Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
கொசுக்களின் குடியரசு

தூக்கக் கலக்கத்தில் சுகாதரத்துறை
ஆர்.பிரேம்குமார்

“மீனு... மீனு...” என்ற சத்தம் கேட்டு, வாசலைத் திறந்து வெளியே வந்தார் சுப்பம்மா.

“மீனு வேணுமாம்மா....” மீன் காரி கேட்டார்கள்.

“ஏ... உன்னை நம்பி இருந்தா மீன் சாப்பிட்டது போலத்தான். எத்தனை நாளு கழிச்சு இன்னைக்கு வந்திருக்கே... பதிவா வாங்குகிற ஆள் வரல்லேன்னு உடனே வேற ஆளு கிட்டயும் போய் வாங்க முடியல... என்னதான் ஆச்சு உனக்கு...?”

“சாகாத குறைதான்... நாய் படாப்பாடு நரகப்பாடு... இருபது நாளா காய்ச்சல் வறுத்தெடுத் திட்டில்ல... என்னவோ சிக்குன் குனியாவாம்....!” மீன்காரி மீன் பெட்டியை தலையிலிருந்து இறக்கி வைத்துக் கொண்டு சொன்னார்கள்.

“என்ன சருகைக் கண்டு தணல் அஞ்சுன கதையால்ல இருக்கு! கடப்புறத்திலயும் காய்ச்சலா...?”

இருவரும் பேசும் சத்தம் கேட்டு வெளியே வந்தார் குளோரி புஷ்பபாய். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி என்பதால் இப்போதும் புள்ளி விவரங்களோடு பேசுவதை நிறுத்தவில்லை.

“என்ன சுப்பம்மா... மீன்காரி யைக் கண்டா கொல்லணும்னு சொல்லிட்டிருந்தே... இப்ப ரொம்ப அன்னியோன்னியமா பேசிக்கிட்டு இருக்கிறது மாதிரி தோணுது!” குளோறி பேசியதைக் கேட்டு மூன்று பேரும் சிரித்தனர்.

“இல்லை மேடம்... கடப்புறத் திலயும் சிக்குன் குனியா காய்ச்சல் என்கிற... கடல் தண்ணியிலயுமா கொசு முட்டை போட்டுக் குஞ்சு பொரிக்கும்?” சுப்பம்மா ஆச்சரியத் துடன் சொன்னார்.

“‘சாணிக் குழியும் சமுத்திரமும் சரியாய் நினைக்கலாமா?’ என்று கேட்பாங்க. ஆனா சிக்குன் குனியா விஷயத்தில் அப்படித்தான் நினைக்க வேண்டி இருக்கு... கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் கயிறுத் தொழிற்சாலைகள் நிறைய இருக்கு. அதனால தேங்காய் நார் பதப்படுத்த தேங்கி கிடக்கும் தண்ணீரில் கொசு முட்டை போடுது என்றாங்க... கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களில் பால் வடிக்க வைத்திருக்கும் சிரட்டைகள்ல முட்டை போடுது; நாமக்கல் மாவட்டத்துல சாயப்பட்டறைகள் நிறைய இருக்கு; அங்கே தேங்கி நிற்கும் தண்ணீரில் முட்டை போடுது; சென்னையிலயும் டெல்லி யிலயும் ஏசிக்குள்ளயே முட்டை போடுது... கொக்கோ கோலாவிலும் பெப்சிலயும்தான் கொசு முட்டை போடாது போலிருக்கு...!”

“அதில்தான் பூச்சிக் கொல்லி கலந்திருக்காங்கன்னு சொல்றாங் களே...!” குளோரியின் பேச்சுக்கு டப்பென்று பதில் சொன்ன மீன் காரியை ஆச்சரியமாகப் பார்த்தார் கள். மீன்காரி தொடர்ந்து கேட்டார் கள். “...கொசு மூலம் வியாதி பரவுது என்கிறது உண்மைதானா அம்மா?”

“ஆமா; கொசுக்களால் பரவும் நோய்கள் என்னென்ன என்பதற்கு நல்ல உதாரணம் இந்தியாதான். மலேரியா, டெங்கு, ஃபைலேரியா, சிக்குன் குனியா... எல்லாம் இங்கே எக்கச்சக்க சக்கம் இருக்கு. ‘ஏடஸ் ஈஜிப்டி’ என்ற கொசுதான் இந்தக் குனியாவைக் கடத்தி வர்ற குற்ற வாளி. ‘ஏடஸ் ஈஜிப்டி’ ஈனும் முட்டைகள் அபார சக்தி வாய்ந்தவை. நீர்நிலைகள் வறண்டு வற்றிப் போனாலும் இந்த முட்டைகள் அழிந்து போகாது. எப்போது நீர் தேங்கினாலும் மீண்டும் விசுவரூபம் எடுத்து கொசுக்களாக மலர்ந்து விடும். ‘டோகாவைரிடே’ (கூடீழுஹஏஐ -சுஐனுஹநு) குடும்பத்தைச் சேர்ந்த ஆல்ஃபா வைரஸ் பேரினத்தில் ஒரு நபர்தான் சிக்குன் குனியா பரப்பும் வைரஸ். ஏடஸ் ஈஜிப்டி மட்டு மல்லாது ‘ஏடிஸ் அல்போபிக்டஸ்’ என்கிற ஆசியாப் புலிக் கொசுவும் இந்த நோயை ஏந்திப் போகிற ஹெலிகாப்டர் என்கிறாங்க...!

“‘சாக்கடைப் புழுவுக்குப் போக்கிடம் எங்கே?’ என்று கேட் கிறது தப்பாயிடும் போலிருக்கே!” மீன்காரி புன்முறுவலுடன் சொன்னார்கள்.

சுப்பம்மா கேட்டார்; “...மேடம்... தேங்கி நிற்கும் தண்ணீரில் மட்டு மல்லாது சுத்தமான நீரிலும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டுக் குடும்பம் நடத்துது என்கிறாங்களே... இந்த வகைக் கொசுக்கள் 9 முதல் 11 நாட்களுக்குள் உற்பத்தி ஆகி ‘பறக்கும் ஊசிகளாக’ மாறிவிடும். நோய் பாதிக்கப் பட்டவர்களுக்கு இரண்டு முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல் அடிக்கும். சிலருக்கு 10 நட்கள் கழித்து மீண்டும் காய்ச்சல் வரலாம் என்கிறாங்களே... இதுக்கு மருந்து - மாத்திரை எதுவும் கிடையாதா?”

“இதுக்கு தடுப்பு மருந்து என்கிறது ‘கள்ளிக்கும் கற்றாழைக் கும் களை வெட்டுற’ கதைதான். இந்த நோய்க்குக் காரணமான ஆர்போ வைரஸைத் தடுப்பதற்கு எந்த மருந்தும் கிடையாது. நோய்த் தடுப்பான்கள் (ஏயஉஉiநே) இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. காய்ச் சலைக் குறைப்பதற்கும், வலியைக் குறைப்பதற்கும் அதற்குள்ள மருந்து களான பாரசிட்டமால், குளோ ரோக்வின் போன்ற மருந்துகளை மருத்துவர்கள் அளிக்கிறார்கள். நோயாளிகளுக்கு வலியோடு வலி யாக பாரசிட்டமால் ஊசிகளைப் போடவும் செய்கின்றனர். சில மருத்துவமனைகள் ‘சிக்குன் குனியா தடுப்பு சிறப்பு முகாம்கள்’ நடத்திப் பணம் சம்பாதிப்பது தாடி பற்றி எரியும் போது பீடி கொளுத்தின கதை தான். ஹோமியோபதி டாக்டர்கள் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து ஆடித்தள்ளுபடி துணி விற்பனை மாதிரி ‘வைரசுக்கு தடுப்பு மருந்து கிடைக்கும்’ என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஒருவேளை ஹோமியோ மருந்து சாப்பிடாமல் உடம்பின் பொதுவான நோய் எதிர்ப்புச் சக்தி உஷார்ப் படுத்தப்படலாம். ஆனால் தனியாக ஆர்போ வைரசுக்கு எதிர் சக்தி உருவாகும் என்பதெல்லாம் வடி கட்டின பொய்!”

“அதனால் தான் சிக்குன் குனியா காய்ச்சலுக்கு மருந்துச் சீட்டு இல்லா மல் மருந்து விற்றதாக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்கு நரகம் பல மருந்துக் கடைகளின் மீது நட வடிக்கைகள் எடுத்துள்ளதோ?” சுப்பம்மா கேட்டார்.
“ஆமா. . . பெரிய நடவடிக்கை...! ‘வாழைப்பழம் கொண்டு போனவன் வாசலில் இருந்தான், வாயைக் கொண்டு போனவன் நடுவீட்டில் இருந்தான்’ என்கிறது மாதிரி இல்ல இருக்கு. எங்களை மாதிரி ஏழை பாழைங்க ஆரம்ப சுகாதார நிலை யத்துக்குப் போனா, போற நேரத்தில் டாக்டர் இருக்கிறது இல்லை... இந்த லட்சணத்தில் ஏதா வது தற்காலிக நிவாரணம் வேணும்னா மெடிக்கல் ஷாப்புக்குத்தான் ஓட வேண்டி இருக்கு... அதையும் நிறுத்தவாப் பாக்கிறாங்க...?” மீன் காரி கோபத்து டன் கேட்டார்கள்.

“இல்லை மீன்காரி... மருந்துச் சீட்டு இல்லாம மருந்து விக்கிறவங்க நாடி பிடிச்சு நோய் பார்க்கிறது இல்லை. சும்மா தன்பாட்டுக்கு வலி மாத்திரை விழுங்கினா குடலு பொத்துப் போயிடும். அதனால நட வடிக்கை தேவைதான். எப்ப வாவது இல்லை; எப்பவுமே ஒரு கண்காணிப்பு இருந்தா தேவலை... ஆனா நீ சொன்ன மற்ற விஷயங் களை ஒத்துக்கிறேன்... நமது நாட்டில் உள்ள 70 சதவீதம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தான் ஒரு படுக்கையாவது உள்ளது. மீதி உள்ளவற்றில் அதுவும் இல்லை. அவற்றில் 20 சதவீத நிலையங்களில் தான் தொலைபேசி இணைப்பு உள்ளது. இந்த யுகத்தில் எந்த டாக்டர்தான் இப்படிப்பட்ட ஓர் இடத்திலே போய் உட்கார்ந்து வேலை பார்க்க விரும்புவார்? இவ்வளவுக்கும் சுகாதாரத்துறைக் கென வருடம் தோறும் நிதி ஒதுக்குவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை...!” குளோரி சொன்னதைக் கேட்டு ஆமோதிப்பது போல் இருவரும் தலையை ஆட்டினர். பிறகு சுப்பம்மா சொன்னார்.

“தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் மருந்துவர்கள் முதல் சுகாதார ஆய்வாளர்கள் (Health Inspector) வரை 12 ஆயிரம் பணியிடங் கள் காலியாக உள்ளன. ‘நோய்க்கு பலி கொடுப்போம்; வேலைக்கு ஆள் எடுக்க மாட்டோம்’ என்பது கொள்கை போல அரசு செயல் படுகிறது. தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணிக் காக ஏற்கனவே 650 பணியாளர்கள் உள்ளனராம். இவர்களுக்குக் காலா காலங்களில் கொசு ஒழிப்புக்கான தளவாடங்களும், கட்டளைகளும் வழங்கப்பட்டதா என்பது பெரிய கேள்விக்குறி. புதிதாக 3200 ஒப்பந் தப் பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்பது சுகாதாரத்துறைச் செய்தி. ‘விரை வில்’ என்றால் எப்போது? சிக்குன் குனியா போய், டெங்கு வந்து, அதுவும் போய் மலேரியா வந்த துக்கு அப்புற மான்னு தான் தெரிய வில்லை...!”

குளோரி குறுக்கிட்டார். “....அது தான் சிக்குன் குனியா நோயைக் கட்டுப்படுத்த அதிக அளவில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு இல்லை என்று சுகாதாரத்துறை கூறி இருக்கிறதே....!”
“‘தண்ணீர்க் குடம் உடைந் தாலும் ஐய்யோ! தயிர்க் குடம் உடைந்தாலும் ஐயோ’ போடுற மாதிரி இல்ல இருக்குப்பேச்சு! டெங்குக் காய்ச்சல் வந்தா மட்டும் ஒப்புக் கொள்ளப் போறாங்களாக் கும்....?” மீன்காறி கோபத்துடன் கேட்டார்கள்.
“ஒரு வழியாக அக்டோபர் மாதத் துவக்கத்தில் சுகாதாரத்துறை தமிழகத்தில் இதுவரை சிக்குன் குனியாவால் 63 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டிருக்கிறது. நாம் ‘கூட்டல் பிழை’ என்ற வகையில் ஒரு இலட்சத்தைக் கூடச் சேர்த்து ஒரு
இலட்சத்து 63 ஆயிரம் பேர் என்று சொன்னாலும், உள்ளாட்சித் தேர்தல் முடிந்து போனதால் ‘புள்ளி விவரப் போர் ஒன்றும் நடக்காது!” சுப்பம்மா இடக்காகச் சொன்னார்.

“தொற்று நோய் வந்தா அதை ஒப்புக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தறதுதான் நல்ல அரசாங் கத்தின் முக இலட்சணம். கேரளா வில் சிக்குன் குனியாவின் தாக்குதல் குறித்துக் குறைத்து மதிப்பிட்டுள்ள தாகச் சொல்லி மாநில முதலமைச் சருக்கும் மைய சுகாதார அமைச்ச கத்துக்கும் சண்டையே வந்து விட்டது... அங்கே அரசியல் தலைவர்கள் மட்டு மல்லாது, அடுத்தபடியாக செல்வாக் கோடு உள்ள நடிகர்களும் நேரடி யாகக் களத்தில் இறங்கி உள்ளார்கள். இங்கே உள்ளாட்சித் தேர்தல் பிரச் சாரத்தின் போது கொசுக்களின் கொடுமையைப் பற்றி எடுத்துக் கூறி ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் எல்லோரும் வாக்கு கேட்டார்கள்... 2003ம் ஆண்டு சட்டமன்றத்தில் ‘கொசுவை ஒழிக்க சென்னையில் ஓடும் நதிகளை சுத்தம் செய்யப் போவதாக அறிவித்தீர்களே என்ன ஆச்சு?’ என்று ஓர் உறுப்பினர் கேட்டதற்கு ஜெயலலிதாவின் பதவிக் காலம் முடியும் வரை பதில் கிடைக்க வில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தோற்றுப் போனதால், கொசுவை ஒழிக்க தங்கள் கட்சி கண்டு பிடித்து வைத்திருக்கும் இரகசிய வித்தையை தமிழக மக்களுக்கு சொல்லித் தர மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். இனி கொசுவை ஒழிக்கும் கடமை தமிழக அரசிடம் மட்டுமே உள்ளது! இப்படிப் பட்ட எண்ணத் தைத் தவிர்த்து விட்டு சுற்றுப்புறச் சூழலில் எல்லோரும் முடிந்த மட்டும் தூய்மையைக் கடை பிடிக்க வேண் டும்!” குளோரி பேசி முடித்ததும் மீன்காரி கேட்டார்கள்.

“ஏம்மா, தொற்று நோய்னு தெரிஞ்சப்புறவும் ஏன் அரசாங்கம் சீவன் இல்லாம கிடக்குது? போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை கள் எடுக்க வேண்டியதுதானே...!”

“‘தொற்று நோய் இருக்கிறது’ என்று அறிவிப்பு செய்தால் சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும். பொது மக்களின் சுதந்திரமான நடமாட்டம் கட்டுப் படுத்தப்படும். பாதிக்கப் பட்டவர்களை தடுப் பறைகளுக்குள் ஒதுக்க வேண்டிவரும். இதனால் மக்கள் மனதில் பீதியும், புரளி களும் பரவும். பொது அமைதி சீர் குலையும். எல்லாவற் றுக்கும் மேலாக, அந் நியச் செலாவணி புழங் கக் கூடிய சுற்றுலாத் துறையில் சுணக்கம் ஏற்படும். எனவே அபாய அறிவிப்பு வெளியிட சில விதி முறைகளை வைத்துள்ளார்கள்.

‘நடப்பு ஆண்டில் நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் உள்ள சராசரி எண்ணிக்கையை விட 10 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும்’ என்பது முக்கியமான விதி. தேர்தல் நேரத்தில் மக்கள் பீதியடையக் கூடாது என்பதால் ‘பொய் சொல்லப் போறேன் - பொய் சொல்லப் போறேன்’ என்று சொல்லா மல் சொல்கின்றனர் அதிகாரிகள்.

உத்திரப் பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கே டெங்கு நூற்றுக் கணக்கானவர் களைப் பாதித்து உள்ளது. 18 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத் தில் சில நூறு பேர் பாதிக்கப் படுவதை வைத்து தொற்று நோய் அறிவிப்பு வெளியிட முடியாது என்பது ஆட்சி பீடத்தின் வாதம்... என்ன செய்ய?”
குளோரி சொல்லி முடித்ததும் சுப்பம்மா கேட்டார்:

“...முதன் முதலாக மார்ச் மாதம் வேலூர் மாவட்ட எல்லையில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல் பரவிய சிக்குன் குனியா பெற்ற வெற்றியை டெங்குக் காய்ச்சல் பெற முடியவில்லையே. ஏன்?”
சுப்பம்மாவின் குத்தலான பேச்சை இரசித்தபடியே குளோரி சொன்னார்:

“ஏடஸ் ஈஜிப்டி கொசுக்களுக்கு பிரதமரின் பேரன்களைக் கடித் தால் தங்கள் வம்சம் அழிந்து விடும் என்ற அறிவு கிடையாது. டெல்லி யில் சாதாரண மக்களைக் கடித்துக் குதறி டெங்குவுக்கு அடிபணிய வைத்த தோடு திருப்திப் படாத கொசுக்கள் மருத்துவக் கல்லூரி மாணவர் களுக்கு சவால் விட்டு ஊசி போட்டு நோய் பரப்பியதில் ஒரு மாணவர் இறந்து போனார். அதோடு கூட பிரதமரின் உறவினர்களுக்கும் காய்ச் சல் அடிக்கத் துவங்கியதும் மாநில அரசு களால் பெரிய மறுப்பு எதுவும் வெளியிட முடியவில்லை”.

“‘ஒய்யாரக் கொண்டையாம்; தாழம் பூவாம்; அதன் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ என்பது போலல்ல இருக்கு டெல்லியின் நிலைமை?” மீன்காரி கேட்டதுக்கு குளோறி பதில் சொன்னார்.

“ஆமா... ‘ஊருக்கெல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி கழுநீர்ப் பானையில் விழுந்தது போல’, இந்தியாவின் தலை சிறந்த மருத்துவ நிறுவனமான ‘எய்ம்ஸ்’ (AIIMS) ஏடெஸ் ஈஜிப்டியின் உற்பத் தித் தளமாகி விட்டது என்பது கேவலம். அந்த நிறுவன வளாகத்தில் நடந்து வரும் கட்டட வேலைகளுக் காய் தோண்டப்பட்டிருக்கும் குழி களிலும், டப்பாக்களிலும் மழை நீர் தேங்கி கொசுக்களுக்குச் சாத கமான தளம் அமைத்துக் கொடுத்து விட்டது.
அது மட்டும் இல்லை. முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் டெல்லி சுகாதாரத்துறை கொஞ்சம் தயங்கியதற்கு வேறொரு காரணம் இருக்கிறது. பொதுவாகவே வட இந்தியாவில் செப்டம்பர் - அக் டோபர் - நவம்பர் மாதங்கள் தான் கொசுக்களின் கொண்டாட்டக் காலம். பருவக் காற்று மழை களால் வெப்பம் குறைந்து விடும். எனவே ‘இந்திர பிரஸ்தத்தில்’ உள்ள வீடுகளில் குளிரூட்டிகளை (ஏர் கண்டிஷனர், கூலர் உட்பட) ஓய் வெடுக்க விட்டு விடுவார்கள். இந்த சாதனங்களின் உள்ளே தேங்கி நிற்கும் தண்ணீர் கொசுக்கள் முட்டையிடு வதற்கான கலப்படமில்லாத, பாது காப்பான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கின்றன. குளிரூட்டிகளே சூழ்நிலையை அமைத்துக் கொடுக் கின்றன. குளிரூட்டிகளை சுத்தம் செய்து வைக்க வேண்டிய அறிவுறுத் தல்கள் எதுவும் வராததால் மக்களும் கவனமின்றி இருந்து விட்டனர். நுகர்வுக் கலாச்சார மோகத்தில் மூழ்கியவர்களுக்கு நுகர்பொருளின் பயன்பாடு குறைந்தால் குறை கூறத் தெரியும் அளவுக்கு, அதனை முறையாய் பராமரிக்கும் மனநிலை அமையப் பெறவில்லை என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்”.

“டெங்குக் காய்ச்சல் உயிர்க் கொல்லி நோய் என்கிறது உண்மை தானா...?” சுப்பம்மா கேட்டார்.

“ஆமா... சிக்குன் குனியா ஆள் முடக்கி நோய். ஆனால் டெங்கு ‘துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தது போல’ சமயத்தில் ஆளைத் தீர்த்துக் கட்டி விடும். 18ம் நூற்றாண் டின் இறுதி வாக்கில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வடஅமெரிக்கா வில் முதன் முதலாக டெங்குக் காய்ச்சலின் தொற்று நோய்த் தாக்கு தல் நடந்துள்ள ஆதாரம் உள்ளது. ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஸ்வா கிலி மொழியில் இந்த நோயை ‘கி டெங்கோ பெபோ’ என்று சொல் வார்கள். இதற்கு ‘பிசாசு பிடித்தவர் கள்’ என்று பொருள். அதன் சுருக் கம்தான் டெங்கு. (FLAVI VIRUS) பிளேவி வைரஸ் பேரினத்தைச் சேர்ந்த நான்கு உறவினர்கள்தான் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கயவர்கள் என்று கண்டு பிடித்து உள்ளனர்”. குளோரி விளக்கமாகச் சொன்னார்.

“டெங்கு காய்ச்சலை ஆரம்பத் திலேயே கண்டு பிடிக்க முடியாமல் போனால், தவறான சிகிச்சை கடுமையான பாதிப்புகளை உரு வாக்கும் என்கிறார்களே?” சுப்பம்மா கதை கேட்கிற ஆர்வத்திலிருந்து விட்ட பாடில்லை.

“ஆமா... டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐபூபுரூஃபன், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் கொடுக்கக் கூடாது என்பது உலக சுகாதார நிறுவனத் தின் (WHO) வழிகாட்டுக் குறிப்பு. ஆனால் காய்ச்சலுடன் உடம்பு வலியும் இருந்தால் பல டாக்டர்கள் எடுத்த எடுப்பிலேயே எழுதுவது ‘ஐபூ-பாரா’ (Ibu - Para) கூட்டு மருந்தைத்தான். அதே மாதிரி ஸ்டீராயிடுகள் எழுதினாலும் ஆபத்து தான். நோய் தணிந்த பிறகு மூட்டு கள் வீங்கி வலி எடுப்பது இந்த வைரஸ்களின் பின்விளைவு. ‘பாலி - ஆர்த்ரேல்ஜியா’ (POLY - ARTHRALGIA) என்று இதனைக் குறிப்பிடு கிறார்கள். வலிக்காக பரிந்துரைக்கப் படும் அலோபதி மருந்துகள், வயிற்றில் ஒரு ‘ரெட்டை மாட்டு உழவு’ நடத்திவிடும். எனவே சித்த மருந்துகள் மூலம் மூட்டு வலி தீர்க்கப் பார்ப்பது நல்லது. ‘கற்பூராதித் தைலம் நன்றாகத் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் நல்லது’ என்பது போன்ற எளிமையான சிகிச்சை முறைகளை பரிசீலித்துப் பார்ப்பது பாதுகாப்பானது...”

“எல்லாம் சொல்றீங்களே அம்மா, இந்தப் பிசாசு பிடிச்ச நோவுக்கு தடுப்பு மருந்து ஏன் கண்டு பிடிக் கலை?” மீன்காரி கேட்டார் கள். குளோரி பொறுமையாகப் பதில் சொன்னார்கள்.

“‘வைரஸ்’ என்கிறது கடுமை யான வடிவமைப்பு உள்ள உயிரினம் கிடையாது. ஒவ்வொரு முறை தாக்கு தல் நடத்தும் போதும் தன்னுடைய வடிவமைப்பு, வேதியியல் மூலக்கூறு அமைப்பு, குணாம்சங்கள் எல்லா வற்றையும் மாற்றி விட்டுத்தான் போருக்கு வரும். இன்னும் சொல்லப் போனா, இப்போது இந்தியாவைத் தாக்கி உள்ள சிக்குன் குனியா வைரஸ், மரபீனிகளில் (GENES) சடுதி மாற்றம் ஏற்பட்ட புதிய இனம். இது மைய / கிழக்கு ஆஃப்பிரிக்க இனத்தின் இன்னொரு பதிப்பு; ஏற்கனவே 1963ல் கோல்கத்தாவில் அறிமுகம் ஆகி வேலூர் வரைப் படர்ந்த பழைய ஆசியா கண்டப் பதிப்பு அல்ல என்று மூலக்கூறு அலசல் (MOLECULAR ANALYSIS) மூலம் கண்டறிந்து உள்ளனர். நீண்ட கால இடைவெளி விட்டுத் தான் இந்த குனியா வைரஸ் தாக்கு கிறது. இதனால் நேரடி உயிரிழப்பு எதுவும் நடந்ததாகத் தெளிவான ஆதாரம் இல்லை. வேறொரு நோயால் அவதிப்படுவோருக்கு கூடவே வைரஸ் காய்ச்சல் வந்தால் ஆபத்து அதிகம் என்ற பொதுவான கண் ணோட்டம் தான் சிக்குன் குனியா வைப் பொறுத்தவரை. எனவே தான் உலக சுகாதார நிறுவனமும் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் டெங்கு விஷயத்தில் எல்லோருக்கும் பயம் தான்! இந்தியாவில் கூட, தனியார் மருந்து நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்து, ‘டெங்கு - ஜப்பானிய மூளைக் காய்ச்சல் - மஞ்சள் காமாலை’ ஆகிய மூன்று கொலை நோய்களுக் கான தடுப்பூசி (TETRAVALENT VACCINE) கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை மைய அரசாங்கம் முடுக்கி விட்டுள்ளது....!”

மீன்காரி மீன் விற்கப்போவ தையே மறந்து விட்டு உரையாடலில் ஈடுபட்டார்கள்.

“‘பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’. இந்த வைரசுக் கெல்லாம் பொறி வைக்கத்தான் போறாங்க... அம்மா, எங்க சொந்தத் தில நிறைய பேரை மலேரியா கொண்டு போனதாச் சொல்லு வாங்க... இப்பவும் மலேரியா இருக்கா?”
மீன்காரியின் கேள்விக்கு சுடச் சுடப் பதில் சொன்னார் சுப்பம்மா.

“என்ன, நீ இப்படி கேட்டிட்டே? மலேரியா இருக்காவா? உலகத்தில் எந்த நோய் முற்றிலுமாக அழிந்தா லும், அதன் எச்சத்தை தக்க வைத்திருக்கும் பெருமை இந்தியா வுக்கு உண்டு. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள், மத்தியப்பிர தேசம், சட்டீஸ்கர், ஒரிசா முதலிய மாநிலங்கள் மலேரியா மலரும் பூந்தோட்டங்களாகவே இன்னும் உள்ளன. தென் கிழக்கு ஆசியா விலிருந்து 85 சதவீதம் இந்தியர் கள்தான் என்பது நமது சுகாதாரத் துறையின் பெயரை சர்வதேச அரங்குகளில் குறிப்பிட்டுச் சொல்ல வைக்கிறது. ‘ஏடஸ் ஈஜிப்டி’ கொசுக் கள் பகலில் கடிக்கும். மலேரியா நோய்க் கிருமியை ஏந்தி வருகிற ‘அனோஃபிலஸ்’ கொசு இரவில் தான் கடிக்கும், இந்தியாவில் வருடம் தோறும் 20 இலட்சம் பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். இது பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம்....!”

“எம்மா...!” பெருமூச்சு விட்ட படியே தரையில் உட்கார்ந்தார்கள் மீன்காரி. குளோறி அடுத்தக் கட்டப் பேச்சைத் தொடர்ந்தார்கள்.
“.....மாவீரன் அலெக்சாண்ட ரும் படைகளும் காய்ச்சலினால் பாதிக்கப் பட்டு ஊர் திரும்பின காலம் தொட்டே நுண்ணுயிரி மூலம் நோய் பரப்பி யுத்தம் செய்வது (BIOLOGICAL WARFARE) பற்றி யோசிக்கத் துவங்கி விட்டனர். ‘ஆந்திராக்ஸ், பெரியம்மை, சிக்கன் குனியா, டெங்கு எல்லாம் உயிரி யுத்தத்தின் இரகசிய ஆயுதங்கள்; அவை பரி சோதிக்கப்படும் போது நோய் பரவுகிறது’ என்ற வதந்திக்கும் ஆதர வாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இயற்கையே ஒரு சாராருக்கு ஆதர வாக உயிரி யுத்தம் நடத்தியது என்பது ஒரு வரலாறு. அதன் மூலமாகத்தான் மலேரியா நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது என்பதும், மலேரியா வின் பிடியிலிருந்து உலகத்தை இரட் சிக்க ஒரு தத்துவம் உதவிகரமாக இருந்துள்ளது என்பதும் ஆச்சரியம் தான்!”

உரையாடலின் சுவாராஸ்யம் கூடினது போலிருந்தது. ‘எங்கே மேலே சொல்லுங்கள்’ என்ற பாவனையில் மீன்காரியும், சுப்பம் மாவும் குளோரியைப் பார்த்தனர். குளோரி குதூகலத்துடன் பேசினார்:

“...அறுபதுகளின் இறுதியில் வியட்நாம் ஒ அமெரிக்கா போர் உருவானது. காடுகளில் மறைந்தி ருந்த கம்யூனிஸ்ட் ஒளிப் போராளி களுக்கும், அவர்களை வேட்டையாடச் சென்ற அமெரிக்கப் படைவீரர் களுக்கும் பொதுவான எதிரியாக இருந்தது மலேரியா கொசுப்படை. மலேரியாவின் தாக்கு தலில் இருந்து தப்பிக்க வியட்நாம் வீரர்களுக்கு உதவும் வகையில் சீனக் கம்யூனிஸ்டு கள் ‘திட்டம் - 523’ (PROJECT - 523) என்ற இரகசிய அமைப்பின் மூலம் மருத்துவ உதவிகள் அளித்தனர். அந்தத் திட்டத்தில் இணைந்து பணி யாற்றிய பேராசிரியர் லீ-குவாக்கியோ 7 ஆண்டுகள் அரும்பாடுபட்டு மலேரியாவிலிருந்து நிரந்தரத் தீர்வு காணும் மருந்தைக் கண்டு பிடித்தார். கி.மு. 340லிருந்து சீனாவின் பழமை வாய்ந்த மருத்துவத்தில் சொல்லப் பட்டுள்ள மூலிகைச் செடியை 1974ல் தற்செயலாகக் கண்டு பிடித்த லீ, அதிலிருந்து தயாரித்த ஆர்ட் டெமிசனின் (ARTEMISININ) மருந்து மலேரியாவை முற்றிலுமாகக் குண மாக்குவதை அறிந்து கொண்டார். இது வியட்நாமின் ஒளிப்போராளி கள் பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றியது. 1997ல் லீ, செயற்கை முறையில் ஆர்ட்டெமிசினின் மருந் தின் வேதிப் பண்புகள் அடங்கிய ஆர்ட்டெகின் (ARTEKIN) என்ற மருந்தைத் தயாரித்து உள்ளார். 1980களிலேயே இந்த மருந்தின் சக்தி பற்றி சீனா சில தகவல்கள் தெரிவித் தது. என்றாலும் சீனாவின் மேல் இருந்த கம்யூனிசப் பூத எதிர்ப்பு, உலக சுகாதார நிறுவனத்தையும் வெள்ளை உலகை யும் இது பற்றிக் கேட்காதது போல் இருக்க வைத்தது. இதனால் சராசரி வருடத்துக்கு 10 இலட்சம் பேர் என்ற கணக்கில் பல இலட்சம் மக்கள் மலேரியாவில் மரண மடைந்ததுதான் இலாபம். தற்போது இந்த மருந்தை உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டு தயாரிப்பு வேலைகள் முழுவீச்சில் நடை பெறுகின்றன. தற்போது மலேரியாவுக்கு எதிராகப் பயன் பாட்டில் உள்ள குளோரோ க்வின் (CHLOROQUIN) மருந்தை விட இது சிறப்பானது என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இந்த மருந்தை வெற்றிகரமாகக் கண்டு பிடித்த உடனே பேராசிரியர் லீ கூறியதுதான் மருந்தை விடச் சிறப்பானது!”

“அப்படி என்ன சொன்னர்?”

“என் வாழ்க்கையின் இலட்சியமே சாதாரண மக்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு சிகிச்சை முறையைக் கண்டு பிடிப்பதுதான். ஏனெனில் மலேரியா என்பது ஏழைகளின் நோய்!” என்று சொன்னார்.

“சரியாகத்தான் சொல்லி இருக் கார். இதே மாதிரி இந்தியாவிலயும் பெரும்பான்மையான ஏழை மக்க ளின் நலன் கருதி மருந்து கண்டு பிடிக்கிறது, மருத்துவமனைகள் அமைக்கிறது ஏதாவது நடக்குதா?” சுப்பம்மா ஆவலுடன் கேட்டார்.
“....நேர் எதிரா நடக்குது. சமீபத் தில் இந்திய அரசாங்கம் ‘இந்தியப் பொதுமக்கள் சுகாதார நிறுவனம்’ (PUBLIC HEALTH FOUNDATION OF INDIA) என்ற ஒன்றைத் துவங்கி உள்ளது. இந்தியாவின் உடல் நலத்தை தனியார் நிறுவனங்களின் துணை யோடு முன்னேற்றுவது தான் நோக்கம். இதற்கென 200கோடி நிதி திரட்டி இருக்கிறார்கள். புகழ்பெற்ற இருதயச் சிகிச்சை நிபுணரான டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டிக்கு 5 வருடங் கள் தலைமை தாங்கி வழி நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இந்தியா முழுமைக் குமாக 5முதல் 7 உலகத்தரம் வாய்ந்த ‘பொதுமக்கள் நலக் கல்லூரிகளை’ துவங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் தாதியர், மாவட்டச் சுகாதார அதிகாரிகள், சுகாதாரப் பொருளியல் நிபுணர்கள், தொற்று நோய் வித்தகர்கள் என்ற வகையறாக்களில் சுமார் 1000 பேரைப் புதிதாக உருவாக்க முடியும் என் கிறார்கள் சம்பந்தப் பட்டவர்கள்...”

“நீ சொல்றது சரி தான் சுப்பம்மா... இந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு ஆலோசனை கூறியதே இந்தியாவின் முதலாளித் துவக் கேடயமான ‘இந்திய தொழில் மையம்’ (CENTR OF INDOA INDUSTRIES - CII) என்றால் நீ இன்னும் எகிறிக் குதிப்பாய். இந்தியப் பெரு முதலாளிகள் சார்பில் தயாரிக்கப் பட்ட ‘2000 - சி.ஐ.ஐ. மெக்கின்ஸி அறிக்கை’ இந்தியாவின் சுகாதாரத் தேவைகள் பற்றியும், சுகாதாரத் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு முக்கிய முடிவுகள் எடுத் தால் மட்டுமே முதலீட்டுக்கானக் களம் பண்படுத்தப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒன்று, அரசின் சுகாதாரக் கொள்கைகளில் தலையீடு செய்வது. மற்றொன்று, பொதுச் சுகாதாரத்தை தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்களை அமைப்ப து. அதன்படிதான், இந்த தன்னாட்சி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கொள்கை முடிவுகளை உருவாக்குவதில் தனியார் நிறுவனங் களுக்குப் பெரும் பங்கு இருக்கும். அதே வேளையில் பெரும் பொருட் செலவில் பயிற்சிக் கல்லூரி துவங்கு வது போன்ற செலவினங்களை பொது மக்கள் வரிப் பணத்தில் இருந்துப் பறித்தெடுத்து அரசுத் துறையி லேயே நிறுவ வேண்டும்...”

“‘உதட்டுக்கு மிஞ்சின பல்லும், திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது’. எங்களை மாதிரி நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கிறவங்களுக்கு என்ன வழி இருக்கு - சொல்லுங்க அம்மா. கொசு விரட்டி ஏதாவது வாங்கி வைக்கலாமுன்னா அதோட விலையும் எகிறிக்கிட்டே போகுதே. அது என்ன, கோரோ சனையிலயா செய்றாங்க?” மீன்காரி யின் குரலில் இயலாமை தொனித்தது.

“கொசு விரட்டி செய்றது குடிசைத் தொழில் மாதிரித்தான். திருச்சூரில் மோகன் என்கிற என்ஜினியர் குட்னைட் (GOODNIGHT) என்கிற கொசு விரட்டி வில்லை களைத் தயாரித்த பிறகுதான் நகரங் களில் அது ஒரு எளிமையான கொசு விரட்டி முறை போல பரவியது. வியாபாரம் தூள் கிளம்பியது. போட்டிக்கு நின்று பார்த்த கோத் ரெஜ் நிறுவனம் கடைசியில் அந்த ‘குட்னைட்’ சூட்டுப் பெயரை (BRAND) வாங்கிக் கொள்ள மட்டும் 100 கோடிக்கு மேல் கொடுத்தது பழைய செய்தி. மோகனும் ‘பெயரை’ விற்று விட்டு, வேறொரு பெயரில் தயாரிப்பைத் தொடர்ந்தார். இப் போது கொசு விரட்டித்திரி, வில்லை, நீர்மம், குழம்பு என்று கொசுவின் பெயரில் ‘அபிஷேகப் பொருட்கள்’ நிறைய விற்பனைக்கு வந்து விட்டன. எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டு கொசுக்கள் பயில்வான் களாகப் பறந்து திரிகின்றன...”
“இந்த கொசு விரட்டிகளைக் குடிசைத் தொழிலா செய்தா குறைஞ்ச செலவில தயாரிக்க முடியுமே...?”

“கொசு விரட்டி செய்ய பெரிய தொழில் நுட்பம் எதுவும் தேவை இல்லை. உதாரணத்துக்கு, ஆவியாகக் கூடிய கொசு விரட்டி நீர்மம் (LIQUID VAPOURISER), மணம் நீக்கப்பட்ட மண்ணென்ணையுடன் பால்மரோசா மற்றும் சிட்ரோனல்லா ஆகிய எண்ணெய் கலந்து தயாரிக்கப் படுகிறது. இதன் விகிதாச்சாரம் மண்ணென்னெய் 85ரூ, மற்றவை 15ரூ. இவ்வளவுதான் கொசு விரட்டி நீர்மத்தின் இரகசியக் கலவை. தரக்கட்டுப்பாடு பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் இந்த வேதிப் பொருட்கள் நாளாவட்டத்தில் மனிதனுக்கு கொசுவை விடப்பெரிய தீங்குகளை உருவாக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே ஹாங்காங்கில் உள்ள ஆராய்ச்சி யாளர்கள் கொசு விரட்டிகளால் மிருகங்களுக்கு சுவாசக் கோளாறு கள் உண்டாகின்றன என்று கண்டு பிடித்துள்ளனர். மதுரையில் அமைந் திருக்கும் மருத்துவப் பூச்சியியல் ஆய்வு மையமும் (CENTRE FOR RESEARCH IN MEDICAL ENTOMOLOGY) கொசு விரட்டிகளின் தாக்கம் பற்றி சில ஆய்வுகள் நடத்தி வருகின்றன. கிட்டத்தட்ட ‘பசுமைப் புரட்சி’ வயல்களில் செய்த வேலையைத் தான் கொசு விரட்டிகள் வீட்டில் செய்து வருகின்றன.

பசுமைப் புரட்சியில் பாடம் பெற்று இரசாயன உரமும், பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்திப் பயன் படுத்தி தற்கொலைப் பாதைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகள் மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு வருவது மாதிரித்தான் கொசு விரட்டி இரசா யனங்களைப் பயன்படுத்திச் சோர்ந்து போன குடிமக்களும் பாரம்பரிய உத்திகளுக்குத் திரும்ப வருகின்றனர். கொசுக்கள் தொடுக்கும் ஏவுகணைத் தாக்கு தலுக்கு கொசுவலைதான் ஆகப் பெரிய எதிர்ப்பு முறை. வட கிழக்கு மாநிலங்களில் பூச்சிக் கொல்லி பூசிய வலைகளைப் பயன் படுத்தி வெற்றி காண்கிறார்களாம். இந்த மாதிரி (INSECTICIDE IMPREGNATED BED NETS) ஐ.ஐ.பி.என் வலை களை சுனாமியில் பாதிக்கப்பட்ட அந்தமான் பகுதிகளில் பயன்படுத் தியதால் தொற்றுக் காய்ச்சல் பரவு வது தடுக்கப்பட்டது என்கிறார்கள்...”

“‘போர்த்திட்டுப் படுத்தாலும் கடிக்குது; படுத்துகிட்டுப் போர்த் தினாலும் கடிக்குது’. டி.டி.ற்றி (DDT) மாதிரி எதையாவது அள்ளி வீசி நாடு முழுக்க சுத்தப்படுத்தினா என்ன?” சுப்பம்மா கோபத்துடன் கேட்டார். குளோரி சிரித்தபடியே சொன்னார்கள்:
“....இப்படி நம்மை டி.டி.ற்றிக்கு ஆதரவாகப் பேச வைக்கிறதே சில பூச்சிக் கொல்லித் தயாரிப்பாளர் களின் தந்திர வேலைதான். உலகத்தி லேயே டி.டி.ற்றி உற்பத்தி செய்யப் படும் சில நாடுகளே பாக்கி உள்ளன. அவற்றில் ஒன்று இந்தியா. உலக சுகாதார நிறுவனம், மலேரியாவைக் கட்டுப்படுத்த கொசுக்களை ஒழிக்க டி.டி.ற்றியைப் பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளதை கவசமாக வைத்துக் கொண்டு டி.டி.ற்றி உற்பத்தியில் தீவிரமாக இறங்க சில நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இப்போதும் ஆப்பிரிக்க நாடுகளில் டி.டி.ற்றிக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து இந்த நிறுவனங்கள் ‘ஏற்றுமதிச் சந்தை யின்’ டாலர்ச் சுவையை நினைத்துப் பார்த்து உமிழ் நீர் விழுங்குகின்றன. டி.டி.ற்றி மற்றும் குளோரினேற்றம் செய்யப்பட்ட அல்டிரீன், என்டிரின், லிண்டேன், எண்டோஸல்பேன் போன்றவை சூழலில் தங்கி இருந்து உடம்பின் கொழுப்புத் திசுக்களில் குடியேற்றம் செய்ய வல்லவை. அதனால் நரம்பு மண்டலம் பாதிக் கப்படும். கருப்பாதிப்பு, பிறவி ஊனம், மார்பகப் புற்று எல்லாம் உத்தர வாதப் பரிசுகள். எனவே கொசுவை ஒழிக்க டி.டி.ற்றி போன்ற பூச்சிக் கொல்லிகளைப் பயன் படுத்துவதில் இரட்டை எச்சரிக்கை வேண்டும்.

குஜராத்தில் உள்ள சூரத் நகரமும், தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் புண்ணியத் தலமும் மலேரியா பரப்பும் கொசுக்களின் தேனிலவுப் பிர தேசங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கே கொசுக்களுக்கு மரணமில்லை. ஏனென்றால் கொசுக்களை விரட் டவும், கொல்லவும் பயன்படும் டி.டி.ற்றி, பி.ஹெச்.சி, மலாத்தியன் மற்றும் பைரித்ராயிடுகள் ஆகிய நான்கு பூச்சிக் கொல்லிகளும் கொல்ல முடியாத ‘மார்க்கண்டேய வரம்’ பெற்று விட்டன இங்கே உள்ள கொசுக்கள்...”
“குளோரி மேடம் சொல்வதைப் பார்த்தால் கொசுத் தொல்லை தீரவே தீராது போலிருக்கே...!”

“அப்படி எல்லாம் நம்பிக்கை இல்லாமப் பேச வேண்டாம். நம்முடைய ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDE)’, ‘நில் - கவர் - கொல்’ என்ற கண்ணோட்டத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்றுள் ளனர். கொசுக்களின் கூத்தாடிப் புழுப் பருவத்தில் (LARVAL STAGE) ஒருவித இனக் கவர்ச்சி சுரப்பி (PHEROMONE) வெளியாகும். இது கூத்தாடிப் புழுக்கள் கூத்தடிக்கும் இடத்துக்கு சொந்தக்கார கொசுக் களை எல்லாம் ஈர்த்து வரவழைக் கும் வாசனை உடையதாக இருக்கும். ‘முட்டை போட்டுக் குஞ்சு பொரிக்க வாக்கான இடம் இருக்கிறது - வந்து அமர்க்களப் படுத்துங்கள்’ என்பது தான் இந்த வாசனையின் மர்மம். இந்த இனக் கவர்ச்சிச் சுரப்பை இயற்கை வழியில் உற்பத்தி செய்து, அதனோடு பூச்சி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் (INSECT GROWTH REGULATOR) வேதியியல் பொருளைக் கலந்து, ஒரு ‘காதல் பொறியைக்’ கண்டு பிடித்து உள்ளனர்.. இனக் கவர்ச்சி மயக்கத் தில் திரள் திரளாய் வரும் கொசுக்கள் ‘கவர்ச்சிக் கொல்லி’ (ATTRACTICIDE) கலந்த தண்ணீரில் முடிந்த மட்டும் இன விருத்தி செய்ய முட்டைகளை ஈனும். இந்த முட்டை கள் பொரித்து வெளியே வரும் கூத்தாடிப் புழுக்கள் கொசுக் களாக முதிர்ச்சி அடையாமல், பிஞ்சில் பழுத்த பழங்களாக அழிந்து போக, அதே நீரில் கலந் துள்ள வளர்ச்சிக் கட்டுப் பாட்டு மருந்து வழி செய்யும். இந்தக் ‘கவர்ச் சிக் கொல்லியை’ குடி தண்ணீரில் கூட கலக்கலாம்; குழப்ப மில்லை என்று சொல்கிறார்கள். இது பற்றி அரசாங்கமும், சுகாதாரத் துறையும் அகலக் கண் களை விரித்து அதிகமாக அறிந்து கொள்வது நல்லது...”

“எது எப்படி இருந்தாலும் வீட்டைச் சுற்றி நாலு தவளை இருந்தா கொசுத் தொல்லை குறைவாகத் தான் இருக்கும்....” சுப்பம்மா சொன்னார்.

“உங்க பேச்சைக் கேட்டு ரசிச்சு நின்னதுல மீன் விக்கிறதே மறந்து போச்சு... இனி இப்ப எங்க போய் விக்கிறதுக்கு?” மீன்காரிக்கு திடீ ரென கவலை பொங்கியது.

“நீ ஒண்ணும் பதட்டப் படாதே... இன்றைக்கு சாயங்காலம் வீட்டிலே ஒரு விருந்து இருக்கு... பெங்காளி ஸ்டைல்ல இன்னைக்கு எல்லா கூட்டும் கறியும் மீன்ல செய்ததா ஆக்கிட்டாப் போச்சு... நீ வீட்டில வந்து மீனை எல்லாம் வெட்டித் தந்திட்டுப் போ...!” குளோரி சிரிப்பு டன் சொன்னார்கள்.

மீன்காரி சந்தோஷத்துடன் குளோரியின் வீட்டுக்குள் நுழைந் தார்கள்.





நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com