Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
விளையாட் டென்றால் விளையாட்டா?

சாண் ஏறி முழம் சறுக்கும் சாகசம்...!
சாத்தான் குளம் அப்துல் ஜப்பார்

ஜோஷ்னா சின்னப்பா உலக அளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய நம்பிக்கை நட்சத்திரம். இவர் ஆடும் ஆட்டம்-ஸ்குவாஷ்.

ஏறக்குறைய டென்னிஸ், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளுக்கு ஒப்பானதுதான். ஆனால் ஒரு விஷயம் மேற்சொன்ன ஆட்டங்களை ஆடுபவர்கள் நடுவில் கட்டப்பட்டிருக்கும் வலைக்கு அப்புறத்திலிருந்தும் இப்புறத்திலிருந்தும் அடித்து ஆடுவார்கள். ஆனால் ஸ்குவாஷில் ஒரே பக்கத்தில் நின்று கொண்டு ஒருவர் பந்தை சுவரை நோக்கி அடிக்க அது பட்டுத் தெறித்து வரும்போது இவர் திருப்பி அடித்து ஆடவேண்டும். அடிக்க முடியாவிட்டால்-தவறிவிட்டால் புள்ளிகள் போகும்.

இதில் உலக அளவில் கோலோச்சியவர்கள் பாகிஸ்தானின் ஜஹாங்கிர் கானும் அவருக்குப் பிறகு ஜான்ஷர் கானும். இப்போது நம்மவர்களும் கால் பதிக்க முயல்கிறார்கள். அவர்களை முந்திக் கொண்டு உலக இளையோர் அளவில் முன்னணியில் நிற்கிறார் ஜோஷ்னா சின்னப்பா. வாழ்க-வளர்க.

சானியா மிர்ஸா உலகத்தர வரிசையில் 50க்குள் வருவது என்கிற அவருக்கு அவரே நிர்ணயித்துக் கொண்ட, இலக்கை அடைந்து விட்டார். ஆனால் அவரது வளர்ச்சியில் அக்கறையுடையவர்கள் அவர் 25க்குள் வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பை வெகு விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்பலாம். அவருடைய பெரிய பலம், எதிரி யாரென்று பார்த்து அந்த பிரமிப்பில் தடுமாறாமல் தன்பாட்டுக்கு தன்னுடைய ஆட்டத்தை மிகத் திறமையாக ஆடுகிறார்.

சானியா மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்ப்பது பேராசை என்றே எனக்குப் படுகிறது. ஒரு ராமநாதன் கிருஷ்ணனைப் போல், விஜய் அம்ருதராஜைப் போல், லியான்டர் பயசைப் போல் தன்பாட்டுக்கு தன் ஆட்டத்தை ஆடிக்கொண்டு உலக அரங்கை வலம் வருவார். அவ்வப்போது அவர்கள் செய்தது போல் இவரும் திடீர் திடீரென்று சில பிரபலங்களை வெட்டிச் சாய்ப்பார். அது போதும். அதுவே பெரிய சாதனைதான். அதற்கு மேல் கிடைத்தால் ‘போனஸ்’ என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஏராளமாக எதிர்பார்த்து ஏமாற வேண்டியதில்லை.

உலக அளவில் அறியப்படும் இன்னொரு இந்தியப் பெண் அஞ்சு ஜார்ஜ். இவரைப் பொறுத்தவரையிலும் கூட வந்தவரை வரவு, வராவிட்டாலும் நட்டமில்லை என்கிற நிலைதான். அந்த அளவுக்குத்தான் இந்திய தடகளத்தரம் இருக்கிறது. தடகளப் போட்டிகளில் ஒரு பி.டி.உஷா. ஒரு ஷைனி ஆப்ரஹாம் (வில்சன்). ஒரு அஸ்வினி நாச்சப்பா என்கிற அளவுக்கு பெரிதாக ஆண்கள் யாரும் சோபிக்கவில்லை என்பது தான் சோகம்.

1948 லண்டன் ஒலிம்பிக்கில் நாம் நூலிழையில் பிரான்சிடம் தோற்றுப் போன கதையை அந்நாள் சூப்பர் ஸ்டார் ஷைலேன் மன்னா எழுதி இருந்ததை சமீபத்தில் படித்தேன். அதற்கு ஆறுதலாக 1951ல் ஆசியக் கோப்பையை வென்றதையும் அவர் எழுதி இருந்தார். பிறகு என்னவாயிற்று? உலக அளவை விடுங்கள். ஆசிய அளவில், ‘சார்க்’ அளவில் கூட நாம் காணாமல் போயிருப்பது எதனால்? ஹாக்கியில் நமக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அதை விட மோசமானது இல்லையா- இவை ஏன்? எதனால்?

இவற்றுக்கெல்லாம் ஆறுதலாக, 1983ல் நாம் பெற்ற கிரிக்கட் உலகக் கோப்பை அமைந்தது. தொடர்ந்து ஆடுகளத்தில் நாம் நடத்திய தாண்டவங்கள். நம் வீரர்களின் உலக அளவிலான அசுர வளர்ச்சி, எல்லாம் நம்மை பிரமிக்க வைத்தன. எவ்வளவு உயரே போகிறோமோ கீழே விழும் போது அடியும் அந்த அளவுக்கு பலமாக இருக்கும் என்பதற்கு நம்முடைய கிரிக்கட் அணி இப்போது மிகப் பெரிய உதாரணமாக இருக்கிறது.

நிர்வாகிகளின் முகதாட்சண்யம், பதவிமோகம், ஆதிக்கப் போட்டி, குழிபறிப்பு, கழுத்தறுப்பு என்று எல்லா மனித பலவீனங்களும் மேலெழுந்து வந்து விட, ஆட்டத்தை ஆடுபவர்கள் மனோநிலையும் அதலபாதாளத்துக்குப் போய் விட்டது அல்லது போய்க் கொண்டிருக்கிறது.

இலங்கையில் நடந்த முத்தரப்பு கிரிக்கட் போட்டி ஆட்டங்கள் நம் அணிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. புதிய கேப்டன், புதிய கோச், எல்லாம் சரிதான். ஆனால் அணுகுமுறையும், மனோபாவமும் மட்டும் பழசோ பழசு, பன்னப் பழசு, ஆட வரும் வரிசையில் யார் யார் எந்தெந்த இடத்தில் வருவது என்பது முதல், எல்லாவற்றிலும் குழப்பம். வேகப்பந்து வீச்சாளர்கள் வேண்டும். அதிலும் ஒருவர் இடது கை வீச்சுக்காரராக இருந்தால் தேவலை என்று ஏங்கிக் கிடந்தது போக, இப்போது ஒன்றுக்கு மூன்று வேகப் பந்து வீச்சாளர்கள். அதுவும் இடது கைப்பந்து வீச்சாளர்கள். ஆனால் பயன்படுத்துவதில் தான் பிழை. ஜாஹீர் நல்ல வீச்சாளர். ஆனால் ஆரம்ப கட்டத்தில் அவர் வீச்சில் துள்ளலும் துடிப்பும் அதிகமாக இருக்கும். ஆகவே ‘வைட்’ என்பது கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். எனவே அவரை ஆரம்ப வீச்சாளராகப் பயன்படுத்தாமல், ஆரம்பத்துக்கு மாற்றாக பயன்படுத்துவதே பலன் தரும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஏன் உணர்வதில்லை? பந்து சற்றே பழையதானதும் அவர் வீச்சு சிறப்பாக அமைவதை ஏன் இவர்கள் கவனிப்பதில்லை?

வெண்ணை விரல் விக்கட் கீப்பர் பார்த்திவ் பட்டேலுக்கு பல சந்தர்ப்பங்கள் கொடுத்து அவர் தேறாமல் போகவே தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்குக்கு சந்தர்ப்பங்கள் தந்தார்கள். அவர் ஒரு ஆட்டத்தில் 93 ரன்கள் எடுத்த நிலையிலும் மஹேந்திர சிங் டோனியை கொண்டு வந்தார்கள். அவரது ஆரம்ப சூரத்தனம் அதை நியாயப்படுத்துவது போல இருந்தது. அத்தோடு சரி. அதாவது பரவாயில்லை. முத்தரப்பு இறுதி ஆட்டத்தில் ஜெயசூர்யா 19 ரன்கள் எடுத்த நிலையில் இர்பான் பதானின் பந்து வீச்சில் ஓர் அருமையான கேச்சை டோனி கோட்டை விட்டார்.

1999 உலகக் கோப்பையின்போது தென்னாப்பிரிக்காவின் ஹெர்சல் கிப்ஸ் ஒரு கேச்சை கீழே போட்டார். வர்ணனையில் நான் சொன்னேன். அவர் பந்தை மட்டும் நழுவவிடவில்லை. உலகப் கோப்பையையும் சேர்த்தே நழுவவிட்டு விட்டார் என்றேன். டோனி விஷயத்தில் எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டத்தில் இலங்கை இரண்டு விக்கட் இழப்புக்கு 50 ரன்கள். ஜெயசூர்யா பிடிபட்டிருந்தால் என்னவாகி இருக்கும்? அவர் 67 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்ற, நாம் வெறும் 18 ரன்களுக்கு தோற்றுப் போனோம்.

டெஸ்ட் போட்டி ஆட்டங்களில் 10,000க்கும் அதிகமாக ரன் குவித்து சாதனை படைத்தவர்களில் இரண்டு இந்தியர்களும், இரண்டு ஆஸ்திரேலியர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒருநாள் போட்டி ஆட்டங்களில் 10,000க்கு அதிகமாக ரன் குவித்திருப்பவர்கள் நம்மவர்களும், நம் அண்டைய அயலார்களும் தான். சாதனை நிகழ்த்திய வரிசையில் சச்சின் டென்டுல்கர், இன்ஸமாமுல் ஹக், கங்குலி, ஜெயசூர்யா ஆகியோர் இருக்கிறார்கள். ரன்கள் அடிப்படையில் கங்குலியும், ஜெயசூர்யாவும் இடம் மாறுகிறார்கள். இன்னொரு விஷயம். முதல் இருவரும் 300க்கும் அதிகமான ஆட்டங்களில் பங்கு கொண்டு இந்தச் சாதனையை நிகழ்த்த கங்குலி வெறும் 267 ஆட்டங்களில் இதைச் செய்திருக்கிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com