Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
செப்டம்பர் 2005
நிகழ்வுகள்

கவிக்கோ விருது மற்றும் ஏலாதி இலக்கிய விருது


சென்னை தினம்

சென்னை நகரம் உருவாக்கப்பட்டு சுமார் 367 வருடங்களாகிறது. சென்ற ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ‘சென்னை தினமாக’க் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவிய பிறகு ஆங்கிலேயர்கள் ‘மதராஸ்’ வந்து சேர்ந்து சென்னப்ப நாயக்கர் என்பவரிடம் நிலம் வாங்கி ‘வர்த்தக மையம்’ ஒன்றை உருவாக்கினார்கள் என்பது வரலாறு. தற்போதைய தலைமைச் செயலகம் தான் அவர்கள் வாங்கிய நிலப்பகுதி. ‘சென்னை’ எனப் பெயர் வந்தது குறிப்பிடத்தக்கது.

பிரஞ்சுக்காரர்கள் மற்றும் டச்சுக்காரர்களின் படையெடுப்பில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக கோட்டையை எழுப்பினர். அப்போது தான் சென்னைத் துறைமுகம் உருவானது. அந்தச் சமயத்தில் வேப்பேரி, புரசைவாக்கம், திருவல்லிக் கேணி, மயிலாப்பூர், எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகள் எல்லாம் கிராமங்களாக இருந்தன. படிப்படியாக இப்பகுதிகள் மக்கள் தொகைப் பெருக்கத்தால் சென்னையோடு இணைந்து இன்று 66 லட்சம் பேர் வசிக்கும் முக்கிய நகரமாக மாறிவிட்டிருக்கிறது.

கவிக்கோ விருது

2005-ஆம் ஆண்டுக்கான ‘கவிக்கோ விருது’ கவிஞர் நா. காமராசனுக்கு கிடைத்திருக்கிறது. மதுரைத் தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற நா.காமராசன் மதுரை தியாகராசர் கல்லூரியிலும், உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியிலும் பேராசிரியராக பணிபுரிந்திருக்கிறார். திரைப்பட பாடலாசிரியராகவும் பங்களிப்பு செய்துள்ளார். ‘கறுப்பு மலர்கள்’ கவிஞரின் மிக முக்கியமான கவிதை நூல்.

மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு?

சுதந்திரத்திற்குப் பிறகு பல மாநிலங்களில் முதலமைச்சர்களாக இருந்த பெண்களின் எண்ணிக்கை - 13. நாடு முழுவதுமுள்ள 21 உயர்நீதிமன்றங்களில் உள்ள 647 நீதிபதிகளில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் 19. ஒழுங்குபடுத்தப்பட்ட துறைகளில் வேலை பார்ப்பவர்களில் பெண்களின் சதவீதம் வெறும் 12. 1990களுக்கு பின் உலகிலேயே அழகிப் போட்டி அதிகம் நடைபெறும் நாடும் இந்தியாதான். இதில் மகிழ்வு தரும் தகவல் வருடந்தோறும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து படிப்பு முடித்து வெளியெறும் மருத்துவர்களில் எண்ணிக்கையில் சரிபாதி பெண்களே. அதே சமயம் இதே நாட்டில் தான் பெண் குழந்தையை சிசுக்களிலேயே கொன்று விடுவதும் நடக்கிறது.

பிறப்பு விகிதத்தில் 1000 ஆண்களுக்கு 927 பெண்களே இருக்கிறார்கள். அதே போன்று உலகிலேயே பெண்களின் எழுத்தறிவு விகிதம் மிகக் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த ஆண் பெண் இடைவெளியைக் குறைப்பது எப்படி? பெண்களுக்கு அதிகாரத்தில் சம பங்கு அளிப்பது தான் இதற்கான தீர்வாக அமைய முடியும். ஆனால் இங்கு 33% சதவீதத்திற்கே வழியில்லாமல் போகும் போல் தெரிகிறது. இதில் தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை பெண்களுக்கான சிறப்பு உள் ஒதுக்கீடு கட்டாயம் தேவை. இதற்காக மகளிர் அமைப்புகள் போராடத் துணிந்து விட்டன. அரசியல் கட்சிகள் தான் மகளிருக்கு எதுவும் தெரியாது என்பது போல் பூச்சாண்டி வேலைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

கனகசபாபதி நினைவுப் பரிசுப்போட்டி

சிவகாசி பாரதி இலக்கியச் சங்கமும், சென்னை காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 2005-ம் ஆண்டுக்கான சி.கனகசபாபதி நினைவுப் பரிசு போட்டி.

2004 ஜனவரி முதல் 2004 டிசம்பருக்குள் வெளிவந்த கவிதைத் தொகுப்புகள் 2 பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.

சி.சு.செல்லப்பா நினைவுப் பரிசுப் போட்டி

2004 ஜனவரி முதல் 2004 டிசம்பருக்குள் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகள் 2 பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.

நவம்பர் 15-ம் தேதிக்குள் தொகுப்புகள் அனுப்பப்பட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :-

ம.திலகபாமா
பாரதி இலக்கிய சங்கம்
மதி மருத்துவமனை
15/1, ஆறுமுகம் ரோடு, சிவகாசி - 626123.

ஏலாதி இலக்கிய விருது

2001-05 கால கட்டத்தில் வெளியான சிறுகதை நூல்களுக்கான ஏலாதி இலக்கிய விருதுப் போட்டியை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தக்கலைப்பிரிவு நடத்தியது. இப்போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்து அச்சில் வெளியான 81 சிறுகதைத் தொகுப்புகள் படைப்பாளிகளாலும், பதிப்பகங்களாலும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. மூன்று கட்டமாக நடந்த பரிசீலனையின் முடிவில் நடுவர் குழு ஆதவன் தீட்சண்யாவின் - “எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்” (சென்னை, சந்தியா பதிப்பக வெளியீடு) உமா மகேஸ்வரியின் தொலை கடல் (சென்னை, தமிழினி பதிப்பக வெளியீடு) கதை நூல்களை ஏலாதி இலக்கிய விருதிற்காக தேர்வு செய்தது.

தக்கலை, லலிதமகால் திருமண மண்டபத்தில் யுவமேளா 05- இளையோர் கலை விழா நிகழ்ச்சியில் ஏலாதி இலக்கிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் விருது பெற்ற படைப்பாளிகளின் கதையுலகத்தை மதிப்பீடு செய்து முஜிபுர்ரகுமான், நட.சிவகுமார், உரையாற்றினர். ஆதவன் தீட்சண்யாவிற்கு தக்கலம்மா நினைவுப்பரிசாக ரூ.2000/- பணி முடிப்பு, ஞாபககல்சிற்பம் மற்றும் பாராட்டு சான்றிதழை தமிழறிஞர் மா.பென்னி வழங்கினார். உமா மகேஸ்வரிக்கு அவுக்காரும்மாள் நினைவுப்பரிசாக ரூ.2000/- பண முடிப்பு, ஞாபககல்சிற்பம் மற்றும் பாராட்டு சான்றிதழை வஜிதா தயாளன் வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற “குட்டி இளவரசியும் பூனைக்குட்டி பொம்மைகளும்” கதை உரையாடல் நிகழ்ச்சியில் உமா மகேஸ்வரியும் ஆதவன் தீட்சண்யாவும் தங்களது படைப்பனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் சி. சொக்கலிங்கம், நாவலாசிரியர் மீரான்மைதீன், கவிஞர்கள் பிரேம்குமார், சிபிமைக்கேல், தயாளன், சிவராமன், என்.டி.ராஜ்குமார், ஆன்டெனி ராஜாசிங், ந. நாகராஜன், மொழி பெயர்ப்பாளர் எஸ்.எம்.யூசுப், விமர்சகர் அனந்தசுப்பிரமணியன், எம்.விஜயகுமார், பேரா.ரிச்சர்டு நிஷால், எஸ். ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாடல் நிகழ்த்தினர். ஏலாதி இலக்கிய விருதுக்குழு பொறுப்பாளர்கள் ஹெச்.ஜி.ரசூல், மா.பென்னி, முஜிபுர்ரகுமான், நட.சிவகுமார் நிகழ்ச்சிக்கு விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

செய்தியாளர்களுக்கு நடந்த இரண்டு நாள் வகுப்பு

மக்கள் கண்காணிப்பகத்தின் மனித உரிமைக் கல்வி நிறுவனம் சார்பில் பத்திரிகை மற்றும் செய்தி ஊடகத்தினருக்கான மனித உரிமைப் பயிற்சி முகாம் மதுரை- பில்லர் ஹவுஸில் நடைபெற்றது.

பயிற்சி முகாமை சென்னை ஏசியன் இதழியல் கல்லூரிப் பேரா. வி.கிருஷ்ண ஆனந்த் துவக்கி வைத்தார். அவர் தனது உரையில் ‘உலகமயமாதல், வணிக மயமாதலின் தாக்கம் பத்திரிகைகளிலும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது நலன் சார்ந்த செய்திகளுக்கான முக்கியத்துவம் குறைந்து, பொழுது போக்கு அம்சங்கள் அதிகரித்துள்ளன’ என்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக இதழியல் பேராசிரியை சாந்தா பேசும்போது, “தற்போதைய செய்திகளில் மனித உரிமை சார்ந்த பார்வை இல்லை. இதை மாற்றியமைக்க வேண்டும். செய்தியாளர்கள் எப்போதும் செய்திகளை மனித உரிமை குறித்த புரிதல்களுடனேயே அணுக வேண்டும்” என்றார்.

பயிற்சி முகாமிற்கு மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி டிபேன் தலைமை வகித்தார். மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் இணை இயக்குநர் பேரா.தேவசகாயம் வரவேற்றார்.

‘பெண்களுக்கு எதிரான வன்முறை’ குறித்த அமர்வில் உயர் நீதி மன்ற வழக்கறிஞர் செல்வி கலந்து கொண்டு உரையாற்றினார். ‘குழந்தைகள் மீதான வன்முறை’ குறித்து கல்பனாவும் ‘பெண் குழந்தைகள் மீதான வன்முறை’ குறித்து பிம்லாவும் ‘தலித்துகள் மீதான வன்முறை’ குறித்து ராதாவும் பயிற்சியளித்தார்கள்.

மலிவான விளம்பரம்

அநாகரீக விளம்பரச் சட்டம் (Indecent Advertisement Act) அநாகரீகமான ஆபாசமான விளம்பரங்களை பல்வேறு வகைகளில் விளம்பரப்படுத்தவோ, சுவர்களில் ஒட்டுவதோ, வேறு வகைகளில் காட்சிப்படுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழகத்தின் பிரபலமான நாளிதழ் சமீபத்தில் தனது விற்பனையைப் பெருக்கிக் கொள்ள மலினமான விளம்பர உத்தியை கையாண்டு அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. சண்டேனா ரெண்டோ, மூணோ, நாலோ அது அவரவர்கள் வாய்ப்பையும், ஆரோக்கியத்தையும் பொறுத்தது.

சாதாரண மக்களுக்கு சண்டே, சாட்டர்டே, மண்டே என்ற நாள் நட்சத்திர கணக்கெல்லாம் கிடையாது. ஆனால் இவற்றை விளம்பர உத்தியாக்கி தொலைக் காட்சியிலும், பத்திரிக்கைகளிலும், மலிவான விளம்பரம் தேடிக் கொள்கிறது. இரண்டு தனிமனித வாழ்வின் பாலியல் சொல்லாடல், அதற்கு ஏற்றாற் போல் காட்சிப்படுத்தப்பட்ட படம் ஒன்று. இந்த இதழின் பதிப்பு ஒன்று பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கில் சென்ற பெண்கள் பற்றிய செய்தியை குறித்து எதிர்மறையாகத் தலைப்பிட்டு வெளியிட்டது. மகளிர் மசோதா குறித்து தீவிர விவாதங்கள் மகளிர் மாநாடு ஒன்றில் தூங்கும் பெண்களை தேடி படம் பிடித்து முதல் பக்கத்தில் வண்ணக்கலரில் பிரசுரிக்கிறது. அடித்தள மக்கள் அரசியல் படுவதையும் உரிமைகளை மீட்டெடுப்பதையும் கிண்டலடிக்கும் இதழுக்கு பெண் நுகர்பொருளாகவும், பாலியல் பொருளாகவும் இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்.

சதக்கத்துல்லா அப்பா இலக்கியப் பரிசு

சீதக்காதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் ‘சதக்கத்துல்லா அப்பா இலக்கியப் பரிசு’ முனைவர். அ.முஹம்மது ஜாபருக்குக் கிடைத்திருக்கிறது. ‘இந்தியாவில் சிறுபான்மையினரின் இன்றைய நிலை’ என்ற நூலுக்காக இந்தப் பரிசு கிடைத்திருக்கிறது. நூலாசிரியர் ஜாபர் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் வணிகவியல்துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

சரபத் சிங் விடுதலை ?

பஞ்சாப் மாநிலம் - பிகிவிந்த் பகுதியைச் சேர்ந்தவர் சரபத் சிங். இவர் இந்தியாவின் உளவுத் துறையான ‘ரா’ அமைப்புக்காக உளவு வேலையில் ஈடுபட்டதாகவும், பாகிஸ்தானின் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார். சரபத் சிங்கின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி அரசாங்க நிலையிலும், பஞ்சாபிலும், அவரின் ரத்த உறவுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊர்வலங்களும், சர்வமத பிரார்த்தனைகளும், கையெழுத்து இயக்கங்களும் நடைபெற்று வருகின்றன. இதனை ஒட்டி இரு நாடுகளிலும் சிறையிலுள்ள இரு நாட்டுக் கைதிகளையும் விடுதலைச் செய்வது தொடர்பான விவாதங்களும் கூர்மைப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர், மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் பாகிஸ்தான் அதிபருக்கு இல்லை என்றும் சரபத்சிங்கால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் குண்டு வெடிப்பில் மரணமடைந்தவர்கள் அவரை மன்னித்தால் மட்டுமே அவரது மரண தண்டனை ரத்தாக முடியும் என்று கூறியுள்ளார். இஸ்லாமிய சட்டத் திட்டப்படி கொலை குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டால் விடுதலை என்பது கொலையுண்டவரின் ரத்த பந்தங்கள் வழங்கும் மன்னிப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. திருக்குர் ஆனின் வசனம் அடிப்படையில் அமைந்த சட்டப் பிரிவு அது. இந்த சட்டப் பிரிவை அடிப்படையாக வைத்து மலையாள மொழியில் தயாரிக்கப்பட்ட ‘பெருமழைக் காலம்’ என்ற திரைப்படம் கேரளாவில் இந்த ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com