Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
சிரிப்பு தரும் சிந்தனைகள்

அப்படியே பின்பற்றுவது ஆபத்து
நீலம் மதுமயன்

எத்தனையோ பார்க்கின்றோம், எத்தனையோ கேட்கின்றோம் எல்லாவற்றையும் பின்பற்ற முடியாது. முடியுமெனில் மூன்று மணி நேரம் நாதஸ்வரக் கச்சேரி கேட்பவர்கள் எல்லாம் நாதஸ்வரம் வாங்க வேண்டியதாகி விடும். ஒருவேளை பின்பற்ற வேண்டிய ஒன்றாயிருப்பினும் சிலவற்றை அப்படியே பின்பற்றுவதும் ஆபத்தாகும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், கருத்தால் உணர்வதே மெய்.

ஒன்றைக் கேட்டதும் உண்மைப் பொருளை உணராமல் அப்படியே ஏற்பது எவ்வளவு ஆபத்து என்பதை அனுபவத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். சிலர் சின்ன விஷயங்களைக் கூட அப்படியே நம்புவதும், அப்படியே பின்பற்றுவதும், அதன்பின் வருந்துவதுமாயிருப்பர். இந்தப் பழக்கம் நாளடைவில் பெரிய விஷயங்களையும் நம்பி பெரிதாக ஏமாற வழி வகுக்கும்.

அப்பா படி, படி என்று தினமும் அறிவுரை சொன்னாலும் அவன் படிப்பதாக இல்லை. அறிவு வர வேண்டும் என்றால் கொஞ்சமாவது படிக்க வேண்டாமா? ஒரு நாள், மிகவும் மனம் வருந்தி, கோயிலுக்குப் போனாலாவது திருந்த மாட்டானா என்று எண்ணி, “டேய் போடா கோயிலுக்குப் போ, அங்க போய் கடவுள் கிட்ட எனக்கு நல்ல புத்தியக் கொடு கடவுளே, எனக்கு நல்ல படிப்பறிவைக் கொடு கடவுளே, எனக்கு நல்ல அறிவைக் கொடு கடவுளே என்று வேண்டிக்கிட்டு வா”- என்று கூறி விட்டார்.

அவனும் நல்ல புத்தி வந்தவனைப் போல வேகமாகப் போனான். போய்; “கடவுளே எங்க அப்பாவுக்கு நல்ல புத்தியக் கொடு கடவுளே, எங்க அப்பாவுக்கு நல்ல படிப்பறிவைக் கொடு கடவுளே, எங்க அப்பாவுக்கு நல்ல அறிவைக் கொடு கடவுளே”- என்று வேண்டிக் கொண்டான். இது எப்படி இருக்கு? இப்படி எல்லாவற்றையும் அப்படியே பின் பற்றினால் என்ன ஆகும்?

வகுப்பறைக்கு முன் கூட்டியே வந்த ஆசிரியர் ஏதோ ஒரு வேலையாக தலைமை ஆசிரியர் அறைக்குப் போக நேர்ந்ததால் தனது கைப் பையை மேசையில் வைத்து விட்டுப் போனார். இடைவேளை முடிந்து வந்த மாணவர்கள் ஆசிரியர் இல்லை என்று எண்ணி வெளியே போய் விட்டனர். அனைவரையும் அழைத்து வந்து சத்தம் போட்ட ஆசிரியர், “டேய் நான் என் பையை வைத்து விட்டுப் போயிருக்கின்றேன் என்றால் நான் வகுப்பில்தான் இருக்கின்றேன் என்றே எண்ண வேண்டும் புரியுதா?”- என்று கடிந்து கொண்டார்.

மறுநாள் வகுப்பு தொடங்கியதும் ஆசிரியர் வந்து பார்த்தால் மாணவர்கள் யாரும் இல்லை. அவர்களின் இருக்கைகளில் எல்லாம் அவர்களின் பைகள் மட்டும் இருந்தன. அதைப் பார்த்த அவருக்குக் கோபம். உடனடியாக அனைவரையும் அழைத்து, “எங்கடா போனீங்க?”- என்றால், “சார் எங்கப் பைகள் எல்லாம் இருந்தால் நாங்கள் எல்லோரும் இருப்பதாகத்தானே அர்த்தம்”- என்றார்களே பார்க்கலாம்.

அப்படியே பின் பற்றுவதால் வரும் அபத்தத்தைப் பார்த்தீர்களா? ஆலோசிக்க வேண்டும் இல்லையேல் ஆபத்தைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.

வெளியூருக்குப் போன அப்பா அங்கிருந்து வீட்டுக்குப் போன் செய்தார். போனை அவரது மகன் ஒரு சின்னப் பையன் எடுத்தான். எடுத்ததும் அவன், “அப்பா நம்ம வீட்டுப் பூன செத்துப் போச்சிப்பா”- என்றான். உடனே அவனது அப்பா, “டேய் எந்த ஒரு காரியமானாலும் எடுத்த உடனே நேரடியா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்பது போல பேசக் கூடாது”- என்றார்.

உடனே அந்தச் சிறுவன் விடாமல், “ஏம்பா? அப்படிச் சொன்னால் என்ன?”-என்றான். அவரும் பொறுமையாக, “திடீர்னு இது போன்ற அதிர்ச்சியான தகவல்களைச் சொன்னால் கேட்பவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும்”- என்றார். அவனும் விடாமல், “அப்ப எப்படிப்பா சொல்லணும்?”- என்று கேட்டான்.

அவர் அதற்கும் பொறுமையாக, “நம்ம வீட்டுப் பூனை நாலு மணிக்கு நம்ம வீட்டு கூரை மேல ஏறி நின்னுட்டிருந்ததுப்பா, அப்ப அதப் பார்த்து நாங்க கீழ இறங்கு விழுந்திடுவ கீழ இறங்குன்னு கூப்பிட்டுப் பார்த்தோம். அப்புறமும் இறங்காம மேலயே நின்னுகிட்டிருந்ததா?. ரெம்ப நேரம் நின்னதால அதுக்குப் பசி. அந்த மயக்கத்தில கீழ விழுந்தது. ஒடனே நாங்க ஓடிப் போய் தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனோம். அங்க டாக்டர் பார்த்துட்டு பூனை செத்துப் போச்சின்னு சொன்னார் அப்பான்னு சொல்லணும். ஏந்தெரியுமா? இப்படி மெதுவா சொல்றதுக்குள்ள கேட்பவர் மனம் பக்குவப்பட்டு விடும்”- என்றார். அவனும் சரி சரி என்று மண்டையை ஆட்டிக் கொண்டான்.

மறு வாரம் வெளியூர் போன அப்பா அங்கிருந்து வழக்கம் போல் போன் செய்தார். அவரது வயதான அம்மா நலம் இல்லாமல் இருந்தாள். எனவே அதைப் பற்றி விசாரிக்கவே அப்போது போன் செய்தார். போனை அப்போதும் அந்தச் சிறுவன்தான் எடுத்தான். உடனே அவரும், “என்னடா? வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “ அப்பா நம்ம பாட்டி நாலு மணிக்கு நம்ம வீட்டு கூரை மேல ஏறி நின்னுட்டிருந்தா, நாங்களும் இறங்கு இறங்குன்னு கூப்பிட்டுப் பார்த்தோம்”- என்று ஆரம்பித்தானே பார்க்கலாம். அப்படியே பின்பற்றுவது ஆபத்து. ஆனாலும் அப்படியே பின்பற்றுபவர்கள் அதிகம். இது ஒரு குழந்தைத் தனமான செயல் என்பதைப் புரிந்து கொண்டால் அவர்க்கும் நல்லது அடுத்தவருக்கும் அது நல்லது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com