Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
நேர்காணல்

சாலமன் பாப்பையா
ஹாமீம் முஸ்தபா, ராஜசேகரன்

தமிழகத்தில் பட்டிமன்றக் கலையை வெகுஜனமயப்படுத்தியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவிற்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. ஒரு அடித்தள தொழிலாளி குடும்பத்தின் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்து, வாழ்வின் சுக துக்கங்களோடு வளர்ந்து பேராசிரியராக, தமிழ் ஆர்வலராக, பட்டிமன்றத்துக்காரராக தன்னை நிலைப்படுத்தியிருக்கும் சாலமன் பாப்பையா அவர்கள் புதிய காற்றிற்கு வழங்கிய நேர்காணலில் இருந்து. . .

புதியகாற்று : எழுத்து, பேச்சு ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது?

சாலமன் பாப்பையா : சின்ன வயதிலே எனக்கு நினைவாற்றல் கொஞ்சம் அதிகமாக இருந்தது. எங்க அக்கா, அண்ணன் இவர்கள் எல்லாம் வீட்டுல கதை சொல்லுவாங்க. எங்களுக்கு ஒரு வீடு இருந்தது. எங்க அக்காமாரை கட்டிகுடுக்கும் போது இந்த வீட்டை ஒத்தி வச்சு பின்னர் மீட்டுக்குவோம். அப்படி ஒத்தி வச்ச காலங்கள்ல காம்பவுண்ட் ஹவுஸ்களில் இருந்தோம். அதில் இந்த பக்கம் பத்து பதினைந்து வீடுகள் அந்தப் பக்கம் பத்து பதினைந்து வீடுகள் என்று இருக்கும். ஒவ்வொரு வீட்டுலயும் ஒவ்வொரு கதையிருக்கும். அவர்கள் ஒவ்வொருவரும் இரவுகளில் கதை சொல்வாங்க. அதில் ஆரம்பித்த பழக்கம். இதில்தான் இந்தப் பேச்சார்வமும் எழுத்தார்வமும் ஆரம்பித்தது.

புதியகாற்று : ஆரம்பத்தில் உங்களை ஈர்த்த பேச்சு யாருடையது?

சாலமன் பாப்பையா : பேச்சாளனாக வருவேன் என்று நான் நினைக்கல. எல்லா அரசியல் கட்சி பேச்சாளர்கள் பேச்சுக்கும் போவேன். நாங்கள் தொழிலாளர்கள் ஏரியாவுல இருந்ததனால என்னுடைய நினைவுகள் வளருகிற காலங்களில் காங்கிரஸ் இயக்கம் பேரியக்கமாக இருந்தது. ஆனால் காங்கிரஸ் இயக்கத்தில் பேச்சாளர்கள் என்று பெரிதா அப்போது இல்லை. மாறாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அப்ப பேச்சாளர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அப்ப வந்து இந்த டாம், டாம் போட்டுவாறது எல்லாம் வழக்குல இருந்தது. அந்த டாம்டாம் போட்டு மீட்டிங் பற்றி விளக்கி சொல்ற சாதாரண தொழிலாளிகளே ரொம்ப அருமையா பேசுவாங்க.

அறிஞர்.ஜீவானந்தம், அறிஞர்.ராமமூர்த்தி, பின்னாடி மா.பொ.சிவஞான கிராமணி, முத்துராமலிங்கத் தேவர் இவங்க எல்லார் பேச்சும் கேட்கப் போயிருக்கேன். இவர்கள் பேசுகிற வெறிபிடித்த வேகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களில் யார் எனைத் தொட்டார்கள் என்றுச் சொல்ல முடியாது. ஆனால் அந்த காலத்தில் நான் ரொம்ப நேசிச்சது ஜீவானந்தத்தின் பேச்சைத்தான். அதன் பிறகு தந்தை பெரியாரின் பேச்சு. பெரியார் மக்கள் மொழியில் பேசினார். என்னுடைய பேச்சுக்களெல்லாம் பின்னாடி மாறியதற்கு காரணம் தந்தை பெரியாரின் பாணிதான்.

புதியகாற்று : நீங்க ஒரு பட்டிமன்ற பேச்சாளராக அறிமுகமானது எப்படி?

சாலமன் பாப்பையா : எனக்குள்ள பேச்சாளர் என்கின்ற தன்மை இருப்பதாக ஆரம்பத்தில் நினைக்கல. நான் கல்லூரி ஆசிரியனாக ஆன பிற்பாடு வகுப்புல நல்லா பாடம் எடுத்தாத்தானே பையங்க கேட்பாங்க. அப்ப நல்லா பேசணுமில்லையா. நான் நல்லா பாடம் எடுக்கிறேன் என்பதால மாணவர்கள் அவங்க ஊர் இலக்கிய விழாவுக்கு என்னைய அழைச்சிட்டு போனாங்க. அதனால என்னுடைய மாணாக்கர்கள்தான் என்னை பேச்சாளன் ஆக்கினார்கள்.

புதியகாற்று : தமிழகத்தில் பட்டிமன்றங்கள் இன்று ஒரு ‘மேனியாவாக’ பரவியிருக்கிறது. பட்டிமன்றத்தின் வெகு ஜனத்தன்மைக்கு முக்கிய காரணமாக நீங்கள் இருந்தீர்கள். இதற்கு முன்பு நீங்கள் ஜீவா அவர்களோடும் குன்றக்குடி அடிகளாரோடும் பட்டிமன்றத்தில் பங்கேற்று இருக்கிறீர்கள். அவர்கள் காலத்து பட்டிமன்றத்திற்கும் இப்போதைய பட்டி மன்றத்திற்குமான வேறுபாடாக எதைக் கருதுகிறீர்கள்?

சாலமன் பாப்பையா : நான் இவர்களுடன் பேச ஆரம்பித்த போது ஜீவா அவர்களும் குன்றக்குடி சுவாமிகளும் அரங்கங்களுக்குள் இருக்கின்ற பட்டிமன்றங்களை உருவாக்கினார்கள். ஜீவா அவர்கள் கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யும் பொழுது ஒரு அரசியல் பின்னணி சார்ந்த மேடை என்பதால் சில குறிப்பிட்ட தலைப்புகள் தான் பேசப்படும். பொதுவுடமை மேடைகளில் பாரதியை தவிர்த்து வேறெதுவும் பேசுவதில்லை. ஒரு வழக்கப்பட்ட ஆட்கள் மத்தியில் அவர்கள் விரும்புகிற தலைப்பில் ஒரு அரசியல் பின்னணியுடன் அமைக்கப்படுகிற மேடை அது. அவர்கள் எந்த தரத்தை நிர்ணயித்திருக்கிறார்களோ அந்தத் தரத்துக்கு மேல நின்று பேசணும்.

குன்றக்குடி சாமிகள் திருக்குறள் தொடங்கி பாரதிதாசன் வரைக்கும் புதுப்புது தலைப்புகளில் பெரும்பாலும் கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு குன்றக்குடி சாமிகளை வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்த வேண்டும் என்பதைத் தவிர வேறு பெரிய நோக்கம் ஏதுமில்லை. சாமிகள் தலைப்புகள் கொடுப்பார். சாமிகள் கொடுக்கிற தலைப்பு ஜென்மத்துக்கும் யாருக்கும் விளங்காது. பாரதி சோவியத் புரட்சியை இனங்கண்டு பாடினானா? எழுச்சி கண்டு பாடினானா? என்று தலைப்பு கொடுப்பார். இந்த தலைப்பை போய் சாதாரண பாமர மக்களிடத்தில் பேசினால் அவர்களுக்கு ஏதாவது விளங்குமா? விளங்காது. இந்த மாதிரி விதவிதமா தலைப்பு கொடுப்பாங்க. நாங்க முயன்று தயார் செய்து போவோம். எங்களுக்கு விளங்குனது மாதிரி இருக்கும் ஜனங்க அமைதியாக இருப்பாங்க. ஒரு அசைவே இருக்காது. மழை பெய்தது. இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா நிலம் பாலை நிலம். அறிஞர் ஜீவா பேசும்போது ஆயிரம் ஆண்கள் என்றால் பத்து பெண் பார்வையாளர்கள். அதுவும் சாமி நடத்தும் கூட்டத்தில் பெண்கள் வரமாட்டார்கள். பொதுஉடமை கட்சிக்காரர்களுக்கு ஒரு பின்னணி இருந்தது. அதை முழுக்க வாங்கி மடைமாற்றம் பண்ணக் கூடிய ஒரு முறை இருந்தது. சாமிகிட்ட அது கிடையாது.

புதியகாற்று : பட்டிமன்றம் வெகுஜனத் தன்மை பெற்றது எப்படி?

சாலமன் பாப்பையா : ஒரு கட்டம் வந்த பிற்பாடு பட்டிமன்றத்தில் சோர்வு ஒன்று உருவானது. சுவைஞர்கள் குறைந்தார்கள். படிப்பறிவு இல்லாத மக்களையும் இதற்குள் கொண்டுவரணும். அவர்களுக்கும் இந்த வடிவம் போய் சேரவேண்டும். புதிதாக மடைமாற்றம் செய்ய வேண்டும். இதை நடத்துவது பிரமணத் தெருவில் அல்ல. அவங்க கிட்ட இந்த வேலையே கிடையாது. அதனால் தான் இன்றும் சில பிராமணர்கள் பட்டிமன்றத்தை எதிர்க்கிறார்கள். கோயில் சார்ந்த நிகழ்ச்சியாக இருப்பதால் அதனுடைய தன்மைக்கேற்ப சாதி, கட்சி, சமயப் பிரிவுகள் எல்லாம் ஏராளம் இருக்கும். இந்தப் பிரிவுகளுக்குள் பகை வந்துவிடாமல், எல்லாரும் விரும்புவதுபோல் ஒரு நிகழ்ச்சியைத் தேடியபோது பட்டிமன்றம் இன்னொரு வடிவம் எடுக்கிறது. இலக்கியத் தலைப்புகள் போட்டால் கல்லூரியிலோ, வீதியிலோ எல்லோரிடமும் செல்ல முடியாது. அரசியல் தலைப்புகள் போட முடியாது. எனவே மக்கள் மகிழணும், ஆணுக்கும் பெண்ணுக்கும் பயன்படுகிற மாதிரி அறிவுரை சொல்லுகிற மாதிரி இருக்கணும் அந்த மாதிரி தலைப்புகள் என்ன போடலாம் அப்படி தலைப்பை தீர்மானித்தவர்கள் குடும்ப ரீதியான, அன்றாட வாழ்க்கை தொடர்புடையவற்றை தலைப்பாக தேர்ந்தெடுத்தார்கள்.

சாராணமான மக்கள் மத்தியில் தெருக்கூத்து என்கிற வடிவம் இருந்தது. தெருக்கூத்துக்காரர்கள் அவர்களுக்கு நெடுங்காலம் கல்வி சொல்லி கொடுத்தவர்கள். ஆனால் அதற்குள் கொச்சையும் இருக்கும், ஆபாசமும் இருக்கும் அவை இரண்டும் இல்லாமல் தெருக்கூத்து இல்லை. இந்த தெருக்கூத்து வடிவத்தை விடவும் பட்டிமன்ற வடிவம் கொஞ்சம் முன்னேறிய வடிவம். எனவே பட்டிமன்றம் ஆதரவு பெருகியது.

புதியகாற்று : அடிகளார் நடத்திய பட்டிமன்றங்களிலும், ஜீவா பண்ணிய பட்டிமன்றங்களிலும் ஒரு அர்ப்பணிப்பு உணர்வும் சமூக லட்சியமும் இருந்தது. இன்றுள்ள பட்டிமன்றங்கள் வெறும் வணிக மயமாகிவிட்டதே?

சாலமன் பாப்பையா : அரசியல் இயக்க தலைவர்கள் என்றும் தொண்டர்கள் என்றும் சொல்கிறோமே அவங்க சம்பளம் வாங்காம இருக்காங்களா? சமயத் தொண்டு செய்றவர் சம்பளம் பெறாமல் செய்கிறாரா? பத்திரிகைகளில் வணிகமயம் இல்லையா? அதனால வணிகமயம் இல்லாத ஒரு அமைப்பைக் கூறுங்கள். ஏதோ மற்ற எல்லாரும் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கிறது போலவும் பட்டிமன்றக்காரர்கள் மட்டும அர்ப்பணிப்பு இல்லாதது போலவும் ஒரு பிரமையை உருவாக்கக் கூடாது. எந்தத்துறையில் வணிகமயம் இல்லை.

புதியகாற்று : அரசியலில் ஒருவர் பணிபுரிகிறார். முழுநேர ஊழியர் சம்பளம் பெறுகிறார். பத்திரிகையாளர் தன்னுடைய பணியைச் செய்கிறார். ஊதியம் பெறுகிறார். ஆனால் பட்டிமன்றம் இவர்களின் முழுநேர தொழிலல்ல. இந்தப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் வேறு ஏதோ நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு தங்களது ஒய்வு நேரத்தை பட்டிமன்றத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இன்று மாத வருமானத் தொழில் சைடு பிசினஸ் ஆகவும் பட்டிமன்றம் முழுநேர பிசினசாகவும் மாறி இருக்கிறதே?

சாலமன் பாப்பையா: நீங்க சொல்வதை நான் ஒத்துக் கொள்கிறேன். நான் மறுக்கலை. ஆனால் என்ன நான் பார்க்கிறேன் என்றால் முழுக்க முழுக்க சம்பளம் வாங்குகிற தொழிலிலேயே அர்ப்பணிப்புகள் வேலை செய்கிறவர்கள் குறைந்து விட்டார்கள். அது மாதிரியே பட்டிமன்றத்திற்குள்ளேயும் இந்த அர்ப்பணிப்பு உணர்வு குறைந்திருக்கிறது என்பது உண்மை. அதை நான் இல்லையென்று சொல்லமாட்டேன். அதற்குக் காரணம் என்ன வென்றால் இந்தப் பட்டிமன்றத்திற்கு வருகிறபொழுது ஒன்று மேடையில் தனக்கும் புகழ் கிடைக்கிறது என்பதற்காக வருகிறார்கள். இரண்டாவது பொருள் கிடைக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரும் இந்தத் துறையில் ஈடுபட அதிகம் பேர் வருகிறார்கள்.

நான் வந்து 1960களில் இருந்து 1988 வரை தெருவெல்லாம் அலைஞ்சோம். ஊர் ஊரா சுற்றினோம். பல ஊர்களில் அவமானப்பட்டதும் உண்டு. கூட்டிட்டுப் போயிட்டு தங்க இடவசதி செய்து தராமல் போக்குவரத்துக்குக் கூட காசுதராமல் வந்த அனுபவம் உண்டு. ஆரம்பத்தில் இந்தத் துயரங்கள் இருந்தது. ஆனா அதை மீறி தேங்காய் முடி கச்சேரி இல்லை இது என்று தெரிந்தவுடன் வருகிறார்கள். அவர்களுக்கு அர்ப்பணிப்பு குறைவாகவும் பேச்சின் பின்னால் கிடைக்கின்ற பணமும், புகழும் பெறுவதே முக்கிய நோக்கமாக இருக்கிறது. பணம் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் வாங்குகிறவர்கள் அதற்கு ஏற்றார்போல் பேச வேண்டும். ஆனால் பேச்சாளர்கள் ஆள்பிடித்து வைத்து மேடையைக் கைப்பற்றுகிறார்கள்.

புதியகாற்று : ஊடகம் காட்சிப்படுத்துவதற்கு முந்தைய சாலமன் பாப்பையாவின் குரலில் அரசியல் தொனி இருந்தது. இன்று ஊடக வெளிச்சத்தில் அந்த தொனியின் கூர்மை குறைந்திருக்கிறதே?

சாலமன் பாப்பையா : இல்லை. அந்த தொனி குறைந்துவிடவில்லை. ஊடகத்துக்குள் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவுதான் சொல்லமுடியும். நான் ஒரு தனிமனிதன். இந்தத் தனிமனிதனின் பின் பணபலமும் இல்லை. ஆள் பலமும் இல்லை. வேறுவகையான பலம் எதுவுமில்லை. இப்படி எந்த பலமும் இல்லாத பொழுது எந்த அளவிற்கு நாம் சொல்லலாமோ அந்த அளவிற்குத்தான் சொல்ல முடியும். நாம் ஒரு ஊடகத்திற்குள் போனபிறகு அந்த ஊடக எல்லைக்குள் சொல்கிற மாதிரி சொல்கிறேனே தவிர முழுமையாக கச்சைக்கட்டி கீழே இறங்க முடியாது. அதுக்காக இந்த மக்களை நேசிக்கிற எல்லையிலிருந்து தவறிவிடமாட்டேன்.

புதியகாற்று : இராமனை ஒரு குறியீடாக வைத்துக் கொண்டு, மத அடிப்படைவாத அரசியல் செய்யும் இன்றைய சூழலில் கம்பன் கழகம், கம்பன் அறக்கட்டளை போன்றவைகள் கம்பனையும், கம்பராமாயணத்தையும் மீண்டும் மக்கள் மத்தியில் பேசுவதும், நினைவூட்டுவதும், மத அடிப்படை வாதத்திற்கு வலுவூட்டுவதாக ஆகிவிடாதா?

சாலமன் பாப்பையா : மத அடிப்படையில்லாத மக்கள் எந்த வகையான சரியான வழிகாட்டுதலும் சமூகத்திற்கு செய்யவில்லை. ஒரு சமூகத்துக்கு, மதவாதிகளில் சிலர் வழிகாட்டுதலை செய்திருக்கிறார்கள். ஆனா அங்கே தீவிரவாதமும் இருக்கு. எப்படி பொதுவுடமை இயக்கங்களுக்குள்ளே தீவிரவாதம் தலைதூக்கி பல்வேறு மாநிலங்களில் செயல்படுகிறதோ அதுமாதிரி மதத்துக்குள்ளேயும் தீவிரவாதம் இருக்கு. இந்த தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தணும் என்றால் இந்த மாதிரி நிறுவனங்களை நாம் கைப்பற்றணும். நாம என்ன விரும்புகிறோமோ அதன் படி அதை செய்திடணும். அத வந்து பஜன் பாடுவதற்கல்ல. இந்த காப்பியத்தை அதன் காலம், கருத்து, பாத்திர, வரலாற்றுப் பின்னணியுடன் ஒழுக்கத்தை வலியுறுத்துகின்ற மாதிரி, மறுபடியும் இராமனைக் கொண்டுவந்து காட்டுவது. ஏதாவது ஒரு முன்மாதிரியைக் காட்டணும் இராமனை விட்டுவிட்டால் வேறு ஏதாவது முன்மாதிரி பாத்திரங்கள் வேணுமே.

புதியகாற்று: இராமன் வாலியை அழிக்கிறார். இராவணனை அழிக்கிறார். குகனை வசப்படுத்துகிறார். தனது பக்கத்திலிருக்கும் சிறுசிறு நிலப்பகுதிகளை ஒரு பேரரசாக விரிவாக்கம் செய்கிறார். இதைத்தான் இந்துத்துவ சக்திகளும் ‘அகண்டபாரத’மாகக் கூறுகின்றன. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சாலமன் பாப்பையா: இராமாயணக்கதையை சிறுவயதில் கிறித்துவனாகத்தான் பார்த்தேன். அப்புறம் பொதுவுடமையாளனாக அதைப் பார்த்தேன். கொஞ்ச காலம் திராவிட இயக்கக்காரனாகப் பார்த்தேன். அப்புறம் ஒரு இலக்கியவாதியாகப் பார்த்தேன். நாம் பெருமைப்படுவதற்குரிய ஒரு இலக்கியம் அது. அதனுடைய சொல், செய்யுள் தரம், செய்திகள் சொல்லும் முறை, பாத்திரங்களை சொல்லும் முறை, குணங்களைச் சொல்லுதல், அறிவுரை சொல்லுதல் இது எல்லாம் நமக்கு வேணும். அதை இழந்துவிட்டால் நமக்கு ஒண்ணுமில்லை.

புதியகாற்று : திருக்குறளை தொடர்ந்து ஊடகங்களில் தந்து கொண்டிருக்கிறீர்கள். திருவள்ளுவரை ஏற்றுக் கொள்கிறவர்கள் கூட பெண் பற்றி திருவள்ளுவரின் மதிப்பீட்டை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சாலமன் பாப்பையா : அதாவது, எதுவுமே நமக்கு ஒரு பழைய மரபு, பெருமை இல்லாமல் நாம் போய்விடக் கூடாது. நாம் பற்றிக் கொள்ள ஒன்று வேண்டும். நமக்குத் திருவள்ளுவர் கிடைத்திருக்கிறார். அவரது காலம் பெண்மையை இழிவுபடுத்திய காலம் இல்லை என்று சொல்ல முடியாது. உலகம் முழுக்க அப்படித்தான் இருந்தது. அந்தக் காலத்துக்குள் இருந்துகொண்டே அவர் அலை மாதிரி ஏறி இறங்குகிறார். ஒரு நேரம் பார்த்தால் பெண்ணை தூக்கி உயர நிறுத்துகிறார். ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்’ என்று மேலே போகிறார். அப்படி போகிறபோதே கொஞ்சம் கீழே இறங்குகிறார். அப்படி இறங்குவது அவரது காலம். அவரை கீழே பிடித்து இழுக்குது. அப்படி இறங்குவது என்பதில் இன்று அவரை விமர்சிக்கும் விமர்சன கர்த்தாக்களும் தப்பமுடியாது. இவர்கள் மோசமாக விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு அல்ல அந்தப் பாட்டன். சில இடங்களில் சில நெருடல் இருக்கு. இல்லையென்று முழுக்க நான் தள்ளிவிடவில்லை. திருவள்ளுவரை நாம் இழந்த பிற்பாடு நாம் சொல்லிக் கொள்ள நமக்கு யார் இருக்கப் போகிறார்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com