Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
சிறுகதை

ஷாலினியைத் தேடி...
பெமினா

வானத்தில் நெருக்கியடித்துக் கொண்டு உறைந்து கிடந்த சாம்பல் நிற மேகத் தீவுகள் பூமியில் தண்ணீர் தெளித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. சாயங்காலத்துச் சாரல் மழையில் பூமி தன்னை மறந்து சிலிர்த்துக் கொண்டிருந்தது. மேகக் கூட்டங்களின் அரணைத் தகர்த்து, இடைவெளி வழியாக இடையிடையே எட்டிப் பார்த்த சூரியன் தன் மஞ்சள் வண்ணக் கதிர்களை பூமியில் வாரியிறைத்துக் கண்ணாமூச்சி காட்டியது.

தோட்டத்து மரக்கதவை ஓசைப்படாமல் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்த போதே சாரங்கன் அவளைக் கவனித்தான். தாடையில் கையூன்றியவாறு கவலையுடன் முன் வராந்தாவில் உட்கார்ந்திருக்கும் அவனது மூன்று வயதான மகள் ஷாலினி.

எரவாணத்திலிருந்து ஒழுகி விழுந்த மழைத் தண்ணீர் தரையில் வரிசையாக சின்னச் சின்னக் குழிகளை உருவாக்கியிருந்தது. ஓடு மேய்ந்த வீட்டின் மேற்கூரையிலிருந்து நூலாக வழிந்த தண்ணீர் ஏற்கனவே நீர் நிரம்பியிருந்த அந்தக் குழிகளில் விழுந்து தெறித்து, அவளது செந்நிற பாதங்களில் முத்துக்களாகப் பதிந்தது. அதைப் பற்றியக் கவலை ஏதுமில்லாமல் அவள் ஏதோ கவலையில் மூழ்கியிருந்தாள். முகத்தில் வாட்டம் தெரிந்தது. கண்கள் தோட்டத்தின் மரக் கிளைகளில் எங்கோ மேய்ந்து கொண்டிருந்தது.

சாரங்கனுக்குத் தன் மகளின் கௌரவமான முகபாவம் கண்டு சிரிப்புத் தான் வந்தது. ஓசைப்படுத்தாமல் அருகே நெருங்கிய சாரங்கன் குடையை மடக்கி ஒரு மூலையில் வைத்து விட்டு குனிந்து அவள் காதருகே கிசுகிசுத்தான். ஷாலு, டார்லிங். . .

சட்டென்று முகத்தைத் திருப்பி அவனைப் பார்த்த ஷாலினி எதுவும் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கியவளாக மீண்டும் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். . .

அடடே. . . என்னாச்சு என் செல்லக்குட்டி? அப்படியென்ன யோசனை. .? அம்மா ஏதும் திட்டினாளாடா..? - சாரங்கன் குழைவுடன் மகளின் தாடையைப் பிடித்தான்.

வெடுக்கென்று அவன் கையைத் தட்டிவிட்ட அவள் அப்பாவை முறைத்துப் பார்த்தாள்.

அடேயப்பா என்னமா கோபம் வருது என் செல்லக்குட்டிக்கு. . - சாரங்கன் வியந்தான்.

சப்தம் கேட்டு உள்ளேயிருந்து எட்டிப் பார்த்த அம்மா சிரித்துக் கொண்டே வராந்தாவுக்கு வந்தாள். அவளுக்குப் பின்னால் சேலைத் தலைப்பில் கைகளைத் துடைத்தவாறே அவன் மனைவி கோகிலமும் வந்தாள்.

என்னம்மா, உன்னோட பேத்திக்கு இன்னிக்கு மூட்-அவுட். . .

அதையேன் கேட்கிறே? காலைலேருந்து முகத்தைத் தூக்கி வெச்சுக்கிட்டு நடக்கிறாள். . .

ஏன் என்னாச்சு? நீ ஏதாவது திட்டினியா? - சாரங்கன் கோகிலத்திடம் கேட்டான்.

அவள் சிரித்தாள். அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க அவளோட லில்லி இன்னைக்கு ஏனோ வரலை. . .அதான் கவலையாயிருக்கா.

ஓ, இவ்வளவுதானா? - சிரித்தவாறே ஷாலினியை வாரியெடுத்துத் தன் மடியிலமர்த்திய சாரங்கன் அவளது மென்மையான கன்னத்தில் முத்தமிட்டவாறே சொன்னான், இதுக்கா என்னோட செல்லக்குட்டி கவலைப்படுது? லில்லி தானே, வரும்மா.

எப்போ? காலைலேருந்து இன்னமும் காணாமே. . . ஷாலினி அவனது முகத்திலிடித்தாள்.

ஊம்.. . அதோட ப்ரண்ட் இல்லையா? - ஷாலினி முகம் வாடினாள்.

தர்ம சங்கடமான கேள்வி, சாரங்கன் சற்றுத் தடுமாறினான். .

அது. . . அதில்லேடா கண்ணு, உனக்கும் வேறே ப்ரண்ட்ஸ். . . பக்கத்து வீட்டு பைஜீ, எதிர்வீட்டு எமிலி மாதிரி. . . அதுக்கும் வேறே ப்ரண்ட்ஸ் இருக்குமில்லையா? அதான். . . அவர்களைப் பார்க்கப் போயிருக்கும். நாளைக்கு கண்டிப்பா வருவாடா..

ப்ராமிஸ்..? - ஷாலினி கையை நீட்டினாள்.

ப்ராமிஸ் - சாரங்கன் அவள் கையிலடித்துச் சத்தியம் செய்த பின் அவளது மிருதுவான கன்னத்தில் மெதுவாகக் கிள்ளியவாறு சொன்னான், அப்பா சொல்றேனில்ல. .. கண்டிப்பா வரும், எங்கே, என் செல்லக்குட்டி சிரி பார்ப்போம்.. .

ஷாலினி தன்னை மறந்து வாய்விட்டு சிரித்தாள்.

****************
அன்று ஞாயிற்றுக் கிழமையானதால் சாரங்கன் ஓய்வாக இருந்தான். பக்கத்து கிராமத்தில் இருக்கும் பேரூராட்சி மன்றத்தில் அவனுக்கு மேலாளர் பணி. நகரத்தில் நல்ல வேலை கிடைத்தும் அதன் நெருக்கடியிலும், சுகாதாரமற்றக் காற்றிலும், வாடகை வீட்டின் மூச்சுத் திணறலிலும் அலுத்துப் போய் இரண்டே ஆண்டுகளில் யார் யாரையோ சிபாரிசு பிடித்து, சொந்த கிராமத்திற்கருகிலேயே வேலையை மாற்றிக் கொண்டு வந்தான்.

தாத்தா காலத்து பூர்வீகச் சொத்து, இரண்டு ஏக்கரில் விசாலமாகப் பரந்து கிடக்கும் தோட்டம். தென்னை - மா - பலா - வாழையென தோட்டமெங்கும் அடர்த்தியான மரங்கள், அவைகளுக்கு நடுவில் விசாலமான பழைய காலத்து ஓட்டு வீட்டு. சுற்றிலும் வண்ண வண்ணப் பூச் செடிகள். போதாததற்கு ஊருக்கு வெளியே நாலு ஏக்கரில் நஞ்சை நிலம், வேலையும், விவசாயமுமாக வாழ்க்கை நிம்மதியாக ஓடிக் கொண்டிருந்தது. நகரங்களில் காணாத மனிதனின் நல்ல குணங்கள், கிராம வாழ்க்கையின் நாடித் துடிப்பாக இருப்பதை அவன் அனுபவத்தில் உணர்ந்தான்.

ஷாலினி தும்பிகளைத் துரத்தியும், வண்ணத்துப் பூச்சிகளை வளைய வந்தும், புழுதி மண்ணில் புரண்டெழுந்தும் வளர்ந்தாள். விசாலமான தோட்டம் அவளது விளையாட்டு மைதானமானது. ஒரு நாள் தோட்டத்திலிருந்து அவள் குரல் கொடுத்தாள். அப்பா. . .அப்பா. . .இங்கே வாயேன். பாசி பிடித்துக் கிடந்த பழைய காலத்துக் குத்து விளக்கைத் துடைத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்த சாரங்கன் தலையுயர்த்திப் பார்த்தான். ஷாலினி ஒரு தென்னை மரத்தடியில் கீழே குனிந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். சாரங்கன் என்னவோ ஏதோவென்று விளக்கைத் தள்ளி வைத்து விட்டு அவளருகே விரைந்து சென்றான்.

பாருப்பா. . . - ஷாலினி சுட்டிக் காட்டிய இடத்தில் அவன் பார்த்தான். . சாம்பல் நிறத்தில் சின்னதாக, முந்திரிக் கொட்டை பரிமாணத்தில் சுருண்டு கிடக்கும் ஏதோ ஒன்று. . . இன்னமும் கண் திறக்கப்படவில்லை. அதன் வயிற்றுப் பகுதி இறங்கி தாழ்ந்து உயிர் இருப்பதாக அடையாளம் காட்டியது. பூமிக்கு புதிதாக வந்த சிறிய உயிர். ..

என்னப்பா இது? - ஷாலினி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

சாரங்கன் அதை உற்றுப் பார்த்துக் கொண்டே சொன்னான். ஊம் . . ஏதோ எலிக்குஞ்சு மாதிரி தெரியுது. கிடக்கட்டும் விடு. காக்கா வந்து கொத்திட்டுப் போகட்டும்.

ஐயோ... அது பாவம். . .ப்பா, செத்துப் போயிடுமே.. அவள் வருந்தினாள்.

அதுக்கு? என்ன பண்ணனும்னு சொல்றே?

எடுத்து வளர்க்கலாம் அப்பா. - அவள் கையைப் பிடித்துக் கெஞ்சினாள்.

என்னது ? எடுத்து வளர்க்கிறதா? ஐய...எலிக்குஞ்சை யாராவது வளர்ப்பாங்களா..?

இருந்துட்டுப் போகட்டுமே... பாவம்ப்பா. . கண்ணு கூட இன்னும் திறக்கல்லேப்பா. . .

காக்கா கொத்திட்டுப் போனால், அப்புறம் அதோட அம்மாவைப் பார்க்காமலேயே அது செத்துப் போயிடாதா? பாவம்.

சாரங்கன் நெகிழ்ந்து போனான்.

இப்ப என்ன பண்ணணுங்கிறே? சாரங்கன் புரியாமல் கேட்டான்.

கூட்டிலே வெச்சு வளர்ப்போமே. . . கண் திறந்து, கொஞ்சம் பெரிசானதும் அதோட அம்மாகிட்டே போக விட்டுடுவோமே. . - அவள் கெஞ்சினாள்.

சாரங்கனால் மறுத்துப் பேச முடியவில்லை. மறுப்பெதுவும் சொல்லாமல் வாழை இலையில் அந்தச் சின்ன உருவத்தை வாரியெடுத்து வீட்டுக் கொண்டு வந்தான். அட்டைப் பெட்டியொன்றை எடுத்து, அதில் தேங்காய் நாரை பிய்த்துப் போட்டு மெத்தையாக்கி அந்தச் சிறிய உருவத்தைக் கிடத்தினான். பிறகு இங்க் பில்டரையெடுத்து அதில் பாலை உறிஞ்சி, சின்னக் குச்சியால் அதன் வாயை சிரமப்பட்டு திறந்து பாலுட்டினான்.

கோகிலம் தலையிலடித்துக் கொண்டாள்.

ஷாலினி கத்தினாள் - நீ சும்மாயிரும்மா... உனக்கென்ன. . . நான்தானே வளர்க்கிறேன். இருந்துட்டுப் போகட்டும்.

ஊம்... வாயைப் பாரு, முழம் நீளத்துக்கு... இழுத்து வெச்சு நறுக்கிடுவேன்... - கோகிலம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தாள். சாரங்கன் தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தான்.

நாட்கள் நகர்ந்த போது சாம்பல் நிறம் வெளிர் சிவப்பு நிறமாகி, உடலெங்கும் ரோமங்கள் முளைத்து வந்து, கண்கள் திறந்து அது சின்னக் குரலில் ஒலியெழுப்பத் துவங்கிய பிறகுதான் தெரிந்தது அது எலிக்குஞ்சல்ல, அணில் குஞ்சென்று...

ஷாலினிக்கு மிகவும் சந்தோஷமாகிப் போனது. அவள் அந்தச் சின்ன ஜீவனை தன் உயிர்த் தோழியைப் போல பாவித்து ஹார்லிக்சும், ஓவலும் கலந்த பாலைக் கொடுத்துச் செல்லமாக வளர்க்க ஆரம்பித்தாள். அதற்கு லில்லியென்று பெயரும் சூட்டினாள். வீட்டில் எல்லோருடனும் சுமூகமான உறவு கொண்டாடி, அனைவரது மடியிலும் தோளிலும் தாவிக் குதித்துத் தவழ்ந்து விளையாடி, வீட்டின் ஓர் அங்கம் என்பது போல நெருக்கமானது. தூக்கத்தில் தவிர மற்ற நேரங்களில் அது ஷாலினியின் தோளிலும், தலையிலுமாக தவழ்ந்து விளையாடியது. சாரங்கன் அதன் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்டான்.

காரணமிருந்தது, அட்டைப் பெட்டியில் இருந்து அழகான இரும்புக் கூண்டுக்குள் அது இடம் மாறியிருந்தாலும், வீட்டில் ஏற்கனவேயிருக்கிற வளர்ப்புப் பூனையின் நடமாட்டம் அதன் உயிருக்கு அபாய அறிவிப்பாகவே விளங்கியது. ஷாலினியின் தோளில் ராணியைப் போல அமர்ந்திருக்கும் அணிலை கூர்மையானத் தன் விழிகளால் நோட்டமிட்டவாறு நாக்கைச் சப்புக் கொட்டும் அந்தப் பூனையைப் பார்த்து சாரங்கன் அச்சம் கொண்டான்.

மற்றவர்கள் முன்னிலையில் அந்தப் பூனை மிகவும் சாதுவாக நடந்து கொண்டாலும் யாருமில்லாத ஒரு தனிமை நேரத்தில், கூண்டுக்குள்ளிருந்து எதேச்சையாக அணில் வெளியே வருமானால் அது நேராகச் சென்றடைவது பூனையின் வயிற்றுக்குள் தான் இருக்கும் என்பதை அவன் ஊகித்தான்.

பாவம் அணில்... அதைக் காப்பாற்றியாக வேண்டும். தவிரவும், மரங்களில் தாவியேறிக் குதித்துத் தன் இனத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டிய அதை, இப்படிக் கூண்டுக்குள் அடைத்து வைத்து வளர்ப்பது நியாயமில்லையென்று அவன் நினைத்தான். அதைச் சுதந்திரமாக்க வேண்டும். முதலில் ஷாலினி அதற்கு ஒப்புக் கொள்ளவேயில்லை. பூனையால் அதற்கு ஏற்படக்கூடிய ஆபத்தைப் பற்றியும், அதன் சுதந்திரமான வாழ்க்கையின் தேவையைப் பற்றியும் மிகவும் சிரமப்பட்டு விளக்கி அவளைப் புரியவைத்த போது அவள் கேட்டாள்.

அப்புறம் லில்லி என்னைப் பார்க்க வருமாப்பா?

வரும்டா கண்ணு ஷாலு அதோட ப்ரண்ட் இல்லையா? கண்டிப்பா தினமும் உன்னைப் பார்க்க வரும் - அவன் சமாதானப்படுத்தினான்.

குழந்தை வேறு வழியின்றிச் சம்மதித்தாள். அப்படித்தான் லில்லியென்கிற அந்த அழகான அணிலை சாரங்கன் தன் கைகளில் ஏந்தித் தோட்டத்துக்குக் கொண்டு போய் அங்கிருந்த ஒரு தென்னை மரத்தில் பாய்ந்து ஏறி, பாதி உயரத்திற்குச் சென்றதும் சட்டென்று நின்று ஷாலினியைத் திரும்பிப் பார்த்தது. கீச்சுக் குரலில் ஏதோ கத்தியது.

தினமும் என்னைப் பார்க்க வரணும் . . . ஓகே டாட்டா - ஷாலினி கொடுத்தாள்.

சம்மதம் என்பது போலத் தலையாட்டி விட்டு லில்லி ஓடி மறைந்தது.

என்ன ஆச்சரியம்... லில்லி தன் வாக்கை காப்பாற்றியது. ஒரு முறையல்ல, தினமும் இரண்டு முறை காலையில் எட்டரைக்கும், மதியம் பன்னிரண்டுக்கும் ஒரு மணிக்கும் இடைப்பட்ட சமயத்தில் லில்லி தினமும் வந்து தரிசனம் தந்தாள்...

குறிப்பிட்ட சமயங்களில் தோட்டத்து மரங்களின் ஏதேனும் கிளையிலிருந்து அது க்கீ...க்கீ என்று குரல் கொடுக்கும். குரல் கேட்டு வீட்டிலிருந்து யாரேனும் அந்தப் பக்கம் சென்றால் போதும். மரத்திலிருந்து தாவிக் குதித்து ஓடி வந்து தோளில் தொற்றிக் கொள்ளும்... வீட்டிற்குக் கொண்டு போய் ஏதேனும் தின்னக் கொடுத்தால் அரக்கப் பரக்கக் கொரித்த பின், சிறிது நேரம் உற்சாகமாக தாவிக் குதித்து விளையாடி விட்டு ஓடிப் போகும். . .
லில்லிக்காகக் காத்திருப்பது ஷாலினிக்கு மட்டுமல்ல - வீட்டில் அனைவருக்குமே ஆர்வமான ஒரு விசயமாகிப் போயிருந்தது. ஆறேழு மாதங்களாக தினமும் இருமுறை வந்து தரிசனம் தந்து விட்டுப் போன லில்லி பிறகு ஏனோ தினமும் மதியம் ஒரு வேளையெனத் தன் வருகையைச் சுருக்கிக் கொண்டது. எனினும் கடந்த ஒரு வருடமாக தினமும் தவறாமல் வந்து தானொரு நன்றியுள்ள ஜீவியென நிரூபித்துக் காட்டியது லில்லி. இது தான் முதல் தடவை. நேற்றுத் தான் முதன் முறையாக லில்லி வராமல் ஏமாற்றியது.

என்ன காரணமாக இருக்கும்? ஏதேனும் உடல் நலக் குறைவோ? அணிலுக்குக் கூடக் காய்ச்சல் வருமா? - சாரங்கன் மனதுக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டான். ஷாலினியை அவன் மீண்டும் திரும்பிப் பார்த்தான்.

அவன் உதடுகள் மெல்ல முணுமுணுத்தது. ப்ளீஸ், லில்லி. . . வாயேன்...

சூரியன் செங்குத்தான உச்சிக்குப் போயிருந்தது. வெயில் சுள்ளென்றடித்தாலும் அதிகமாக உஷ்ணம் இல்லை. வீசியடித்த காற்றில் குளிரின் வாடையிருந்தது. இதற்கிடையில் பக்கத்து வீட்டுக்குப் போன கோகிலம் திரும்பி வந்து ஷாலினிக்கு ஜூஸ் போட்டுக் கொடுத்தாள். குழந்தை அதைக் குடித்து விட்டு மீண்டும் பழையபடி லில்லியின் வரவையும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

கோப்பையை எடுக்க வந்த கோகிலம் சாரங்கனின் பக்கத்தில் வந்து மெதுவாகக் கேட்டாள். என்னங்க, லில்லிக்கு என்னாச்சு? ஏன் வரலை? இன்னிக்காவது வருமா...?

சாரங்கன் சிரித்தான் - என்னைக் கேட்டா? லில்லி கொழுகொழுன்னு இருக்குதுல்ல... நேரம் கெட்ட நேரத்திலே அதோட புருஷனுக்கு மூட் வந்திருக்கும். . . எங்கேயும் போக வேண்டாம்னு உத்திரவு போட்டிருப்பார்..

ச்சீ.. போங்க - மனைவி வெட்கத்துடன் உள்ளே சென்றாள். சாரங்கன் கையிலிருந்த நாவலில் மூழ்கிப் போனான். க்கீ... க்கீ... மெல்லிய சப்தம் கேட்டு சாரங்கன் நாவலை மூடி வைத்து ஷாலினியை நிமிர்ந்து பார்த்தான். பாவம் குழந்தை... காத்திருந்து காத்திருந்து அப்படியே சுவரில் சாய்ந்த நிலையில் உறங்கிப் போயிருந்தாள். அவன் பரிதாபத்துடன் தன் மகளைப் பார்த்தான்...

மீண்டும் அதே க்கீ...க்கீ ஒலி. அது லில்லியின் குரல் தான்..சந்தேகமில்லை. சாரங்கன் ஈஸிசேரிலிருந்து எழுந்து சென்று முற்றத்தில் இறங்கி நின்றவாறே குரல் கொடுத்தான்.

ஷாலு, டார்லிங், உன்னோட லில்லி வந்திருக்கும்மா...

ஷாலினி திடுக்கிட்டுக் கண் விழித்தவளாய் உற்சாகத்துடன் எழுந்து அப்பாவுக்குப் பின்னால் ஓடினாள்.

உண்மையா?... எங்கே அப்பா?

சாரங்கன் வீட்டிற்கு வலது புறத்திலிருந்த மாமரத்தின் பக்கம் நடந்து சென்றான். ஷாலினி அவனைப் பின் தொடர்ந்தாள். ஊஹீம்... லில்லியை அங்கே காணவில்லை...மீண்டும் அதே ஒலி அவனுக்குப் பின்னாலிருந்து... சாரங்கன் திரும்பிப் பார்த்தான். வீட்டின் இடது புறமாக, சற்றுப் பின் தள்ளியிருந்த தென்னை மரத்திலிருந்து வேகமாக இறங்கி முற்றத்தை நோக்கி ஓடியது அணில். அந்த சமயத்தில் வீட்டின் இடது புறச் சுவரோரமாக, சுற்றுத் திண்ணையில் கொட்டாவி விட்டவாறு சோம்பலுடன் உட்கார்ந்திருந்த பூனை, காத்திருந்த இரையைக் கண்டதும் ஒரே தாவாகத் தாவி. எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது.

அப்பா, லில்லி... - ஷாலினி கத்தினாள். சாரங்கன் பதறினான். பதைத்து நின்றான். பூனை அணிலைக் கவ்விக் கொண்டு ஓடியது.

அப்பா, அப்பா, என்னோட லில்லி... - ஷாலினி கதறியழுதாள்.

சாரங்கனின் தலையில் தீ பிடித்தது போலிருந்தது. அவனுக்கு என்ன தோன்றியதோ... அருகே இருந்த மரக்கட்டையை எடுத்துக் கொண்டு வெறித்தனமாக பூனையைப் பின் தொடர்ந்து ஓடிய அவன் அதைக் குறி வைத்து எறிந்தான். பூனை ஊளையிட்டவாறு சரிந்து சாய்ந்து, பின்னர் சற்றுத் தடுமாறி மீண்டும் எழுந்து பத்தடி தூரம் ஓடி, வட்டமடித்து மீண்டும் தலைக்குப்புற சரிந்து விழுந்தது...

ஷாலினி ஓடிச் சென்று பூனையின் வாயிலிருந்து தெறித்து விழுந்த அணிலை அள்ளி எடுத்துத் தன் மடியில் அன்றும் ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல சாரங்கன் ஓய்வாக ஈஸிசேரில் சாய்ந்தவாறு அன்றைய நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தான். ஷாலினி வராந்தாவில் உட்கார்ந்த நிலையில் குனிந்து பழைய நோட்டு புத்தகத்தில் படம் வரைந்து கொண்டிருந்தாள்.

அப்போது எங்கிருந்தோ க்கீ...க்கீ என்ற சத்தம் கேட்டது. சாரங்கன் தலை நிமிர்ந்து பார்த்தான்... அதற்குள் ஷாலினி முற்றத்தில் இறங்கியிருந்தாள்.

மீண்டும் அதே ஒலி... ஷாலினி தென்னை மரச் சுவட்டுக்கு ஓடினாள். குழந்தையின் அர்த்தமற்ற ஆவலையெண்ணி சாரங்கன் மனதுக்குள் சங்கடப்பட்டான். என்ன ஆச்சரியம்... தென்னை மரத்தடிக்கு ஷாலினி சென்றதும், அதிலிருந்து தாவிக் குதித்த அணில் ஒன்று விறுவிறுவென அவள் மீது பாய்ந்து ஏறி அவளது தோளில் அமர்ந்தது. ஷாலினி சந்தோஷத்தில் குதித்தவாறே அவனிடம் ஓடி வந்தாள்.

அப்பா... செத்துப் போனவங்க எல்லாம் திரும்பவும் பிழைப்பாங்களா அப்பா...

சாரங்கனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் அந்த அணிலையே விழி பிசகாது பார்த்துக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டு உள்ளிருந்து வெளியே வந்த கோகிலம் கேட்டாள்.. ஏதுடி இது? புதுசா...?

புதுசா இல்லேம்மா..? நம்மோட லில்லி தான் - ஷாலினி உறுதியாகச் சொன்னாள்.

அது தான் செத்துப் போச்சேடி? - கோகிலம் சிரித்தவாறே சொன்னாள்.

அது உண்மைதாம்மா. இருந்தாலும்... நான் தான் கடவுள்கிட்டே வேண்டிக்கிட்டேனே, என்னோட லில்லியைத் திருப்பிக் கொடுன்னு. . அதான் கடவுள் என்னோட லில்லியைத் திரும்பவும் தந்துட்டார், லில்லி உயிரோட வந்திடுச்சி பார்த்தியா...

போடி, பிதற்றாதே,... திரும்பவும் வர்றதாவது ? இது வேற ஏதோ அணிலுடி...

பாருப்பா இந்த அம்மாவை. . . இது லில்லி இல்லையாம், சொல்லுப்பா... இது நம்மோட லில்லி தானே..?

சிணுங்கிக் கொண்டே ஷாலினி சாரங்கனுக்குப் பக்கத்தில் வரவும், அதுவரை அவள் தோளில் அமைதியாக உட்கார்ந்திருந்த அணில் , சடக்கென்று அவனது தோளுக்குத் தாவியமர்ந்தது அவனது காதருகே தன் முகத்தைத் தேய்த்தது. சாரங்கன் ஆச்சரியப்பட்டான். அதே நெருக்கம்... அதே பழக்கம் நிச்சயமாக இது அதே லில்லி தான். அப்படியானால் அன்றைக்குச் செத்தது...? - சாரங்கனுக்கு எல்லாம் புரிந்தது.

கோகிலம் சொன்னாள். இனிமே பூனையைப் பத்தி பயமில்லாமல் நிம்மதியா உன்னோட லில்லி கூட விளையாடலாம்... பூனை தான் செத்துப் போச்சே... அந்தச் சத்தியம் சாரங்கனைப் பிடித்து உலுக்கியது. ஏதோ ஒரு அணிலுக்காக வீட்டின் வளர்த்துப் பூனையை அநியாயமாக கொன்ற கொடூரத்தை அவன் மீண்டும் நினைவு கூர்ந்தான். சாந்தமான அதன் முகம்... அவனது இதயத்திற்குள் வெறித்துப் பார்க்கும் அதன் நீல நிறக் கண்கள்.
ம்மியாவ்... செவிப்பறையில் அதன் தீனமான குரல் எங்கிருந்தோ அலையடித்து எழுந்த போது சாரங்கன் தன்னையுமறியாமல் பயத்தில் நடுங்கினான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com