Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
எதிர்வினை

இளையராஜா - சிம்பொனி - சமூகப்பார்வை மீதான எதிர்வினை
ஹவி

ஒரு படைப்பு கலைஞன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மனங்களோடு வேலை செய்து முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டுக்கள் தமிழகத்தை கட்டி வைத்திருந்த மாபெரும் இசை மேதை அவரை மதிப்பிடுவதற்கான நா.மம்மதுவின் அளவீடு சரிதானா என்பதை மீள் பரிசீலனை செய்யக் கேட்டுக்கெள்கிறேன். ஏனெனில் தமிழக மற்றும் இந்திய சூழலைப் பொறுத்த அளவில் ஆன்மீகம் என்றாலே இது பார்ப்பனீயத்தோடு தொடர்புடையது தான் அல்லது அதற்கு எதிரானது தான் என்ற இரண்டு பார்வைகளுமே தவறானவை. ஒருவிதத்தில் அது பார்ப்பனீய வரையறைக்குள்ளேயே செயல்படுபவையும் கூட. கடவுள் - மதம் - ஆன்மீகம் - கலைப்படைப்பு - வாழ்வியல் என்ற வரிசைத் தொடரின் முடிவற்ற முடிச்சுக்களை அவிழ்க்கும் ஒரு மதச்சார்பற்ற அதிலும் குறிப்பாக சாதிசார்பற்ற கண்ணோட்டம் இன்னும் தமிழ் சிந்தனை பரப்பில் உருவாகவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

கலைப்படைப்பை பற்றிய கலைஞனின் அறிக்கைக்கும் (ஸ்டேட்மென்ட்ஸ்) அவனுடைய கலைப் படைப்பாக்கத்திற்கும் யாதொரு நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பு ஏதும் இருக்க வேண்டியதில்லை. அதே சமயம் இருக்கக் கூடாது என்பதுமில்லை.

படைப்பாக்கம் என்பது முற்றிலும் மாறான ஒரு மனத்தளத்தில் உருவாகக் கூடியது. இளையராஜாவின் ஆன்மீகக் கண்ணோட்டத்திற்கும் இசை குறித்த அவருடைய பார்வைக்கும் அவருடைய படைப்பாக்க உள்ளடக்கத்திற்கும் கலை வாழ்க்கைக்கும் நீண்ட வேறுபாடுகள் உள்ளன. அதனை வெறும் பார்ப்பனீய உள்ளடக்கத்திற்குள்ளேயே பொருத்துவது முற்றிலும் முரணானது. மேலும் இளையராஜா தன் சிறப்பான முன்னோர்கள் என்று கூறுகிற சிம்பொனி மேதைகளான மொசார்ட், பீதோவன், ஸ்கூபர்ட் போன்றவர்களின் இசைக்கோலங்களை முன்னிலைப்படுத்துவது ‘வெள்ளைத் தோலர்களின்’ அங்கீகாரம் வேண்டியே என்பதும் குறைபாடுடைய பார்வைதான். ஆரம்ப காலங்களில் இருந்தே இளையராஜாவிற்கு சிம்பொனி மீதான ஈர்ப்பு இருந்திருக்கிறது. மேலும் வரலாற்று ரீதியாக மத்திய காலகட்டங்களில் ஐரோப்பாவில் அனைத்துக் கலை படைப்புகளும் மத நீக்கம் செய்யப்பட்டபொழுது தோன்றிய கலை வடிவங்களில் ஒன்றாகும் நவீன சிம்பொனி. சிம்பொனி ஒரு மதச்சார்பற்ற இசைவடிவம் ஆகும்.

ஒரு படைப்புக் கலைஞன் என்ற விதத்தில் தனக்கான முன்னோடி வடிவத்தை உலகின் எப்பகுதியில் இருந்தும் தேர்ந்து கொள்வது படைப்பாளியின் உரிமை. உலகின் அனைத்து இசை வடிவங்களையும் புரிந்து கொண்ட பிறகுதான் இளையராஜா தனக்கான இந்த இசை வடிவத்தை தேர்கிறார். இது படைப்புச் செயல்பாடு சம்பந்தப்பட்டது. மேற்கத்திய இசை உருவங்களை கையாள்வதாலேயே அது வெள்ளை ஆதிக்கத்திற்கான அங்கீகாரம் என்று பார்ப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்.

படைப்பு ரீதியான பரிசோதனை முயற்சிகளுக்கும் புரட்சிகர இசைக்கும் நேரடியான தொடர்புகள் ஏதும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. ‘அவாள்கள்’ தொடங்கி ம.க.இ.க. வழியாக நா.மம்மது வரை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தங்கள் கோட்பாடுகளை ஆசையை அவர்மீதும் அவர் படைப்பு மீதும் திணிப்பது எப்படி சரியானதாக இருக்கும். இதன் அர்த்தம் எல்லா நாட்டுப்புற கலை வடிவங்களும் புரட்சிகரமானதா என்று நாம் ஆராய்ந்தால் நிச்சயம் இல்லை. அதே போல மிகப் பெரும் அலைகளை ஏற்படுத்திய மக்கள் எழுச்சிப் பாடல்கள் என்று சொல்லக்கூடிய புரட்சிக்கான பாடல்கள் அனைத்தும் கூர்ந்த இசை மேதமையோடு செய்யப்பட்டவையா என்று ஆராய்ந்தால் அதற்கும் நாம் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டிவரும்.

இது இளையராஜாவின் இசை ரீதியான விமர்சனமாக இல்லாமல் ஆங்காங்கே அவர் சொன்ன ஸ்டேட்மென்ட்கள், அவர் சொந்த வாழ்க்கை நடைமுறை, அவர் ஆன்மீக ஈடுபாடு போன்றவற்றின் மீதான மம்மது அவர்கள் வைக்கும் விமர்சனத்திற்கும் இதன் அடிப்படையில் இவர் உருவாக்கிக் கொண்ட மதிப்பீடுகளுக்கும், இளையராஜாவின் இசை ரீதியான படைப்பாக்க உள்ளடக்கத்திற்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது. அப்படி ஏதும் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை.

ஏதோ ஒரு வகையில் சிந்தனையாளர்கள், இசைஅறிஞர்கள், அரசியல் இயக்கத்தினர், கோட்பாட்டாளர்கள் இளையராஜா மீது ஏன் இவ்வளவு கடுப்பு என்று நாம் சிந்திக்க துவங்கினால் ஒரு அசல் கலைஞன் மக்களை ஈர்க்கிறான். அறிஞர்களை தொந்தரவு செய்கிறான் என்றே சொல்லத் தோன்றுகிறது. பக்தி இயக்க ஓதுவார்களை பெருமிதமாக பேசுகிற மம்மது அவர்கள், ஓதுவார்களின் அல்லது பக்தி இயக்க காலகட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும் பார்ப்பனீயத்தை ஏற்றுக் கொண்டே செய்யப்பட்டன என்பதை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர் என்பதை கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அதனை தனது இசை மூலமாகவும் கருத்தின் மூலமாகவும் இளையராஜா என்கிற சமகாலக் கலைஞன் நிராகரிப்பது எப்படி பார்ப்பனீயமாக இருக்க முடியும்.

காலத்தை மீறுகிற ஒவ்வொரு கலைஞனுடைய கலைப்படைப்புகளை ஆய்வு செய்ய எப்பொழுதும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோட்பாட்டு கருவிகள் போதுமானவையாக இருப்பதில்லை. இளையராஜாவின் இசையும் இலக்கணங்களையும் கோட்பாடுகளையும் உடைத்துக் கொண்டு அத்துமீறி வெளியேறுவதை பொறுக்க முடியாத அல்லது புரிந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை மீண்டும் ஒரு முறை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com