Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
மதுரைப் பக்கம்

முகம் தொலைக்கும் மதுரா கோட்ஸ்
ரெ. பழனி

வெண்தங்கம் எனப் போற்றப்பட்ட பருத்தியின் மேல் ஆங்கிலேயருக்கு இருந்த தேவை மோகமும், குறைவான செலவில் அதிகமான உற்பத்தியைப் பெறக் கூடிய சூழலை உணர்ந்த நோக்கமும், மூலப் பொருட்கள் அந்த வட்டாரத்திலேயே சிரமம் இல்லாமல் கிடைத்த விதமும் ஒன்றிணைந்து நீண்ட நெடிய பயன்பாட்டுடன் ஹார்வி பிரதர்ஸ் எனப்படும் ஆண்ட்ரு ஹார்வி, பிராங்க் ஹார்வி ஆகியோரால் ஹார்வி மில்ஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக 1885 ஆம் ஆண்டில் அம்பாசமுத்திரத்திலும், 1889ல் தூத்துக்குடியிலும் 1892ல் மதுரையிலும் ஹார்வி மில்ஸ் நிறுவனம் என நெசவாலைகள் தோற்றம் பெற்றன. மிகப் பெரிய அளவில் உற்பத்தியிலும், தொழிலாளர் எண்ணிக்கையிலும், விசாலமான பரப்பளவிலும் அமைந்தது மதுரையிலுள்ள ஹார்வி மில்ஸ் தான்.

அன்றைய சூழலில் மதுரையின் மாபெரும் முதல் நெசவாலை என்பதுடன் மிகப் பெரிய தொழிலகமாகவும் அமைந்தது ஹார்வி மில்ஸ். சுற்று வட்டாரத்தில் வேளாண்மையும், அதனைச் சார்ந்த தொழிலும் கண்ட மதுரைக்கு புதுவித தொழில் மேலாண்மையைக் காண வைத்து உலகெங்கும் பரவிய தொழில் ஆதிக்கம் இங்கேயும் நிலை கொள்ள வந்தது. மதுரையை நெசவாலைத் தொழிலில் முன்னிலை பட வைத்தது. காலப் போக்கில் வர்த்தக பங்குகள் மூலம் நகர மக்களையும் மூலதனத்தில் பங்கு கொள்ள வைத்தது ஹார்வி மில்ஸ்.
ஹார்வி மில்ஸ் உற்பத்தி செய்த நூல்களுக்கும் துணிகளுக்கும் உலகளாவிய சந்தையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இன்றளவும் பேசப்படுகிறது.

தொழிலாளர் நலனுக்கான ஒன்றியம் தன்னாட்சி இயக்கத்தினரால் 1918 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போது, காந்தியடிகள் தலைமையில் அகமதாபாத் நெசவு ஆலையில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட அறப் போராட்டம் வெற்றியைத் தந்தது. காந்தியடிகள் வெற்றி கண்ட இந்த அறப் போராட்ட முறையை பின்பற்றி தமிழகத்தில் அதுவும் மதுரையில் முதல் முறையாக தொழிலாளர் ஒன்றியம் அதே ஆண்டில் தங்களின் நலனுக்காக போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்கள். காந்தியடிகளை மதுரை ஈர்த்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

எந்தவொரு நிறுவனமும் சந்திக்கும் தொழில் முறை பிரச்சினைகளை இந்நிறுவனமும் சந்தித்து இருந்தாலும் அதனை இலகுவாக கையாண்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் இதன் கட்டியம் போன்று கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. இந்த நிறுவனம் கடந்த 10, 15 ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக பழைய நிலையிலிருந்து முற்றிலும் மாற்றம் பெற்று விட்டது என்கிறார்கள் இதன் பூர்வீகத்தைப் பின்னோக்கி பார்க்கும் தொழிலாளார்கள்.

தங்களுடைய நிறுவனத் தொழிலாளர்களுக்கு அவர்களாகத் தந்த சலுகைகளையும் வசதிகளையும் விட தொழிலாளர்கள் போராடி பெற்றது தான் அதிகம். இங்கே பணியாற்றிய தொழிலாளர்களின் உரிமைக்கும், கடமைக்கும் குரல் கொடுத்த தொழிற்சங்கத் தலைவர்கள் ஏராளம். பழம் பெரியவர்களாகக் கருதப்படுகிற கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வரதராஜூலு நாயுடு, முத்துராமலிங்கத் தேவர், தோழர்கள் கே.டி.கே. தங்கமணி, பி.இராமமூர்த்தி, எம்.எஸ். இராமச்சந்திரன், ராமையா ஆகியோர் தொழிலாளர்களின் நெஞ்சில் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தவிர ஏராளமான தொழிற்சங்கங்களும், அதன் நிர்வாகிகளும், நடைமுறை காலத்தில் பாடுபட்டு வருபவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களையும் நினைவு கூர்கிறார்கள் தொழிலாளர்கள்.

பலரின் முயற்சிகளாலும், தொழிலாளர்களின் கூட்டுறவாலும் குடியிருப்புகளும், குடியிருப்பு பகுதிகளும், கூட்டுறவு பண்டக சாலைகளும், கல்விக் கூடங்களும் ஏற்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேன்மைப்படுத்திக் கொண்டனர். தொழிலாளர்கள் அதிகமாக ஒருமித்து வாழ்ந்த ஹார்விபட்டி எனப்படும் திருப்பரங்குன்றத்திற்கு அருகிலுள்ள பகுதிக்கு ஹார்வி மில்லிலிருந்து தனி ரெயிலே விடப்பட்டது.

மின்சார வசதி இல்லாத அக்காலத்தில் பிரமாண்டமான பெரிய சக்கரம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதனை வெப்பமூட்டி இயக்கி, நீராவி மூலம் இயந்திரங்களை செயல்பட வைத்திருக்கிறார்கள். மில்லில் இருக்கும் இயந்திரங்கள் எல்லாம் மேலை நாட்டைச் சேர்ந்தது. இந்த பிரமாண்ட சக்கரம் மதுரையிலேயே தயாரிக்கப்பட்டது. இச்சக்கரம் இன்றும் மில் நுழைவாயிலில் நினைவுச் சின்னமாக காட்சி அளிக்கிறது. தற்போது இதனை சற்று நகர்த்தி வைத்திருக்கிறார்கள். இச் சக்கரம் இயங்கிய போது வெளியேற்றப்பட்ட சுடுதண்ணீர் சென்ற வாய்க்காலை இன்றும் ‘சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு’ என்றே அழைக்கின்றனர். இந்த சுடுதண்ணீர் வாய்க்காலில் நீராடிப் பெற்ற சிலிர்ப்பை பூரித்து சொல்லும் பெரியவர்கள் இன்றும் இப்பகுதியில் உள்ளனர்.

நிறுவனத்தில் பொறுப்பு வகித்த ஆங்கிலேயர்கள் தங்கள் உறைவிடங்களை குளக்கரைப் பகுதியிலும், குன்றுகளின் உச்சிகளிலும் அமைத்துக் கொண்டனர். காலப் போக்கில் அதனை வர்த்தக போக்கில் கொடுத்து விட்டனர். ஹார்வி குடும்பத்தில் ஒருவரான டோக் பெருமாட்டி நினைவாக மதுரையில் ஒரு மகளிர் கல்லூரிக்குப் பெயர் சூட்டி பெருமைப்படுத்தி இருக்கிறார்கள் மதுரை வாழ் மக்கள்.

தொடக்க காலத்தில் தமுக்கு அடித்து கூவி அழைத்து ஆண்களையும், பெண்களையும் வேலைக்கு அமர்த்திய இந்நிறுவனம் 18,000 பேருக்கு மேல் தொழில் நல்கி பெருமிதம் கொண்டது. 1977லிருந்து தொழிலாளர்களுக்கு தொடர் வேலையினை கொடுக்க ரன்னிங் ஷிப்டையும் அறிமுகப்படுத்தியது. இன்றோ ஆர்ப்பாட்டம் சலசலப்பு இல்லாமல் நிசப்தமாக குறைந்த பட்சம் ஒன்று இலக்க எண்ணிக்கையில் 1000 தொழிலாளர்களுக்கு மிகாமல் வேலைக்கு வைத்து நவீன இயந்திரங்கள் மூலம் ஒரு குறிப்பான ரகத்தை மட்டும் உற்பத்தி செய்து பெயரளவுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. மதுரா கோட்ஸ் பாலத்தின் வழியே கடந்து செல்பவர்கள் கண்களில் அந்தக் காட்சி படாமல் இருக்கமுடியாது. மதுரையின் பிரமாண்ட முகமாய் இருந்த மதுரா கோட்ஸ் தனது காங்கீரீட் சட்டையை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வருகிறது. விழிகளை விரிய வைத்த இராட்சச சக்கரம் ஓரமாய் ஒருபுறம் ஒதுங்கி இருக்கிறது.

ஹார்வி மில்ஸ், மெஜுரா மில்ஸ், மெஜுரா கோட்ஸ், கோட்ஸ் வயலா என காலத்திற்கு காலம் மாறி தற்போது மதுரா கோட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்றாகி விட்ட இந்நிறுவனம் 6 தலைமுறையை கண்டு விட்டது. 6-வது தலைமுறையாகிய நிகழ்கால இளசுகள் இந் நிறுவனத்தை கடக்கும் போது முந்தைய தலைமுறைகள் இதன் சிறப்பையும், பெருமையையும் கூறியதைக் கேட்டு இன்றைய காட்சியுடன் ஒப்பிட்டு பெருமூச்சு விட்டு செல்கிறார்கள். கடந்த கால பிரமிப்பை நிகழ் காலத்து நவீனங்கள் சற்று அசைத்து விடுவது இன்றைய இயல்பான விஷயமாக எதிலும் இருக்கிறது. அதில் மதுரா கோட்ஸ் மட்டும் எப்படி விதிவிலக்காகி விடும்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com