Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006

மேடு பள்ளங்களும் வளைவு நெளிவுகளும்
- எம். அசோகன்

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு வீரப்பனால் கடத்தப்பட்டது சம்பந்தமான ஒரு வழக்கில் அப்போது உச்சநீதிமன்றம் ‘சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லையென்றால் எஸ்.எம்.கிருஷ்ணா அரசாங்கம் பதவியை விட்டு விலகட்டும்’ என்று கருத்து கூறியது. இது குறித்து கடந்த அக்டோபர் 19ம் தேதி ஹிந்து நாளிதழில் ஒரு வாசகர் தன் கடிதத்தில் “அப்படி அவர் ராஜினாமா செய்திருந்தால் அன்றைய பதட்டமான சூழலில் உச்சநீதி மன்றத்தால் கர்நாடக மாநிலத்தை நிர்வகித்திருக்க முடியுமா?” என்று கேள்வி கேட்டிருந்தார். எவ்வளவு அர்த்தம் பொதிந்த கேள்வி!

ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகள்தான் ஆட்சி செய்ய முடியும். அது எந்த வகை ஜனநாயகமாக இருந்தாலும் சரி. நீதிமன்றங்கள் ஆட்சி செய்ய முடியாது. ஆனால் இப்போது நீதிமன்றங்கள் ஆட்சி செய்ய முயற்சிக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதுவும் மக்கள் விருப்பத்திற்கு மாறாக நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால் தானே மக்கள் விருப்பம் என்னவென்று அவர்களுக்குத் தெரியும்?

அவர்களோ நியமிக்கப்படுகிறவர்கள். அதுவும் மக்கள் பிரதிநிதிகளால் நியமிக்கப்படுகிற முறையே நீண்ட காலமாக இருந்தது. அதில் அரசியல் தலையீடு இருக்கிறது என்று சொல்லி உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஏற்கனவே நீதிபதிகளாக இருப்பவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. தீட்டிய மரத்திலேயே பதம் பார்ப்பது போல் அவர்கள் அரசாங்கத்தையே, பாராளுமன்றத்தையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வழக்கொன்றின் விசாரணையின் போது அதன் அறிக்கையை முதலில் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தனைக்கும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அப்படிச் செய்து விடாதீர்கள் என்று மன்றாடி இருக்கிறார். செவி சாய்க்காமல் உத்தரவு போட்டுவிட்டு பின்னர் வாபஸ் பெற்றுள்ளது. ஆனால் முதலில் அந்த சிந்தனை அதற்கு வந்ததே குற்றம். முன்னாள் நீதிபதிகள் பலர் இன்றைய நீதிபதிகளின் கூற்றை விமர்சித்திருக்கிறார்கள்.

பாருங்கள். தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகார வரம்பை மீறுகிற சம்பவங்கள் நடக்கின்றன. நீதிமன்றம் தன்னுடைய அதிகார வரம்பை மீறுகிறது. அதுவும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபைகளின் அதிகாரத்தை ஆக்கிரமிக்க முயல்கின்றன. இதன் உண்மையான அர்த்தம், சரியோ தவறோ மக்களின் விருப்பத்தை அவை மதிக்க மறுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்க ஆரம்பித்திருக்கின்றன. அல்லது மக்கள் கருத்துக்கள் என்னவென்றே அவற்றிற்குத் தெரியவில்லை. எப்படித் தெரியும். அவை ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லையே! இது ஒரு தனிப் பெரும் பிரச்சனை. இங்கே அதைப் பற்றி விவாதிக்க இடமில்லை.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே ஒரு மோசடி. ஏதேனும் குற்றச்சாட்டில் ஒருவர் சிறையில் அடைக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் ஜாமீன் கேட்கிறார். நீதிமன்றமும் கொடுக்கிறது. ஐயாயிரமோ, பத்தாயிரமோ ஏதோ ஒரு தொகையை பிணைத் தொகையாகக் கட்டச் சொல்கிறது. எல்லோரும் கட்ட முடியுமா என்ன? மாத வருமானம் வெறும் ஆயிரம் ரூபாய் கூட இல்லாதவர்கள் நம் நாட்டில் பல கோடி. மேற்சொன்ன ஒருவர் அவர்களில் ஒருவராக இருந்தால் பிணைத் தொகை கட்டமுடியாமல் அவர் சிறையிலேயே வாட வேண்டியது தான். அப்படி பெயில் கிடைத்தும் வெளியில் வர முடியாதவர்கள் நாட்டின் சிறைகளில் ஏராளமானோர் இருக்கின்றனர். அதாவது, பணம் இருப்பவனுக்குத் தான் உரிமை. இதற்குப் பேர் சமத்துவமா?

சரி. நம் பிரச்சனைக்கு வருவோம். உச்ச நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட வழக்கில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டியவை என விதித்திருக்கும் நிபந்தனைகள் கிட்டத்தட்ட இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று சில அரசு அதிகாரிகளே கருதுகிறார்கள். அது உண்மையும் கூட!

சம்பந்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட தன்மை, பொது வேலைவாய்ப்பில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாமை, அதற்கான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படவேண்டும். பொதுவான நிர்வாகத் திறமை போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவை தான் நிபந்தனைகள். இவை வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு நடைமுறையையே மிகவும் சிக்கலாக்குகிறது. அரசாங்கங்கள் என்ன செய்யப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பல கட்சிகள் உச்சநீதி மன்றத்தின் கூற்றை விமர்சித்திருக்கின்றன.

ஆனால், அதை விட முக்கியமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வேலை வாய்ப்புகளில், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் போது அவர்களில் வசதியும் அந்தஸ்தும் உடையோருக்கு வழங்கக் கூடாது என்றுத் தீர்ப்பு கூறியுள்ளது. இது தான் இப்போது முக்கியப் பிரச்சனை.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது வசதி அடைந்துள்ளோரை தவிர்க்க வேண்டும் என்பது நியாயம்தான். ஆனால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அப்படிச் செய்யக் கூடாது. ஏனெனில் அவர்கள் இன்றும் பல வழிகளில் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் மிகச்சிறு பகுதியினர் பொருளாதார ரீதியாக சற்று முன்னேறி இருந்தாலும் அவர்களது சமூக அந்தஸ்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. வாடகைக்கு வீடு கூட கிடைக்காது. இதர மேல் சாதியினர் தரமாட்டார்கள். பாப்பாபட்டி, நாட்டார் மங்கலம், கீரிப்பட்டிகள் இன்னும் இருக்கும் இன்றைய நிலையில் அவர்கள் விஷயத்தில் “கிரீமிலேயர்” கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்பது சமூக நீதி கோட்பாட்டிற்கே எதிரானதாகும்.

மேலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களே இன்னும் பெரும்பாலான துறைகளில் நிரப்பப்படவில்லை. அதற்குள் நீதிபதிகள் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் அவர்கள் விஷயத்தில் கிரீமிலேயர் சூத்திரத்தை பிரயோகிக்க வேண்டும் என்பது நியாயமில்லை. அறிவுடமையும் இல்லை. எப்படியேனும் இட ஒதுக்கீட்டிற்கே சமாதி கட்ட வேண்டும் என நினைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் இந்த நேரத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும்போது கிரீமிலேயரைப் பிரயோகிக்க வேண்டும் என்கிற வாதத்தில் உள்ள நியாயத்தை விளக்கியாக வேண்டும். இதையும் சிலர் சமூகநீதிக்கு எதிரானது என்கிறார்கள். அவர்கள் இந்தியாவில் வர்க்கமே கிடையாது. சாதி மட்டும்தான் இருக்கிறது என்று ஒரே போடாகப் போடுகிறார்கள். வசதி படைத்தவர்கள்தான் உயர் கல்வி வரை முன்னேற முடியும். அவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றால் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்குப் போதுமான தகுதி படைத்தவர்கள் இல்லாமல் போய்விடும். அப்போது அந்த இடங்களையும் பார்ப்பனர்களே ஆக்கிரமித்துக் கொண்டு விடுவார்கள். அதனாலேயே கிரீமிலேயர் வலியுறுத்தப்படுகிறது என்று வாதிடுகிறார்கள்.

முதலில், இந்தியாவில் வர்க்கமே கிடையாது என்பதைப் போல் அபத்தம் வேறு இருக்க முடியாது. வர்க்கமே இல்லையென்று சொல்வதன் அர்த்தம் என்னவெனில், இந்தியாவில் சமூக உற்பத்தியே இல்லை. வெறும் முதல் மட்டும் போடுகிற முதலாளியோ அவரிடம் உழைப்பை விற்கிற தொழிலாளியோ இல்லை என்பதாகும். இன்னும் எளிமையாகச் சொல்வதானால் இந்தியாவில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடே இல்லை என்பதாகும். இப்படிப் பேசுவது பணக்காரர்களுக்கு, அதாவது, சுரண்டும் வர்க்கத்திற்குச் சாதகமானதாகும். பாகுபாடே இல்லை என்றால் பாகுபாடுகளை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்காதே?
இரண்டாவதாக, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் கோட்பாட்டை முன் வைக்கிறவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வேண்டுமென்றே புரிந்த கொள்ளாமல் அல்லது அதன் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு இது பார்ப்பன சதி என்று புருடா விடுகிறார்கள்.

27 சதவீத ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்டோருக்குத்தான். அதில் எந்த சந்தேகமும் யாருக்கும் தேவையில்லை. ஒரு கல்வி நிறுவனத்தில் 100 இடங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் 27 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு. அந்த இடங்களுக்காக விண்ணப்பிக்கிறவர்களில் வசதி படைத்தவர்களைக் கழித்த பின் தகுதி வாய்ந்த 27பேர் மீதி இருந்தால் பிரச்சனை இல்லை இடம் கிடைத்து விடுகிறது. அப்படி இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்தப் பற்றாக்குறை இடங்களை வசதி படைத்தவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும். எப்படி ஆயினும் அந்த 27 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்குத்தான். முன்னுரிமை அந்த சாதிகளைச் சேர்ந்த ஏழைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் கிரீமிலேயர் சூத்திரம். இப்படித்தான் இருக்க வேண்டும். வேறு மாதிரி இருந்தால் அதாவது அந்த இடங்கள் ஏழைகளுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட வேண்டும் என்றோ, போதுமானவர்கள் இல்லை என்றால் அவற்றை காலியாக வைக்க வேண்டும் என்றோ அல்லது பொதுப் பட்டியலுக்கு மாற்றிவிட வேண்டும் என்றோ யாரும் கூறவில்லை. அப்படிக் கூறினால் அது தவறு. ஆனால் இது தெரிந்தும் தெரியாதது போல் ஏழைகளில் போதுமானக் கல்வித் தகுதி பெற்றவர்கள் இல்லாமல் போய், அந்த இடங்களை பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொள்வார்கள் என்று கூறுவதும், பார்ப்பன சதி என்று எதிர்ப்பதும் உண்மையில் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள ஏழைகளுக்கு எதிரான சதியாகும். பிற்படுத்தப்பட்டோரில் உள்ள உடமை வர்க்கத்தவரின் சதியாகும். இவர்களில் பலர் இப்போது கல்வி வியாபாரிகளாக உள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற சூழலில் கிரீமிலேயர் பிரயோகிக்கப்பட்டால் இஷ்டம் போல் கட்டணக் கொள்ளை அடிக்க முடியாதே!

இந்திய சமூதாயம் ஒன்றும் விரித்து வைத்த பாய் போல் சமமானது இல்லை. அதே போல் அடுக்கடுக்கான சமதளங்களைக் கொண்டதும் அல்ல. ஒவ்வொரு தளத்திலும் மேடு பள்ளங்களும், வளைவு நெளிவுகளும் உள்ளன. போதாததற்கு வளர்ச்சிப் போக்கில் புதிய புதிய முரண்பாடுகளும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. எனவே எந்தப் பிரச்சனைக்கும் ஒரு பொது சூத்திரம் என்பது சாத்தியமில்லை. பிரச்சனைகளின் தனித் தன்மைக்கு ஏற்ப தனித்தனி தீர்வுகள் தேவை.

இடஒதுக்கீடு விஷயத்தில் ஒரு பக்கம் சிலர் சமூக நீதியையே குழிதோண்டி புதைக்க முயல்கிறார்கள். இன்னொரு பக்கம் வேறு சிலர் அதைத் தாங்கள் மட்டும் தான் என்றென்றும் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இரு போக்கிற்கும் எதிரான போராட்டமே முழுமையான சமூகநீதிக்கான போராட்டமாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com