Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
எதிர்வினை

இளையராஜா மீதான ஒற்றைப் பார்வை
காளிமைந்தன்

இளையராஜா மேதமைமிகு இசைப் படைப்பாளி. அப்படைப்பாளி படைப்பு சார்ந்த மதிப்பீடுகள் எழுவது இயல்பு. ஆனால் தமிழில் அவர் படைப்பை முன்வைத்து எழுந்த அக்கறையுடைய எழுத்து முயற்சிகள் குறைவு. அவர் படைப்புக்கு அப்பாற்பட்டு அவர் சார்ந்த சமூகக் குழுவை அடையாளமாகக் கொண்டே படைப்புகளும் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இக்கட்டுரையும் மையம்கொண்ட புள்ளி அவர் தலித் என்பதிலிருந்துதான் அந்த ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு தங்கள் மதிப்பீடுகளுக்கான நியாயத்தை கோருகிறார்கள் பலர். இக்கட்டுரையாளரும் அதற்கு விதிவிலக்கல்ல. இளையராஜா விமர்சிக்கப்படக் கூடாது என்பது இங்கு நோக்கமல்ல.

இளையராஜாவே சொல்லிக் கொள்ளாத ஒன்றை அவர் மீது திணிப்பது முறையல்ல. அவர் அப்படி சொல்லிக் கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தை தலித்துகளும் கைவிட்டு நாளாயிற்று. அவர் தலித் என்பதால் இக்கடிதம் எழுதப்படவில்லை. மாறாக தலித் எனும் அடையாளத்தை அவர் மீது சுமத்துவதன் ஒட்டுமொத்த நோக்கத்தையும் அடையாளம் காட்டவே இக்கடிதம். இளையராஜா பிராமணமயமாகிப் போனதாக இக்கட்டுரை வேறுசொற்களில் சுட்டிக் காட்டுகிறது. இந்த குற்றச்சாட்டு ஒன்றும் புதிதல்ல. அவர் சொல்ல விரும்பாத ஒன்றையே அவர் மீது சுமத்தி விமர்சிப்பது கட்டுரைக்கு நியாயம் கூட்டுவதாக இல்லை. உண்மையில் பிராமணரல்லாத அரசியல் மனோபாவத்தில் இது உருவாகிறது என்று குற்றம் சாட்டுகிறேன். இளையராஜாவை வைத்து தொடங்கும் இத்தகைய ‘பிராமணிய பழி’ இன்றைக்கு பிராமணரல்லாத சாதி இந்து அரசியலை நுட்பமாக புரிந்து கொண்டு எதிர்க்கும் தலித் அரசியல் வரை நீட்டிக்கப்படுவதை சூழலில் பார்க்கிறோம். அத்தகு அரசியலுக்கே இப்பார்வை பயன்படும்.

பிராமணியம் என்றால் என்ன? சாதி ஒழிப்பு என்பது எதைக் குறிக்கிறது? எனும் இவைகளைப் பற்றி தலித்துகளுக்கு தனித்துவமான பார்வைகள் உண்டு. பிராமணர்களிடமிருந்து அதிகாரம் கையடைந்ததும் தலித்துகள் மீது சாதிவெறியை நுட்பமாகக் கையாளும் பிராமணரல்லாத அரசியலிலிருந்து தலித்துகளின் சாதி ஒழிப்பு பற்றிய பார்வை வேறுபட்டது. பிராமணியமும், முதலாளியமும் நம் இருபெரும் எதிரிகள் எனக் கூறும் அம்பேத்கர் அதற்கப்பாலும் பிராமணியம் பிராமணரல்லாதவர்களிடம் பரவுவதையும், சமத்துவ தன்மைக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளையும் பிராமணியமாகவும் மதிப்பிடுகிறார். தலித்துகளை பொறுத்தவரை பிராமணர்களும், சாதி இந்துக்களுமே சமத்துவத் தன்மைக்கு எதிரானவர்களாக இருப்பதையே பார்க்க முடிகிறது. அயோத்திதாச ப்பண்டிதர் பிராமணரால் வகுக்கப்பட்ட சாதியாசாரங்களையும், சமய ஆசாரங்களையும் வைத்துக் கொண்டு நான்பிராமின்ஸ் எனக்கூறுவது வீணேயாகும் என்கிறார். எனவே பிராமணரல்லாதோர் பார்வையில் அமைந்த பிராமண எதிர்ப்பு கருத்தை வைத்துக் கொண்டு, அதுவே தலித்களுக்கும் பொருந்தும் என்று தானாக முடிவு செய்து தலித்துகளை மதிப்பிடுவதை நா.மம்மது போன்ற இசை ஆய்வாளர்கள் கைவிடவேண்டும்.

அதைப்போல இலக்கியம், சமயம், வரலாறு, பண்பாடு ஆகியவை குறித்த பார்வைகளிலும் தலித்துகள் உண்மைக்கு பொருந்திய தனித்துவம் வாய்ந்த கருத்துகளையே பகிர்ந்துள்ளனர். தலித் பற்றிய கட்டுரை தவிர வேறு எதற்கும் தலித் சிந்தனையாளர்களை மேற்கோள் காட்டிவிடாத தமிழ் சிந்தனையாளர்களுக்கு இதுபற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. திருவாசகம் பற்றி அயோத்திதாசர் மாற்றுப் பார்வை ஒன்றை வைக்கிறார். இந்திய வரலாறு தொடர்பாக அம்பேத்கர் குறிப்பிடும் கருத்துகளை வைத்து எதையாவது யாரும் இங்கு ஆராய்ந்திருந்து இருக்கிறார்களா?

இக்கட்டுரையில் கூட அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் பெயரை கையாளுகிறார் கட்டுரையாளர். தலித்தாகிய ஒருவரை மறுப்பதற்கு தலித்துகளையே மாற்றாக நிறுத்துவது தமிழ் விமர்சகர்களின் கேடுகெட்ட போக்கு. தலித்துகள் சம்பந்தப்படாத பொதுவான ஒன்றைப் பற்றி பேசும் போது கூட அம்பேத்கரை அவர் போன்ற தலித் சிந்தனையாளர்களை / கருத்துக்களை மேற்கோள் காட்டும் மனோபாவம் இங்கு வேண்டும். இக்கருத்துகள் மம்மது அவர்களை முன்கொண்டு தமிழ்ச் சமூகம் முழுமையையும் நோக்கி வைக்கப்படுகிறது. தலித்துகளில் யாரையேனும் ஒருவரை வைத்து பிராமணமயமாகிப் போனதாக கூச்சலிடும் யாரும் சாதிமயமாகிவிட்ட பிராமணரல்லாத அரசியலை நோக்கி விரலை நீட்ட முடியுமா? இளையராஜாவின் இசையை பிராமணர்கள் இழிவுபடுத்தியது ஒருபுறம் என்றால், அதையே திரும்பத் திரும்ப சொல்லி மறுஉற்பத்தி செய்கிறது இன்றைய விமர்சன ‘அரசியல்’.

இளையராஜா பிராமணர்களை எந்த வகையில் நியாயப்படுத்தினாலும் எனக்கு உடன்பாடான கருத்து இல்லை தான். ஆனால், இளையராஜா கூறும் எல்லாக் கருத்துகளும் பொதுப்புத்தி சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒன்றினைப் பற்றி சுயமாக முற்றிலும் புதிய அர்த்தத்தில் கருத்தினை கூற கலைஞனுக்கு உரிமை இருப்பதாக கருதுகிறேன். தனிப்பட்ட வாழ்க்கையில் இளையராஜா மேற்கொள்ளும் நடவடிக்கையை கடந்ததாக அவரின் இசை சார்ந்த பார்வைகள் அமைய முடியும். அதனை அறிய அவர் படைப்பை அணுகுவதே பொருத்தமாக இருக்கும். இப்படி தனிப்பட்ட வாழ்க்கையை வாய்ப்பாக கொள்ள முடியும் எனில் மம்மதுவோ அல்லது அவர் பின்குறிப்பில் குறிப்பிடும் நண்பர்களோ (அதுவும் அரசியல் மயப்பட்ட நண்பர்கள்) தனிப்பட்ட வாழ்க்கையில் பிராமணர்களை தவிர்த்துதான் இருக்க முடிகிறதா? என்பதை மம்மதுவின் நெஞ்சறியும்.

இதையெல்லாம் விடுத்து இசை சார்ந்த மேற்கோள் ஒன்றைக் கொண்டு சமூகப் பார்வை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கட்டுரையில் ஆங்காங்கு நாம், நமது என்று சொற்களை கையாளும் கட்டுரையாளர் ‘நீங்கள் சென்று சேர்ந்த இடத்தின் அங்கீகாரத்திற்காக”, “வெள்ளைக்காரப் பேரனின் அங்கீகாரத்திற்காக” என்று கொச்சையாக எழுதியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. இந்த “நமது” சாதியச் சமூகம் அவருக்கு அளித்த அங்கீகாரங்கள் எவையாவை? இந்த வார்த்தைகளை உபயோகிக்க இந்த சமூகத்திற்கு ஏதேனும் தகுதியுண்டா?

தமிழகத்தில் பன்மியம் என்பதை தினசரி வாழ்வில் அனுமதிக்காத பலரும் ‘தற்காப்பு’க்காக இப்போது அதனை உச்சரிக்க தொடங்கியுள்ளனர். ஏனோ நா.மம்மதுவும் அதனை உபயோகித்து இருக்கிறார். தாமாக வரித்துக் கொண்டுள்ள அரசியல் பார்வையில் ‘ஒற்றை’த்தன்மையில் இளையராஜாவை அணுகும் இக்கட்டுரையில் பன்மியப்பார்வை கிஞ்சித்தும் இல்லை.

இறுதியாக, இளையராஜா சிம்பொனிக்காக திருவாசகத்தைத் தேர்வு செய்தது எதுவரையில் சரி? அவர் அடுத்து செய்ய வேண்டிவையெல்லாம் என்னென்ன? என்பதையெல்லாம் பட்டியலிட்டு இருக்கிறார். இதைத்தானே நீங்கள் எதிர்பார்ப்பது. . . கட்டளையிட்டாயிற்று . . . இனி என்ன வேலை செய்யத்தானே வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com