Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
அமைதி நோபல் பரிசு

‘கடன் படு - கடமைப்படு’
யதி அதிசயா

இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த மாமனிதர் ஒருவருக்கும், அவர் சார்ந்த அமைப்புக்கும் 1996-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. வங்க தேசத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ், அமெரிக்கா சென்று பொருளாதாரத்தில் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர். தன்னுடைய பொருளாதாரம் பற்றிய சிந்தனைகளை எழுதி நூலாக வெளியிடுவதோடு அமையாது நேரடியாகவே களத்தில் இறங்கி செயல் வீரராக மாறினார். அதனால் இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வில் ‘அமைதி’ ஏற்பட வழி வகுத்தார். அதனடிப்படையில் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கும், அவரால் துவங்கப்பட்ட ‘கிராமீண்’ வங்கிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

‘உலகம் எங்கணும் சாந்தி நிலவ வேண்டும்’ என்பது நோபல் பரிசுக் குழுவினரின் விருப்பம். உலகம் எங்கும் மக்கள் ஏன் அமைதி இல்லாமல், சத்தம் போட்டுக் கொண்டும், ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்? பிரச்சினைகளின் அடிப்படை வேர்கள் மண்ணுக்கடியில் நீங்கி நீங்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சாணிக் குழிகளில் இருந்து உரச்சாறு உறிஞ்சிக் கொண்டிருப்பதை பரிசுக் குழுவினர் பார்ப்பது இல்லை. ஆத்மார்த்தமாக மக்களின் வேதனைகளை மாற்ற ‘அமிர்தாஞ்சன்’ தடவுகிற மாதிரியானத் தீர்வுகளைத் தருகிறவர்கள் ‘அமைதியை’ உருவாக்குகிறார்கள் எனக் கருதப்படுகிறது. அந்த வகையில், நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் ஆறுதல் கூறித் தேற்றி ஆன்மீக வழியில் அமைதி உருவாகப் பாடுபட்ட அன்னை தெரசா, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்து இயற்கை வளங்களைப் பொறுப்புடன் கையாள ஆப்பிரிக்கர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வாங்கரி மாத்தாய் போன்றோரைப் போல, ஏழைகளின் பசி - பட்டினி போக்க, கடன் வழங்கி, அதனைத் திறமையாக வசூலித்து வங்கதேச மக்கள் ஏழ்மைக்கு எதிரான கலகங்களில் ஈடுபடாமல் ‘அமைதி’ காக்க வைக்கும் பெருமைக்காக முகமது யூனுஸ் நோபல் பரிசு பெறத் தகுதியானவர் ஆகிறார்.

‘குழுக் கடன்’ என்பது மூன்றாம் உலக நாடுகளில் சாதாரண மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட பொருளாதார உத்தி. ‘சிக்குன் - குனியா’ மாதிரி திடீர் நோய்க்குச் சிகிச்சையோ, மக்களுக்குத் திருமணமோ, புதிய கறவை மாடு வாங்கவோ வேண்டி வந்தால் ‘கந்து வட்டிக்கு’ கடன் வாங்க வேண்டி வரும். மூன்றாம் உலக நாடுகள் எல்லாவற்றிலும் கிராமப்புற மக்கள் தங்கள் வீட்டையும், இருப்பிடத்தையும் வாங்கின கடனை திருப்பிக் கட்ட முடியாமல் இழந்து வருகிறார்கள். இதற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டி, இலத்தீன் - அமெரிக்க நாடுகளில் 1970களில் சிறுசிறு குழுக்களுக்கு கடன் வழங்கும் போக்கு உருவாகியது. ஆனால் பெரிய வெற்றி ஈட்ட முடியவில்லை. பேராசிரியர் முகமது யூனுஸ் வித்தியாசமான முறையில் சிந்தித்தார். 1976ல் முகமது யூனுஸ் வங்க தேசத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு நுண் கடன் வழங்கும் ‘கிராமீண் வங்கியைத்’ துவங்கினார். இன்று வங்க தேசம் முழுவதும் 71,000 கிராமங்களில் 2200 கிளைகளுடன் கிட்டத்தட்ட 70 லட்சம் பேருக்கு கடன் வழங்கி உள்ளது இந்த வங்கி. அதில் 97 சதவீதம் பெண்கள். வழங்கப்பட்ட கடன் வட்டியுடன் கறாராக வசூல் ஆகிறது. ஆக மொத்தத்தில் பிராமண்டமான வெற்றி.

‘கிராமீண் வங்கி’ அல்லாது ‘வங்கதேச கிராம மேம்பாட்டுக் குழு’ ‘புரோஷிகா’ ஆகிய இரண்டு பெரிய சுயஉதவிக் குழுக்களின் கூட்டமைப்பும் வங்கத்தில் இயங்கி வருகின்றன. இந்தியா, சீனா உட்பட முன்னேறி வரும் அனைத்து நாடுகளிலும் சுயஉதவிக் குழுக்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. சுய உதவிக் குழுக்களின் திரைமறைவில், ஆர்.எஸ்.எஸ் ‘சேவா பாரதி’ என்ற பெயரில் பல்லாயிரம் குழுக்களை நாடு முழுவதும் நிறுவி உள்ளது. நிறைய தொண்டு நிறுவனங்கள் பல்வேறு தகவல்களைச் சேகரிக்கும் முகாம்களாக செயல்பட்டு வெளிநாட்டு உதவிகள் பெறுவதும் நடக்கிறது. சுய உதவிக் குழுக்களின் சக்தியை அறிந்து கொண்ட ஐ.நா.சபை, ‘2005 - சுய உதவிக் குழு ஆண்டு’ என அறிவித்து விட்டது. அதற்கும் 10 வருடங்களுக்கு முன்பே, அமெரிக்காவின் ‘உலக சமாதானப் பற்று’ நுண் கடன் வழங்கி குழுக்களைத் தன் வசப்படுத்துவது பற்றித் தீவிரமாகச் செயலாற்றத் துவங்கி விட்டது.

1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வாஷிங்டனில் ‘நுண்-கடன் உச்சி மாநாட்டை’ துவக்கி வைத்துப் பேசினார் ஹில்லாரி கிளிண்டன். நுண்கடனை உலக மயமாக்குதல்தான் மாநாட்டின் இலட்சியம். 137 நாடுகளில் இருந்து 2900 பேர் கலந்து கொண்டனர். எல்லோரும் 2005ல் உலகம் முழுவதும் 100 மில்லியன் குடும்பங்களை ‘கடன்காரர்கள்’ ஆக்குவதாக உறுதி பூண்டனர். 2004ம் ஆண்டின் முடிவின்போது உலகம் முழுவதும் 3,200 நுண்கடன் பேரமைப்புகளும் 92 மில்லியன் ‘வாடிக்கையாளர்’ குடும்பங்களும் உள்ளதாக அறிக்கை. திட்டமிட்டபடியே இலட்சியம் நிறைவேறி விட்டது.

நுண்கடன் வாங்கும் நிறுவனங்களின் தன்மை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இந்தியாவில் ‘நபார்டு’ வங்கி 500க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ‘சுயஉதவிக் கடன்’ வழங்க நிதி வழங்குகிறது. கடன் சிறுதொகை என்றாலும் வட்டி சிலவேளைகளில் 12 சதவீதத்தைத் தாண்டி விடுகிறது. அவசியம் இல்லாமல் திணிக்கப்படும் ஆயுள் காப்பீடு (நிறைய வங்கிகள் (Corporate Agents) என இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்காக செயல்படுகின்றன), உதவிக்குழு நடத்துபவருக்கான கமிஷன் போன்ற செலவுகளை கூடுதல் பாரமாக ஏற்றுத்தான் ஏழைகள் கடன் பெறுகிறார்கள். இந்தியாவில் செயல்படும் நுண் கடன் சங்கிலிதான் உலகத்திலேயே மிகப் பெரியது. சீனாவில் சில தன்னார்வக் குழுக்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து பணஉதவி பெற்று நுண்கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அதுவும் எங்கு வேண்டுமானாலும் போய் யாருக்கு வேண்டுமானாலும் கடன் வழங்கி விட்டு வந்து விட முடியாது. சீனா அனுமதி அளித்துள்ள நுண் கடன் நிறுவனங்கள், கடன் வழங்க மட்டும்தான் முடியும்; முதலீடு எதுவும் பெற முடியாது.

சுய உதவிக் குழுக்கள் வழியாகப் பண்பாட்டு மேலாண்மையை நிறுவவும், தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கி விளையாட்டு நடத்தவும் முடியும் என்பது போல, பன்னாட்டு மூலதனத்தின் சுரண்டலை முன்னெடுத்துச் செல்லவும் முடியும் என்பதைப் புரிந்து கொண்ட பகாசுர நிறுவனங்களில் ஒன்று மான்சாண்டோ (Monsanto).

மான்சாண்டோ நுண்கடன் நிறுவனங்களோடு கூட்டுறவு வைத்துக் கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டிருந்தது. அந்நிறுவனம் 1997ல் வெளியிட்ட நிலை நிறுத்தல் அறிக்கை (Sustainability Report)யிலேயே, 1998 முடியும் தருவாயில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நுண் கடன் வழங்கல்களோடு மான்சாண்டோ சம்பந்தப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மான்சாண்டோ, நுண் கடன் மூலம் புதிய சந்தைகளை உருவாக்க முடியும் என்றும், அதன் மூலம் சந்தைகளில் உள்ள மக்களை பொருளாதார மேம்பாடடையச் செய்ய முடியும் என்றும் நம்புவதாக அறிக்கை கூறுகிறது. நுண்கடன் உச்சி மாநாட்டு ஆள்ச் சேர்ப்பு இயக்கத்தில் பங்கெடுத்த குழுமங்களின் அமைப்புக்கு தலைமைப் பொறுப்பில் மான்சாண்டோ சில காலம் அமர்ந்திருந்தது. இந்தத் திட்டத்தில் முகமது யூனுசும் அவரது கிராமீண் வங்கியும் உறுப்பினர்கள் என்பது குறிப்படத்தக்கது.

“மான்சாண்டோவில் பணி புரிபவர்கள் நுண் கடன் உச்சிமாநாடு ஆட்சேர்ப்பு இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டதை நிறுவனம் பெருமையாகக் கருதுகிறது. ஒன்பது வருடங்களில் 100 மில்லியன் ஏழைக் குடும்பங்களைச் சென்று சேர முடியும். 2005ல் குறிப்பாக அந்தக் குடும்பங்களின் பெண்களைச் சென்றடைந்து, சுய வேலை வாய்ப்புக்காகவும் இதர நிதி, வணிகத் தேவைகளுக்கு வேண்டியும் கடன் அளிக்க முடியும்.... சிறு விவசாயிகளுக்கு, பிரச்சனைகளில் இருந்து விடுபடச் செய்கின்ற தீர்வுகளை எல்லாம் ஒரு பொட்டலம் கட்டிக் கொடுப்பது போல கொடுக்க உள்ளோம். அதில் மேம்படுத்தப்பட்ட விதைகள், உயிரித் தொழில் நுட்பக் கூறுகள், நவீன உழவு முறைகள், பயிர் பாதுகாப்புப் பொருட்கள் போன்றவற்றோடு பயிற்சி மற்றும் தொழில் நுட்ப உதவிகள் பற்றிய விவரங்களும் உள்ளடங்கி இருக்கும்” என்பது டிசம்பர் 2002ல் மான்சாண்டோவின் இணைய தளத்தில் வெளியான தகவல்.

1998ம் ஆண்டு ஜுன் மாதம் கிராமீண் வங்கியும் மான்சாண்டோ நிறுவனமும் ஓர் கூட்டணியை அறிவித்தன. மான்சாண்டோ ‘கிராமீண் - மான்சாண்டோ சூழல் பேண் தொழில் நுட்ப மையம்’ துவங்க 1,50,000 டாலர்கள் அன்பளிப்பாக வழங்கியது. இதனுடைய அடிமட்ட நோக்கம் வங்கதேசத்தின் ஏழை உழவர்கள் கலப்பின விதைகளையும், மான்சாண்டோவின் களைக் கொல்லிகள் உள்ளிட்ட வோளாண் வேதிப்பொருட்களையும் வாங்க ‘மிருது’ கடன் வழங்குவதுதான். ‘பயிற்சிப் பண்ணைகள்’ நிறுவுவது இன்னொரு நோக்கம். அந்தக் கால கட்டத்தில் வங்கதேசத்தில் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்வது பற்றியச் சரியான சட்டவிதிகள் இயற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமீணும் மான்சாண்டோவும் கூட்டணி வைத்துக் கொண்டதை அறிந்ததும் உலகமெங்கும் கொந்தளிப்பு அலைகள் கிளம்பின. இந்தியாவின் சூழலியச் செயல்வவீரரான வந்தனா சிவா யூனுசுக்கு காட்டமான திறந்த கடிதம் ஒன்றை எழுதினார்.

“......கிராமீண் - மான்சாண்டோ மையத்தோடு இணைப்பு உள்ள நுண்கடன் மூலம் மான்சாண்டோவின் தயாரிப்புகளுக்குச் சந்தை உருவாக்கப்படும்; வங்கதேசத்தின் உழவர்களின் உழைப்பால் உருவான பொருட்களுக்கு இல்லை. அவர்கள் வங்கதேசப் பெண்களின் திறமையாலும், அறிவாலும் உருவான செல்வாதாரங்களையும் துடைத்தெறிந்து, அவர்களது வாழ்வையும் உணவுப் பாதுகாப்பையும் அழித்தொழிப்பார்கள்....

மான்சாண்டோவுக்கு விவசாயத்தில் உள்ள திறமை வெளிப்பட்டிருப்பது மரபீனி மாற்றங்களினால் உருவாக்கப்பட்டப் பயிர்களில்தான். இந்தப் பயிர்கள் ‘ரவுண்ட் - அப்’ உட்பட வேளாண் வேதிப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன. ‘ரவுண்ட்-அப்’ பச்சையாகத் தென்படும் எதையும் கொல்லும் அகண்ட வாய்க்களை கொல்லி. மான்சாண்டோவோடு தாங்கள் கூட்டு சேர்ந்து துவங்கி இருக்கும் அமைப்பு, பெண்கள் காலங்காலமாக வயல்வெளிகளிலிருந்து சேகரித்து வரும் காய்கறிகளை எல்லாம் அழிப்பதற்கான நிதி உதவியையே செய்யும். ‘ரவுண்ட்-அப்’ வங்சதேச மக்களின் உடல் திசு வளர்ச்சிக்கு கிடைக்கின்ற உயிரிப் புரதச்சத்தில் 80 சதவீதத்தை வழங்குகின்ற மீன் இனங்களையும் தீர்த்துக் கட்டி விடும்....” என்பது வந்தனா சிவாவின் கடிதத்தின் ஒரு பகுதி. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. தொடர்ந்து ‘கிராமீண்’ இந்தத் திட்டத்திலிருந்து தன்னை வெளியேற்றிக் கொண்டது. இதன் மூலம் முகமது யூனுசுக்கு வங்காளிகள் மேலிருந்த அப்பழுக்கற்ற பாசம் வெளிப்பட்டது என்றால் மிகையாகாது.

நுண் - கடன் வலை விரித்து விவசாயிகளை வீழ வைப்பதற்கு சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்திய கதை வேறயும் உண்டு. வங்கதேசத்தில் எஃப்-1 ரக கலப்பின விதைகள் அறிமுகம் செய்யப்பட்டதற்கும் நுண் கடனுக்கும் நெருங்கிய உறவு உண்டு. 1998ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்குப் பிறகு, மறுவாழ்வுப் பணிகளை முடுக்கி விடும் பொருட்டு வங்கதேச அரசு தனியார் நிறுவனங்களுக்கு விதை நெல்லை இறக்குமதி செய்யும் அனுமதி வழங்கியது. ‘அட்வான்ஸ்டு கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற நிறுவனம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ‘ஆலோக் 6201’ என்ற இந்தியக் கலப்பின விதை நெல்லை இறக்குமதி செய்தது. இந்த விதைநெல்லை விற்பனை செய்த நிறுவனம் ‘ஹைபிரிட் ரைஸ் இண்டர் நேஷனல்’. இது ‘பேயர்’ என்ற வேளாண் வேதியியல் நிறுவனத்தின் கிளை ஆகும். இந்த விதைகளை வாங்க விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபட்டது வங்க தேசத்தின் இன்னொரு முக்கிய சுயஉதவிக் குழுத் தொகுப்பான ‘பங்களாதேஷ் ரூரல் அட்வான்ஸ்மென்ட் கமிட்டி’. அடுத்த நடவுக்கு விதை நெல்லை பாதுகாக்க முடியாது என்ற உண்மையை வெளிச்சொல்லாமல் கலப்பின விதைகள் விற்கப்பட்டன. உழவர்கள் கடன் வாங்கி, கடும் வட்டி செலுத்த நேரிட்டதோடு ஏ.சி.ஐ. நிறுவனத்தின் உழவுத் தொழில் ஆலோசனைகளையும் கடைபிடிக்க வேண்டியதாயிற்று.

மேற்குத் திசை சார்ந்த பொருளாதாரப் புலிகள் நுண்கடன் திட்டத்தை ‘வறுமையை ஒழிக்க வந்த மௌனப் புரட்சி’ என்று வர்ணித்தாலும், கடன்பட்டவர்கள் அப்படிக் கருதவில்லை. வங்கதேசத்தின் தன்னார்வக் குழு செயல் வீரரான ஃபரீதா அக்தட் இத்திட்டத்தை ‘பெண்கள் கடன்படும் திட்டம்’ என்றே கூறுகிறார்.

நுண்கடன் திட்டம் ஏழைகளுக்கு கடன் வழங்கி வசதியைப் பெருக்கி - வறுமையை ஒழித்து விடலாம் என்ற மாயாஜாலத்தைக் காட்டுகிறது. இதனால் சுகாதாரத் துறை, கல்வித்துறை, சமூக நலத் துறை அமைப்புகள் எதையும் மேம்படுத்தி விரிவுபடுத்த வேண்டாம்; எல்லாவற்றையும் நுண்கடன் வசதி மூலம் சுயஉதவிக் குழுக்கள் பார்த்துக் கொள்ளும் என்ற எண்ண ஓட்டமும் எழுகிறது. 1970களிலிருந்து மூன்றாம் உலக நாடுகள் வாங்கின கடனைத் திருப்பிக் கட்டுவதில் தவறிக் கொண்டே இருக்கிறார்கள். அதே வேளையில் இந்த நாடுகளில் உள்ள ஏழைகள் வாங்கின கடனை ‘நாணயமாகத்’ திரும்பச் செலுத்தி விடுகின்றனர். அதுவும் உயர்ந்தபட்ச வட்டியையும் முதலோடு சேர்த்து. ஏழைகளை கடன்காரர்களாக்குவது ‘மேம்பாட்டின் புதிய விளையாட்டு’. இந்த விளையாட்டு பற்றியச் சொல்லாடல் மேம்பாடு பற்றிப் பேசும் தளங்களில் புகுந்து விளையாடுகிறது.

நுண்கடன் ஏழைகளின் பொருள் நுகர்வை உத்தரவாதப்படுத்த மட்டுமே பயன்படுகிறது என்பது இன்னொரு பொருளாதாரக் கணிப்பு. இயற்கைச் சீற்றங்களாலோ அல்லது பருவநிலை மாற்றங்களாளே வேளாண்மை பாதிக்கப்படுவது இயல்பு. அப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டால் வேளாண்மையை நம்பி இருக்கும் மக்களிடம் நுகர்வுப் பொருட்கள் வாங்க காசுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். நுண்கடன் மூலம் அந்த இடைவெளியில் சூனியம் நிலவாமல் காப்பாற்ற முடியும். அரசாங்கம் வேறு கௌரவமான பயிர்ப் பாதுகாப்பு முறைகளை வடிவமைக்காமல் இருப்பதனால் நுண்கடன் மேல் வேளாண் குடிமக்களுக்கு அபரிதமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழைகளின் வருமானம் உயர வாய்ப்பு இல்லை. மாறாக அவர்களின் வருமானம் அவர்களுக்குள்ளேயே சுழல்கிறது. இதனால் அன்றைய தினத்தை /நிகழ்வை/குடும்பக் கனவைத் தள்ளி விட முடிகிறது. ஏதாவது நல்லது செய்ய ‘ஒரு கட்டுப் பணம்’ தேவை என்றால் அதற்கு நுண்கடனை எதிர்பார்த்து இருக்கும் ‘பற்று மனப்பான்மையும்’ இதனால் உருவாகிறது.

சுயஉதவிக் குழுக்கள் மூலம் நுண்கடன் வழங்குவதால் மட்டும் ஏழ்மை மறைந்து சமத்துவ சமூகம் மலர்ந்து விடாது. இது ஒரு தற்காலிக நிவாரணம். இதை முகமது யூனுசும் உணர்ந்து இருக்கிறார். எனவேதான் ‘கிராமீண்’ நுண்கடன் வழங்குவதோடு மட்டும் ‘அமைதி’ பெற்று விடவில்லை. காப்பீடு, வீட்டுவசதிக் கடன், மீன்பிடித் தொழிற்கடன், சிறுதொழிற்கடன், சூரிய ஒளித் திட்டம், கிராமத் தொலைபேசித் திட்டம் என்று பரந்துபட்ட வகையில் வங்கதேசத்தின் கிராமப் பொருளாதாரத்தில் தன் தலையீடுகளைச் செய்கிறது. ஆனால் நுண்கடன் மூலம் பலமான பொருளாதார அமைப்பை உருவாக்க முடியும் என்ற கனவு வீண். இவ்வளவு வெற்றி பெற்ற பிறகும் ‘கிராமீண்’ உட்பட சுய உதவிக் கூட்டமைப்புகளுக்கு அரசு பல்வேறு மானியங்களை வழங்குகிறது. மானியங்கள் தடைபட்டால் செயல்பாடுகள் நஷ்டக்கணக்கில் தான் ஓடும். எனவே ‘முட்டைத் தோடு பொருளாதாரம்’ பற்றிய எச்சரிக்கை எல்லோரையும் போல முகமது யூனுசுக்கும் இருக்கிறது. அவரது நேர் கொண்ட பார்வை நிலத்தினில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com