Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
இந்திய வெளிவுறவுக் கொள்கை

அமெரிக்க மயக்க பிஸ்கட்டும் இந்திய இறையாண்மையும்
ஜே.பி. அர்ச்சனா

கடந்த சில வாரங்களாகவே, பத்திரிகைகளில் வரும் செய்திகள் கவனத்தை ஈர்ப்பனவாகவும், கவலை அளிப்பவனவாகவும் உள்ளன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் நீரில் மூழ்கியது, ஹோண்டா மோட்டார் கம்பெனியின் ஊர்வலம் சென்ற ஊழியர்களை தடியால் அடித்து மண்டைகளை உடைத்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிய காவல்துறை பற்றிய தலைப்புச் செய்திகளுடன், சிறு செய்திகளாக இரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் ‘பிஸ்கெட்’ கொடுத்து மயக்கி உடமைகள் பறிப்பு; தென்னக ரயில்வே எச்சரிக்கை, ‘பிஸ்கெட்’ திருட்டு பஸ் பயணத்திற்கும் பரவி, ஓடும் இரவு நேரப் பேருந்தில் பயணி வாட்ச் மோதிரம் பர்ஸ் இழப்பு, மேலும் அமெரிக்காவில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜிக்கு அட்டகாசமான வரவேற்பு, புதிய இந்திய அமெரிக்க கூட்டுச் செயல்பாட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்து, இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பிரிட்டீஷ் அரசுக்குப் புகழாரம், அமெரிக்கா சென்ற பிரதமருக்கு நடைமுறையிலிருந்த வழக்கங்களை மீறி உயரிய மரியாதை அளிக்கப்பட்டது; அமெரிக்க மண்ணிலிருந்து கொண்டு இந்திய-ஈரான் குழாய் எரிவாயுத்திட்டம் நிறைவேறுமா என பிரதமர் சந்தேகம் என்பன அவற்றுள் சில.

மன்மோகன் சிங்கின் விஜயத்திற்கு முன்னதாக அமெரிக்காவிற்கு ‘நிலைமை அறியும் பயணம்’ மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப்முகர்ஜியும் அமெரிக்கா உபசரிப்பில் மயங்கி விட்டார். பிரதமர் அளவிற்கு வரவேற்பு இல்லாவிட்டாலும், தனது முன்னவர், பாரதீய ஜனதா தலைமையிலான அரசின் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசைப் போன்று, உள்ளாடைகளோடு நிற்க வைத்து சோதனையிடப்படாமல் அமெரிக்காவினுள் நுழைய அனுமதிக்கப்பட்டவுடனேயே, அவரது நெஞ்சில் பட்டாம்பூச்சி சிறகடிக்கத் தொடங்கிவிட்டது. அந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தனக்குத் தரப்பட்டிருந்த ‘நிலைமை அறிதல் மட்டும்’ என்ற அதிகார வரம்பை மீறி சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு விட்டார். அவ்வொப்பந்த பிரிவுகளில் இந்திய சர்வதேச அரசியல் போக்கினை அமெரிக்க தனியதிகாரத்திற்குட்படுத்தும், இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் பல்வேறு நடவடிக்கைகள் உள்ளன.

சர்வதேச நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.நா.சபையை ஒதுக்கிவிட்டு, தன் தலைமையில் பன்னாட்டு நடவடிக்கைகள் நடப்பதை உறுதி செய்கின்ற போக்கினை அமெரிக்காவிடம், குறிப்பாக ஜார்ஜ் புஷ் தலைமையில் காணலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்த மட்டில், இதுவரை நிலவி வந்த வெளியுறவுக் கொள்கையானது சர்வதேச நடவடிக்கைகள் ஐ.நா. தலைமையில் நடப்பதையே விரும்புகிறது. இந்தியாவின் பங்களிப்பை ஐ.நா. தலைமையில் மட்டுமே அனுமதிக்கிறது.

சமீபத்தில் சுனாமிப் பேரழிவின் போது நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்கத் தலைமையிலான ஒரு கூட்டணியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்தது. ஐ.நா.வுக்கு இடமில்லாத இவ்வணியில் சேர இந்தியா மறுத்துவிட்டது.

பிரணாப் முகர்ஜியின் ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தில் இணைய இந்தியாவும் சம்மதித்து தனது இராணுவ இறையாண்மையை அடகு வைத்திருக்கிறது. ஆசியாவிலேயே, இரண்டாம் உலகப் போருக்குப் பின் இராணுவ ரீதியாக வலிமையிழந்த ஜப்பான் நாட்டைத் தவிர மற்ற எந்த நாடும் இந்த ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வல்லரசாக மாறி ஐ.நா.வில் நிரந்தர இடம் பெற அமெரிக்க ஆதரவு தேடிச் சென்ற பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவை இராணுவரீதியாக வறிய அரசாக மாற்றி அமெரிக்க ராணுவத்தின் தயவில் காலந்தள்ள ஒப்பந்தம் போட்டிருக்கிறார். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்த கதை.

அமெரிக்கா தலைமையில், பேரழிவு ஆயுதங்கள் பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் ஏற்பாடாகியிருக்கிறது. தற்கால உலகில் மிக அதிகமாக பேரழிவு ஆயுதங்களை வைத்துக் கொண்டு உலகை மிரட்டும், தனது ஆளும் வர்க்க நலனுக்காக எந்த பேரழிவையும் ஏற்படுத்தத் தயங்காத நாடு அமெரிக்கா. அதன் தலைமையில் பேரழிவு ஆயுதங்கள் பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பது வேடிக்கை தான்.

இந்த ஒப்பந்தத்தின் மற்றுமொரு பிரிவின் அடிப்படையில், இந்தியாவின் ஒவ்வொரு துறைமுகத்திலும், விமான நிலையத்திலும், ஒரு அமெரிக்க அதிகாரி நியமிக்கப்படுவார்; நியமிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவிற்குச் செய்யப்படும் எந்த ஏற்றுமதியையும், கொண்டு செல்லப்படும் எந்த பொருளையும், அது பாதுகாப்பு அமைச்சராக இருந்தால் கூட அவரது சோதனைக்குப் பின்னரே கொண்டு செல்ல முடியும். உலகின் எந்த நாட்டிலும், எந்த நாட்டுக்கும் வழங்கப்படாத சலுகையை இந்தியா அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளது. இந்தியாவின் சட்டங்களை அமுல்படுத்தும் இந்திய அரசு அதிகாரிகள் மேல் அமெரிக்காவின் நம்பிக்கையின்மையை இந்தியா அரசு முத்திரையுடன் அங்கீகரிக்கிறது.

மற்றுமொரு ஏற்பாடு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்புக்கு இந்தியாவில் சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வழிவகை செய்கிறது. இதன்மூலம் எப்.பி.ஐ. எனப்படும் அந்த அமைப்பு இந்தியாவில் அலுவலகங்கள் திறந்து, செயல்பட அனுமதிக்கப்படும். இந்தியாவின் எந்த மூலையிலுள்ள ஒரு இந்தியக் குடிமகனையும், எந்த மாநிலத்தவரையும், எந்த மதத்தைச் சேர்ந்தவரையும், எந்த சாதியைச் சேர்ந்தவரையும், எந்த பதவி வகிப்பவரையும் சந்தேகத்தின் பேரில் இந்த அமைப்பு கைது செய்யலாம். ‘முறைசார போர் வீரர்கள்’ என்று நாமகரணம் செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு சென்று நீதிமன்றம் முன் நிறுத்தலாம் அல்லது நீதிமன்ற விசாரணை இல்லாமல் குவான்டனாமோலே போன்ற சித்திரவதைக் கூடங்களில் அடைக்கலாம். எத்தனை காலமும் சித்திரவதை செய்யலாம். இவை எதிலும் இந்தியச் சட்டங்களோ, நீதிமன்றங்களோ உச்ச நீதிமன்றமோ தலையிட முடியாது.

இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தவும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய-அமெரிக்கக் கூட்டுச் செயல்குழு ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்புக் கொள்கைகள் அதன் பரிசீலனைக்குட்படுத்தலாம். இனி வருங்காலங்களில் இந்தியாவின் நலன்கள் எவை எனத் தீர்மானிப்பது இக்குழுவாக இருக்கலாம். எந்த ஆயுதம் வாங்கவேண்டும், அதை அமெரிக்காவின் எந்த கம்பெனியிலிருந்து வாங்க வேண்டும் என்பது குறித்த முடிவுகள் வெள்ளை மாளிகையிலோ அல்லது பென்டகனிலோ எடுக்கப்படும் நிலை வரலாம். கூட்டுக்குழு ஏற்பாடுகள் ஏதும் இல்லாமலேயே, நாட்டின் உயர்பாதுகாப்பு அதிகாரிகள் ரகசியங்களோடு அமெரிக்காவுக்கு ஒடிவிடும் நிகழ்ச்சிகள் இந்த நாட்டில் நடந்ததுண்டு. ஒருவேளை இவ்வாறு அதிகாரிகளை வலைவீசிப் பிடிப்பது சிரமமான வேலை என அமெரிக்கா கருதுவதால் இந்த ஏற்பாடோ என்னவோ?

மேலும் அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்து இராணுவத் தளவாடங்கள் தயாரிக்கவும், அமெரிக்காவின் எப்16, எப்18 ரக விமானங்களை இந்தியாவிற்கு விற்கவும் ஏற்பாடாகியிருக்கிறது. தன் ஆளும் வர்க்க நலன் தவிர்த்த எந்த நலனிலும் அக்கறை காட்டாத அமெரிக்கா, அதற்கு வசதியில்லாத நடவடிக்கைகள், திட்டங்களில் ஈடுபடும் நாடுகளுக்கு தளவாடங்கள், உதிரிப்பாகங்கள் வழங்குவதை பலமுறை நிறுத்திவைத்துள்ளது. உதிரிபாகங்கள் கிடைக்காமல் படைகள் செயலிழந்து, அமெரிக்கா முன் மண்டியிட்ட நாடுகள் ஏராளம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பலனடையப்போவது சோர்ந்திருக்கும் அமெரிக்க ஆயுத உற்பத்தித் தொழில் மட்டுமே, அதுவும் இந்திய மக்களின் வரிப்பணத்தின் மூலமாக. மலாக்கா ஜல சந்தியில் அமெரிக்க சரக்குக் கப்பல்களை பாதுகாக்க இந்தியாவின் உதவியை நாடியிருப்பது குறித்து நமது ஆட்சியாளர்களுக்குப் பெருமை பிடிபடவில்லை. ஆனால், உண்மையில் பெருமையானது தனித்து செல்லும் ஒருவன் துணைக்கு ஒரு நாயை சங்கலியில் பிணைத்து கூட கூட்டிச் செல்வது அந்த நாய்க்கு எவ்வளவு பெருமையோ இந்த அளவே ஆகும். இந்த பெருமையை ஏற்க இதற்கு முன்னதாக இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்க இராணுவத் தலைமையகமாகிய பென்டகன் 2002ம் ஆண்டில் தயாரித்த ஒரு அறிக்கையை நினைவு கூருவது நலம். அந்த அறிக்கையின்படி, “சிறு இராணுவ நடவடிக்கைகளாகிய அமைதிப்படை, தேடுதல், மீட்பு, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக திறமையான பங்காளி அவசியமாகிறது. இதன்மூலம் அமெரிக்கா ராணுவம் உயர் ராணுவ நடவடிக்கைகள், யுத்தம் போன்றவற்றில் கவனம் செலுத்த முடியும்” அதாவது அமெரிக்கா ராணுவம் விட்டுச் சென்ற கழிவுகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவத்தை அமர்த்தியுள்ளது. வாழ்க தேச கௌரவம்.

ஒரு கொசுறுச் செய்தி: மலாக்கா ஜலசக்தி காவலுக்காக 500 கோடி டாலர் மதிப்புள்ள ரோந்துப் படகுகள், ராடர்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கான (விலை கொடுத்துத்தான்) உடன்படிக்கையும் ஏற்பாடாகியுள்ளது. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தனது விஜயத்தின் போது உருவாக்கியுள்ள அணுசக்தி குறித்த ஒப்பந்தம். இந்தியாவின் அணுஉலைகளுக்கான யுரேனியம் முதலான தாதுப் பொருட்களை அமெரிக்கா வழங்கும். கைம்மாறாக இந்தியா மின்சாரம் தயாரிக்கும் மற்றும் இராணுவ உலைகளைத் தனித்தனியாக நிறுவ வேண்டும். மின்சாரம் தயாரிக்கும் அணுஉலைகளை சர்வதேச அணுசக்திக் கழகத்தின் சோதனைக்குட்படுத்த வேண்டும்.

இவ்வாறு அணு உலைகளைத் தனித்தனியாகப் பிரிப்பது என்பது மிகுந்த பொருட்செலவும், சிரமமான முயற்சி என்கின்றனர் அணுசக்தி நிபுணர்கள். இவ்வாறான முடிவு எடுக்கப்படுமுன் அது குறித்த விவாதங்கள் ஏதும் நடத்தப்படவில்லை என்றும் இம்முடிவின் சாதக பாதகங்கள் அலசப்படவில்லை என்றும் இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் ஆளும் கட்சிக்குள்ளேயே கூட இது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கருதப்படுகிறது. மேலும் அணுஆயுத கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து மற்ற ஆயுத அரசுகள் மற்றும் அணு ஆயுத பரவல் ஒப்பந்த அமைப்பு ஆகியவற்றுடன் பேச்சு நடத்தினால் அதிக பலன் கிடைக்குமா என்பன போன்ற பல அம்சங்கள் ஆராயப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

இராணுவ உலைகளை தனியாக நிறுவுவது நடைமுறையில் இந்தியா போன்ற குறைவான அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாட்டிற்கு சிரமம், பொருட்செலவுடன் அணு ஆயுத பரவலுக்கும் வழி செய்யலாம். அத்துடன், அமைதித் தேவைகளுக்கான அணு உலைகளுக்கு அமெரிக்கா தயவை நாடியிருப்பதும் அணுசக்தித் துறை நிபுணர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவின் அணுசக்தித்துறை வளர்ச்சி தராப்பூர் போன்ற ஒரு சில உலைகளைத் தவிர சுயசார்புடையதாகும். விஞ்ஞானி ஹோமிபாபாவின் மூன்று கட்ட வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது வேண்டிய விளைவுகளை எட்ட சற்று காலம் பிடித்தாலும் அன்னிய தயவினை நாடாமல் இந்தியாவில் கிடைக்கும் தாதுப் பொருட்களைக் கொண்டு அணு ஆற்றல் துறையில் சொந்தக் காலில் நிற்பது மற்றுமோர் அம்சம்.

இந்தியாவில் அணுசக்தியைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மின்சாரம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் வெறும் 3ரூ மட்டுமே. இந்த மூன்று சதவீதற்காக இவ்வளவு சமரசம் தேவையா என்ற கேள்விக்குப் பதிலில்லை. அணுஉலை அளவுக்கு முதலீடு தேவைப்படாத அணு உலை போன்று பேரழிவு ஆபத்து ஏதும் இல்லாத காற்றாலைகள் மூலமாகவே நமது நாட்டிற்கு அதே அளவு மின்சாரம் கிடைக்கிறது. காற்றாலைகளை உற்சாகப்படுத்துவதன் மூலம் அதிக மின்சாரத்தை ஆபத்தில்லாமல் அடிபணியாமல், குறைந்த பொருட்செலவில் தயாரிக்க முடியும்.

இந்தியாவின் அணுப்பரவல் தடை குறித்த அமெரிக்கக் கொள்கையானது கட்டுப்படுத்துதல், பின்னோக்கி இழுத்தல் மற்றும் ஒழிப்பு ஆகும். அதவாது அணுசக்தி வளர்ச்சியை முதலில் கட்டுப்படுத்தி, அதனைத் தொடக்க நிலைக்கு பின்னோக்கி இழுத்து இறுதியாக அத்துறையை இல்லாமல் செய்வது. அதன் முதற்பகுதிதான் அணுசக்திக்கான எரிபொருளாகிய யுரேனியம் வழங்குவது. முற்றிலுமாக அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலை வந்தவுடன், யுரேனியம் வழங்கல் நிறுத்தப்படும். அணுஉலையை மூடவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனுடைய உபரி விளைவாக முதற்கட்டத்தில் வாங்குவதற்கு ஆள்போதாமல் அமெரிக்காவில் தவித்துக் கொண்டிருக்கும் யுரேனிய ஏற்றுமதி நிறுவனங்களுக்குப் புத்துயிர் கிடைக்கும். ‘பொறுப்புணர்வு மிக்க அணு ஆயுத வல்லரசு’ என்ற அமெரிக்க அடைமொழி தந்த மயக்கத்தின் விளைவு - அமெரிக்காவின் பகடைக்காயாக மாறும் ஆபத்து.

இந்தப் போதையில் தான் பிரதமர் ஈரானிலிருந்து எரிவாயு வாங்கும் திட்டம் பற்றிய தனது நம்பிக்கையின்மையை அமெரிக்க மண்ணில் வெளியிட்டு அமெரிக்காவின் பாராட்டுதலைப் பெற்றார். வணிகத் திட்டத்திற்கு கடனுக்காக வங்கியை அணுகும் சாதாரண அறிவுள்ள எந்த மனிதனும் வங்கி மேலாளரிடமே அத்திட்டம் வெற்றிபெறுமா என்ற சந்தேகத்தைக் கேட்க மாட்டான். அமெரிக்க போதையில் சுயசார்பு மிக்க திட்டத்தைத் தானாக கைவிட்டால் உள்நாட்டில் கிளம்பும் எதிர்ப்பை சமாளிக்க முடியாது என்பதால் அத்திட்டத்திற்கு நிதி உதவி கிடைக்காமல் நிறைவேறாமல் இருக்கட்டும் என்று சாமர்த்தியக் கணக்கு போடுகிறார் இந்த முன்னாள் உலக வங்கி ஊழியர் மன்மோகன் சிங். தன்னுடைய மக்கள் விரோத பொருளாதார நடவடிக்கைகள் மூலம் அமெரிக்க மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கும் புஷ் அடுத்த தேர்தலில் தன் கட்சி வெற்றிக்காக ஈரானைத் தயார் செய்கிறார். தனிமைப்படுத்துகிறார். இந்த சதுரங்கத்தில் அமெரிக்க தரப்பு காயாக இந்தியாவை மாற்ற மன்மோகன்சிங் முயற்சிக்கிறார்.

வழக்கமாக அமெரிக்க பிஸ்கெட் உட்கொண்டு உணர்விழந்த நிலையிலிருக்கும் அதிபர்கள் பட்டியலில் மன்மோகன் சேர்ந்து விட்டார். இரயிலில் பஸ்ஸில் பறிபோவது பயணிகளின் சொந்த உடைமைகள்; ஆனால் அமெரிக்க பிஸ்கெட்டினால் பறிபோவது தேசத்தின் இறையாண்மை, தேச கௌரவம், சுயசார்பு நிலை போன்றவற்றுடன் இந்நாட்டின் மிகப் பெருவாரியான மக்களுக்குரிய பலவிதமான உரிமைகள், எனவே இவ்வொப்பந்தங்கள் சட்ட வடிவம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது சமானியனின் கடமை. இவ்வளவிற்கு பின்னும், சீனாவுக்கு எதிராக மாற்று ஆசிய மையத்தை உருவாக்கும் அமெரிக்காவின் நீண்ட காலத்திட்டமே இந்த ஒப்பந்தங்கள் என விடப்பிடியாக நம்பும் இதயங்களுக்கு ஒரு கொசுறுத் தகவல். ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்தைப் பெற இந்தியா உள்ளிட்ட ஜி.4 நாடுகள் ஐ.நா. பொதுக் குழுவில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முறியடிப்பதற்காக உலக நாடுகளின் ஆதரவைத் திரட்ட கூட்டணி அமைக்கக் கேட்டு சீனாவை அணுகியுள்ளது அமெரிக்கா.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com