Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
தமிழ் சினிமா
போதை மருந்தும் பெத்தடின் ஊசிகளும்...
நட.சிவக்குமார்

அரைநூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ச்சினிமா புராணம், இதிகாசம், மாயாஜாலம் என்பதான புனைவு வெளிக்குள்ளும் சமூக அவலங்களின் பொதுத்தன்மை, பகுத்தறிவுத் தளத்தின் தாக்கம் குடும்பவலைப் பின்னலின் ‘சென்டிமென்ட்’ சிறகுகள் என தன்னை தகவமைத்துக் கொண்டது. இசை ‘செட்டிங்’களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நீண்ட வசனக் காட்சிகளின் பின்புலத்தோடும், நாடாகத் தொனியோடும் புராண இதிகாச காதாபாத்திரங்களின் உலகமாய் தன்னை வடிவமைத்துக் கொண்டது.

தமிழ்ச் சினிமாவின் தொடரும் 80களுக்குப் பிறகான நீண்ட பயணத்தில் திகில் பிரதேச காமத்தைக் கொண்டும், பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட காதல் காட்சிகளைக் கொண்டும் அல்லது ஆண் ஆளுமையை மையப்படுத்திய வசன சேர்க்கைகளைக் கொண்டும் வேதிவினை புரிந்து ரசிகர்கள் மனதில் பல போதை மருந்துகளையும் பெத்தடின் ஊசிகளையும் உருவாக்கிப் பல வெற்றிப் படங்களைத் தந்த வண்ணமிருக்கிறது என்பது தொடரும் உண்மை. இது ஊடகங்கள் வழியாக நேரடிப் பார்வையில் தெரியாமல் இருந்தால் கூட இரண்டாவது அர்த்தத் தளத்தில் வைத்து நாம் யோசனை செய்து பார்க்கும் போது அப்பட்டமாக தெரிய வரும் உண்மை.

சமீபத்தில் வெளிவந்த ‘உயிர்’ படத்தின் வெற்றி புனிதமாக இருந்த தமிழ் சினிமா கெட்டுவிட்டது என சினிமா உலகத்திலிருந்தே குரல் வந்தது. ஆனால் உண்மையை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் இயக்குனர் இமயம் என வர்ணிக்கப்படும் பாலச்சந்தர் ரஜினி, கமல் என இரு துருவங்களை வைத்து இவ்வளவு நாளும் செய்தது என்ன? இளமை ஊஞ்சலாடுகிறது/சொல்லத்தான் நினைக்கிறேன்/மன்மதலீலை/அபூர்வ ராகங்கள்/மூன்று முடிச்சு. இப்படி ஒவ்வொரு படத்திலும் முரண் உறவுகளுக்குள் நடக்கும் உரிமை மீறலை வெளிப்படுத்தி கருத்தியல் கற்பழிப்பு நடத்தியவர் பாலச்சந்தர். பொருந்தா காமத்திற்கு புதுப்புது அர்த்தங்கள் எழுதி சூடு பிடிக்கும் உணர்ச்சியை வியாபாரமாக்கி வெற்றி பெற்றார்.

தொடரும் இந்த வகைச் சினிமாவுக்கு வலுசேர்ப்பது மாதிரி கமலின் வேட்டையாடு விளையாடு சேர்ந்திருக்கிறது. கொஞ்சம் உலகம் சுற்றும் வாலிபன், கொஞ்சம் சிகப்பு ரோஜாக்கள், டிக்..டிக்..டிக் தொடங்கி மன்மதன் வரைபட்ட படங்களின் திகில் பிரதேச காமத்தை உள்ளடக்கியது. ஒரு க்ரைம் ‘நியூஸ் ரிப்போர்ட்’டரின் வேலையை போலீஸ் அதிகாரி வேடத்தில் கமலஹாசன் அழகாக நடந்து போய் செய்நேர்த்தியுடன் செய்திருக்கிறார். கமல் என்கிற கலைஞன் ஏற்படுத்தி வைத்திருக்கிற இமேஜிக்கு முன்னால் இது மிகவும் கேலித்தனமாகத் தான் தெரிகிறது. படத்திற்கு கேமராமேன் ஒரு நாயகன். இன்னொரு நாயகன் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ். அரபு நாடுகளிலும் இலங்கையிலும் மெய்சிலிர்க்க வைத்து மனதை உறைய வைக்கும் கோரப் படுகொலைக் கேசட்டுகளின் கலெக்சனை நக்கல் அடிப்பது மாதிரிப்பட்ட ஒருதொனியும் படத்தின் கதை அமைப்பில் புதைந்து கிடப்பதை கவனிக்க முடிகிறது.

இப்படித் தொடரும் சினிமாவைத் தாண்டி ஒரு சாதனை நிகழ்ந்திருக்கிறது. இம்சை அரசன் 23ம் புலிகேசி பிம்ப அரசியலை மிகச் சரியான தருணத்தில் கட்டுடைப்பதும் புனிதங்களை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு ஆய்வுக்கு உட்படுத்துவதும் ஒரு கை தேர்ந்த கலைஞன் செய்கின்ற விசயம். அந்த வகையில் அந்தக் கால மன்னர்கள் வழ்வுகளில் நிகழ்ந்த சரியான சில செய்திகளைத் தொகுத்து சினிமா செய்திருக்கும் சிம்புதேவனை பாராட்டலாம். வடிவேலு நடித்து திரைக்கு வந்திருக்கும் இம்சை அரசன் 23ம் புலிகேசி முக்கியமானப் புரட்சிகளை தந்திருக்கும் படம்.

மன்னன் படம் என்றாலே உடனடியாக நமது ஞாபக பரப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன், நாடோடி மன்னன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன், வஞ்சிக் கோட்டை வாலிபன், மனோகரா. இப்படியான பத்து இருபது படங்கள் உடனடி நினைவுக்கு வந்து மனதின் வழியாகவும் வாயின்வழியாகவும் ஓரிரு வசனங்களையாவது முணுமுணுக்க வைக்கும். அது மிகை யதார்த்த வயல்வெளிக்குள் நின்று கொண்டு தான் மக்கள் மனதில் ஞாபக நெற்கதிர்களை அறுவடை செய்தது.

இதுநாள் வரை அஞ்சாத நெஞ்சத்திற்கு சொந்தக்காரர்களாகவும் எதிரியினை வாள் சண்டையில் போரிட்டு வெற்றி பெற்ற வீரர்களாகவும், அந்தபுரக் காதல் லீலை மன்மதன்களாகவும் தான் மன்னர்கள் குறித்தான போதை மருந்து வடிவிலான பதிவுகள் தமிழ்ச் சினிமாவில் நடந்து இருக்கிறது. ஏனெனில் வீரபாண்டிய கட்ட பொம்மனை குறித்து அறிவுசார் தளத்தில் ஒரு கொள்ளைக்காரனாக, வழிப்பறி வீரனாக பார்க்கின்ற பார்வை உள்ளது. ஆனால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாய மக்கள் மனதில் அவனை ஒரு ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலாக, குறுநில மன்னராக பசுமரத்தாணி போல பதிய வைத்தது தமிழ் சினிமா தான். அது மாதிரி தான் துரியோதனன், இராவணன் போன்ற கதாபாத்திரங்களைப் பற்றியும் எதிர்மறை பதிவுகளையே மக்கள் மனதில் பதிய வைத்தது.

அந்த வகையில் பார்க்கும் போது வடிவேலுவை வைத்து மிகவும் யதார்த்தமாக கதைச் செய்திருக்கிறார்கள். நாளைய வரலாறு எழுதப்படும்போது அரசன் ஒரு மாபெரும் வீரனாக வரலாற்றில் பேசப்பட வேண்டும். அதற்காகத் தான் இந்த ஏற்பாடு என தனது தலை பொருந்திய பாடி பில்டர் உடம்பு மாதிரி பட்ட கட்டவுட்டில் வடிவேலு கூறுமிடம் பாசாங்கற்ற ஒரு சித்திரம் கிடைப்பது மட்டுமல்லாமல் அந்தக்கால வரலாற்று புனைவுகளின் ஒரு சில பகுதிகள் என நமக்குத் தெரிய வருகிறது. இது மட்டுமல்ல. வடிவேலு அந்தப்புரத்தில் இவ்வளவு பெண்களா எனக் கேள்வி எழுப்பும் போதும் / போருக்காகப் பயப்படும் போதும் / சிறையில் அடைப்பட்டுக் கிடக்கும் வேளையில் போர் வீரனிடம் பேசும் போதும் / தன்னைப் பாராட்ட வருகின்ற புலவனை இம்சைபடுத்தும் போதும் இன்னொரு வகைப்பட்ட உலகத்தை, இன்னொரு வகைப்பட்ட அரசர் கால வாழ்வை சித்திரப்படுத்திக் காட்டியுள்ளது தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்.

இவ்வாறாக போதையிலிருந்து விடுபட்டது மாதிரி ஒரு சினிமாவும் போதைப் பழக்கத்தின் தொடர்ச்சியாக வேட்டையாடு விளையாடு மாதிரிப்பட்ட சினிமாவும் தமிழ் சினிமாப் பரப்பில் வந்து கொண்ட வண்ணமிருப்பது நமது புரிதல் பக்கங்களைப் புரட்ட வேண்டியது அவசியமெனக் கருதுகிறேன்.

கடைசியாக இந்தத் தீபாவளி ஆனந்தவிகடன் பேட்டியில் டைரக்டர் ஷங்கர், இந்தியன் படத்திற்கு பிறகு நானும் கமலும் இணைந்து ஒரு ‘சைன்டிபிக் பிக்சன்’ மாதிரிப்பட்ட ஒரு படம் செய்யலாமென இருந்தேன். நடக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். புதிய தளத்திற்கு கமல் தன்னை உருமாற்றிக் கொள்ளத் தயார் இல்லை என்கிற உண்மை இதிலிருந்தே தெரிகிறது. ஊடகங்கள் கட்டமைக்கும் அல்லது விஜய் டி.வி. குறிப்பிடும் அளவுக்கு கமல் தமிழ் சினிமாவுக்கான முன் உதாரணங்களை முன் வைக்கவில்லை என்பது திண்ணம். (சத்யஜித்ரே படத்தை தன் வீட்டில் மாட்டி வைத்தால் மட்டும் போதாது)

புதிய முயற்சிகளில் உலகத் தர சினிமாவை உருவாக்குவது மாதிரிப் பட்ட உணர்வை மட்டும் ஊடக அரசியல் வழியாக கமல் தொடர்ந்து திட்டமிட்டு உருவாக்கி வருகிறார் என்பது தான் உண்மை. 35 கோடி செலவில் தசவதாரம் மாதிரி 10 வித தோற்றங்களில் சூப்பர் நடிப்பு என ஊடகங்கள் உருவாக்கும் அரசியல் சினிமா இனி நமக்குத் தேவையில்லை. பதிலாக அடித்தள, விளிம்புநிலை வாழ்வைப் பேசும், பெண் பற்றிய ஆழமான பதிவுகளை முன் வைக்கும், இஸ்லாமிய, கிருஸ்தவம் சார்ந்த பண்பாட்டு விழிமியங்களுக்குள் சிக்கித் தவிக்கும் வாழ்வு நெருக்கடியை பொதுத் தளத்தில் குறும்படமாக இல்லாமல் பேசும் சினிமா தான் தமிழுக்கு இனி அவசியம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com