Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
சிறுகதை

உள்மனமுள்
மேலாண்மை பொன்னுசாமி

எட்டாம் வகுப்பு வாத்தியார் முக்கி முக்கி பாடம் நடத்திக் கொண் டிருக்க, சாமிநாதன் கடைசிப் பெஞ் சில் உட்கார்ந்த நிலையில் குனிந்து சில்மிஷம் செய்து கொண்டிருந்தான்.

மூன்று பெஞ்சுக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிற மூக்கையாவின் காலடியிலிருந்த பைக்கட்டுக்குள் தனது பால்பாயிண்ட் பேனாவை யாருக்கும் தெரியாமல் போட்டு விட்டான், கமுக்கமாக.

கரும்பலகையில் துணியால் அழித்துவிட்டு, மறுபடி எழுத மேஜையிலிருந்த சாக்பீஸை எடுக்கும் தருணத்தில், அவரது அரைப் பார்வை யில் சிக்கிக் கொண்டான் சாமிநாதன்.

“என்னடா... என்ன பண்ணுறே?”
“சார்... எம் பேனாவைக் காணலே. தேடிக்கிட்டிருக்கேன்... சார்”
“கீழே போட்டுட்டீயா?”
“இல்லேசார்... யாரோ எடுத்துக் கிட்டாங்க... சார்”
“யார்றா... அவன்? எவண்டா அவன் பேனாவை எடுத்தது?”
மொத்த வகுப்பிலும் பரவிய கிலி, ‘கப்’பென்று வந்து உட்கார்ந்து கொண்ட மௌனத்தின் இறுக்கத்தில், முகம்காட்டிய அச்சம். ‘சகட்டு மேணிக்கு... எல்லாருக்கும் அடி விழுமோ’

முன் அனுபவத்தில் முளைத்த யூக நடுக்கம்.

‘எட்டாப்பு வாத்தியார் அடி எப்படி’ என்று எல்லாருக்கும் தெரியும். சாணி பிதுங்கிப் போகும். எதிரியை அடிக்கிற மாதிரி ஓங்கி யறைவார். ஓங்கி வந்த கை, முதுகு பக்கத்தில் நெருங்கும் கணத்தில், ஒரு சுழல் சுழலும்.

கையே சாட்டையடி சுழற்சி மாதிரி சப்பென்று வந்து விழும். விழுந்த இடத்தில் கன்றிப் போகும். தீப்பிடித்த மாதிரி, ஒரு காந்தல் பரவும்.

ரொம்ப அப்பிராணி மாதிரி ‘எந்திச்சு’ நின்ற சாமிநாதன், வராத கண்ணீரை கசக்கிக் கொண்டிருந்தான்.
‘புதூ...ப் பேனா சார். எங்கய்யா முந்தா நா தான் வாங்கித் தந்தாரு சார்... ரொம்ப நல்ல பேனா...”

“சரிடா... ரொம்ப நடிக்காதே... எங்கேயோ தொலைச்சிட்டு... இங்க வந்து உசுரை வாங்குறே”

“இல்லே சார்... கிளாஸுக் குள்ளே வர்றப்ப வைச்சிருந்தேன் சார்... மூக்கையா கூட பார்த்தான், சார்...”

“ஏலேய் மூக்கையா பாத்தீயாடா? வைச்சிருந்தானா?” மூக்கையா ‘விழு விழு’வென்று விழித்தான்.

அழிந்த நிலையில் கரும்பலகை. அறுந்து போன சினிமாப் படமாக, பாதியில் கலைந்து போன பாடம். சட்டம் ஒழுங்கு கெட்ட நிலையில்... மொத்த வகுப்பும்.

கள்ளனை கண்டுபிடித்து கைது செய்ய முடியாத பலவீனத்தில் வாத்தியார். இயலாமையால் வருகிற சண்டாளக் கோபத்தில், தீக்கனலாகக் கனன்றார். அதட்டலும் மிரட்டலுமாக சவுண்டைக் கொடுத்தார்.

“யாராச்சும் எடுத்துருந்தா... ஒழுங்கு மரியாதியா குடுத்துடுங்க. இல்லே... எல்லாரையும் அடி பின்னியெடுத்துருவேன். எம்பூஜை எப்பிடி இருக்கும், தெரியும்லே?”

அடிஉதட்டைக் கடித்து அரட்டு கிறார். நுனிநாக்கை மடித்து, புடைத்து, புடைக்க வைத்து அச்சுறுத்துகிறார்.

“பாடம் நடத்த விடாம கெடுக்குதுன்னே நாலுபயக நாச வேலை பண்றீகடா... யார்றா எடுத்தது? குடுத்துருங்கடா... இல்லேன்னா... எல்லாரையும் சோதிக்க வேண்டி வரும்டா...?”

வகுப்பறை முழுவதும் தகிப் பறையாக உஷ்ணமேறிப் போயி ருந்தது. எல்லா பிள்ளைகளுக்குள்ளும் அடி வயிற்றில் பகீரிடல், பயப் பரவல். ‘ஒன்றுக்கு நெருக்கு வதைப் போல ஒரு பிரமை. சாமியாடுகிற வாத்தியாரைப் பார்க்க பார்க்க... சாமிநாதனுக்குள் ஒரே சந்தோஷம். கும்மாளமாக கூத்தாடு கிற உள் மனசு.

எப்படியும் மூக்கையாவை இன் னைக்கு மப்பைக் கழட்டிடு வாரு. அவர் அடிக்கப் போகிற அடிகளை யும், அவன் துடித்தலறி அழப் போவதையும் மனக்கண்ணால் பார்த் தான். ரசித்தான்.

‘வேணும்... இந்த நாய்க்கு. இந்தப் பூஜை வேணும்’ என்று உள்மனவன்மத்துடன் கழுவுகிற சாமிநாதன். ஆனால், முகத்தை அப் பிராணியாக வைத்துக் கொண்டான். கண்கலங்கிப் போனவனாக... கதி கலங்கிப் போனவனாக... தோற்றம் காட்டுகிற அவன்.
வாத்தியாருக்கே அவனைப் பார்த்தால், பரிதாபமாக இருக்கிறது. ஒழுங்கைக் காப்பாற்றி, சேட்டையை கிள்ளியெறிய முடியாத இம்சை அரசனாக தான் விழிந்து நிற்பதாக, அவருக்குள் குற்ற உணர்ச்சி. அந்த முள்குத்தலான குற்றஉணர்வு, முரட்டுக் கோபமாக முறுக்கேறி வெளிப் படுகிறது. கண்களில் ஆத்திர அனல். விறைப்பேறிப் போன முகம். நெற்றி யில் குறுக்குக் கோடுகள் அடிக்கடித் தோன்றுகின்றன. எரிச்சலில் புருவங் களை நெரித்து உயர்த்து வதால் வருகிற கோடுகள்.
மூக்கையா மழையில் நனைந்த எலிக் குஞ்சாக பயக்குளிரோடு இவனைத் திரும்பிப் பார்க்கிறான். அவன் கண்ணில் மௌனக் கேள்வி. “ஏண்டா, என்னை இதுலே இழுத்துவுட்டே?”

இடது கையால் கண்களை கசக்கிக் கொண்டே, அவனை கள்ள விழியாக பார்க்கிற சாமிநாதன். பார்வையின் ஆழத்தில் குசும்பின் நிழல். “இருடி... இன்னிக்கு ஒனக்கு இருக்கு, சாப்பாடு” அந்தக் குசும்பின் மொழி,

மூக்கையாவின் கண்ணில் பயப் பரவல். உதடுகள் உலர்ந்து போய், உள்ளூர உதறலெடுத்துப் போயிருக் கிற மூக்கையாவை ரகசியமாக ரசிக்கிற சாமிநாதன்.

......பத்து நாளைக்கு முன்னாடி -
வகுப்புக்குள் முதல் ஆளாய் நுழைந்தான், சாமிநாதன். ஏழு ஐம்பதுக் கெல்லாம் நுழைந்து விட்டான். குப்பையை பெருக்குகிற மாரியம்மா அந்நேரம் தான் வேலை முடித்து முந்திச் சேலையால் வியர்வை முகத்தைத் துடைத்தாள்.

“என்ன ராசா... இம்புட்டு வெருசா வந்துட்டீக?
“அம்மா... விடியக்கால வேலையா கூலிவேலைக்குப் போய்ட்டா...”
“நீங்க முத்துலட்சுமி புள்ளே தானே?”
“ம்”
மாரியம்மாளும் போய் விட்டாள். நீளமான கட்டிடம். வரிசையாக ஐந்து வகுப்புகள். காக்கி அட்டை களிலான சுவர்கள்தான் ஊடுதடுப்பு.

ஒற்றையாளாக இவன் இருந்தான். ‘ஹோ’வென்று வெறீச் சென்று கிடந்த கட்டடம். தன்னந் தனிமை. என்னமோ போலிருந்தது. ரெண்டு அணில்கள் தான், சேட்டை களும் தப்பித்தலுமாக விளையாடிக் கொண்டிருந்தன.
மேஜையில் வாத்தியாரின் மூன் றாவது கையான பிரம்பு. காய்ந்து உலர்ந்து போன வலிமை யான புளியவிளார்.
இதை வைத்துத் தான்... முந்தா நாள் இவனைச் சாத்தினார். சட்டையைத் தாண்டி, முதுகில் தடிப்பு தடிப்புகளாக. வலிதாங்க வில்லை. துடியாய் துடித்தான். மறுநாள் குளிக்கும் போது கூட... கை அதன் மேல் பட்டபோது... தடிப்பு கள் தீயாக காந்தியது. அவன் குச்சியை வன்மத்துடன் பார்த்தான்.

‘யாருமில்லை’ என்ற தைரியத் தில் பிரம்பை எடுத்தான். மேஜையை வாத்தியாராக நினைத்து... பிரம்பால் ‘புளிச் புளிச்’ சென்று அடித்தான். ஓங்கி ஓங்கி சுழற்றி சுழற்றி அடித் தான். வாழ்க்கைக்கு என்னத்துக்கு வன்முறை? பள்ளிக்கு எதுக்கு பிரம்பு?
கை ஓய்ந்து வந்தது. குச்சியை துண்டு துண்டுகளாக ஒடித்து... தூசி துரும்புகளாக்கி... பள்ளிக்கு வெளியே போடப்போனான்.
‘ஏன் இங்க குப்பை’ என்று மாரியம்மாளுக்கு வசவு விழுமோ... என்று நினைத்து... ‘பாவம் அவள்!’ என்று பரிவால் கசிந்து... குப்பையை வண்டிப்பாதையில் கொண்டு போய் போட்டு விட்டு திரும்பினால்...

மூக்கையா, பைக்கட்டுடன். கண்ணில் ஒரு திகைப்பு. ஒரு கள்ளனை பார்த்துவிட்ட தர்ம சங்கடம்.

வம்புதும்பு என்றாலே பயப் படுவான். படிப்பில் முதல் வரிசை. வாத்தியாரிடம் அடிவாங்குகிற சூழலே அவனுக்கு நேராது. தப்பித் தவறி, ஏதேனும் சூழல் நேர்ந்தாலும் கூட... ‘நல்லா படிக்கிற பையன்’ என்ற சலுகையில் தப்பித்து விடுவான்.
“ஏலேய்... மூக்கையா”
“ம்”
“யார்கிட்டேயும் சொல்லாதே”
“ம்”
“சார் கிட்ட வாயை தொறந்து ராதேடா”
“நானா சொல்லமாட்டேன்...”
சாமிநாதனுக்குள் அடிவயிறு கலங்கியது. அவன் முழுமையாக சம்மதிக்க மறுக்கிறான். ‘க்’கன்னா வைக்கிறான்.
“அப்படீன்னா...?”
“ஏங்கிட்டே சார் நேரிடையாக கேட்டா... பொய் சொல்ல முடியாது”

சாமிநாதனுக்குள் சண்டாள மாகக் கோபம் வந்தது. கையறு கோபம். கை வீசமுடியாத ஊனக் கோபம். ஆனாலும் அவனிடம் கெஞ்சலும், கொஞ்சலுமாக, மன்றாடி மருகினான். மனசுக்குள் கருவினான்.

“மவனே... நீ மட்டும் போட்டுக் குடு. அப்புறமிருக்கு, ஒனக்கு சாப்பாடு...”
வாத்தியார் மிரட்டிய மிரட்ட லால்... நேரிடையான விசாரிப்பில் உளறிக் கொட்டி விட்டான், மூக்கையா.
அம்புட்டுத்தான்...
கதை கந்தலாகி விட்டது. சாமிநாதனுக்கு பூஜை என்றால் பூஜை... செம பூஜை கிடைத்தது. அடி மேல் அடியாக அடித்து, பின்னி விட்டார். கந்தலாகிப் போன சாமி நாதன், மறுநாள்... எதுவுமே நடக்காதது போல இயல்பாக வந்து சேர்ந்தான். வீட்டுக்குவீடு வாசல்படி இருப் பதைப் போல... வாத்தியார் என்றால் அடிக்கத்தான் செய்வார். ‘நம்ம நலனுக்காகத் தானே அடிக்கிறார்’ என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

ஆனால்... மூக்கையாவை மன்னிக்க முடியாது. மறைத்து விட்டால்... யாருக்கும் நட்டமில்லை. வீணாக... உளறிக் கொட்டி விட்டான். எனக்கு அனாவசியமாக ‘வாங்கி’த் தந்து விட்டான். பெரிய சத்திய வந்தன். உண்மைப்புத்திரன்.

‘இவனை வுடப்படாது. இவனுக் கும்... ஒரு நா ஒரு பொழுதாச்சும் அடிவாங்கிக் குடுத்தாகணும்’
....வாத்தியார் வகுப்பு முழுக்க பார்வையை ஓட்டினார். ஒவ்வொரு முகமாக உற்றுப் பார்த்தார். ‘கண்களின் அடியில் ஏதேனும்
ரகசியம் மின்னுகிறதா?’
“பேனாவை எடுத்தது, யார்டா? சொல்லித் தொலைங் கடா... நாய்களா. எதுக்குடா... இங்க வாரீக? படிக்கத்தானே? படிக்க வேண்டியது தானே? பாடம் நடத்த விடாம... ஏண்டா, இந்தப் பாடு படுத்துறீக...? ச்சேய்!”

ஆத்திர மூர்க்கமாக மிரட்டுகிற வாத்தியார். அதட்டலில் பயல்களை பார்க்கப் பார்க்க குமுறிக் கொண்டு வருகிற கோபம்.
“ரைட்... ரெய்டுதான். வேற வழி யில்லே” என்று இடியென முழங்கு கிற வாத்தியாரின் பிரகடனம்.

சோதனை நேரத்தை சுருக்கு வதற்காக வாத்தியார் செய்கிற தந்திரம். ஒருத்தர் பைக்கட்டை இன்னொரு பையன் சோதிப்பது. ஏககாலத்தில் ஆரம்பித்தது.

“ஏலேய் கிருஷ்ணசாமி, நீ மூக்கையா பையைப் பாரு. ஏலேய் மூக்கையா, பால்ராஜ் பையைப் பாரு”
“சார்... மூக்கையா பைக்கட்டுல பேனா... சார்”
பேனாவை எடுத்து உயர்த்திப் பிடிக்கிற கிருஷ்ணசாமியின் குரல்.
விட்டமூச்சை வாங்க முடியாத திகைப்பில், மொத்த வகுப்பே திணறிப் போயிற்று.
‘மூக்கையா வா...? மூக்கையா வா...? மூக்கையாவா?’

எல்லாருக்குள்ளும் ஆச்சரிய அதிர்ச்சியான இந்தக் கேள்வி. எல்லோரும் அவன் முகத்தையே பார்க்க... வாத்தியாருக்குள்ளும் இதே ஆச்சரியம். அவரது மன அதிர்வின் ரேகைகள், முகத்து வியர்வையாக கசிகிறது.

‘நல்லா படிக்கிற இந்தப் பயலா... இப்புடி? பயந்த சுபாவமுள்ள பயலாயிற்றே. அவனுக்குள்ளா களவுப் புத்தி? ‘ஊமை ஊரைக் கெடுக்கும்’ங்குறது, இது தானா? நாம சலுகை குடுக்குற தாலே... இவனுக்கு இம்புட்டு தைர்யமும் சேட்டையும் வருதா?’
வாத்தியாருக்குள் சண்டாள மாக பொங்கிப் பெருகுகிற தீக்குழம் பாக, நினைவுகள். அவனை கூர்மை யாகப் பார்த்தார்.
கண்ணீர் மளமளவென சரிகிறது. நனைந்த கோழிக் குஞ்சாக நடுங்கு கிறான். பயத்தில் அல்லாடுகிற சின்னவிழிகள். கால்களில் நடுக்கம். “இல்லேசார்... இல்லேசார்... இல்லே சார்” நடுங்கும் உதடுகள்.

வாத்தியாருக்குள் இறுக்கம். இன்னும் என்னத்தை விசாரிக்க? நல்லாவே படிக்கிற பயனாயிருந் தாலும், களவுப் புத்தியை அனுமதிக் கக்கூடாது. சலுகையை பயன் படுத்தி, தப்பு பண்ணுகிற நோயை, வளரவிடக் கூடாது.

“படிப்பு, எழுத்துக்களையும் நம்பர்களையும் மட்டும் மண்டை யிலே ஏத்தக் கூடாது. பண்பையும், ஒழுக்கத்தையும், உயர்ந்த அறிவை யும் மனசுலே ஏத்தணும். பண்பு இல்லாத படிப்பு, ஒழுக்கமில்லாத கல்வி... சமூகத்துக்கு பேராபத்தையே உண்டாக்கும்”

கரகரத்த வாத்தியாரின் குரலில் ஒரு மனநடுக்கம்.
“இந்தக் களவாணிப்பயலை... வகுப்புலேயிருக்கிற எல்லாரும் ஆளுக்கொரு குட்டாக குட்டுங்க.. இதுதான் இவனுக்குத் தண்டனை”

வகுப்புப் பிள்ளைகள் மூக்கை யாவை பரிவுடன் பார்த்தனர்.

எல்லாருக்குள்ளும் ஈரக்கசிவு. ‘இவன் இப்படி செய்திருக்க மாட்டான்’ என்ற நம்பிக்கை. ‘அநியாயமாக இந்தப் பயல், அவ மானப்படுகிறானே’ என்கிற இரக்க உணர்ச்சி. பச்சதாபம்.

ஆனாலும் வாத்தியார் சொல் லுக்கு கட்டுப்பட்டு... எல்லாரும் வரிசையாக வந்தனர். சோகமாக நெருங்கினர். குட்டுகிற மாதிரி பாவனை செய்துவிட்டு நடந்தனர்.

சாமிநாதனும் வந்து ஒரு குட்டு குட்டினான். அவனுள் ஒரு வெற்றிக் களிப்பு. கெக்கெலிச் சிரிப்பு.
அன்றைக்குத் தான் வாத்தியாரி டம் வாங்கிக் கட்டிக் கொண்ட அடிகளின் வேதனையை மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அந்த வலிகள், இன்னும் மனசுக்குள் வலிக்கிறது.

அன்றைக்கு ராத்திரி எட்டு மணிக்கெல்லாம்...
தீப்பிடித்த மாதிரி ஒரு செய்தி பரவியது. ஊரின் கால்கள் யாவும் ஒரே திசையில் ஓடிற்று.
“ஐயோ... பாதரவே, இப்படியா நடக்கணும்” என்ற சோகப்பதைப்புக் குரல்கள். ஆணும் பெண்ணுமாக ஓட்டம். பெண்கள் கண்ணீரும் அழுகையுமாக கதறிக் கொண்டே போகின்றனர்.

“இம்புட்டுச் சின்ன வயசுலே... இந்தக் கதியா? அடக்கொடுமையே... கூத்தவனுக்கும், கண் அவிஞ்சு போச்சா?”
குலைகொதிப்பும், குமுறும் சோகமுமாக ஓடுகிற கிழடுகள்.

சாமி நாதனும் ஓடினான், மூக்கையா வீட்டை நோக்கி.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு, உள் நுழைந்து பார்த்தான். வாயில் நுரை தள்ள செத்துக்கிடக்கிற மூக்கையா. விவசாய வீட்டில் மிச்ச மிருந்த ஒண்டோ சல்பான் மருந்தை குடித்து மாண்டு கிடக்கிற மூக்கையா.

“வாத்தியாரின் தண்டனை முறையால், அவமானம் தாளாமல்... தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன்”

மறுநாளே... காவல்துறை, கல்வித்துறை, தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள் என்று பெரும் சூறாவளியே இந்தக் கிராமத்தில் நின்று சூழல...

பள்ளியை சுருட்டி சூறை யாடுகிற சூறாவளி.

சூறாவளியால் தீண்டப்படாமல்... கவனிக்கப்படாமல்... விடு பட்ட சாமிநாதனுக்குள்... பேயறைந்த மாதிரி யோர் சவநெடி. குற்ற உணர்வின் பாரத்தில் திணறுகிற மனதின் முணுமுணுப்பு.

“மூக்கையாவை நாந்தான் கொன்னுட்டேன்... நாந்தான் கொன் னுட்டேன்... நாந்தான் கொன்னுட் டேன்...”

உள் மனமுள்ளாக நின்று உறுத்திய இந்த நினைவு, சாகும் காலம் வரை வதைத்தது, சாமி நாதனை.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com