Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
நாடாளுமன்றம் மசோதா தாக்கல்

தகவல் பெறும் உரிமை சாமான்யர்களுக்கும் கிடைக்குமா?
ராஜசேகரன்

பொதுமக்களுக்கும் சாமான்யர்களுக்கும் ஊடகத்தினருக்கும் பயனை அளிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்ட மசோதா ‘எவருக்கும்’ தெரியாமலேயே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்று அமலுக்கு வந்திருக்கிறது. ஆனால் ‘வெகுஜன ஊடகங்கள்’ என்று தங்களை பறைசாற்றிக் கொள்ளும் பெரும்பான்மையான மீடியாக்கள் இது குறித்த செய்தியை மக்களுக்கு பகிரங்கப்படுத்தாமல் ‘கள்ள மௌனம்’ சாதித்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு வரைக்கும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் சாதாரண தகவல்களைப் பெறுவதற்குக் கூட வார, மாத, ஏன் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். உலகெங்கிலும் பல்வேறு நாடுகளிலும் 1950களிலிருந்தே இதற்கான சட்டங்கள் அவசரச் சட்டங்களாக அறிமுகப்படுத்தப்படட போதிலும் தற்போது தான் நமக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது.


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறமுடியாததாக கூறியுள்ள செய்திகள்

1. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளியுறவு ஆகியவற்றை பாதிப்பவை.

2. குற்றமிழைக்க வழிவகுக்கும் செய்திகள்.

3. நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களால் தடை செய்யப்பட்ட (அ) நீதி மன்ற அவமதிப்புச் செய்திகள்.

4. போட்டி நிலையை பாதிக்கின்ற வர்த்தக, வியாபார ரகசியங்கள் மற்றும் அறிவு சார்ந்த காப்புரிமை

5. இரத்த உறவின் மூலம் ஒருவருக்கு கிடைத்த தகவல்கள்.

6. அன்னிய அரசாங்கத்திடம் இருந்து நம்பிக்கை அடிப்படையில் பெறப்பட்ட செய்திகள்.

7. ஒரு நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செய்திகள்.

8. சட்ட அமலாக்க அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நம்பிக்கையின் பேரில் பெறப்பட்ட செய்திகள்.

9. புலன்விசாரணையையோ, வழக்கு விசாரணையையோ பாதிக்கக் கூடிய செய்திகள்.

10. அமைச்சரவை, அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி ஏற்கும் போது கூறும் முன்மொழிவுகள்.

11. தனிநபர் பற்றிய செய்திகள்.

12. 20 ஆண்டுகளுக்கு முந்தைய செய்திகள்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில் அளித்த உறுதிமொழியின் படி, செய்தி உரிமைச் சட்டம் முற்போக்கானதாகவும் எல்லா அரசியல் கட்சிகளின் பங்கேற்புடனும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய செய்தி, ஒலிபரப்பு மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்பால் ரெட்டி சமீபத்தில் அறிவித்துள்ளார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான போராட்டம் என்பது இன்று நேற்று துவங்கியதல்ல. பல ஆண்டுகளாக குடிமைச் சமூக அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், ஊழல் எதிர்ப்பாளர்களின் போராட்டங்களால் நமக்குக் கிடைத்திருக்கிறது. ‘காமன் காஸ்’ எனும் என்.ஜி.ஓ. அமைப்பைச் சேர்ந்த எச்.டி. ஷோரி இதற்காக பல தடவை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதே போன்று 2000ம் ஆண்டு ராஜஸ்தானில் இச்சட்டத்தை தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அருணா ராய் தீவிர போராட்டத்தின் வழியே கொண்டு வந்தார்.

இந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம். 1997 ஆம் வருடம் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது என்ற போதிலும் இன்றைக்கு வரைக்கும் அதன் உருப்படியான பலனை நாம் அனுபவிக்கவே இல்லை.
லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடும் மாநிலங்களில் பீகாரை ஒட்டிய நிலைக்கு தமிழ்நாடு பீடு நடைபோட்டுக் கொண்டு இருக்கிறது. தகவல் பெறும் உரிமையை தீவிரமாக ஆதரிக்கும் அருணாராய் “தகவல் பெறும் உரிமை வழியே அதிகார துஷ்பிரயோகம் மற்றும் லஞ்சத்தை தடுக்க முடியும்” என்கிறார். ஆனால் ஏற்கனவே இச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஜம்மு-காஷ்மீர், டில்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கோவா, அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் தடுக்கப்பட்டுள்ளதா என்றால் ‘இல்லை’ என்கிறது தற்போதைய ஊழல் குறித்த புள்ளி விபர அறிக்கைகள். (நன்றி: டிரான்ஸ்பரன்சி இண்டர்நேசனல்- இந்தியா)

‘நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் அறிவியல், பொருளாதார நலன்கள், வெளியுறவுக் கொள்கையை பாதிக்கும் விஷயங்களாகக் கருதப்படும் எவற்றிற்கும் இச்சட்டம் பொருந்தாது’ என அரசுக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் விமர்சனமும் கிளம்பி இருக்கிறது. நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காப்பதில் பத்திரிகையாளருக்கு பங்கு இல்லையா? போபர்ஸ் பீரங்கி ஊழல், தெகல்கா ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல் போன்றவற்றை பத்திரிகையாளர்கள் தானே வெளிக்கொண்டுவந்தனர். இவர்கள் சொல்வதைப் போல நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்று பத்திரிகையாளர்கள் நினைத்திருந்தால் ஊழலை வெளிக்கொண்டு வந்திருக்க முடியுமா? பத்திரிகை விஷயத்தில் தகவல் பெற்றுக் கொள்ளாதவாறு முட்டுக்கட்டை போடுவது பிரச்சனையை இன்னும் வலுவாக்குமே தவிர தீர்த்துவிடாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் 1966ம் ஆண்டே அமெரிக்காவில் செய்திகளைப் பெறும் உரிமைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டுவிட்டது. அமெரிக்க அரசும் இதே போன்று நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்று நினைத்திருந்தால் இச்சட்டத்தை கொண்டு வந்திருக்க முடியுமா என்ன?

இச்சட்டத்தால் இதுவரை நாடுகள் காத்துவந்த ரகசிய காப்பு தகர்க்கப்படுகிறது. அரசியல் போக்கை தீர்மானிப்பதில் மக்களுக்கு உள்ள அக்கறையை அதிகப்படுத்துகிறது. மக்களாட்சி கொள்கையை விரிவுபடுத்துகிறது. பொதுக் கொள்கையை தீர்மானிப்பதிலும் தேர்தலில் சரியான முடிவெடுப்பதிலும் மக்களுக்கு வாய்ப்பளிக்கிறது. அரசுகளிடம் செய்திகளை கட்டாயமாகப் பெறும் இவ்வுரிமை அரசின் லஞ்ச லாவண்யம், திறமையற்ற அரசு இவற்றிற்கெதிரான பலமான அச்சுறுத்தலாகும். இதை விட்டுவிட்டு இதை கேட்கக் கூடாது, அதை கேட்கக் கூடாது என்று வாய்ப்பூட்டு போடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

இதே போன்று பொதுமக்களுக்காக தகவல் அறியும் உரிமை மசோதா கொண்டுவந்து விட்டு, அதுபற்றி பொதுமக்களுக்கு எந்த வித தகவலும் (கம்யூனிகேசன்) தெரிவிக்காமல் செய்வது எந்த விதத்தில் நியாயம்? இன்றைய தேதிவரைக்கும் அரசு சார்பாக மீடியாக்களில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் வந்திருப்பது பற்றியோ இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியோ எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப் படவேயில்லை. இது ஒரு வகையில் மக்களை ஏமாற்றும் வேலையே தவிர வேறொன்றுமில்லை.

சட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து (ஜுன் 15) 120 நாட்களில் (அக். 15) நடைமுறைக்கு வரும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லாதது அரசின் ‘அலட்சிய’ மனப்பான்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சாதாரண ‘சாமான்ய மக்களின்’ அரசாக தன்னை காட்டிக் கொள்ளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் எவரும் தெளிவு பெற்று விடக்கூடாது; எவரும் அரசு அலுவலர்களை எதிர்த்து கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சி தான் சேதுசமுத்திரத் திட்டத்தின் போது மீனவர்களை கலந்தாய்வுக் கூட்டத்திற்கு அழைத்து பேசவிடாமல் கூட்டத்தை கலைத்து விட்டதும்.

பொது அதிகார அமைப்பு என்று சொல்லப்படுகிற அரசியலமைப்புச் சட்டத்தினால் மற்றும் பாராளுமன்ற, சட்டசபை இயற்றிய சட்டத்தின் கீழ் உருவான அமைப்புகள்- மத்திய மாநில அரசின் உத்தரவு, அறிவிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள்- அரசுக்குச் சொந்தமான (அ) அரசின் நிதி பெற்று செயல்படும் அமைப்புகள்- அரசிடமிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ நிதி பெறும் அரசுசாரா நிறுவனங்கள் தாமாக முன்வந்து செய்திகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச்சட்டம் குறிப்பிடுகிறது. ஆனால் இதெல்லாம் நடக்குமா என்றால் ‘நடக்க வேண்டும்’ என்கிறது சட்டம். ஆனால் நமது சட்டங்களை யார் பின்பற்றுகிறார்கள்? நமது சட்டங்களின் பலவீனம் தான் உங்களுக்கு தெரியுமே?

146 திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் இருப்பினும் அதனை உரிய வகையில் பயன்படுத்தாவிடில் இத்தனை காலம் போராடிக் கொண்டு வந்ததன் அர்த்தம் வீணாகிவிடும். எனவே மக்கள் அன்றாடம் சார்ந்திருக்கிற பொது வினியோகம், காவல்துறை, நீர்வள ஆதாரம், நிலப் பகிர்மானம், கல்வித் தகவல்கள், மனித உரிமை மீறல் சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றில் உடனுக்குடன் தகவல் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயம். அதை அரசு நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். செய்யும் என்றே நம்புவோம்.

சட்ட மசோதா கடந்து வந்த பாதை

1970 - இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) (அ) ‘பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரத்தை அனைத்து குடிமக்களும் கொண்டுள்ளனர்’ எனக் கூறி சமூக அமைப்புகள் போராட்டம்.

1973 - ‘பேச்சுரிமை என்பது செய்தி பெறும் உரிமைகளையும் உள்ளடக்கும்’ என பத்திரிகை அதிபர் பென்னட் கோல்மன் வழக்கில் தீர்ப்பளிக்கப் படுகிறது.

1975 - முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாதுகாப்புச் செலவுகளுக்கான கணக்கை கேட்டு ராஜ்நாராயணன் என்பவர் கொடுத்த வழக்கில் ‘செய்திகளைப் பெறுவதற்கான உரிமை என்பது அடக்குமுறை, ஊழல் இவற்றிற்கெதிரான பலமான ஆயுதம்’எனத் தீர்ப்பளிக்கப்படுகிறது.

1985 - ‘அரசின் செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிடுவது பொதுவிதியாகவும், ரகசியக்காப்பு என்பது அவசியமான பொதுநலத் தேவையின் பாற்பட்ட விதிவிலக்காகவும் இருக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று கூறுகிறது.

1988 - போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் செய்தி பெறும் உரிமை குறித்து வற்புறுத்துகின்றன.

1989 - போபர்ஸ் பீரங்கி ஊழல், தகவல் அறியும் உரிமை மசோதா பிரச்சனையை தொடர்ந்து வி.பி.சிங் ஆட்சியைப் பிடிக்கிறார்.

1996 - பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவால் மாதிரி சட்ட வரைவு தாக்கல்.

1997 - எச்.டி. ஷோரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு சட்ட வரைவு அறிமுகம்.

2000 - தகவல் சுதந்திர சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

2002 - பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையின் பேரில் தகவல் சுதந்திரச் சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் அறிமுகம்.

2004 - நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செய்தி பெறும் உரிமைக்கான சட்ட முன்வடிவம் அறிமுகம்.

2005 - செய்தி பெறும் உரிமைக்கான சட்ட முன் வடிவம் 146 திருத்தங்களுடன் மே மாதம் நிறைவேற்றப்பட்டு ஜுன் 15ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல்.


பொது அதிகார அமைப்பின் கடமைகள்

1. அனைத்து வகை செய்திகளையும் முறைப்படுத்தி கணினி மூலம் பதிவு செய்து நாடுதழுவிய வலைப்பின்னலில் எளிதில் கிடைப்பதாக இருக்கச் செய்யவேண்டும்.
2. கட்டணம் மற்றும் கால அவகாசம் குறித்த முடிவுகளில் யாருக்கு மேல்முறையீடு என்ற விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
3. செய்திகள் எந்த வடிவத்தில் கேட்கப்படுகின்றதோ அந்த வடிவத்தில் கொடுக்கப் படவேண்டும்.
4. அவர்களது கோரிக்கை மறுக்கப்பட்டால் அதற்கான காரணம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும்.

பொது அதிகார அமைப்பு தாமாக முன் வந்து செய்திகளை வெளியிடுதல்

1. அமைப்புச் செயல்பாடு மற்றும் அதன் பணிகள் குறித்த விபரங்கள்.
2. அதிகாரிகள் மற்றும் பணியாளர்களது அதிகாரமும் பணிகளும்.
3. தங்களுடைய பணிகளை செயல்படுத்துகின்ற முறை.
4. விதிகள், கையேடுகள், பதிவேடுகள் மற்றும் பணிகளை செய்வது குறித்த விபரங்கள்.
5. தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களின் வகைகள்.
6. அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பெறுகின்ற மாத ஊதியம் விபரம்.
7. அமைப்பின் ஒவ்வொரு முகமைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணம், திட்டங்கள், செலவுகள், வழங்கப்பட்ட விதம் குறித்த அறிக்கைகள்.
8. சலுகைகள் பெற்றவரின் விபரங்கள்.
9. பொதுமக்கள் உபயோகத்திற்காக உள்ள நூலகம், தகவல் பெறுவதற்காக உள்ள வசதிகள், அதற்கான நேரம்.
10. பொது செய்தி அலுவலர்களின் பெயர்கள் மற்றும் பதவி விபரங்கள்.


மனுச்செய்யும் முறை

1. ஆங்கிலத்திலோ அல்லது மாநில மொழியிலோ எழுத்துப்பூர்வமாகக் கேட்கலாம்.
2. செய்தியை கேட்பதற்கான காரணத்தை கூற வேண்டியதில்லை.
3. சாதாரண தகவல் பெற ரூ.25/- கட்டணமும், தொழில் சார்ந்த தகவல் பெற ரூ.500/- கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. (வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்டணம் இல்லை)

தகவல் கிடைக்கும் காலம்

1. மனு செய்ததில் இருந்து 30 நாட்களுக்குள் செய்தியை தரவேண்டும்.
2. உயிர் மற்றும் தனிமனித சுதந்திரம் பற்றிய விபரங்கள் 48 மணிநேரத்திற்குள் தரவேண்டும்.

தண்டனை

மனுவைப் பெறாவிட்டாலோ, சரியான காரணமின்றி தாமதப்படுத்தினாலோ, வேண்டுமென்றே மறுத்தாலோ, சரியில்லாத, முறையற்ற, தவறான செய்தியைத் தந்தாலோ, கேட்ட செய்தியை மனுக்குறிப்பில் இருந்து அழித்துவிட்டாலோ பொதுச் செய்தி அதிகாரிக்கு ஒரு நாளைக்கு 250 வீதம் அதிகபட்சமாக 25,000 வரை தண்டனை விதிக்கப்படும்.

நன்றி : ஆ.வின்சென்ட், வழக்கறிஞர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com