Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
சுகிர்தராணி கவிதைகள்


கூடடைதல்

கட்டுறாத மார்பினைப் போல்
விறைத்திருக்கும் மலையின் கோட்டையில்
என்னை நீராட்டுகிறார்கள்
உலர்ந்த கூந்தலுக்குத் தைலமிட்டு
கற்பதித்த அணிகளை
உடலெங்கும் போர்த்துகிறார்கள்
அகிலின்புகை பரவிநிற்கும் மண்டபத்தில்
ஊஞ்சலாடு கிறதென் தேகம்
காந்தள் மலர்கள் நெருப்பாய் குவிந்திருக்கும்
சுனையின் கரைகளில்
சேடிகளோடு நடக்கிறேன்
ஈட்டிகள் ஏந்திய வெற்பர்கள்
கண்ணசைவுக்காய் காத்திருக்கிறார்கள்
நீலப்பூ மலர்ந்திருக்கும் வானத்தில்
மஞ்ஞைகள் தலையுரசி பறந்து செல்கின்றன
தீவட்டிகள் உறங்கும் யாமம்
திரைச் சீலைகளற்ற அந்தப்புரத்தில்
விழுப்புண் மார்புடையவன்
மெலிதாக என்னைப் புணருகின்றான்
களைப்பின் நீர் வடிந்ததும்
பழகிய முரட்டுப் புரவியிலேறிச்
சீராகத் தரையிறங்கிச் செல்லுகின்றான்
மேன்மாடத்து கூடடைகிறது நிலா



உடலெழுத்து

வெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.


செந்நாரை முட்டைகள்

வெயில் தனது ஆயிரம் நாவுகளில்
வறட்டு நீரை உமிழ்ந்தபடி
வானத்தின் தெருக்களில் அலைகிறது
நெருப்பின் ஓய்வறை தேசத்திலிருந்து
அலகினால் காற்றைக் குடித்தபடி
இடம் பெயருகின்றது
கால் நீண்ட ஒரு செந்நாரை
துக்கத்தின் விளிம்பில் காலிடரும்போது
ஏந்திக் கொண்ட அன்பின் நதியில்
மல்லாந்து மூழ்கிக் களிக்கிறது
உடைப்பெடுத்த பருவத்தின் சுரப்பு
இறகுகள் வழியே பீறிட
நீர் உடலின் கூச்செரிந்த மரத்தின்
வளைந்த கிளைகளில்
குதித்தோடி சப்தமெழுப்புகிறது
குறுக்கும் நெடுக்குமாய் உழுத
வயலின் செம்மையைப் போல்
தனது இணையைப் புணர்கிறது
நினைவுகள் பின்னியக் காட்டில்
சிவந்த மலையின்
பறித்த கிழங்குகளென மின்னுகின்றன
இடப்பட்ட செந்நாரை முட்டைகள்
அம்முட்டைகளி லிரண்டு
என் முலைகளாகிக் கிடக்கின்றன.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com