Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
தர்மாவுடன் ஒர் நேர்காணல்
கே. வறீ தையா

சுரேஷ் தர்மா குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னையில் செயல்படும் கருப்பு அரங்கத்தின் (பிளாக் தியேட்டர்) இயக்குநர். அடித்தட்டுச் சமூகங்கள் தம்மைப் பற்றிய புரிதலை விசாலப்படுத்திக் கொள்ளவும் வளர்மாற்றத்தினைச் சாதிக்கவும் மக்கள் நாடகங்கள் (பீப்பிள்ஸ் தியேட்டர்) எனும் ஊடகம் மூலம் ஒரு இயங்கு வெளியை உருவாக்க உழைப்பவர். டிசம்பர் சுனாமி பேரிடர் நிவாரண முகாம்களில் - குறிப்பாக குமரி மாவட்டத்தில் அவர் களப்பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் நடத்திய உரையாடல்.

குமரி மாவட்டத்தைக் களமாகக் கொண்டு இப்போது நீங்கள் சுனாமி துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். முதல் நோக்கில் கன்னியாகுமரிக் கடற்கரை மீனவ சமூகங்களைப் பற்றிய உங்கள் பார்வை. . .

தர்மா: தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் பொருத்திப் பார்க்கும்பொழுது குமரி மாவட்டத்தின் மீனவர்களின் வாழ்க்கைப் பண்பாட்டு நிலைகள் வேறுபட்டதாக இருக்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம். அது போன்றே மீன்பிடி முறைகளிலும் ஒரு பக்கம் பாரம்பரிய முறையும் இன்னொரு பக்கம் தொழில்நுட்ப, அதிதொழில்நுட்ப முறைகளையும் இணைத்துக் கடைபிடிக்கும் போக்கை இந்தப் பகுதியில் பார்க்க முடிகிறது. கடலோரங்களில் இருக்கக் கூடிய பல்வேறு நிலைகள் இங்கு மிகவும் மாறுபட்டதாய் இருக்கிறது. மற்ற கடலோரங்களை விட முன்னேற்றமடைந்த ஒரு நிலையில் இருக்கிறது.

சுனாமி என்பது இந்தத் தலைமுறைக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கலாம். ஆனால் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் - நடுவண் அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் - ஒரு பேரிடர் என்ற நெருக்கடி நிலைமையை எங்ஙனம் கையாள வேண்டும், அந்தப் பணிகளைப் பல்வேறு காலகட்டங்களில் எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையான ஒரு அணுகுமுறை இருந்திருக்க வேண்டும். ஆனால் அணுகுமுறையில் ஒரு குழப்பநிலை நீடிக்கிறதே?

தர்மா : இந்தப் பேரழிவு நமக்கு முற்றிலும் புதிது. இதற்கு முன்னால் நாம் பார்த்த கடலோரப் பேரழிவு என்பது தனுஷ்கோடி, கடல் கொந்தளிப்பு போன்றவைதாம் நமது ஞாபக அடுக்கில் இருக்கிறது. அரசைப் பொறுத்தவரை பேரிடர் மேலாண்மைத் துறை முழுவீச்சில் இயங்கக் கூடிய அளவில் துறைகள் செம்மையாக இல்லை என்பது இப்போதைய பேரிடர் நிர்வாக நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு வேளை அதைச் செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாயமும் அரசுக்கு இல்லாமலிருந்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த ஒரு பேரழிவை எதிர் கொள்வதற்கான உள்நாட்டு முறைமைகளும் இல்லாமல் போய்விட்டது. சாதாரணமாக ஒரு கடல் கொந்தளிப்பு நிகழும் போது இந்த உள்நாட்டுப் பகுதியிலேயே அதை எதிர் கொள்வதற்கு ஒரு முறைமை இருக்கும் அவர்கள் அதை வைத்துக் கொண்டு நிலைமையைக் கையாளுவார்கள்.

குமரிக் கடற்கரை மீனவர்களின் தொழில் திறன் பல தேசீய, பன்னாட்டு ஆங்கில சஞ்சிகைகளில் பலமுறை பேசப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகச் சிறந்த பாரம்பரியக் கடலோர மீனவர்கள் என்று இவர்கள் கருதப்படுகிறார்கள். தூண்டில் தொழில்நுட்பம் சுறாமீன் பிடித்தல், இழுவைத் தொழில் நுட்பம், வலைகள் பயன்படுத்துவது - இப்படி எல்லாக் களத்திலும் இவர்களிடம் ஒரு அலாதியான திறமை தெரிகிறது. குமரி மீனவர்கள் மீன்பிடி நுட்பங்களைப் பயன்படுத்துகிற இலாவகம், பல்வேறு மீன்பிடிக்களங்களை அடையாளம் காணுகிற உத்தி, நேர்த்தி, அவர்கள் நேற்றுவரை பயன்படுத்தி வந்த உயர்தொழில் நுட்பங்கள் அத்தனையும் ‘கிரவுண்ட் ஜீரோ’- தரைமட்டமாகிவிட்டதாய் அவர்கள் நினைக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு நிலையில் அவர்கள் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். “எங்களுக்கு சோறு போட்டுக் கொண்டே இராதீர்கள், எங்கள் வழக்கமான தொழிலுக்குத் திரும்புவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தாருங்கள். நாங்கள் கையைக் கட்டியிருந்துவிட்டு சாப்பிட விரும்பவில்லை. வெகு சீக்கிரமே எங்கள் வழக்கமான வாழ்க்கை நிலைக்குத் திரும்பிப்போக விரும்புகிறோம்” என்பது. இப்படிப்பட்ட சிறப்பான மீன்பிடித் திறன்கள் அமைந்த இம்மாவட்ட மீனவ சமூகத்திற்கான மறுவாழ்வுத் திட்டம் எப்படி இருக்க வேண்டும்?

தர்மா : முதலில் மறுவாழ்வுத் திட்டப்பணிகளில் அவர்கள் தேவையைத் திட்டமிட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான புறச்சூழலை உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் அரசு சாராத பல்வேறு அமைப்புகள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிதியுதவி வழங்கும் நிதியங்கள் இவைகளெல்லாம் சேர்ந்துதான் இந்த நிலையை மறுஉருவாக்கம் செய்ய முடியும். மறு உருவாக்கம் என்பது நிதி/பொருளாதாரம் சார்ந்த விஷயம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதில் நிதியுடன் மக்களின் மனநிலையும் உட்பட்டிருக்கிறது. மனநிலையைப் பொறுத்தவரை மக்கள் தங்களுடைய பங்கேற்பை இந்த செயல்பாட்டுக்குள் கொண்டுவரும் பொழுது அவர்களின் மனநிலை அடுத்த நிலைக்கு- தேறுதல், தன்னம்பிக்கை பெறுதல் என்ற நிலைக்குப் போய்விடும். ‘எங்களுடைய பங்கேற்பு இதில் உட்பட்டிருக்கிறது; எங்கள் பங்கேற்பை செயல்வடிவத்தில் கொண்டு வருவதற்கான நிதியாதாரங்களும் செயலாதாரங்களும் வெளியே சரியாக இருக்கிறது’ என்கிற ஒரு இணைநிலை வந்துவிடும். அப்படியொரு நிலை இதுநாள் வரை உருவாகிவிட்டதாகச் சொல்ல முடியவில்லை.

அவர்கள் கடலுக்குப் போகவில்லை. மீன் பிடித்து வரவில்லை என்ற நிலையில் இரண்டாம் நிலை மீன்சார் தொழில்களுக்கு வாய்ப்பே இல்லை. இதனை விட்டுவிட்டுப் பார்த்தால் கடல் சார்ந்த வருவாய் ஈட்டும் முனைவுகள் வேறு என்ன இருக்க முடியும்?

தர்மா : படகுகளை சீர்செய்து, படகுகளை உருவாக்குவது; வலைகளை சீர்செய்வது, வலைகளை உற்பத்தி செய்வது - இது மாதிரியான விஷயங்களைக் குறிப்பிடலாம். ஆனால் இவை சார்ந்த தொழில் நுட்பம், அதற்கான விரிவான தொழில் அமைப்புகள், இந்த அமைப்புகளை உடனடியாக உருவாக்குவதற்குப் போதுமான நிதியாதாரம், பயிற்சி - இந்த மாதிரியான விஷயங்களின் மீது நாம் சிறிது அக்கறை செலுத்த துவங்கினால் அவைகள் நீங்கள் குறிப்பிடுகிற இந்த ‘கால இடைவெளி’க்கேற்ற மறுவாழ்வு முயற்சிகளாய் அமையும். உதாரணமாக பல இடங்களில் கட்டுமரங்கள் சீர்செய்யப்படுகின்றன. இதற்கென வெளியிலிருந்து தொழில் திறனாளர்கள் வருகின்றனர். இயந்திரங்கள் சீர்செய்யப்படுகின்றன. இதற்கும் வெளியிலிருந்து வரும் திறனாளர்களையே மீனவ சமூகம் சார்ந்திருக்கிறது. ஏனென்றால் நம்மிடம் அந்தப் பயிற்சி குறைவு. இதுபோன்ற விஷயங்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து அந்தப் பயிற்சிகளினூடே ஒரு பொருளாதார ஈட்டுத் திட்டமும் கொண்டுவரலாம். இப்படி நாம் இருவேறுபட்ட விஷயங்களை ஒரு சேர செயல்படுத்தலாம். ஒன்று-மறு கட்டமைப்பிற்கான தயார் நிலையில் இந்த சமூகம் தன்னை ஈடுபடுத்துகிறது. இரண்டு-அதன் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு வருவாயும் கிடைக்கிறது. ஒரு படிப்பும் நிகழ்கிறது.

ஒரு இயல்பு வாழ்க்கைக்கான மூலதனத்தை உருவாக்குகையில் அன்றாடத் தேவைகளுக்கான வருவாய்க்கும் ஒரு வழி பிறக்கிறது. அதிலிருந்து அவர்கள் ஒரு மாற்றுத் தொழிலைக் கற்றுக் கொள்ளுகிற வாய்ப்பும் கிடைக்கிறது.

தர்மா : மாற்றுத்தொழில் என்பதைவிட தன்னுடைய தொழில் சார்ந்த தொழில், சீனத்தில் இப்படிச் செய்தார்கள். விவசாயத்தில் டிராக்டர் நுட்பம் நுழைந்த பிறகு விவசாயிகள் டிராக்டர் சீர்செய்யும் திறனாளிகளாகவும் மாறினர். இந்த அனுபவம் நமக்குக் கிடையாது! நம்முடையது மாறுபட்ட அனுபவம். அங்கே அந்த அனுபவம் இருக்கிறது. ஒரு விவசாயி டிராக்டரை ஓட்டுபவனாகவும் அதன் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்பவனாகவும், அந்த டிராக்டரைப் பழுது பார்ப்பவனாகவும் தன்னை மாற்றிக் கொள்ளுகிறான்.

இது ஒரு நிகழ்வாக்கம், மீட்டுருவாக்கத்தின் ஒரு நிலை ஒரு வழிமுறை. இன்று நாமெல்லம் வரலாற்றின் முக்கியமான ஒரு பகுதியிலிருக்கிறோம். முற்றிலுமாகத் தங்களுடைய சொத்துக்களையும் எதிர்காலத்தையும் இழந்து போனதாய் உணர்கிற ஒரு சமூகம் தனது இழப்பின்மீது சுய பச்சாதாபம் கொள்ளாமல் வளமான எதிர்காலம் பற்றியதான ஆக்கப்பூர்வமான பார்வையோடு களமிறங்க வேண்டும். இந்த ஒரு களமிறங்குதலுக்கு தன்னார்வ நிறுவனங்கள், மானுடவியல், சமூகவியல், பொருளியல் திறனாளர்கள், களப்பணியாளர்கள் இவர்களோடு அரசும் கைகோர்த்துக் கொண்டு எதிர்வரும் ஒன்றிரண்டு வருடங்களுக்கான செயல்திட்டங்களை வடிவமைக்க முடியுமா? அதற்கு எந்த வகையில் மீனவர்களை சமூக-உளவியல் ரீதியாகத்த தயார்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்கள்?

தர்மா : இது ஒரு மாஸ்டர் பிளான் - பெருந்திட்டம். இது ஒரு உடனடித் தேவை. இந்தப் பெருந்திட்டம் எப்படி சாத்தியப்படும் என்றால் - ஒன்று பகுதி மக்களின் பங்கேற்பு; இரண்டு - பகுதியினுடைய இயற்கைச் சூழல்; மூன்றாவது பகுதிவாரியான சிறுசிறு கட்டுமானங்கள். உதாரணமாகப் படகைப் பழுது பார்ப்பது என்றால் அந்தப் பகுதியில் பழுதுபார்க்கும் தொழில் நுட்பத்தைச் சொல்லித் தருகிற ஒரு சிறிய அமைப்பும் அந்தப் பகுதிக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்கிற ஒரு அமைப்பும் உருவாகலாம். இதை ஒரு பொழுதும் மையப்படுத்தி விடக்கூடாது. பதினையாயிரம் தந்துவிடுகிற ஒரு சீர்மிகு தொழிற்சாலையாக (ஹோமோஜெனிக் இண்டஸ்ட்ரி) நிறுவிவிடாமல் அந்தந்தப் பகுதியில் எவ்வளவு தேவைப்படுமோ அதற்குத் தகுந்தபடி பகுதிவாரியான உற்பத்தி மையங்கள் உருவாக வேண்டும். அதில் ‘பகுதி மக்கள்’ பங்கேற்க வேண்டும். அதில் பெரும்பான்மையாக மக்கள் சக்தியைப் பயன்படுத்தக் கூடிய தொழில் நுட்பம் இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் உயர்தொழில் நுட்பத்தை நுழைத்து மக்கள் பங்கேற்பைத் தடை செய்துவிடக் கூடாது. இதைக் கொண்டு வருவதற்கு நாம் ஒரு பெருந்திட்டம் தீட்ட வேண்டும்.

பஞ்சம், பட்டினி, போர், வறட்சி, கலவரங்கள்- இவைபோன்ற நெருக்கடிமிக்க சூழ்நிலைகளில் மிகவும் பாதிக்கப்படுகிற சமூகத் தட்டின் முக்கிய தரப்பாக பெண்கள் இருக்கிறார்கள். ஆழிப்பேரலை இடரின் விளைவாக பாதிக்கப்பட்ட பெண்கள் கடும் துயருக்கும் உபாதைகளுக்கும் ஆளாகியுள்ளனர். நிவாரண முகாம்களில் களப்பணியாற்றிய நேரத்தில் என்ன உணர்ந்தீர்கள்?

தர்மா : உங்கள் கூர்ந்தறிதல் தெளிவாக இருக்கிறது. கடுமையான சிக்கலுக்கு உள்ளானவர்கள் பெண்களும் குழந்தைகளும் தான். குறிப்பாக வளரிளம் பருவத்தைச் சார்ந்த பெண்கள். இயல்பாகவே வளரிளம் பருவம் உடலியல் சிக்கலுக்குள்ளாகிற பருவம். இந்தப் பேரழிவு அவர்களுக்கு மனம் சார்ந்த சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. தனிமை சார்ந்த பிரச்சனைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டது போன்று மாதாந்திர பருவநிலை வெளிப்பாடுகளில் அவர்களுக்கு மிகப்பெரிய மருத்துவப் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இவைகளெல்லாம் ஆழமாக இன்னும் கவனிக்கப்படவில்லை. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பெண் மருத்துவர்கள், பெண் தொண்டர்கள், பெண்மன ஆற்றுப் படுத்துபவர்கள் போதிய அளவில் இல்லை. இது அவர்களுக்கு நீண்டநாள் வடுவாகக்கூட நீடிக்கலாம். அதுதவிர ஒருவேளை இந்த முகாம்களில் நெருக்கடியில் பாலியல் குற்றங்கள் போன்ற சிறுசிறு விஷயங்கள் - இவற்றைப் ஆற்றுப்படுத்துதல் முறைமைகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

சுனாமி மறுவாழ்வு முனைவுகள் எல்லா மாவட்டங்களிலும் விவாதிக்கப் படுகின்றன. பலதரப்பட்ட பணிகளைப் பல களங்களிலிருந்து பலகோணங்களில் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்காலக் கனவுகளைச் சுமந்து கொண்டு ஏக்கங்களுடன் நிற்கின்ற சிறார், வளரிளம் பருவத்தினரை முன்னிலைப்படுத்தும் மறுவாழ்வுப் பணிகள் பற்றிய கருத்தரங்கம் எந்த மட்டத்திலும் தலைகாட்டியதாகத் தெரியவில்லையே?

தர்மா : பல அரசு சாரா அமைப்புகள் இந்த விஷயத்தில் தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளனர். குழந்தைகள் என்று நாம் குறிப்பிடுகிற 18 வயதுக்குட்பட்டவர்களை 3 பருவங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். முதல் 5 வயதுக் குட்பட்டவர்கள் - பெற்றோரின் நேரடிப் பாதுகாப்பில் இருக்க வேண்டியவர்கள். அடுத்து எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிப்பருவத்தினர். மூன்றாவது வளரிளம் பருவத்தினர். இந்த மூன்று பருவத்தினருக்கும் மூவகை நிலைகளில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால்படுபொருட்கள். நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கான வினியோகங்கள், உடனடி மருத்துவக் களம், அவர்களுக்கான பொழுதுபோக்குக்குரிய சின்னச்சின்ன விளையாட்டுக்கள், கவனிப்பு மையங்கள் முதலியவை உருவாக்கப் படவேண்டும். ஆனால் அரசினுடைய திட்டத்தில் இவைகள் இல்லை.

இரண்டாவதாக பள்ளிசெல்லும் பருவத்தினரின் ஒரு சிக்கல் என்னவென்றால் அவர்கள் தங்களுடைய ஒத்த வயதுடையோர் - நட்பு வட்டத்தினர் - பலரை இழந்திருக்கிறார்கள் அவர்களுக்கு முதற்படியாக ஒரு புதிய ஒத்தவயது வட்டம் உருவாக வேண்டும். தங்கள் பழைய வட்டத்திலிருந்து மீண்டு புதிய வட்டத்திற்குள் அவர்கள் வந்துவிட வேண்டும். அதற்கு அவர்களுக்குத் தேவைப்படும் சில செயல்பாடுகளை அரசு சாரா நிறுவனங்கள் முன்னெடுக்கிறது. அவர்களைப் பயனுள்ள ஏதாவது ஒரு செயல்பாட்டில் நுழைப்பது அவர்களின் உளவியல் சிக்கல்களைத் தீர்ப்பது, உள்முகப் பகிர்வின் மூலம் ஆற்றுப்படுத்துவது - இவைபோன்ற நில களங்களில் கருப்பு அரங்கத்தின் சார்பில் நாங்களும் சில முயற்சிகளைச் செய்து வருகிறோம். பல செயல்பாட்டாளர்களுக்கு இதற்கென பயிற்சி கொடுத்து சிறார் வட்டத்தினருடன் ஒரு மாத காலத்தில் 30 முதல் 60 மணிநேரம் வரை செலவிடுவது பற்றியும் எப்படி செலவிடுவது என்றும் அறிவுறுத்துகிறோம். இப்படி அவர்கள் தினசரி செலவிடும் பொழுது சிறார் தங்களைத் தகவமைத்துக் கொள்வார்கள்.

அடுத்தபடியாக வளரிளம் பருபத்தினரைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். இவர்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. கூட்டு ஆற்றுப்படுத்துதல் (குரூப் கவுன்சிலிங்) செய்யவேண்டியது இன்றியமையாத விஷயம். அது போன்ற தனி மனநிலை ஆற்றுப்படுத்துதல். இப்போது அரசு சாரா அமைப்புகளும் பிற செயல்பாட்டு அமைப்புகளும் கவனமெடுத்துக் கொண்டு செயல்படத் துவங்கியிருக்கிறார்கள். ‘குழந்தை நட்புச் செயல்பாடுகள்’ துவக்கப்பட வேண்டும் என்பதே எங்களைப் போன்றோர்களின் கருத்து. இந்த நட்புச் செயல்பாடுகளில் பல்வேறு அம்சங்கள் பொதிந்திருக்கும் - நோய் எதிர்ப் பாற்றலை மேம்படுத்துதல், விளையாடுவதற்கான இடம்/வாய்ப்பு கல்விக்கான வாய்ப்பு போன்றவை இவற்றில் உட்பட்டிருக்கும்.

சுனாமியால் அனாதைகள், ஆதரவற்ற சிறாரைக் குறித்து அரசு ஒரு திட்டம் வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படலாம் என்று பேசப்படுகிறது. அப்படி செய்தால் சிறாரை அது கடுமையாக பாதிக்கும் என்று கருதுகிறேன்.

தர்மா : ‘சுனாமி அனாதைகள்’ என்ற வார்த்தைப் பிரயோகத்துடன் கூட எனக்கு உடன்பாடு இல்லை. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் உரிமையைக் கொண்டவர்கள். நீங்கள் குறிப்பிட்டது போன்று அரசு பாதிக்கப்பட்ட சிறாரை இங்கிருந்து அழைத்துக் கொண்டுபோய் ‘இளம் சிறார் நீதிக்கான’ கூர்நோக்கு இல்லம், பாதுகாப்பு இல்லம் போன்ற பல்வேறு காப்பகங்களில் சேர்க்கக்கூடும். இதில் எங்களைப் போன்றோர்க்கு எள்ளளவும் உடன்பாடில்லை. அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்புக்குள்ளேயே இருக்கிற வகையில் ‘குழந்தை நட்பு நலமையம்’ அமைத்து அங்கே சேர்க்கப்பட்டால், கலாச்சாரத்திலிருந்து பறித்தெறியப்படாமல் சொந்த மண்ணிலேயே வளர வாய்ப்புண்டு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com