Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
அறிவுமதியின் நறுக்குகள்
பேரா. இரா.மோகன்

“தாமிரவருணித் தண்ணீர் போன்ற தெளிந்த வார்த்தையோட்டம். கார் காலத்து வானம் போலக் கப்பிக் கிடக்கும் சிந்தனைகள்... ஒளிமயமான எதிர் காலம் இவருக்குண்டு” எனக் கவிஞர் கண்ணதாசனால் 1977ஆம் ஆண்டிலேயே அடையாளம் காட்டப் பெற்றவர் அறிவுமதி. கவிஞர் நா.காம ராசன் குறிப்பிடுவது போல், “கவி யரங்கச் சக்கரவர்த்தி அப்துல் ரகு மானின் பால் வீதியில் பவனி வரும் நிலவுதான் அறிவுமதி”. அண்ணா மலைப் பல்கலைக் கழகம் ஈன்று புறந்தந்த கவி ஆளுமை அறிவுமதி. “கற்பனைகளை / விடவும் / பிரச்சனை கள் முக்கியம்” என்பது இவரது கொள்கை முழக்கம்.

தமிழ் ஹைகூ உலகிற்கு அறிவு மதி நல்கி இருக்கும் கொடை கள் இரண்டு. ஒன்று, ‘புல்லின் நுனியில் பனித்துளி’; இத்தொகுப்பு 1984ஆம் ஆண்டில் வெளிவந்தது; ‘வாமனர் களுக்கு ஒரு வரவேற்பு” என்னும் தலைப்பில் கவிக்கோ அப்துல்ரகுமான் இத்தொகுப்பிற்குத் தந்திருக்கும் முன் னுரை ஹைகூ பற்றிய நல்லதோர் அறிமுகத்தை இலக்கிய ஆர்வலர் களுக்கு நல்கியது. தெளிவான புரித லையும் தோற்றுவித்தது. மற்றொன்று, ‘கடைசி மழைத்துளி’; இத்தொகுப்பு 1996ஆம் ஆண்டில் வெளிவந்தது; இத்தொகுப்பிற்கு ‘மெல்லினம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் வண்ண தாசனும், ‘வல்லினம்’ என்ற தலைப் பில் ‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தனும் முறையே முன்னுரை யும் பின்னுரையும் அணிந்துள்ளனர்; ‘இடையினம்’ என்னும் தலைப்பில் அறிவுமதி தம்கவியிளத்தைத் திறந்து காட்டியுள்ளார். அறிவுமதியின் இவ் விரு தொகுப்புக்களும் தமிழ் ஹைகூ உலகிற்குக் கிடைத்துள்ள வளமான பங்களிப்புகள் ஆகும்.

கவிக்கோ அப்துல் ரகுமான் தம் அணிந்துரையில் குறிப்பிடுவது போல், “ஹைகூக்களோடு அவர் (அறிவுமதி) கூடி வாழ்ந்து குடும்பம் நடத்தியிருக்கிறார். அதனால் ஹைகூ அவருக்கு இயல்பாக - அசலாக வருகிறது”. ஜப்பானிய ஹைகூக் களின் தனிப்பெரும் பண்புகளான வார்த்தைச் சித்திர வார்ப்பும், உணர் வலைகளை எழுப்பும் குறியீட்டு இயக்கப் படிம அமைப்பும் அறிவு மதியின் ஹைகூ கவிதைகளில் அற்பு தமாக வந்திருக்கின்றன. இந்த உலகத்தின் எளிய உயிரினங் களுக்கும் - ஏன், உயிரற்ற பொருள்களுக்கும் கூட - இரங்கும் அருளுணர்வு ஹைகூ கவிஞர் என்ற முறையில் அறிவுமதியின் ஆளுகையில் ததும்பி நிற்பதைக் காண முடிகின்றது.

“ஊருக்குத் திரும்ப ஒரு வாரம் ஆகும்
அய்யோ நின்று கொண்டே இருப்பான்
என் குழந்தை பொம்மை”

எனக் குழந்தை பொம்மைக்கும்,

“விறகு வெட்டி வேறுமரம் பார்
பொந்துக்குள்
கிளிக்குஞ்சு”

எனக் குளிக்குஞ்சுக்கும்,

“விரைவாய்ப் போக வேண்டும்
ஜன்னலில் பசியோடு காத்திருப்பான்
என் காக்கை நண்பன்”

எனக் காக்கைக்கும்,

“நடுப்பகல்
சுடுமணல்
பாவம். . . என் சுவடுகள்”

எனச் சுடுமணலில் கிடக்கும் பாதச் சுவடுகளுக்கும் இரங்கும் அருள் உள்ளம் அறிவுமதிக்கு கவிஞருக்கு உரிய தகுதியைத் தருகிறது.

கடித்த எறும்பைக் கூட அடிக்க மனம் வரவில்லை கவிஞருக்கு; செல்லமாக எறும்பிடம் இப்படிப் பேசுகிறார்:

“தூங்கும் போது எதற்குத் தொந்தரவு
இரு. . . . இரு மெல்ல எடுத்து விடுகிறேன்
கடித்த எறும்பே”

உயர்நீதி மன்றத்தை விட - ஏன், உச்ச நீதிமன்றத்தைக் காட்டிலும் - வல்லமை பொருந்தியது மனிதனின் மனச்சாட்சி. அதன் அகலம், ஆழம், நீளம் என்னும் முப்பரிமாணங் களையும் அழகுறப்பதிவு செய்துள்ளது அறிவுமதியின் ஹைகூ ஒன்று:
“கொசு வலைக்குள் ஒரு
கொசு. . . அடடே
மனச்சாட்சி.”

விரட்டியடிக்கவும் முடியாது, ஒரேயடியாக வீழ்த்தவும் முடியாது கொசுவை; அதுபோல் தான் மனச் சாட்சியையும்!
அறிவுமதியின் கைவண்ணத்தில் அன்றாட வாழ்க்கைக் காட்சியும் ஆங்காங்கே அழகிய ஹைகூவாக வெளிப்பட்டுள்ளது.

“இனி எப்போது சந்திப்போம்
சாப்பாட்டிற்காக நிற்கும்
எதிரும் புதிருமாய் விரைவுப் பேருந்துகள்”

முதல் தொகுதியான ‘புல்லின் நுனியில் பனித்துளி’ (1984) வெளிவந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தொகுதியான ‘கடைசி மழைத்துளி’ (1996) வெளி வந்துள்ளது. இக்கால இடைவெளி கவிஞரின் பாடு பொருள் தேர்வில் விரிவையும் ஆழத்தையும் கூட்டி உள்ளது; பாடும் முறையில் நுட்பத்தையும் மெருகை யும் சேர்த்துள்ளது. கவிஞரின் சொற் களிலேயே சுட்ட வேண்டும் என்றால், ‘கடைசி மழைத்துளி’ தொகுப்பில் மெல்லின மும் உண்டு; வல்லினமும் உண்டு; இடையினமும் உண்டு.

“பள்ளிக்குப் போகாத சிறுமி
செல்லமாய்க் குட்டும்
ஆலங்கட்டி மழை”

மழை பற்றிய கவிஞரின் மென்மை யான பதிவு இது! ஆலங்கட்டி மழை, பள்ளிக்குப் போகாத சிறுமியின் தலையில் செல்லமாய்க் குட்டுகிற தாம்! அறியாமை மென்மையாகச் சாடும் நயமான கருத்துப் புலப்பாடு!

முன்னைய தொகுப்பில் நல்லும் வகை எல்லாம் உயிரிழக்க உணர்வை வெளிப்படுத்திய கவிஞர், இத் தொகுப்பில் சுற்றுப்புறச் சூழல் சீர் கேட்டிற்கு எதிராக அழுத்த மாகக் குரல் கொடுத்துள்ளார்.

“மரம் வெட்டிய கோடரி
பார்த்துக் கொள்
கடைசி மழைத் துளி”

என்ற ஹைகூ இவ்வகையில் குறிப் பிடத்தக்கதாகும். இங்கே மரங்களை அழிப்பதால் விளையும் பேரவலத்தை, மழைவளம் குன்று தலை நுட்பமாகப் புலப்படுத்தி உள்ளார் கவிஞர்.

நிலவின் கொள்ளை அழகையும் குளிர்ந்த ஒளியையுமே படைத்துக் காட்டும் முருகியல் போக்கிற்கு மாறாக, அறிவுமதி ‘மூச்சுத் திணறும் நிலா’வினை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

“தோல் தொழிற்சாலை
அழுகல் நீர்
மூக்சுத் திணறும் நிலா”

‘மூச்சுத் திணறும் நிலா’- கவிஞர் சூழலுணர்வுக்குக் கட்டியம் கூறும் உருவகம் இது.

‘அணுத்திமிர் அடக்கு’ படைத்த கவிஞருக்கு ‘வல்லின’மும் அத்து படியே. அடக்கு முறைக்கு எதிரான வன்முறையைப் படம் பிடிக்கும் ஹைகூ இதோ:

“நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்”

இருந்த போது எதிராகச் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது; அதனால் தான் இறந்த பிறகு மனம் போல அடித்து நொறுக்குகிறான் அடக்குமுறைக்கு ஆளானவன்!

‘தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்கொரு குணமுண்டு! என்ன என்கிறீர்களா? இதோ கவிஞர் தரும் விடை:

“தமிழன் என்று சொல்ல
தமிழனுக்குப் பிடிக்காது
வாழ்க. . . யாதவ். . . தலித்”

‘சாதித் தமிழர்’களுக்கு இங்கே பஞ்சம் இல்லை! தமிழன் ‘சாதி’க்கும் தமிழ’னாக - ‘தலைவ’னாக உயரப் போவது என்று? இதுவே கவிஞரின் ஆழ்ந்த கவலை.

‘தமிழுக்கு அமுதென்று பேர், தமிழனுக்கு அகதி என்று பேர்’ என்று உருக்கமாகப் பாடினான் இளங்கவிஞன் ஒருவன். காசி ஆனந் தனின் உள்ளம் கவர்ந்த மதியின் நறுக்கு ஒன்று வருமாறு:

“அகதி முகாம்
மழையில் வருகிறது
மண் வாசனை”

திருவாசகத்திற்கு மட்டுமன்று, அறிவுமதியின் இந்த ஹைகூவுக்கும் உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்! மழை வாசனையோடு மண் வாசனையையும் கலந்து தரும் இந்நறுக்கு தனித்தன்மை வாய்ந்தது.

‘கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே இங்கு வேரில் பழுத்த பலா’ என்று கைம்பெண்ணின் அவலத்தை உருக்கமாகச் சித்தரித்தார் பாவேந்தர் பாரதிதாசன். அறிவுமதியோ தன் ஹைகூ ஒன்றில் முதிர் கன்னியின் உள்ளத்தின் ஆழத்தில் குடி கொண்டிருக்கும் ஏக்க உணர்வைப் பதிவு செய்துள்ளார்:

“மணவறை
மெதுவாகப் பெருக்குகிறாள்
முதிர்கன்னி”

பெண்ணைப் பொறுத்த வரையில், குழந்தையாக இருந்தாலும் சரி, தெய்வமாக இருந்தாலும் சரி இரண் டாம் நிலை தான்; புகுந்த வீடோ, அலுவலகமோ எதுவாயினும் இன்று ஒரு பெண் எதிர் கொள்ளுவது வித விதமான பிரச்சனைகளைத் தான்!

“நெருப்புதான் பெண்
அம்மாவிற்கு அடி வயிற்றில்
மாமியாருக்கு அடுப்படியில்”

என்னும் ஹைகூ இவ்வகையில் குறிப்பிடத்தக்கதாகும். அடிவயிறு அடுப்படி. இடத்தில் தான் வேறுபாடு. மற்றபடி நெருப்பு தான் பெண் இன்றைய கண்ணோட்டத்தில்.

“அறிவுமதியின் கவிதையைப் படித்தாலும், படிக்க நின்று கேட்டா லும் உணர்வுகளைத் தொடுவதற்குக் காரணம் அவை பிரச்சனைகளைக் கவிதைகளாகத் தொடுகின்றன; தீர்வு வழங்குகின்றன” என்னும் கவிஞர் இன்குலாப்பின் மதிப்பீடு, அறிவு மதியின் ஹைகூ கவிதைகளுக்கும் பொருந்தி வருவதே ஆகும்.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com