Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
மு.கா. வையவன்

மரண தண்டனை
மனிதக்கொடியை அறுக்கும் கொடுங்கருவி

இந்திய நாடாளுமன்றத்தின் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு தாக்குதல் தொடுத்த அமைப்புகளுடன் குற்றச் சதி செயல்களில் ஈடுபட்டதாக அப்துல் ரகுமான், கிலானி, சௌகத் உசேன் மற்றும் முகமது அப்சல் ஆகியோருக்கு புதுதில்லி பொடா நீதிமன்றம் 2002 டிச.19ம் தேதி மரண தண்டனை விதித்தது. தில்லி உயர் நீதிமன்றம் 2003 அக்.20ம் தேதி முகமது அப்சலுக்கு மட்டும் மரண தண்டனையும் சௌகத் உசேனிற்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கிலானி, அப்சல் குரு ஆகிய இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 2005 ஆக.4ம் தேதி உறுதி செய்தது. கடந்த அக்.20ம் தேதி முகமது அப்சலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாள். நாள் குறிக்கப்பட்டவுடன் மரண தண்டனையை நீக்கக் கோரி காஷ்மீரிகள் அனைவரும் ஆர்ப்பாட்டம் முதல் கடையடைப்பு கல்வீச்சு என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனித உரிமை ஆர்வலர்களும் முற்போக்கு அமைப்புகளும் மரண தண்டனையை நீக்கும்படி போராடுகின்றனர். பா.ஜ.க. இந்து முன்னணி போன்ற இந்து பாசிச அமைப்புகள் மரண தண்டனையை நிறைவேற்றியே தீர வேண்டும் என போராடுகின்றனர். அப்சலின் மனைவி குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுத்திருக்கிறார். அது பரிசீலனையில் இருப்பதால் அக்.20ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் தூக்குத் தண்டனை தொடர வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்களும் குடியரசுத் தலைவர் கருணை காட்டுவாரா? மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

பண்டைய காலத்தில் உலகில் எல்லா நாடுகளுமே மரண தண்டனையை நிறைவேற்றி வந்துள்ளன. குற்றவாளியை சிலுவையில் அறைதல், கல்லால் அடித்துக் கொல்லுதல், யானைக் காலால் இடறுதல், வாளால் தலையை வெட்டுதல், போன்ற கொடூரமான மரண தண்டனைகளும் இருந்து வந்துள்ளன. இத் தண்டனைகள் பெரும்பாலும் திருடுதல், கொள்ளையடித்தல், கொலை செய்தல் மற்றும் அரச பெண்களை காதலித்தல் போன்ற குற்றங்களுக்குத்தான் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் கொடூரமான மரண தண்டனையை மாற்றி மின்சாரம், ஊசி, துப்பாக்கியால் சுடுதல் மற்றும் தூக்கிலிடுதல் என வெவ்வேறு விதமான மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகின்றன. காலத்தின் மாற்றத்தினாலும் சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியினாலும் மரண தண்டனையை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். 1980க்கு முன்பெல்லாம் ஆங்காங்கே ஒருசில நாடுகளில் மட்டுமே மரண தண்டனைக்கு எதிராக குரல் ஒலித்தது. கோஸ்டாரிகா, சான் மேரிநோ, வெனிசுலா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மரணதண்டனையை ஒழித்திருந்தன.

1980களுக்குப் பிறகு உலகின் அனைத்து நாடுகளிலும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது. 1998 ஆம் ஆண்டை மனித உரிமைப் பிரகடனப் பொன்விழா ஆண்டாக கொண்டாடிய பொழுது அதன் செயலாளர் “மரண தண்டனையை ஒழிக்காத நாடுகள் இப்பொழுதாவது ஒழிக்க முன்வர வேண்டும்” என்ற வேண்டுகோளை விடுத்தார். யுகோசுலோவியாவிலும், ருவாண்டாவிலும் நடந்த போர் மற்றும் இனவெறிக் கொலைகளைப் பற்றி விசாரிக்க ஐ.நா. அமைத்த குழு “நீதிமன்றங்கள் யாருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது” என வலியுறுத்தியது. ஐரோப்பிய ஒன்றியம் தனது நாடாளுமன்ற அவையில் உறுப்பு வகிக்க விரும்பும் நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.

இன்று உலகளாவிய அளவில் மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், 120 நாடுகளுக்கு மேல் மரண தண்டனையை சட்டத்திலிருந்தும், நடைமுறையிலும் ஒழித்துவிட்டன. 85 நாடுகள் எல்லா வகை ‘கிரிமினல்’ குற்றங்களுக்கும் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. 24 நாடுகள் சட்டத்திலிருந்து மரண தண்டனையை ஒழிக்கவில்லை என்றாலும் நடைமுறையில் அவை கடந்த 10 ஆண்டுகளாக யாருக்கும் விதிக்கவில்லை. 11 நாடுகள் போர்க்கால குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கின்றன.

இந்தியாவில், சிப்பாய் கலகத்திற்குப் பிறகு 1860-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் சட்டத்துறை பொறுப்பாளராக இருந்த மெக்காலே (கல்வித் திட்டத்தை வகுத்தவர்) இந்திய தண்டனைச் சட்டத்தை வரைந்தார். இச்சட்டத்தின்படி, இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுத்தல், இராணுவத்தினர் கலகம் விளைவித்தல், ஒரு நிரபராதியை தூக்கிலிடுவதற்கு போலி ஆவணம் தயாரித்தல், கொலை செய்தல், குழந்தை, மனநோயளி, மது அருந்தியோர் ஆகியோரை தற்கொலை செய்யத் தூண்டுதல், ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் போதே கொலை செய்ய முயற்சித்தல், கொள்ளையடிக்கும் போது கொலை செய்தல் ஆகிய ஏழு வகையிலான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. இந்தியா ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு 1973ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மேற்கண்ட ஏழு குற்றங்களுக்கும் மரண தண்டனை தான் என்ற கட்டாயத்தை தளர்த்தி ஆயுள் தண்டனையும் விதிக்கலாம் என்றது. அதன்பிறகு 1980ல் பச்சன்கிங் வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆயுள் தண்டனைதான் பொதுவிதி. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டும் தூக்குத் தண்டனை விதிக்கலாம் என்றது. ஆனால் அரிதிலும் அரிதானது எது? என்று அந்தத் தீர்ப்பிலோ அல்லது வேறு எந்தத் தீர்ப்பிலுமோ இன்று வரை விளக்கப்படவில்லை. இதனால் அரிதிலும் அரிதானது எது என்று தீர்மானிப்பது நீதிபதிகளின் விருப்பத்தைப் பொறுத்து அமைகிறது.

நீதிபதிகள் வானத்திலிருந்து திடீரென்று வையகத்திற்கு வந்தவர்களோ அல்லது பெரும்பான்மை மக்களால் நம்பப்படுகிற கடவுளின் தூதுவர்களோ அல்ல. அவர்களும் மனிதர்கள் தான், இந்தச் சமூகத்திலிருந்து உதித்தவர்கள் தான். நீதிபதிகள் நியமனங்களிலும் நீதிமன்ற தீர்ப்புகளிலும் லஞ்சம், ஊழல், அரசியல் தலையீடு இல்லை என்று மறுக்க முடியுமா? இவர்களுக்கென்று சில அனுபவங்களும், பின்னணிகளும், இன, மத, சாதியக் கண்ணோட்டங்களும் இருக்கும். திரும்பப் பெற முடியாத உயிரை, பரிகாரம் தேட முடியாத இறுதிக்கும் இறுதியான ஒரு தீர்ப்பை இவர்களின் விருப்பப்படி எவ்வாறு வழங்க முடியும்? ஒவ்வொரு நீதிபதிக்கு இருக்கும் சமூகப் புரிதல், சமூகப் பிரிவு, விருப்பு, வெறுப்புகள், பாகுபாட்டு உணர்ச்சிகள், அவர்களுக்கென்று இருக்கும் தனிக் கண்ணோட்டம், இவையெல்லாம் சேர்ந்துதான் மரண தண்டனை வழங்கும் நீதிபதிகளின் விருப்பு உரிமையை தீர்மானிக்கின்றன. இதில் தவறிழைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கருத முடியுமா?

கீழ்மை நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பை உச்சநீதி மன்றம் வரை அடுத்தடுத்து மேல் முறையீடு செய்யும் பொழுது கீழ்மை நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. 1981ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தினரை கொலை செய்த வழக்கில் ஜீட்டா சிங், கஷ்மீராசிங், அர்பன்சிங் ஆகிய மூவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் தனித் தனியாக மேல்முறையீடு செய்ததில் ஜீட்டா சிங்கிற்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு அவர் தூக்கில் இடப்பட்டார். கஷ்மீராசிங் வழக்கை விசாரித்த நீதிபதிகள் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றினர். அர்பன் சிங் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேற்சொன்ன தீர்ப்புகளை அறிந்து மரண தண்டனையை குறைக்க வேண்டுமென்பதற்காக குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி வைத்தனர். மேற்கண்ட வழக்கின் பொருண்மைக் கூறுகளில் வேறுபாடில்லை. ஆனால் ஆயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு தண்டனையை உறுதி செய்தனர். இதில் யார் செய்தது சரி? யார் செய்தது தவறு?

தண்டனை இயலில் திருத்துவது, தயக்கப்படுத்துவது, வஞ்சகம் தீர்ப்பது என மூன்று கோட்பாடுகள் உள்ளது. திருத்துவது என்றால் சிறைத் தண்டனை வழங்கி திருந்துவதற்கு தேவையான பயிற்சி கொடுப்பது. மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் கூறும் முக்கியக் காரணம் கொலைக் குற்றமிழைத்தோர் அதற்கு ஈடான தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும், மற்றவர்கள் மரண தண்டனையை எண்ணி அஞ்சி கொலைக் குற்றம் புரிவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்கின்றனர். கொலை செய்பவர்களில் மூன்று வகை உண்டு. உணர்ச்சி வயப்பட்டு கோபத்தில் திடீரென்று கொலை செய்பவர்கள் முதல் வகை. இவர்கள் தன்னிலை மறந்துதான் கொலை செய்கின்றனர். அப்போது தண்டனையை எண்ணிப் பார்ப்பதில்லை. இரண்டாவது வகை திட்டமிட்டு கொலை செய்பவர்கள். தன் திட்டம் சரியானதென்று நம்புகின்றவர்கள். காவல்துறையிடம் சிக்கமாட்டோம் என்று எண்ணித் தான் செய்வார்கள். இவர்களும் குற்றம் செய்யும் போது தண்டனையை எண்ணிப் பார்ப்பதில்லை. கொள்கைக்காக கொலை செய்பவர்கள் மூன்றாவது வகை. தான் பிடிபட்டு தண்டிக்கப்பட்டால் ஓர் உன்னத லட்சியத்திற்காக தியாகியாகிறோம் என்று எண்ணுபவர்கள். இவர்களையும் மரண தண்டனையைக் காட்டி அச்சப்படுத்தவோ, தயக்கப்படுத்தவோ முடியாது. பிறகு யாரை தயக்கப்படுத்துவது? மரண தண்டனை மற்றவர்களை அச்சப்படுத்துகிறதா? உண்மையில் அச்சப்படுத்தியிருக்கிறது என்றால், மரண தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்கள் படிப்படியாக குறைந்து ஒழிந்திருக்க வேண்டும். ஆனால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்பட மரணதண்டனை விதிக்கப்படக்கூடிய பல குற்றங்கள் நித்தமும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது.

அடுத்தது, வஞ்சகம் தீர்ப்பது. இதன் பொருள் பழிக்குப்பழி வாங்குவது. பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண், குருதிக்கு குருதி, உயிருக்கு உயிர் போன்ற பழி வாங்கும் தண்டனைகள் இடைக்காலச் சமூகத்தில் வழங்கப்பட்டவை. மனித மாண்புகளை மதிக்கக்கூடிய இன்றைய நாகரீகமடைந்த சமூகத்தில் தண்டனையானது செய்த குற்றத்திற்கு சமூக உரிமைகளை இழந்து மீண்டும் அதே கெடுதலை செய்ய முடியாதபடி தடுத்து திருத்தி மறுபடியும் சமூகத்தில் சேர்த்துக் கொள்வதாக இருக்க வேண்டும். மரண தண்டனையானது மனிதனின் வாழும் உரிமையை மறுப்பதோடு மட்டுமல்லாமல், காலம் காலமாக படர்ந்து வளர்ந்து வரும் மனிதக்கொடி ஒன்றின் தொடர்ச்சியை அறுக்கக் கூடியதாகும்.

ஒருவரைத் தூக்கிலிடுவது என்பது நடந்த செயலுக்கு அவரையே முழுப் பொறுப்பேற்க வைப்பதாகும். சமூக அமைப்பு, பொருளாதார அமைப்பு, சமூக ஒடுக்குமுறை, சமூக ஒதுக்கல், அரசியல், பண்பாட்டுச் சூழல் போன்றவற்றுக்கெல்லாம் இருக்கும் பங்களிப்பை மறுப்பதாகும். இந்துத்துவவாதிகளும், பார்ப்பன ஏடுகளும் “இந்தியாவில் பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கப்பட்ட பின்பு தான் மரண தண்டனைக்கு விடுதலை கொடுக்கலாமா? என்பது பற்றி யோசிக்க முடியும்” என்று எழுதுகின்றன. பயங்கரவாதம் இந்தியாவுக்கு மட்டும் உரிய பிரச்சினையல்ல மற்ற நாடுகளுக்கும் உரியதுதான். ஆனால் அந்த நாடுகள் எல்லாம் மரண தண்டனையை ஒழித்துள்ளன. சமூகச் சீர்கேடுகளும், அலங் கோலங்களும் ‘பயங்கரவாதம்’ எனும் பயிர் வளர்ப்பதற்கு சதுப்பு நிலங்களாக இருக்கும் போது, இவற்றை மாற்றியமைக்காமல் மரண தண்டனையின் மூலம் ஒருபோதும் ஒழிக்க முடியாது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com