இங்க கூட்டிக்கிட்டு வந்தாங்க. அப்பத்தான் சேதுபதி ராஜாவின் ஊர்க்காவல் படையில எங்க அய்யனார் சாமியும் இருந்துச்சு. அதுக்குப் பின்னாடி எங்க முப்பாட்டன் காலத்தில் ஏதோ சண்டை ஏற்பட்டு இங்கு குளுமைக்குள்ள இருந்த தங்க நகையெல்லாம் பக்கத்து நாட்டுக்காரங்க கொள்ளையடிச்சுட்டு அவசரத்துல பாதியப் போட்டுட்டு போயிட்டாங்களாம். அப்புறம் ராஜா உத்தரவு போட்டு பிராமணக்காரங்களை எல்லாம் இராமநாதபுரத்து அரண்மனைக்கும் உத்திரகோச மங்கை அரண்மனைக்கும் அழைச்சிட்டு போயிட்டாங்களாம். அங்கு போகும் போது தான் இந்தப் பகுதிக்கு ‘பிராமணக்குறிச்சி’ ன்னு வச்சிட்டுப் போயிட்டாங்க. அதுவே இன்னைக்கு வரைக்கும் நிலைச்சுப் போச்சு’ என்றபடி அய்யனார் சிலையிருக்கும் திசையை நோக்கிக் கும்பிடுகிறார் சித்ராயி பாட்டி.

அவருடன் பேசியபடி ஊருக்குள் நுழைகிறோம். மதிய நேரமாகையால் ஊர் முழுக்க வெறிச் சோடிக் கிடக்கிறது. ஊரின் பெரும்பான்மையான மக்களும் குழந்தை குட்டிகளைத் தூக்கிக் கொண்டு கரிமூட்டம் போடுவதற்காக விறகு வெட்டச் சென்றுள்ளனர் என்கிறார்கள் ஊரிலிருக்கும் ஒன்றிரண்டு பேர்.

“சண்டையில கொள்ளையடிச்சது போக பாதிச் சொத்து அந்தக் களத்து மேட்டுல தான் கொட்டிக் கெடக்கு. அதக் காவல் காக்கத்தான் இராமநாதபுர அரண்மனையிலிருந்து ஆள் போட்டிருந்தாங்க. அவரு தான் எங்க ஊரையே காவல் காக்கிற அய்யனாரு சாமி” என்று தன் பாட்டி சொல்லிச் சென்ற கதையையே இப்போது நம்மிடம் ஒப்பிக்கிறார் தனுக்கோடி என்பவர். அது போக படையில் அய்யனார் இருந்த போது அவருக்கு கூலியாகக் கொடுக்கப்பட்டதும் இந்த புதையலோடு தான் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

“இருந்தபோதிலும் இந்த நகைகளை பல பேர் கொள்ளையடிக்கப் போனாங்க. அவங்கள எல்லாம் எங்க அய்யனாரு ரத்தம் கக்க வச்சு கொன்னுட்டாரு. அதன் பிறகு தான் சாமி எங்களுக்கு ஒரு உத்தரவு போட்டிருச்சு. அது என்னன்னா ஒரு நிறைமாச எருமையையும் நிறைமாச கர்ப்பிணிப் பெண்ணையும் ஒரே நேரத்தில் சேர்த்து வெட்டி பலியாக்கி, அந்த ரத்தத்தை புதையல் கெடக்கிற கல்லு மேல தெளிக்க வேண்டும். அதுக்குப் பிறகு தான் இந்த களத்து மேட்டத்தோண்டி எவனும் புதையல எடுக்கணும்” என்கிறார் அய்யனார் கோயில் பூசாரி.

இது குறித்து தற்போதைய திருவாடுதுறை ஆதீன மடத்து ஆட்களிடம் கேட்ட போது , ‘அப்படி ஒரு புதையல் தற்போது அங்கே எதுவும் இல்லை. முன்னாடி வேண்டுமானால் இருந்திருக்கலாம்’ என்கின்றனர். இதையே தொல்பொருள் ஆய்வுத் துறையும் சொல்கிறது. மேலும் தற்போது இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் நிலங்கள் அனைத்தும் ஆதீனத்து மடத்துச் சொத்துக்களே. அவற்றிலேயே இப்பகுதி மக்கள் குடியிருக்கின்றனர் என்பதும் இவைகள் அம் மக்களுக்குச் சொந்தமில்லாத பண்ணைநிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதையல் இருப்பதாகச் சொல்லப்படும் பூமியெங்கும் வெறிச்சோடிக் கிடக்கிறது. விரிவோடிக் கிடக்கும் அந்த கந்தகப் பூமியெங்கும் அய்யனாரின் வீச்சரிவாள் வெளிச்சம் பட்டுத் தெறிக்கிறது.

மாலை வேளைகளில் ஊரில் பலரின் தலைகள் தென்பட ஆரம்பிக்கின்றன. தேவேந்திர குல மக்கள் வசிக்கும் இவ்வூர் தனித் தொகுதியாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பழனிச்சாமி என்பவர் ஊர் பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிறார். மத்திய நிதியமைச்சரின் சொந்த தொகுதியான இவ்வூரில் உடைந்து கிடக்கும் குடிநீர்த் தொட்டியை திருப்பிக் கட்டக் கூட நிதி இல்லாத பற்றாக்குறையில் கிடக்கிறது இவ்வூர் பஞ்சாயத்து. ஊருக்குள்ளே சுமார் 150 பேருக்கு மேல் தடியன், அய்யனார், உடையார் என ஒரே சாமிப் பெயர்களாக உலா வருகின்றனர். அதே போன்று இந்த ஊரின் பின்பெயர்ப்பகுதியான ‘குறிச்சி’ என்பதைக் குறிக்கும் நோக்கில் அயன்குறிச்சி, முட்ட குறிச்சி, குமாரக்குறிச்சி, துவரங்குறிச்சி உள்ளிட்ட பெயர்களில் பல கிராமங்கள் இவ்வூரைச் சுற்றிலும் இருக்கின்றன.

“கடந்த 10 வருடங்களாக சாமி கும்பிடாததால் சாமி கோபித்துக் கொண்டு ஊருக்குள் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றும் அதனால் இந்த வருடம் புரட்டாசி மாதம் கும்பத்துக்கு தண்ணி ஊற்றி, வீட்டுக்கு ஒரு ஆட்டுக்கிடாய் வெட்டி, அய்யனார் பசியைத் தீர்க்க வேண்டும்; அப்போது தான் எங்க ஊருக்கு விடிவு காலம் பிறக்கும்” என்கிறார்கள் இவ்வூர் மக்கள்.

விடிவு கிடைக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையை நினைத்துப் பார்த்தபடி நகரங்களுக்குத் திரும்பினேன். வழியெங்கும் அய்யனார் பெயர் கொண்ட மனிதர்களும் புதையல் மறைந்து கிடக்கும் திடலும் தொடர்வது போன்ற பிரமை. பிரமிப்பிலிருந்து மீள முடியாதவனாய் வீட்டில் சற்றே கண்ணயர்கிறேன். தூரத்தே மழை வருவது தெரிகிறது. இந்த வருடம் அவர்களின் பஞ்சம் தீரும் என்ற ஆறுதல் எனக்குள். . .


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com