Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
குளச்சல் மு.யூசுப்

‘கடலும் வாழ்வும்’
இலக்கியப் பயிற்சிப் பட்டறை

‘சார், இனி மேல் நாங்கள் எங்க மொழியில் தான் எழுதுவோம்’ - இது இலக்கியப் பயிற்சிப் பட்டறையின் இறுதிக் கட்டத்தில் நெய்தல் நிலம் சார்ந்த ஒரு கல்லூரி மாணவியின் ஒப்புதல் வார்த்தைகள்.

சுனாமி எனும் பேரிடர் வெளிச் சத்திற்குக் கொண்டு வந்த பிறகுதான் நெய்தல் நில மக்களின் வாழ்வியல் வெளிப்பாடுகள், அவர்கள் நிலப்பகுதி மற்றும் சமூக நிலையில் மட்டுமல்ல, கலாசாரம் சார்ந்தும் விளிம்பு நிலையில்தான் வாழ்கிறார்கள் என்ற உண்மைகள் தெரியவந்தன.

பொருளாதார ரீதியாகவும் அவர்கள் சுரண்டப்படும் சமூகம் என்ற உண்மை அண்மைக் காலத் தில் தான் வெளிவந்திருக்கிறது.
நெய்தல் நிலக் கலாச்சாரம் என்பது பெருமளவும் வாய்மொழி மரபுகளாகவும் வீரம் செறிந்ததும் அழகியல் கூறுகள் கொண்டது மான கலை மரபுகளாகவும் பாதுகாக் கப்பட்டு வந்தன. நாட்டார் வழக் காற்றியல் ஆய்வாளர்கள் கூட நெய் தல் நில மக்களின் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்த தயக்கம் காட்டி யதற்கான காரணம்; கடல்சார் மக்களின் உழைப்பால் வளர்ந்த உடலும், உறுதியும், கோபமும் அவர்களது மொழி மீதான, ஆய்வாளர்களின் கண்ணோட்டமும்தான்.

இதனை வரலாற்றுச் சான்று களுடன் ஒப்புமைப்படுத்தினால், உடலுறுதி கொண்ட கறுப்பின மக்கள் மீதான வெள்ளையின மக்களின் பயம், திராவிட இனம் மீதான ஆரிய பயமும்தான் அவர்கள் அணுக முடியாதவர்கள் என்ற அவர்களது கலாச்சாரம் கீழானது என்ற கருத்தியல்கள் நிலை பெற் றமைக்கானக் காரணிகள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவர் களை சுரண்டிப் பிழைத்தவர்களுக்கு இவைதான் பெருமளவு சாதகமான அம்சங்களாகவும் மாறின.

கடலின் விளைபொருட்களை சந்தைப்படுத்த அவர்கள் தரகு முதலாளிகளையே சார்ந்திருந்தனர். தரகர்கள்தான் சந்தை மதிப்பை நிர்ணயிப்பவர்கள் என்பதால் உழைப் பவனுக்கு அதற்கானக் கூலி மட்டும் போய்ச் சேர்ந்தால் போதுமானது என்பதில் அவர்கள் கவனத்துடன் இருந்தார்கள்.

விவசாயப் பொருட்களைப் பதப்படுத்தி வைக்கவோ தொலை தூரங்களுக்கு எடுத்துச் செல்லவோ முடியாத ஒரு காலத்தில், பண்ணை நிலத்தில் வேலை செய்தவன் பண் ணையார் கொடுத்த கூலியை வாங்கி னான் என்பதை தர்க்க ரீதியாக வேனும் ஒரு வகையில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், கடலில் விளையும் பொருட்களைப் பதப் படுத்துதல் என்பது எளிமையானதும், கடல் மார்க்கமாக தொலைதூரங் களுக்கு எடுத்துச் செல்லுவதும் அது போல் சுலபமானதுதான். மட்டு மல்ல, கடல் எந்தப் பண்ணையாரின் உடமையுமல்ல. ஆனால் கடல்சார் மக்கள் கூலிக்காக வேலை பார்க்க மறைமுகமாக நிர்பந்திக்கப்பட்டார் கள். இது நைச்சியமாக மேற்கொண்ட நிர்பந்தம். வாக்குத் தவறுதல் கூடாது, நன்றி மறக்கக்கூடாது என்பது போன்ற எளியவர்களின் பொதுவான மனப்பாங்கின் காரணமாக, மீன் பாடில்லாத காலங்களில் - வெஸ்ட் பேங்க் பகுதிகளில் ஆனி, ஆடி காலம் -பெற்ற கடன்களுக்காக தங்களது உழைப்பைச் சுரண்ட அனுமதித்தார் கள். பாலியல் ரீதியிலான மறைமுக நிர்பந்தங்கள் மூலமாகவும் பல முதலாளிகளால் சுரண்ட இயன்றது. நிர்பந்தங்கள் எதுவும் இல்லாம லிருந்தாலும் ஏதாவதொரு தரகரைத் தான் அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய சமூகச் சூழல்.

இது போன்ற சில வாழ்வியல் கூறுகள் தற்காலத் தமிழ் மற்றும் மலையாளப் படைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை பார்வையாளர்களாக இருந்தவர் களால் செய்யப்பட்ட பதிவுகள். இவை சம்பந்தப்பட்ட மக்களால் எழுதப்பட வேண்டும். மிக அண்மை யில் வெளிவந்த ஒரு சில படைப்பு களிலும் இவை ஆழமாக வெளிப் படவில்லை. இதற்கான ஒரு தூண்டு கோலாக, தங்களது பேச்சு வழக்கை, மரபுகளை, அழகியலை, உறுதியை, கோபத்தை சமூகப் பரப்பிற்குள் பெருமையுடன் அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். முரண்பாடுகளு டன் கூடியதுதான் மக்கள் பண்பாடு. இந்தப் பண்பாடு முன்னெடுத்துச் செல்லும் சமூகத்தால் மட்டும்தான் வெகுஜனப் பரப்பிற்குள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். எந்த ஒரு பாண்பாடும் பிற பண் பாடுகளின் ஒப்புதலை எதிர்பார்த்து நிற்கக் கூடாது. இந்த எதிர்பார்ப்பு தான் சுரண்டலின் மறைமுக வடிவ மாகச் செயல்படுகிறது.

உலகளாவிய கிராமத்தின் எதிர் முனைத் தாக்குதலாக இன்று பண் பாடுகள்தான் முதன்மைப் படுத்துப் படுகின்றன என்பது போன்ற புரிதல் களுடன் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், இயேசுசபை சுனாமிப் பணிக் குழுவினரும் இணைந்து நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் ‘கடலும் வாழ்வும்’ என்ற தலைப்பில் 2006 அக்டோபர் 1 மற்றும் 8ஆம் தேதிகளில் கடல்சார் மக்களுக்கான இலக்கியப் பயிற்சிப் பட்டறையை நடத்தினார்கள்.

கடல்சார் இளையோரிடம் பொதிந்து கிடக்கும் படைப்பாற்றலை வெளியே கொண்டு வரச் செய்யும் ஒரு முயற்சியாக தொடர்ந்து இப் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற விருக்கின்றன.

இதன் முதல் நாள் அமர்வில் இயேசு சபை சுனாமிப் பணி இல்லத் தலைவர் அருட்பணியாளர் பி.எஸ். அருள் உரையுடன், சாகித்திய அகா தெமி பரிசுபெற்ற நாவலாசிரியர் பொன்னீலன், கவிஞர் ஹெச்.ஜி. ரசூல், நாவலாசிரியர் மீரான், தமிழ் நாடு கலை இலக்கியப் பெரு மன்றத் தின் மாநிலச் செயலாளர் சி.சொக்க லிங்கம் கலை இலக்கியப் பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாள் அமர்வில் அருட் பணியாளர் பிரான்சிஸ் ஜெயபதி வரவேற்புரையாற்றினார். சி.சொக்கலிங்கம் பயிற்சிப் பட்டறை யின் நோக்கங்களை விளக்கினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் குமரிமாவட்டத் தலைவர் டாக்டர் எஸ்.ஸ்ரீகுமார் ஆற்றிய பயிற்சிப் பட்டறையின் துவக்க உரையில்:

தமிழ் இலக்கியத்திலும், பண் பாட்டுப் பரப்பிலும் மருதம், குறிஞ்சி, முல்லை பற்றிப் பேசிய அளவிற்கு நெய்தல் நிலம் பற்றியும், பாலை நிலம் பற்றியும் பேசப்படவில்லை. பாலை பற்றி எழுத்துக்கள் தமிழ்ப் பரப்பில் இப்பொழுதுதான் ஓரளவு வெளிவருகிறது. ஆனால் கடல் தொழில், கடல்சார் வாழ்க்கை அவர்களது பிற கலாச்சாரக் கூறுகள் போன்றவைகள் கலை இலக்கியப் பரப்பில் பேசப்பட வேண்டும். அவர் களின் இன்பங்களும், துன்பங்களும், அவர்களிடம் வழங்கும் மரபுக் கதைகளும், மரபுப் பாடல்களும் இன்னும் போதிய கவனம் பெறவில்லை. இப்பயிற்சிப் பட்டறைகள் மூலமாக அவற்றைக் கவனம் பெறச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

குமரி மாவட்ட தெ.தி.இந்துக் கல்லூரி, புனித சிலுவைக் கல்லூரி, பெண்கள் கிறித்தவக் கல்லூரி, அன்னை வேளாங்கன்னி கல்லூரி ஆகியவற்றிலிருந்தும் பல மேல்நிலைப் பள்ளிகளிலிருந்தும் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும், மாணவி களும் கலந்து கொண்டனர்.

கவிதை, சிறுகதை என இரு பிரிவாக பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியினை கவிஞர் ஹெச்.ஜி. ரசூல், கவிஞர்.நட. சிவகுமார், குளச்சல் மு.யூசுப், கோபாலகிருஷ்ணன், எம்.எம்.பைசல், ஜெரால்டு ஆகியோர் நடத்தினார்கள். உயர்நிலை, நடு நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு ‘கடலும் வாழ்வும்’ என்ற பொருளில் கவிதைப் போட்டி நடைபெற்றது. கலந்து கொண்ட மாணவர்களுக்கு அருட்பணியாளர் பிரான்சிஸ் சான்றிதழ்களை வழங் கினார்.

குளச்சல் மு.யூசுப், அ.குமார், ரவிச்சந்திரன், வெங்கடேஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சியினை சிறப்பாக அமைத்திருந்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களும், மாணவி யரும் நூற்றுக் கணக்கான கவிதை களை வாசித்து, தங்களுக்குள் விமர் சனம் செய்து தங்கள் படைப்புகளை செழுமைப் படுத்திக் கொண்டனர்.

முதல் முயற்சியாக அரங்கினுள் 69 கவிதைகள் எழுதப்பட்டன. தொடர் பயிற்சியின் அடுத்த நிகழ்வு டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com