Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
தகவல் தொடர்பு ஊடகம்

மூளைச் சலவை செய்யும் ‘லைவ் சாய்ஸ்’ நிகழ்ச்சிகள்
த. மார்க்ஸ்

மனிதக் கூட்டத்திற்கு வெகு தொலைவில் தனியாக, ஒடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தை சற்றே நிறுத்திவிட்டு பேச ஆரம்பித்தால். . . திடீரென மைக்கோடு உங்களிடம் ஹலோ. . . நீங்க ரெண்டு பேரும் காதலர்களா? வீட்டுக்கு தெரிஞ்சு வந்திருக்கீங்களா? தெரியாம வந்திருக்கீங்களா? என்கிற அபத்தக் கேள்விகளால் உங்களையும், உங்களது தனிப்பட்ட உலகத்தையும் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட சிலர் வருகிறார்கள். காதலர்களே ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் அல்லது கைதிகளைப் போல் காமிராவோடு வருபவரைக் கண்டவுடன் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் புதிதாய் திருமணம் ஆனவரா? மகிழ்ச்சியாய் குடும்பத்தை நடத்தி வருபவரா? மனைவியை குஷிப்படுத்த அல்லது அவரோடு மகிழ்ந்திருக்க பூங்கா, கடற்கரை என்று செல்பவரா? அங்கேயும் மைக்கோடு ஒரு மங்கை வந்து உங்கள் மனைவியிடம் “மேடம் கல்யாணத்துக்கு முன்னால யாராவது உங்களுக்கு ‘லவ் லெட்டர்’ கொடுத்திருக்காங்களா? நீங்க இவ்வளவு அழகா இருக்கீங்க. உங்க கணவர் இருக்கார்னு பயப்படாதீங்க சும்மா சொல்லுங்க” என்று நாட்டுக்குத் தேவையான சில கேள்விகளைக் கேட்டு உங்களையும், உங்கள் மனைவியையும் இக்கட்டான சூழலில் தள்ளிவிடக் கூடும். காமிராக்களுடன் கன்னிப் பெண்களைக் கண்டால் ஜாக்கிரதை.

நீங்கள் நடுத்தரவர்க்கத்து தந்தையா? உங்கள் மகன் அல்லது மகள் திடீரென தொலைபேசியில் “ஹாய் எப்படி இருக்கீங்க! ஒரு வருஷமா டிரை பண்ணிட்டிருக்கேன். இன்னிக்குத்தான் லைன் கிடைச்சது” என்று பற்கள் 32ம் தெரிய பேசினால். BP ஏறுகிறதா டென்சன் ஆகாதீங்க. நீங்கள் உங்கள் பிள்ளையை பெற்ற பொழுதை விட அவன் ஒரு ஆங்கரிடம் பேசிய பொழுதில் நீங்கள் பெருமையடைந்து கொள்ளுங்கள்.

நீங்கள் நவீன வாழ்க்கை வாழ தகுதியானவரா? இது போன்று அபத்த நிகழ்வுகளை ஏற்றுக் கொள்கிற அல்லது தாங்கியாவது கொள்கிற அல்லது கண்டுகொள்ளாமல் போகிற மனப்பான்மை வேண்டும். இவைகளைக் கண்டு கோபப்படுபவரா நீங்கள்? பிறர் செய்யும் போது பொறுத்துக் கொள்ளாதவரா? நீங்கள் இந்த நவீன உலகில் வாழத் தகுதியற்றவர் ஆகிறீர்? இப்படி சமீப காலங்களில் ஆழமாக ஊடுருவி சமூகத்தைச் சீரழிக்கும் லைவ் சாய்ஸ் நிகழ்ச்சியின் நோக்கம் தான் என்ன? ஏன்; எப்படி இந்நிகழ்ச்சி வெற்றி பெறுகிறது?

எந்த வித அடிப்படை உறவுப் பின்னல்களோ, உரிமையோ, தொடர்போ இல்லாத நிலையில் தொலைபேசி வழியே ஒருவர் உங்கள் குடும்பத்தின் மீது பாசம் காட்டுவது எவ்விதத்திலும் சாத்தியம் இல்லை. நேரடித் தொடர்போ, முன் அனுமானங்களோ இல்லாத நபர்கள் அறிமுகம் ஆனவர்கள் போன்று, பாசத்தோடு குடும்ப நபர்களை விசாரிப்பது போல் நடிக்கலாமே தவிர உள்ளுணர்வோடு எதையும் செய்ய இயலாது. ஒரு இயந்திரத்தின் வழியே புதிய உறவுகளை வளர்த்தெடுப்பதோ, உணர்வுகளை பகிர்ந்து கொள்வதோ இயலாது என்பதை புரிந்து கொள்ளவோ, சிந்திக்கவோ, இந்த ஊடகங்கள் மக்களை அனுமதிப்பதில்லை. அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை ஒரு வேளை நீங்கள் நேரில் சந்திக்க நேர்ந்தால், அவர் உங்களிடத்தில் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். இது ஒருவித மாயையை உருவாக்கி மக்களை உணர்விழந்து போகச் செய்யும் உத்தியே அன்றி வேறொன்றுமில்லை.

ஒரு காலகட்டத்தில் மக்கள் தங்கள் பொழுது போக்கிற்காக பல்வேறு பொது இடங்களில் கூடி உணர்வுகளை வெளிப்படுத்தவும் பண்பாட்டை பகிர்ந்து கொள்ளவும் முயன்றனர். அந்த பண்பாட்டு பகிர்வு தற்போது முடக்கப்பட்டு விட்டது. மக்களை வெளியே செல்லவிடாமல் வீட்டுக்குள்ளேயே பூட்டி முடக்கி வைக்கும் ஒரு சுயநலச் செயலை இந்த நிகழ்ச்சிகள் செய்து வருகின்றன. மொத்தத்தில் மக்களின் சமூகச் சந்திப்புகள் முற்றிலும் சாத்தியமின்றிப் போய்விட்டது. ஏற்கனவே சமூகத்தோடு தொடர்பை துண்டித்துக் கொண்டு, பொது சந்திப்புகளை தவிர்த்து விட்டு தங்களை தனிமையில் இருத்திக் கொள்ள விரும்பிய நடுத்தர/பணக்கார வர்க்கத்தினருக்கு மேலும் ஒரு சில கவர்ச்சிகளை வழங்கி வீட்டுக்குள்ளேயே புழுங்கிப்போகச் செய்கிற ஒரு சமூக விரோதப் பணியை இந்த நிகழ்ச்சிகள் செய்து வருகின்றன. நவீன மனிதர்களுக்கு மிருகம் போன்றதொரு இருப்பை ஏற்படுத்தித் தருவதுதான் இதன் பிரதான நோக்கம். அடுத்த வீடுகளில் வசிக்கும் நபர்களின் பெயர்கூடத் தெரிவதில்லை. அவர்களது மரணம் கூட, சமயங்களில், கண்டு கொள்ளப்படுவதில்லை. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறும் நிகழ்ச்சி அலங்கரிப்போரின் பெயர்கள் அத்துப்படி.

இந்நிகழ்ச்சி பெரும்பாலும் 15-25 வயதிலுள்ள இளையோரைச் சல்லடை போட்டுத் தேடி எடுத்துச் சீரழிக்கும் முயற்சி. எந்நேரமும் விடலைகளின் மன அமைப்பு மற்றும் தங்களைப் பற்றிய தவறான முன் அனுமானங்கள்- இவற்றோடு தொடர்புடைய வக்கிரமான செய்திகளை, பார்வையாளனின் காம உணர்வை எளிதில் தீண்டக்கூடிய செய்தியை வெளிப்படையாக, சமயங்களில், இலை மறையாக பேசுவது, உளவியல் ரீதியாக வேறுபால் நபர் ஒருவருடன் மிகப் பெரிய தொலைவில் இருந்து தொலைபேசி வழியே நெருக்கமாக பேசுவது; சமயங்களில் கொஞ்சி குலாவுவது பேசுபவருக்கும், பார்ப்பவருக்கும் ஒருவித போதையை, காமக் கிளுகிளுப்பை வழங்குகிறது.

தூரத்தில் இருந்து பேசினாலும் ஒருவித நெருக்கமும், பாலியல் ரீதியிலான திருப்தியும் உணரப்படுகிறது. அதே நபர்கள் ஒருவேளை நம் அருகில் இருந்தால் இது போன்ற செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியாது. சில நேரங்களில் அவர்களை பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் கூட உண்டு. அக்கரைப் பச்சை எப்போதும் அழகு. இந்நிகழ்ச்சி ஒரு விதமான வெட்டிப் பேச்சு. பூட்டப்பட்டிருக்கிற கேபின்களுக்குள் யாருடைய தலையீடும் அல்லாமல் முகம் தெரியாத நபரோடு பாலியல் பரிவர்த்தனைகள் நிகழ்த்தும் பருவ இளையோர் தற்போது தங்கள் பெற்றோரோடு சேர்ந்தே முகம் தெரிகிற ஒருவரோடு உரையாடும் வாய்ப்பாக இந்நிகழ்ச்சியை பார்க்கின்றனர். ‘சாட்டிங்’ தனிமையில் இருந்து அனுபவிக்கிற பாலியல் சார்ந்த சுகத்தை பொதுவில் பலர் மத்தியில் அனுபவிக்கின்றனர். இது ஒரு விதமான பாலியல் சுகம் பெறும் உரையாடலே அன்று வேறொன்றுமில்லை.

பாலியல் உரையாடல்கள் காட்சிகளாக (விஷுவல்) இருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு அது ஒரு வார்த்தை பாலியல் உரையாடல் சில நேரங்களில் பாலியல் கவர்ச்சி அவர்களது வார்த்தைகளில் வெளிப்படையாக இல்லை என்றாலும் வார்த்தைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளிகள் நிகழ்ச்சியை வழங்குபவரின் பார்வையாலும், ஆடைகளாலும் நிரப்பப் படுகிறது.

இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகிற நிகழ்ச்சி வழங்குவோர் பெரும்பாலும் மாற்றுப்பால் உடைகளையே அரைகுறையாக அணிந்து வருகின்றனர். ஒரு ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்து கொண்டு, அந்த டி-சர்ட்டை நிமிடத்திற்கொருமுறை இடுப்பிற்கு கீழ் இழுத்து விடுவது, ஸ்லிவ்லஸ் டி-சர்ட் அணிந்து வருவது போன்ற உத்திகளால் இவர்களது பிரதான நோக்கமும், இந்நிகழ்ச்சியின் வெற்றியின் பின்னணியுமான பார்வையாளனை பாலியல் சுகம் பெறும் அடிமைகளாக மாற்றும் பணி சிறப்பாக நடந்தேறுகிறது. இது ஒருவித நீலப்படங்களைப் பார்ப்பதை காட்டிலும், காமப் படங்கள் பார்ப்பதைக் காட்டிலும் கொடூரமானது. நீலப்படங்கள் பார்க்கும் போது ஒரு நபர் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்கிறார். ஆனால் இங்கே பார்வையாளர் பங்குபெறுபவராக மாற்றப்படுகிறார்.

அனைத்திற்கும் மேலாக இந்நிகழ்ச்சி தமிழ் மொழியை சிதைக்கிற ஒரு பெரும்பணியையும் செய்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உதிர்க்கும் முதல் வார்த்தையாகிய ‘ஹாய்’ தொடங்கி ‘பா.பாய்’ என்று முடிக்கும் வரை தமிழைக் கொலை செய்து காயப்போட்டு விடுகின்றனர். சாதாரணமாக எப்படி இருக்கீங்க? என்று கேட்பதைக் கூட எப்டி இருக்கீங்க என்று ஸ்டைலாக கேட்பதுவும், வீட்ல அம்மா என்ன ‘குக்கிங்’ ஆ, பேபி என்ன ஸ்லிப்பிங்ஆ என்பது வரை தமிழ்த்தாய் ரத்தக்காயங்களோடு புலம்புவதைக் காண முடிகிறது. இதைவிட கொடுமை என்னவென்றால் தூய தமிழைப் பேசுபவரை நக்கலடிப்பது, தூய தமிழில் பேசி கேலி செய்வது - இவற்றின் மூலம் சுத்தத் தமிழை கேலிக்கும் கிண்டலுக்குமான ஒரு மொழியாக பார்வையாளனை அணுக வைப்பது என்று தணியுமோ இந்த கொலைவேட்கை?

இது போன்ற நிகழ்ச்சி வழங்குவோர் அழையா விருந்தாளியாக நம் இல்லத்திற்குள்ளும், இதயத்துக்குள்ளும் நுழைந்து விடுகின்றனர். அவர்கள் அழையா விருந்தாளியாக இருந்த போதிலும் நம்மிடம் உள்ள பாலியல் மீதான கவர்ச்சி/ஈர்ப்பின் காரணமாக அவர்களை உபசரிக்கும் கட்டாயச் சூழலுக்கு உள்ளாகிறோம். மொத்தத்தில், இந்நிகழ்ச்சியின் வெற்றியின் ரகசியம் என்பது மக்களின் அறியாமையும், பாலியல் கவர்ச்சியுமே அன்றி வேறில்லை. இந்நிகழ்ச்சி ஒரு பாலியல் ரீதியான சுரண்டலே அன்றி வேறில்லை. சாதாரண மக்கள் தங்கள் குரலோ உருவமோ வானொலியில், தொலைக்காட்சியில் வருகிறதனால் தாங்கள் மிகவும் பிரபலமடைவதாகவும், பல லட்சம் மக்கள் நம்மை காண்கிறார்கள் என்கிற உணர்வு நிலையில் இருப்பதுவுமே வருத்தமளிக்கிற விசயம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com