Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya kaatruPuthiya Kaatru
செப்டம்பர் 2005
நூல் விமர்சனம்

மிச்சமிருக்கும் ரணங்கள்
ஹெச்.ஜி. ரசூல்

ஒரு படைப்பாளியாக புகலிடச் சூழலிலிருந்து தமிழுக்கு அறிமுகமான ஷோபாசக்தியின் முதல் நாவல் ‘கொரில்லா’. ஈழமண்ணின் போராட்ட அரசியல் மாறுபட்ட கோணங்களில் சமுக அனுபவம் இயக்க அனுபவம் சார்ந்த புனைவு வெளியில் பதிவாகியிருந்தது. கதைத் தொகுப்பான 14 கதைகளை உள்ளடக்கிய தேசத் துரோகி புலம் பெயர் சூழல் சிக்கல்களின் படைப்புலகமாக விரிகிறது. தற்போது வெளிவந்துள்ள ‘ம்’ நாவலை ஷோபாசக்தியின் முந்திய எழுத்துக்களின் விடுபடா தொடர்ச்சியெனக் கருதலாம். அதிர்ச்சி மிக்க நிகழ்வுகளின் விரிவானதொரு எழுத்துலகப் பயணமாக இது தன்னை வெளிப்படுத்துகிறது.
கொழும்புத் துறை கத்தோலிக்க கிறிஸ்தவ செமினரியில் சுவாமிக்குப் படித்த நேசகுமாரனின் தந்தை ஏர்னெஸ்ட், அரசுப் பாடசாலை ஒன்றின் வாத்தியார். தாய் சிறிய புஷ்பம். சகோதரிகள் மரியாள், மார்த்தாள், இவர்கள் வாழுமிடம் இலங்கை மண்ணின் பனைத்தீவு.

நேசகுமாரன் தமிழுணர்வாலும், தமிழர் இயக்கத் தலைவர்களின் முழக்கத்தாலும் ஈர்க்கப்பட்டு, பின் புரட்சிகர இயக்கத்தில் ஒரு போராளியாக ஈடுபடுகிறான். புத்த பள்ளிக்கூட எரிப்பு, காவல் நிலையத்தை வெடிகுண்டு வீசி தகர்க்க முயற்சி உள்ளிட்ட தீவிரமிக்க செயல்களால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகி இராணுவத்திடம் ஒப்படைக்கப் படுகிறான். இராணுவ தடுப்பு முகாம்கள் பலவற்றில் மாற்றப்படும் காட்சிகளினூடே தமிழ் கைதிகளின் மீதான ஒடுக்குமுறை, உயிரிழப்பு, கூட்டுப் படுகொலைகள் எழுதிக் காட்டப்படுகின்றன. வெலிகடா பெருஞ்சிறைக் கலவரம் இதில் முக்கியமானது. யாழ்ப்பாண இராணுவ முகாம் சிறையடைப்பும் தப்பிச் செல்லுதலும் திரும்பவும் ராணுவத்திடம் பிடிபடுதலும் நிகழ்கிறது. நீதிமன்ற விசாரணையில் விடுதலை செய்யப்பட்ட நேசகுமாரன் மாற்று இயக்க போராளி என்பதால் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் சிறை பிடிக்கப்படுகிறான். இங்கும் வன்முறையும், உடல் சிதைப்பும் தொடர்கிறது. இச்சூழலிலிருந்து தப்பித்து ஈழமண்ணை விட்டு புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் நேசகுமாரனின் வாழ்க்கை இயங்கத் தொடங்குகிறது.

புகலிடச் சூழலில் நேசகுமாரன் பதிவுத் திருமணம் செய்து கொண்ட பெண் பிறேமினி. மகள் நிறமி, குடும்ப உறவுகளின் சிதைவில் பாலியல் பிறழ்வில் தன் குடும்பத்துக்கே துரோகியாகி விடுகிறான். புலம் பெயர் விடுதலைப் போராளிகள் நேசகுமாரனை கடத்திச் சென்று பாலியல் குற்றத்திற்காக கொலைத் தண்டனை வழங்குவது குறித்து விவாதிக்கிறார்கள். எட்டப்படாத முடிவுடன் நாவல் முடிந்து வாசகனிடம் தொடர்ந்து உரையாடலை செய்கிறது.

இளம் பிராயத்திலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீர உரைகளாலும், லட்சிய முழக்கங்களாலும ஈர்க்கப்பட்ட நேசகுமாரன் அமிர்தலிங்கத்திற்கு 9 தடவையும், காசி ஆனந்தனுக்கு 3 தடவையும், பிறிதொரு தலைவருக்கு 11 தடவையும் டெம்பர்ராசன் விரலைக்கீறி ரத்தத் திலகமிட்டிருக்கிறான். ஒரு எழுச்சியுரை கூட்டத்தில் நேசகுமாரன் திடீரேன தன் கழுத்தின் பின்புறமிருந்து பிளேடை உருவி மார்புத் தோலை வகிர்ந்தான். வழிந்தகுருதியில் அமிர்தலிங்கத்தின் நடுநெற்றியில் திலகமிட்டான்.

சாதாரண நிலையிலிருந்து ரகசிய விடுதலை இயக்கங்களோடு தொடர்பினை பெருக்கிக் கொண்டு தாடியும் சிவப்பு அட்டை புத்தகங்களுமாய் நேசகுமாரன் கிராமம் செல்லும் போது பவுத்தத்தையும், சிங்களத்தையும் தமிழீழத்திற்குள் அனுமதிக்கமாட்டோமென்ற கோட்பாட்டை முன்னிறுத்துவதையும் பார்க்கலாம். ஒடுக்கு முறைக்கும், விலக்கலுக்கும் ஆளாக்கப்படும் பண்பாட்டு வாழ்வுகள், வதைகள், போராட்டங்கள் பல்முனை நிலையில் நாவலில் பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஆனையிறவு உப்பள ராணுவ முகாமில் நேசகுமாரனிடம் நடத்திய தீவிர விசாரணை லெபனானில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சிபெறும் தமிழ் போராளிகள் குறித்ததாக இருந்தது. நேசகுமாரனை விசாரிப்பதற்கு கொழும்புவிலிருந்து வந்த புலனாய்வு அதிகாரி தமிழ் விடுதலை இயக்கங்களின் நிலை குறித்து உரையாடிச் செல்கிறார். பிரபாகரின் இயக்கம் போல் கொரில்லா இயக்கமும் இல்லை. உமா மகேசுவரனுடைய உட்டோப்பியா இயக்கமும் இல்லை. போலீசை கொல்வதோ, போலீஸ் நிலையங்கள் கோர்ட்டு கச்சேரிகளை குண்டு வீசுவதோ வாழைக்குலை திருடியவனை கோழி திருடியவனை சமூக விரோதியென கூறிக் கொள்வதோ உங்கள் இயக்க கொள்கை இல்லை. தமிழ் சிங்கள தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு உழைப்பவர்கள் நீங்கள். மக்கள் மத்தியில் புரட்சிகர கருத்துக்களை பரப்பியிருக்க வேண்டும். குண்டுகளை அல்ல என்பதாக இவ்வார்த்தைகள் அமைகின்றன. புரட்சிகர செயல்பாடுகளுக்கும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் இடையேயான இடைவெளி விவாத மையமாக மாறுகிறது.

குட்டிமணியை கொன்று விட்டோம் யாழிற்கு சொல்லுங்களென வெறிக்கூச்சல் கேட்கிறது. கண்கள் தோண்டப்பட்டு குரூரமாக கொலை செய்யப்பட்டு குட்டிமணியின் மரணம் தமிழ் மனங்களை தகவல் ஊடகம் வழி அச்சத்தில் ஆழ்த்தியதையும் கவனப்படுத்த வேண்டும். அச்சுவேலி மரியநாயகத்தை வாரந்தையில் போட்டு கோடாரிகளால் கொத்தினார்கள். தொண்டைக்குழியிலிருந்து ரத்தம் சில மீட்டர் உயரத்துக்கு பீறிட்டு பாய மரணம் மொழியற்று கசிந்தது. சிறைக்கு வெளியே 14 வயது பெண் குரலில் பேசும் மயில் வாகனம் கைக்கூப்பி உயிருக்கு போராடியபோது புத்தகோயிலின் முன் மூன்று துண்டுகளாக வெட்டி வீசப்படுகிறான். கலவரமும் பீதியும் கலந்த உயிர் மீதான அச்சம் சூழலின் பிரதியாக மாறுகிறது.

விடுதலைப் புலிகள் மாற்று இயக்கப் போராளிகளை அரசியற் கைதிகளாய் இரட்டை மாடிக் கட்டிடமொன்றில் வைத்திருக்கின்றனர். திடீரென ஒரு பொழுதில் 57 தமிழ் உடல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு பிணவுடலாய் குவிக்கப் படுகின்றன. அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்குவது குறித்து விவாதிக்கும் போது புலிகள் இதர இயக்கங்கள் மீது விதித்திருக்கும் தடையை எப்போது விலக்கி கொள்வது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 80களில் கோவிந்தன் படைத்தளித்த புதியதோர் உலகம் நாவல் முதன்முதலில் போராளி இயக்கங்களுக்கு இடையேயான உள் முரண்பாடுகளை மையப்படுத்தி பேசியது. இந்த படைப்பாளியே யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலி இயக்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட சம்பவமும் ஞாபகத்துக்குரியது.

ஈழத்து கவிஞன் சேரனின் கவிதைப் பகுதியொன்று இவ்வாறு உரத்துப்பேசும். இருபுறமும் துப்பாக்கி நடுவில் நான் / அப்பாவிப் பொதுமக்கள் என்பேர் / அவன் ‘இரு’ என்றால் / இவன் எழும்பு என்பான். / இவன் போ என்றால் / அவன் வா என்பான். / அவன் இற என்றால் / இவன் இரு என்றான். / அவன் உடலைக் கொன்றான். / இவன் ஆத்மாவைக் கொன்றான். / இப்போ - நான் பிசாசானேன்.

ஐரோப்பிய சிறுநகரமொன்றின் கருக்கலைப்பு பிரிவில் வெள்ளைக்காரப் பெண்கள் உட்பட 7பேர் காத்திருக்கின்றனர். தன் மகள் நிறமியின் கர்ப்பத்திற்கு காரணமானவனை கண்டுபிடிக்க படாதபாடுபடும் தாய் பிறேமியின் குரலில் ஆத்திரமும் வேதனையும் மிஞ்சுகிறது.

இங்குள்ள பாடசாலைகளில் ஆணுறை மாத்திரைகள் குறித்தெல்லாம் சொல்லிக் கொடுத்த பின்னும் இதைக்கூட விளங்காத மக்குப் பிள்ளையாகிவிட்டாளே என ஆத்திரப்படும் குரலில், பாலியல் ரீதியாக சிதைந்து போனாலும் கர்ப்பம் மட்டும் ஆகாமல் தன்னை காப்பாற்றிக் கொள்பவள் நல்ல புத்திசாலி பிள்ளையாக உருவகிக்கப்படுகிறாள். ஐரோப்பிய சூழலில் தமிழ் சிறுமிகள் பாலியல் ரீதியாக சிதைவுறுதல் வரிசைப்படுத்தப்படுகிறது.

தன் மகள் நிறமி கர்ப்பத்திற்கு தானே காரணமென ஒப்புக் கொண்ட நேசகுமாரனின் நிலை குறித்த வாசிப்பு என்னவிதமான அர்த்தங்களை உற்பத்தி செய்கிறது. இக்கேள்விக்கான பதில்களை தேட வேண்டியுள்ளது. தற்கொலைப் படையாகவும் தீவிரவாத போராளியாகவும் இருக்கும் ஒருவனின் மனநிலை என்பதே அசாதாரணத் தன்மையுடையது. இந்த அசாதாரணத் தன்மை குடும்ப உறவுகள் குறித்த ஒழுங்கமைப்பை மீறல் செய்கிறது.

ஆதிக்க சமூகம் ஒடுக்கமுறை தன்மையுடன் பிறவற்றின் மீது செலுத்துகிற ஒழுக்க விதிகளை மீறுதலாக இது அமையவில்லை. மாறாக சொந்த ரத்த உறவின் மீதே ஆண் சார்ந்த பாலியல் அதிகாரத்தை நிறுவுகிற வரம்பற்ற செயல்பாடாக மாறுகிறது. சிறைகளிலும் வதை முகாம்களிலும் குரூரமாக அனுபவித்த காயங்கள் மனித ஈரமற்ற பாசிச செயல்முறைகள் கட்டமைத்த ஆழ்மனத்தின் பிம்பங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் விகாரமாக வெளிக் கிளம்புகின்றன. புறத்தோற்றத்தில் விடுதலைக்கான புரட்சிக்காரனாகவும், அகத்தோற்றத்தில் உறைந்து போன பாலியல் ஆணதிகாரத்தின் ஒடுக்குமுறையாளனாகவும் இருவித காட்சி ஆழங்களினூடே நேசகுமாரன் கட்டமைக்கப்பட்டுள்ளான்.

தமிழீழப் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வை செய்தி தொகுப்புகளாகவோ வரலாற்று பதிவுகளாகவோ உருவாக்கவேண்டுமெனில் அது நாவலற்றதொரு பிறிதொரு எழுத்தாக கூட ஆகிவிடும். ஆனால் யதார்த்த வாழ்வினூடே புனைவுலகமும் இணையும்போது புதிய வாசிப்பு நிலை உருவாகிறது.

தமிழ் நாவல்களில் படைக்கப்பட்டு வந்த வர்க்க யதார்த்தம் தனது எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது. நவீனத்துவம் உருவான போது மன உலகங்களின் சிக்கல்களை பிளவுபடல்களை அந்நியப்பட்ட உணர்வுப் புரிதல்களை உளவியல் யதார்த்த முறையியலாக சொல்லியது. அண்மைக்கால நாவல் படைப்புலகில் வெளிப்படும் யதார்த்தம் கலாச்சார யதார்த்தமாக தென்படுகிறது. ஒவ்வொரு சாதிய குழுக்களிலும் சமய சூழலுக்குள்ளும், விளிம்பு நிலைகளிலும் வாழ்கிற மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், புனைவுகள் சார்ந்த உலகமாக படைக்கப்படுகிறது. இத்தகையதான சூழலில் ஷேபாசக்தியின் நாவலுலகத்தின் பெரும் பகுதியும் யதார்த்தம் சார்ந்த நேர்கோட்டு முறையிலான கதைசொல்லாக அமைந்துள்ளது. எனினும் மரபு வழி வடிவ யதார்த்தமான துவக்கம் - வளர்ச்சி - முடிவு என்பதான முறையை மாற்றியமைக்க முயன்றதன் விளைவாகவே கதைசொல்லியின் இடையீடுகளால் சிதறடிக்கப்பட்டு நேரற்ற வாசிப்பையும் இந்நாவல் உருவாக்க முயல்கிறது. உயிர் அழிப்பையும், உடல் சிதைப்பையும் மையப்படுத்தி தீவிரத் தன்மையோடு இயங்குகிற இந்நாவல் குரூர யதார்த்தத்தை தனது படைப்புக் களமாக கொள்கிறதெனலாம். இதனால் தான் இனம் புரியாத அதிர்ச்சிக்குள்ளும், ஆத்திரத்திற்குள்ளும் வாசகன் உறைந்து போக நேரிடுகிறது.

நூல் : ‘ம்’ (நாவல்)
ஆசிரியர் : ஷோபா சக்தி
வெளியீடு : கருப்புப் பிரதிகள்
45ஏ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை,
சென்னை - 5
விலை : ரூ. 80/- பக்கம் : 168


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com