Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
உள்ளாட்சி சொல்லும் பாடம்

ம.ராஜசேகரன்

“நாம் மக்களிடம்
நல்லெண்ணம் கொண்டுள்ளோம்.
நம்பிக்கை கொண்டுள்ளோம்.
மக்களே நமது தலைவிதியை
நிர்ணயிக்கக் கூடியவர்கள்.
இந்திய மக்களுக்கு
அதிக அளவு குடியாட்சியையும்
அதிக அளவு பொறுப்புணர்ச்சியையும்
உறுதிப்படுத்துவோம்
மக்கள்
அதிகாரம் பெறட்டும்”

இந்திய ஆட்சி அமைப்பு முறையில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக 1989ல் அப் போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டு வரப்பட்ட ‘பஞ்சாயத்து ஆட்சி மசோதா’ தாக்கல் செய்யப் பட்ட போது ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.

பஞ்சாயத்துகளுக்கு ஜன நாய கமும் அதிகாரப் பகிர்வும் அளிப் பதற்காக அரசியல் சாசனத் தின் 73, 74வது பிரிவுகளில் திருத்தங்களைக் கொண்டு வந்து, பெருத்த சர்ச்சை களுக்கிடையில் 1993ம் ஆண்டு ஏப்ரல் 24ந்தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலுக்கு வந்தது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின் மிக முக்கிய நோக்கம் - பஞ்சாயத்துகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து, உள்ளாட்சி அமைப்பின் கீழ் வாழும் மக்களுக்கு பொறுப்புகளை வழங்கி, அவர்களை சுயசார்புள்ள தன்னாட்சி அதிகாரமுள்ள மக்களாக உருவாக்கு வது தான்.

சட்டம் மாநிலங்களில் அமலுக்கு வந்து ஏறக்குறைய பத்தாண்டுகள் கழிந்து விட்ட நிலையில் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்றால் சிரிப்பதைத் தவிர வேறொன்றும் நிகழ்த்தத் தோன்றாது.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எப்பிரிவினர் அதிகாரத்தில் இருந்தாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய அதிகாரப் பரவலையும், அதற்கான நிதியையும் எவரும் தட்டிப் பறிக்கக் கூடாது என்பது தான் இச்சட்டத்தின் அடிநாதம்.

ஆனால் கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின் போது அதிகார போதையின் உச்ச கட்டத்தில் இருந்த ஜெயலலிதா அப்போதைய சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் அதிகாரத்தைப் பறித்தார். அதற்கான மாநகராட்சி சட்ட விதிகளில் சிறப்புத் திருத்தங்களை மேற்கொண்டார். ‘ஒருவருக்கு ஒரு பதவி’ போன்ற வியாக்கியானங்கள் மேலெழுந்தன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அரசதிகாரம் எந்திரத்தனமாக தூக்கி எறிவதும் அதற்குக் கீழ் உள்ளவரை பொறுப்பற்ற முறையில் துஷ்பிரயோகம் செய்து உச்சாணிக் கொம்பில் உட்காரவைத்த தன் விளைவாய் இன்றைக்கு சென்னையில் உச்சகட்ட வன்முறைத் தாண்டவங்கள் அரங்கேறியுள்ளன.

2001ல் அ.தி.மு.க. ஆட்சியின் போது நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் தற்போதும் வன்முறை நிகழ்ந்தேறியுள்ளது. வாக்குப்பதிவு துவங்கிய நாளிலிருந்து தற்போது வரைக்கும் கள்ளவோட்டு, வன்முறை, ஜனநாயகம், பணநாயகம், அராஜகம், அத்து மீறல், ஆயுதக் கும்பல் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஊடகங்களில் மந்திரப் பொருளாய் மினுமினுத்தன.

ஏன் இந்த அதிகார வெறி? என்றே தெரியவில்லை. ஏற்கனவே மைனாரிட்டி தி.மு.க. அரசு என வர்ணிக்கப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் சில திட்டங்களை அதிரடியாய் அறிவித்து மக்களிடம் நல்லெண்ணத்தைப் பெறக் காத்திருந்த தி.மு.க.வின் பொய் முகத்தில் சென்னை மாநகராட்சி தேர்தல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது உண்மை தான்.

கூட்டணிக் கட்சிகளான இடது சாரிகள், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க, பா.ம.க. போன்ற கட்சிகள் இந்த அளவிற்கு போர்க்கொடி தூக்கி இருப்பதற்கு தமிழகம் முழுவதும் நிகழ்ந்த அடாவடித் தாண்டவங்களே சாட்சி.

இயன்றவரை கள்ளவோட்டுப் போடவும் எப்படியாவது அதிகாரத்தைப் பெற்று விட வேண்டும் என்ற வெறியும், அ.தி.மு.க.வின் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்ற தீராத வேட்கையும் தி.மு.க.விற்கே கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத் தேர்தல் ஆணையங்களை தனது கைப்பாவiயாக வளைத்துப் போட்டதில் துவங்கி விஜயகாந்த் கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்காதது வரை தி.மு.க.வின் கொடூர முகம் வக்கிரமாய் தெரிந்தது. மாநிலத் தேர்தல் ஆணையத்தை விஜயகாந்த் குறை கூறியதும் வெகுண்டெழுந்து பேட்டி யளித்த மாநிலத் தேர்தல் ஆணையர் சென்னை மாநகராட்சி கலவரத்தில் கை கட்டி, வாய் பொத்தி நிற்கிறார். பாவம். அவருக்கு அங்குசம் எங்கிருந்து நீண்டதோ?

பல்வேறு இடங்களில் வாக்களிக்க வந்த மக்கள் துரத்தியடிக்கப்பட்டு கள்ளவோட்டுப் போட்ட சம்பவமும், வாக்குப் பெட்டியை வீட்டிற்கு தூக்கிச் சென்றதும், வாக்குப் பெட்டிக் குள் நீலமையை வேட்பாளரே ஊற்றிச் சென்றதும் வரும் காலங்களில் தமிழ் சினிமாவின் காமெடி காட்சிகளுக்கு பயன்படலாம்.

இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க மிக முக்கிய அம்சம் ஒன்றும் இருக்கிறது. அது சிற்றூராட்சியின் வார்டு உறுப்பினர் பதவியிலிருந்து மாநகராட்சித் தலைவர் பதவி வரைக்குமான எல்லாப் பொறுப்புகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, பட்டு வாடாக்கள் நிகழ்ந்த விதம் உள்ளாட்சிப் பொறுப்புகளின் மீது பெருத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது. நண்பர் ஒருவர் அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்ட கிராமத்திற்கு ஓட்டுப் போடுவதற்கு செல்வதாக சொல்லிச் சென்றார். திரும்பி வந்த அன்று அவர் ஆச்சரியத்துடன் சொன்ன செய்தி ‘இந்த தேர்தல் பண நாயகத்திற்கு கிடைத்த வெற்றி’ என்று அரசியல் வாதிகள் போலவே எனக்கும் சொல்லத் தோன்றுகிறது.

குறைந்த பட்சமாக தலைக்கு 1000 ரூபாய் வீதம் சிவகங்கை போன்ற வறட்சியான மாவட்ட கிராமங்களில் இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டிருக்கிறது என்றால் சென்னை போன்ற மாநகராட்சிகளில்? நினைக்கவே பயமாக இருக்கிறது.

பல கிராமங்களில் காசு கொடுத்து விட்டு சூடத்தைக் கொளுத்தி சத்தியமும் வாங்கியுள்ளனர். கை தொட்டு காசு வாங்கி விட்டோம். மாற்றி ஓட்டுப் போட்டால் செத்துப் போவோம் என்ற பயத்தில் பல கிராமங்களில் ஓட்டுப்பதிவு நிகழ்ந்துள்ளது. வாழ்க ஜனநாயகம்?

“கிராமப் பஞ்சாயத்துக்கள் வெகு விரைவில் துடிப்புள்ள அமைப்புகளாக மாறிவிடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இதில் இருப்பார்கள். மக்களின் நன்மைக்காக பல திட்டங்களை இந்த அமைப்பு கள் நடத்தும்” என 1992ல் உள்நாட்டுப் பிரதிநிதிகளிடம் உரை நிகழ்த்திய அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளுக்கே உரிய அந்தப் பொய் ஜாலமாயா வார்த்தைகள் ‘அதிகாரப் பரவலும் அடிமட்ட மக்களுக்கான மேம்பட்ட வளர்ச்சியும் தேவையென கருதுபவர்களுக்கு’ ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்துபவையாக மாறிப் போய் உள்ளன.

லட்சக் கணக்கில் ஏன் கோடிக் கணக்கிலும் காசைக் கொட்டி ஓட்டு வாங்கும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதி களிடம் நீங்கள் எந்த மக்கள் நலத் திட்டத்தை எதிர் பார்க்கமுடியும். ஏற்கனவே சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும், பிளவுண்டு கிடக்கும் சமூகம் இப்போது ஒரு தாய் மக்களாய் வாழ்ந்த கிராமத்து மக்களுக்குள்ளும் அரசியல் சாயத்தைப் பூசி பிளவு படுத்தியுள்ளது. தலித் மக்கள் ஒன்றாய் வாழக்கூடிய ஒரு ஊரில் ஒரு தலித் தேர்ந்தெடுக்கப் படக்கூடிய சூழல் வரும் போது தலித்துகள் இரு பிரிவாய் பிரிகின்றனர். மைனாரிட்டி சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் சாதி இந்துக்கள் விரும்பும் நபர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தலித்துகளுக்கான பிரச்சனை என்று வரும்போது இரு பிரிவுகளாக தலித்துகள் தனித்துக் கிடக் கின்றனர். எங்களைப் பிரித்துப் போடத்தான் இந்தத் தேர்தலை கொண்டு வந்தீர்களா? என்றே பல்வேறு தலித் கிராம மக்கள் இன்று கேள்வி கேட்கின்றனர். இதையும் தாண்டி பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் போன்ற ஊராட்சிகளில் நிகழ்ந்துள்ள தற்போதைய முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு ஊராட்சிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களே திரும்பத் திரும்ப தேர்ந்தெடுக்கப் படுவதன் துர்ப்பாக்கிய செயல்களும் தற்போது நிகழ்ந்துள்ளன. ‘பணப் பட்டுவாடா’ செய்யும் மாய வேலை இது. எதிர் வேட்பாளருக்கு சமமாக செலவழிக்க முடியாத வேட்பாளர் ஒருவர் எவ்வளவு பெரிய மக்கள் செல்வாக்கு உடையவராக இருந்தாலும் ஜெயிக்க முடியாத சூழல் தற்போது ஏற்பட்டு உள்ளது. சட்ட மன்ற, நாடாளுமன்ற அரசியல்வாதிகள் செய்த சூத்திரத்தின் நீட்சியென்றே இதை நாம் கருத வேண்டியதிருக்கிறது.

உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் அரசியல் சாயமற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற விதி முறைகளைத் தாண்டி ‘அரசியல்’ தெரிந்திருக்க வேண்டும் என இக்கட்டான நிலைக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தள்ளப் பட்டுள்ளனர். ‘பொது வாழ்க்கை’ என்பதெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பான பழைய பிரயோஜனப் படாத வார்த்தையாகி விட்டது.

இதை விட கேலிக்குரிய ஒரு சமாச்சாரம் தி.மு.க. கூட்டணியில் இந்தத் தேர்தலில் தவறாக செய்யப் பட்ட பிரச்சாரம்,

‘மத்திய மாநிலத்தில் உள்ளாட்சி யில் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடையும்’ என்பதுதான் அது. இந்தப் பிரச்சாரம் இவ்வளவு காலம் நாம் பேசிக் கொண்டிருக்கும் ஜன நாயகத் தன்மைக்கே எதிரானதாகும்.

இது ஒரு வகையில் எதிர்மறை அரசி யல் என்று கூடச் சொல்லலாம். யார் ஆட்சி செய்தாலும் அரசுத் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பது தான் ஜனநாயகத் தின் அடிப்படையான நோக்கம். இதை மூத்த பழுத்த அரசியல்வாதி கள் (யார்?) புரிந்து கொள்ள வேண் டும். அது வரை இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்வது பலத்த காமெடிக் குரிய விஷயமாக மாறிப்போய் விடும்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com