Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
அயல்மகரந்தச் சேர்க்கை

நாவின் நடைவண்டி
அப்துல் காதர்

மொழியைத் தாய் மொழி என்றது எதற்காக? பெற்றுத் தரும் தாய், கற்றுத் தருவதாலா? அப்படி என்றால் ஊமைக் குழந்தையின் தாய்மொழி என்ன? மற்றவர்கள் மொழியைத் தாயெனக் கொண்டாடியதற்கும் தமிழர்கள் தாய்மொழி எனக் குறித்ததற்கும் வேறுபாடு உண்டு. மொழியின் தோற்றம் பற்றி நன்னூல்

“உந்தி முதலா முந்துவளித் தோன்றி”

என்று பேசுகிறது. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் உருவாவதைப் போலக் காற்று மொழியாகக் கருவாகிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து மேல்நோக்கிச் சென்று பிரசவமாகிறது. ஆங்கிலேயர்கள் கூட ‘Delivery’ (பிரசவம்) எனப் பேச்சினை அழைக்கிறார்கள். மொழியின் பிரசவம் பார்ப்பதற்குத்தான் இறைவன் 32 வெள்ளையுடை நர்சுகளைப் படைத்திருக்கின்றான். தாயாகும் பேறு பெண்ணுக்கு மட்டுமே; ஆணுக்கில்லை. ஆனால் மொழி வயிற்றில் உருவாகி, மிகச் சிக்கலான மகப்பேறு ஆதலால், அதனைச் சுகப்பேறாக்க முப்பத்திரண்டு செவிலிகள் முயல, பெண்ணை மட்டுமல்ல ஆணையும், ஆம் அனைவரையும் தாயாக்கி விடுவதால் ‘தாய்மொழி’ ஆகிவிட்டது. இதனை இலக்கணமாகக் கண்டுணர்ந்த நம் முன்னோர்கள் சிந்தனை ஆழம் வியப்பூட்டுகிறது.

பேச்சினை மேடைக் கலையாக்கி மிரட்டியவர் பேரறிஞர் அண்ணா. அவர் நாவிலும், பேனாவிலும் கலைமகளை வைத்திருந்த பிரம்மா. உரைநடையைத் திரைநடையாக்கி கருத்து முதிர்ந்த நரைநடையாக்கி வழங்கியவர். விரிந்த படிப்பும், பகுத்தறிவுக் கொள்கைப் பிடிப்பும், பிணத்தையும் எழுப்பவல்ல துடிப்பும் அவர் பேச்சுக்கு உண்டு. சூரியன் தோன்ற தாமரை மலரும். அவர் தன் நாதவனும் ஒற்றை இதழ்த் தாமரையால் உதய சூரியனையே மலர வைத்தவர். ‘தம்பிக்கு’ அவர் எழுதிய கடிதங்கள் தான் அன்னைத் தமிழகத்தில் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட அஞ்சல் வழிக் கல்வியாகும். மேடைகளைத் ‘திறந்த வெளிப் பல்கலைக் கழகமாக்கி லட்சோபலட்சம் வெகுமக்களுக்கு அறிவூட்டிய ஆசான் அவர். ஒரு மேடைப் பேச்சே புத்தக வடிவில் வெளிவந்த வரலாறு அவர் தொடங்கி வைத்ததாகும். மூச்சு இழைகளையே பேச்சு நூலாக நெய்து தந்த தறிஞர் இந்த அறிஞர். வல்லினமாய் வாழ்ந்த தமிழினம், மெல்லினமாய்ச் சிறுமைப் படக் காரணம் இடையினம்தான். ஆடு, மாடுகளை ஓட்டிவந்த ஆரிய ‘இடையினம்தான்’. வில்லால் வீரனாக வாழ்ந்தவன், புல்லால் வீழ்ந்தவன் ஆனான். காலப்போக்கில் ஆட்டுமந்தை, மாட்டு மந்தைகளுக்குப் பதிலாக, நாட்டு மந்தைகளாக மக்களை மேய்த்து ஏய்த்து, தருப்பைப்புல் மேயவைத்த வரலாறு நம் வரலாறு. ஒட்டடைக் கோல்களையே நூலாம்படைகள் வீழ்த்தியது இங்கே. பத்துப் பைசாப் பூணூல் அணிந்தவன் உயர்ந்த சாதி பிராமணன் என்றால், பூணுலுக்குப் பஞ்சு உற்பத்தி செய்து தருபவன் தாழ்ந்த சாதியா? இப்படி ஆதிக்க இருட்டின் மீது மின்னல் சவுக்கெடுத்தவர் அண்ணா. பெரியார் என்ற பீரங்கி பெற்றெடுத்த எந்திரத் துப்பாக்கி.

வடமொழியில் இராமாயணம் எழுதியவர் வான்மீகி. வான்மீகம் என்றால் புற்று என்று பொருள். அந்தப் பெயர் வந்ததற்குக் காரணம் உண்டு. மக்களை விட்டுப் பிரிந்து காடு சென்று, அட்டமா சித்திகளைத் தான் பெறுவதற்காக உடம்புக்கு வெளியே புற்று வளர, வளரத் தவம் இயற்றியதால் அவரை வான்மீகன் என்று மக்கள் அழைத்தார்கள். மக்களுக்காக அன்றித் தான் மட்டும் நினைத்த வடிவெடுக்க, கூடுவிட்டுக் கூடு பாய, தண்ணீரில் நடக்க, விண்ணில் பறக்க, திடச்சுவர்களைச் சூக்குமமாகக் கடக்க எனச் சித்தி பெற, வாழ்வில் தான் மட்டுமே உயரத் தவம் செய்து, உடம்பின் வெளியே புற்று வளர்த்துக் கொண்டவன் பெரியதவம் என்றால், மக்களை விட்டுப் பிரியாமல் மக்களுக்குள் வாழ்ந்து, மக்களை உயர்த்த தனக்குள்ளேயே ‘புற்று’ வளர்த்துக் கொண்ட அண்ணா செய்தது சிறியதவமா? தன் வாழ்வின் உள்ளடக்கமாக, இன இழிவு நீக்கி, தன் சமூகத்தை உயர்த்துவதையே இலட்சியமாகக் கொண்ட அண்ணா வாக்கில் உண்மை ஒளி மிளிர்ந்ததில் வியப்பில்லை.

தமிழ் மழையெனக் கொட்டிய தன்மான மேகம், ஆங்கிலத்தையும் அருவியெனக் கொட்டியது. வழக்கமாக நாடாளுமன்ற மக்களைப் பணிகள் முற்பகலோடு முடிந்து போகும். ஆதலால் பிற்பகலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் வழக்கம் கொண்டவர் முதல் பிரதமர் பண்டிதர் நேரு. பிற்பகலில் கூடும் நாடாளுமன்ற மேலவையில் அண்ணா பேசுகிறார் என்றால், பார்வையாளர் மாடத்தில் பண்டிதர் இருப்பார். வடவர்களால் மிதிக்கப்பட்ட புழுக் கூட்டத்திலிருந்துதான் இந்தப் பகுத்தறிவுப் பட்டாம்புச்சி சிறகடிக்கத் தொடங்கியது. நிமிர்ந்திருக்கும் நேருமேரு, பொதிகை நோக்கிக் குனிந்து வணங்கியது அப்போதுதான். பைஜாமா ஜிப்பாப் பாராளுமன்றத்தில் வேட்டிகட்டிய தமிழுக்கு முதல் மரியாதை.

நேர்மைத் திறமும், நெஞ்சுரமும் இலக்கியத் தரமும் கொண்டு வாதங்கள் வயதுக்கு வரத் தொடங்கிய வசன வசந்தகாலம் அது. அண்ணா பொடி போட்டார், பாராளுமன்றம் முழுக்கத் தும்மியது. கந்தல் இந்திக்கு நடுவே, காஞ்சிப் பட்டுக்குக் கௌரவம் கிடைத்தது அப்போது லட்சுமணன் கோட்டையே, அரைஞாண் கயிறாக அணிந்த, காந்தீயக் கதர்நகல் மொரார்ஜி தேசாய் நிதியமைச்சர்.

அண்ணா : What is your economic policy, Honourable Finance minister ?
(மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களே தங்கள் அரசின் பொருளாதாரக் கொள்கை என்ன?)

மொரார்ஜி: We are taking best components from capitalism and best ingredients from communism and we mix it; it is mixed economy.
(முதலாளித்துவத்திலிருந்து சிறந்த கூறுகளையும், பொதுவுடமைத் தத்துவத்திலிருந்து சிறந்த பகுதிகளையும் எடுத்துக் கலக்கிறோம். அதுதான் கலப்புப் பொருளாதாரம்)

அண்ணா : I Want to remind the Honourable Finance Minister that adulteration is prohibited as antinational activity in our country.
(நிதியமைச்சர் அவர்களுக்கு நினைவு படுத்துகிறேன். நம் நாட்டில் ‘கலப்படம்’ தடை செய்யப்பட்ட தேசவிரோதச் செயல் என்பதை)

நாடாளுமன்றத்தில் கை தட்ட முடியாமல் பெருமூச்சு விட்டவை நாடாளுமன்ற இருகை வைத்த இருக்கைகள் தான். வாதங்களில் அவ்வப்போது சூடு இருக்கலாம் ஆனால் எப்போதும் வெளிச்சம் இருக்க வேண்டும். நாற்காலிகள் மீதமர்ந்து போடும் இரைச்சலில் நாற்காலிகளும், கூச்சலிடும் குற்றவாளிகளும் ஜனநாயகத்தின் குரல்வளையைக் கடித்துக் கதறும் நாடாளுமன்றக் காட்சிகளைக் காணும்போது நெஞ்சு வேகும். அந்த வேளை நயத்தகு வாதங்களால் வியத்தகு வெற்றிகளைக் குறித்த அண்ணாவின் நினைவு மண்வாசமாய் மனதில் எழும். பேச்சாளர் நாவுகளுக்கு நடைவண்டி அவர்தான். காதுகளில் இலைபோட்டுக் காத்திருந்த அவைகளுக்கு நாவுகளே சமைத்த நற்றமிழ் விருந்து அவர் பரிமாறியதுதான். பரிமாறப் பரிமாறப் பசியேறியதுதான் மிச்சம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com