Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
அருந்ததிராய்க்கு கெய்ல் ஓம்வெத்தின் திறந்த கடிதம்...
குறிப்பும்,மொழிபெயர்ப்பும்: சங்கர ராம சுப்ரமணியன்

அதிகாரம் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டியது அவசியமானது. அதன் மௌனங்களைப் பற்றி பேசவேண்டியதும் முக்கியமானது. அதிகாரத்தின் ஒடுக்குதல்களையும், அதன் மௌனங்களையும் பேசிப் பேசி மெதுமெதுவாக அதிகாரத்தின் இடத்திற்குச் சற்று அருகே வரும் மாற்று அதிகாரத்துள் பதுங்கியுள்ள இடைவெளிகளைக் கவனிப்பதும், அதுகுறித்த உரையாடலைத் திக்குமுக்காடியாவது தொடங்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். சில சமயங்களில் மாற்றுக்குரல்கள், மற்றும் அவற்றின் தர்க்கங்களை (Political Correctiveness) மிகுந்த உடல்கள் பேசத் தொடங்கி மாற்றுக்குரலால் கிடைக்கும் மாற்று அதிகாரத்தில் பங்குபெறுகின்றன. அந்த அந்தஸ்தை அடைய மாற்றுக் குரல்களை முன்வைக்கும் ஆளுமைகள் திருவுருக்கள் ஆக்கப்படுகின்றன. அப்போது ஒரு தரப்பின் அடிப்படை பிரச்னை நீர்த்துப் போய் சடங்கார்த்தமாய் மோஸ்தராய் பிரச்னைகள்மாறிப் போகின்றன. சென்ற நூற்றாண்டில் உருவான படித்த நகரத்து நடுத்தர வர்க்கத்தினர் (Elite Class) தான் இன்று எல்லா பிரச்னைகளிலும், எல்லா இயக்கங்களிலிருந்தும் அடிப்படைகளை தீர்க்க வைக்கும் அபாயமானவர்களாய் மாறியுள்ளனர். பிரச்னைகள் பற்றிப் பேசிப்பேசி எந்த அனுகூலமும் ஏற்படாமலே - அதிகாரம் பெறும் இந்த வர்க்கத்தினரே எவ்வளவு சிக்கல் வாய்ந்த தரப்பையும் தீர்க்கச் செய்பவர்களாய் இருக்கின்றனர்.

அவ்வகையில் இன்று இந்தியா முழுவதும் மேதாபட்கர், அருந்ததி ராய் போன்றவர்களின் மாற்றுக் குரல்கள் திருவுரு அந்தஸ்தை அடைந்துள்ளன. இவர்கள் போராடும் புலங்களில் இவர்களின் உழைப்பும், முனைப்பும் நிறைய சாதகமான மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளதை நாம் மறுக்க முடியாது.

ஆனாலும் இத்திருவுருக்கள் பின்னால் உறைந்திருக்கும் மௌனமும், விடுபடுதல்களும் கிளறப்பட வேண்டியுள்ளது. கெய்ல் ஓம்வெத் இக்கடிதத்தின் மூலம் அப்பேச்சைத் திறக்கிறார். கிராமிய வாழ்க்கை, வேளாண்மை, மரபு என்பவற்றின் மீது நகர்புறத்தவர்கள் வைத்திருக்கும் புனிதங்கள், முன் தீர்மானங்கள், அக்கறைகள் மற்றும் அனுதாபங்களை இக்கடிதம் சீண்டக் கூடியது...

பாசத்திற்குரிய அருந்ததி

உங்களுக்கு ஒரு விமர்சனப் பூர்வமான கடிதத்தை எழுதுவதற்கு வருத்தப்படுகிறேன். தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் (The God of Small Things) புத்தகத்தை மிகவும் விரும்பிப் படித்தேன். அணுப் பரிசோதனை பிரச்சனையிலும் உங்கள் இடையீடை மிகவும் பாராட்டிடவே செய்தேன். தலித் சாகித்ய அகாதமிக்கு, உங்க ளுக்கு கிடைக்கும் ராயல்டி தொகை யில் இருந்து கொஞ்சத்தை நீங்கள் நன்கொடையாக தரத் தீர்மானித் திருப்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் படித்து மிகவும் கவரப்பட்டேன்.

``பெரிய அணைகள்” பிரச்சனை என்று வரும்போது சமவெளியில் உள்ள மக்கள் பற்றியும், வளர்ச்சித் திட்டங்களால் தவறாக வழி திருப் பப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் நீங்கள் உணரும் பதற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடி கிறது. இருப்பினும் நீங்கள் நிறைய விஷயங்களை தவறவிடுவதாய் நான் உணர்கிறேன்.

அணையால் பாதிக்கப்படுபவர் கள் தொடர்பானது மட்டுமல்ல, வறட்சியால் வாதையுறுபவர்கள், விவசாயத்திற்கான நீர் ஆதாரப் பிரச்னைகள், மக்கள் இயக்கங்களில் உள்ள ஜனநாயகம் பற்றி முக்கியமான கேள்விகள் இருக்கின்றன.

என் அனுபவங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும் புகிறேன். மகாராஷ்ட்டிர மாநிலத் தின் வறட்சி மற்றும் தண்ணீர் பிரச்னைகள், சிறிய அணைகள் கட்டுவதற்காக மக்களை வெளியேற்று வதற்காக நடந்த எதிர்ப்பு இயக்கங்கள், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த விவசாயிகளும், விவசாயக் கூலிகள் மற்றும் வடக்கு மகாராஷ்டிரத்தில் (நர்மதைக்கு அருகில்) உள்ள ஆதி வாசிகளுடனும் உள்ள அனுபவங் களை குறிப்பாகச் சொல்ல விரும்புகிறேன்.

1984-ஆம் ஆண்டிலேயே நான் நர்மதா அணையைப் பற்றி கேட்டி ருந்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘ஸ்ராமிக் முக்தி தள்’ மற்றும் ‘ஸ்ராமிக் சங்காதனா’ (துலே மாவட்டத்தின் ஆதிவாசி அமைப்பு) ஆகியவை அக்கல்குவாவில் ஒரு தர்ணாவை ஏற்பாடு செய்து மகாராஷ் டிராவில் வெளியேற்றப்பட்டவர் களுக்கு மாற்று நிலங்களை மாநிலத் திற்குள்ளேயே வழங்க கேட்டு மனு ஒன்றை கொடுத்தது. அதோடு சர்தார் சரோவருக்கான மாற்றுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது. பருவ மழைக்காலத்தின் போது நடந்த நிகழ்ச்சி அது. எனக்கு ஞாபகம் கொள்ள முடிகிறது. நாங்கள் மைல் கணக்கில் சாரல் மழைத் தூறல்களி னூடாக உரையாடலின் மகிழ்ச்சி யிலும் அறிவார்த்தப் புதிர்களை இட்டபடி நடந்ததை. அப்பிராந் தியத்தின் குக்கிராமங்களில் ஒன்றில் தீப்பெட்டி வெளிச்சத்தில் ஓர் எளிய உணவு சாப்பிட்டதை.

அதற்கு சற்றுப் பின்னர் 1986ம் ஆண்டு ஸ்ராமிக் சங்காதனாவின் சில செயலாளிகள் மற்றும் எஸ்.எம்.டி -யினர் சேர்ந்து ``ஆதிவாசி வனக் கருத்தரங்கு” ஒன்றை ஷஹாடாவில் நடத்தினர். அம்மாவட்டத்தின் சமூக அரசியல் செயலாளிகளை ஒன்று திரட்டுவதற்கு உதவி செய்வதற்காக நான் துலே மாவட்டத்துக்கு வந்தி ருந்தேன். மேதா, முதல் முறை அம் மாவட்டத்தை பார்வையிட்டு சென்றிருந்ததற்கு அப்புறம் நடந்தது இது. அவர் அகமதாபாத்தைச் சேர் ந்த அச்யுத் யாக்னிக்குடன் நர்மதாவை கடந்திருந்தார்; அவர்களுடைய படகு மறிக்கப்பட்டது. இருப்பினும் எப்படியோ அவர்கள் துலே மாவட் டத்திற்கு பார்வையிட வந்தனர். ஸகாடாவில் ஸராமிக் சங்காதனா இயக்க மக்களை பார்ப்பதற்காக பயணத்தை நிறுத்தினார். சராபின் ஸங்காதனா என்பது அந்த மண்ட லத்தின் முக்கிய ஆதிவாசி உழைப் பாளர் அமைப்பாகும். பிறகு துலே வந்து அவர் ஒரு உதவி அமைப்பை நிறுவினார். எல்லாம் சரி. இதில் இரண்டு விமர்சனக் கேள்விகள் எழு கின்றன. ஒன்று என்னுடையது. மேதா அந்த சமயத்தில் வெளியேற்றப்பட்ட வர்களுக்கான நீதி கோருவதில் உலக வங்கியின் வழிகாட்டுதல் குறிப்பு களைப் பின்பற்றினார். இந்த வழி காட்டுதல்களை மாற்று நிலங்களை பெறுவதற்கு ஆண் குடும்பத் தலை வர்கள் மட்டுமே தகுதி உடையவர் கள் என்றது. பெண் களுக்கும் நிலம் வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது ஏற்கனவே கேட்கத் தொடங்கியிருந்தோம். மறுவாழ்வுச் செயல்பாட்டிலும் புதிய வாழ்க்கை யைத் தொடங்குவதிலும் நிலமில் லாமல் பெண்கள் நிராகரிக்கப்படுவது மிகவும் மோசமானதென நான் உணர்ந்தேன்.

அது ஒரு சிறிய பிரச்னை தான். திரும்பிப் பார்க்கையில், அக்காலத் தில் இளம் ஆதிவாசி செயலாளியாக ஸ்ராமிக் சங்காதனா இயக்கத்தில் ஈடுபட்டிருந்த வகாரு சோனாவனே எழுப்பிய முக்கிய எதிர்வினை ஒன்று ஞாபகம் வருகிறது. சுயமான தனித்து வமுடைய தலைவர் அம்பார்சிங் மகராஜ் உடன் வகாரு இந்த இயக்கத் தில் 1971-72-லிருந்து பணி புரிகிறார். வகாரு ஒரு கவிஞர் மற்றும் அறிவாளி. ஆங்கிலம் பயில்வதற்கான வாய்ப்பே பெறாதவர். இயக்கங்களுடன் அவருக்கு வருடக் கணக்கில் ஏற்பட்டிருந்த அனுபவத்தில் இருந்து அவர் எழுதிய கவிதையின் சில வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதற்கு ஆங்கிலத்திலேயே தலைப்பு கொடுக் கப்பட்டுள்ளது. (இது மராத்தியிலும் அப்படியே வருகிறது)

“ஸ்டேஜ்” (மேடை) :
நாங்கள் அழைக்கப்படவுமில்லை / நாங்கள் மேடைக்கு போகவில்லை / உட்காருவதற்கு /எங்களுக்கான இடங்கள் காட்டப்பட்டன / ஆனால் அவர்கள் / மேடையில் அமர்ந்திருக் கிறார்கள். எங்கள் துயரங்களைப் பற்றி / எங்களுக்குச் சொல்கிறார்கள் / எங்கள் துயரங்கள் எங்களுடைய தாகவே இருந்தன / அவை அவர் களுடையதாய் மாறவே இல்லை. இன்னும் வரிகள் உள்ளன. ஆனால் கவிதையின் ஆதார மையம் இதுதான். அணைத் திட்டத்துக்கு எதிரான இயக்கத்தில் மேதா தனக்கு முன்னால் இந்தப் பிரச்னைக்காக இயங்கியவர் களுக்கு அங்கீகாரம் தரவேயில்லை. இதுவும் வகாரு எழுப்பிய ஆட்சேபனைதான். மிகச் சமீபத்தில் கூட என்.பி.ஏ. (நர்மதா பச்சாவ் அந்தோலன்)-ஐச் சார்ந்த சஞ்சய் சங்வியிடம், வகாரு ஒரு கேள்வியை எழுப்பினார். ``என்.பி.ஏ.-வின் உயர் மட்டத் தலைவர்களில் ஏன் ஆதி வாசித் தலைமை இல்லை?”. புனே பல்கலைக் கழகத்தில் பெண்கள் கல்வி மையம் ஒருங்கிணைத்த கருத் தரங்கில் எழுப்பப்பட்ட கேள்வி இது. சஞ்சய் பதிலளிக்க இயலாமல் ``எங்கள் கிராமத்து தலைவர்கள் எல்லாம் ஆதிவாசிகள் தான்” என்றார். இது பதிலல்ல. உங்களால் புரிந்து கொள்ள இயலுமென்று நம்புகிறேன். நீங்கள் வேலை செய்யும் கிராமங்கள் எல்லாமும் நூறு சதவீதம் ஆதிவாசிகள் வாழ்வது. முழுக்க படித்த, மேல் தட்டு நகர மக்கள் மட்டுமே ஏன் தலைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் திரட்டும் கிராமப்புற ஏழைகளிடம் கொண்டிருக்கும் உறவின் ஜனநாயகம் என்பது தான் உண்மையில் என்ன?

ஆதிவாசி மற்றும் ஆதிவாசிகள் அல்லாத விவசாயிகளின் பின்பற்று தலில் என்.பி.ஏ.வின் தலைமை எப்படி தொடர்பு கொள்கிறது. அதோடு எப்படி பிரதிநிதித்துவப்படுத்து கிறது என்பது குறித்த உண்மையான கேள்விகளாய் அவை இருந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் நிபுண ராய் இருக்கக் கூடிய பகுதி குறித்த கேள்வியும் அதில் ஒன்று. அது ``சொற்கள்” குறித்தது. ஏன் ``பழங்குடி” என்ற வார்த்தை பயன்படுத்தப்படு கிறது? இந்தியாவில் ஆங்கிலம் பேசும் ஒவ்வொருவரும், என்.பி.ஏ.வின் ஆதரவாளர்களும், மற்றும் செயலாளி களில் பெரும் பாலானவர்களும் ஆதிவாசிகளை குறிக்க “Tribal” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார் கள். (இந்திய மொழிகளில் ஆதி வாசி என்ற பொதுச்சொல் தான் பயன் படுத்தப்படுகிறது) பழங்குடி என்ற வார்த்தை,. புண்படுத்தக் கூடிய, மதிப்பில்லாத சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்த்தால் கூட துல்லியமற்ற ஒரு வார்த்தை.

உலகெங்கும் வாழும் தனித்து வமான குடிகள் யாரும் இவ்வார்த் தையால் தங்களைக் குறிப்பதற்கு அங்கீகரிப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவில் மட்டும் இவ்வார்த்தை உயிர்த்திருப்பதற் கான ஒரே காரணம் ஆதிவாசி களிடையே கல்வி நிலை மோசமாய் இருப்பதுதான். யாரும் எதிர்க்கும் நிலையில் இல்லாதவாறு ஆங்கிலக் கல்வியும் மோசமாக உள்ளது. இல்லையெனில் பெரிய அளவிலான ஆட்சேபங்கள் இவ்வார்த்தைக்கு இருந்திருக்கும். தலித்துகள் ``ஹரிஜன்” என்ற பெயரை தூக்கி எறிந்தது போல. திரு. சங்மா போன்ற ``ஷெட் யூல்ட் ட்ரைப்” என்று வகைப்படுத் தப்பட்ட வடகிழக்கு வாழ் இந்திய மக்கள் ``மலைப் பழங்குடிகள்” என அழைக்கப்படுவது குறித்து தங்கள் உணர்வுகளைத் தெளிவாய் தெரி வித்து உள்ளனர். ஆங்கிலத்தில் ``பழங்குடி” என்பது பரவலாக பயன் படுத்தப்படுகிறது. இன்னும் அந்த வார்த்தை யாரைக் குறிக்கிறதோ அவர்களின் அடையாளங்களையும் உண்மையான உணர்வுகளையும் பற்றி சிறிது கவனமில்லாதவர் களாகவே அவர்களைப் பிரதிநிதித் துவப் படுத்தும் நபர்களும் இருக் கிறார்கள் என்று நான் எண்ணு கிறேன். அவர்களில் நீங்களும் என்.பி.ஏ. வும் சேர்ந்திருப்பின் நீங்களும் அதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

எப்படியிருப்பினும் வகாருவின் ஆட்சேபனை எல்லாம் அவர்களின் முந்தைய போராட்டங்களை அங்கீ கரிக்காமல் இருந்ததே; நர்மதா அணை எதிர்ப்பு இயக்கத்தின் மிக ஆரம்பக் கட்டம் அது, அப்போது வரை என்.பி.ஏ. இல்லை. அதோடு மேதாவும், மற்றவர்களும் முக்கிய மாக மறுவாழ்வு அளிப்பதை மட்டுமே பேசிக் கொண்டிருந்தார் கள். அது வரை பெரிய அணைத் திட்டங்களுக்கான மொத்த எதிர்ப்பு உருவாகவில்லை. ஆனால் மற்றவர் களின் பணிகளை அங்கீகரிக்காத மனப்போக்கு அல்லது மற்ற போராட்டங்களின் வரலாற்றை அனுமதிக்க விரும்பாத தன்மையும் அப்போதே இருந்து கொண்டிருக் கிறது. என்.பி.ஏ-வை உருவாக்கு வதற்காக வெவ்வேறு மாநிலங்களில் இருந்து ``மக்கள் அமைப்புகள்” ஒன்றிணைந்தன என மிக எளிதாக நீங்கள் எழுதிவிடலாம்.

இந்த அமைப்புகள் மேதாவாலும் அவருடனிருந்தவர்களாலும் அமைக்கப்பட்டவை. மகாராஷ்ட் டிர மாநிலத்தில் மறு வாழ்வு பிரச்னைகளுக்காக வேலை செய்யும் பெரிய ``மக்கள் அமைப்புகள்” மகாராஷ்டிர ராஜ்ய தரங்ரஸ்ட் வா பிரகல் கரஸ்ட் சேத்காரி பரிஷத் தான். இந்த அமைப்பு 1970-லிருந்து இயங்கி வருகிறது. உள்ளூர் பிரச்சனை களுக்காக ஒன்று கூடிப் போராடு வதற்கான பரந்த தளமாக இவ் வமைப்பு செயல்படுகிறது. இந்த இயக்கத்தின் ஆரம்ப கட்டத் தலைவர் களில் ஒருவராக சோக்ஷலிஸ்ட் பாபா ஆதவ் இருந்திருக்கிறார். ஜாதி எதிர்ப்பு பிரச்சாரங்களில் மிகவும் ஈடுபட்டிருந்தவர். கம்யூனிஸ்ட்டான தத்தா தேஷ்முக், சுதந்திர மார்க்சிய வாதியும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவருமான நாகநாத் நய்குடி, ஸ்ராமி முக்தி தள் அமைப்பைச் சேர்ந்த பரத் பதாங்கர் ஆகிய பலர் இவ்வியக்கத்தில் ஈடுபட்டிருக்கின்ற னர். இவர்கள் அணைத் திட்டத்தால் வெளியேற்றப் பட்டவர்களுக்கான பிரச்னைகளை விட வேளாண்; நீரா தாரப் பிரச்னைகளில் அதிகம் ஈடு பட்டிருப்பவர்கள்.

நீரின் அர்த்தம் :

இந்த அமைப்புகளில் உள்ளவர் கள் மக்கள் அணைகளின் சமூக நீதி மற்றும் நீரை நிலைத்த ஆதாரமாய் பயன்படுத்துவது குறித்து அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள் வெறு மனே அணைத் திட்டங்களை எதிர்க் கவில்லை. அவர்களின் போராட்டத் தின் முக்கிய கோஷம் இதுவே, ``முதலில் மறுவாழ்வு, பிறகு அணை” பின்னால் இக்கோஷம் ``சமநீர் விநியோகத்துக்கு” நீர்பாயும் பகுதி களில் உள்ள ஒவ்வொரு கிராமத் திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற் கும் நீர் கிடைக்கச் செய்வதென்று நீட்டிக்கப்பட்டது.

பரத் பதன்கர் (என் கணவர், பார்வைக்கு சில விஷயங்களை வைக்க)-ம் மற்றவர்களும் சாங்லி மாநிலத்தில் குடியானவர்கள் கட்டிய சிறிய (பாலி ராஜ்ய நினைவணை) அணைக்காக ஒரு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அது இரு கிராமங் களை நீர் பாய்ச்சி வளப்படுத்து கிறது. இந்த அணையை என்.பி.ஏ. அமைப்பு அங்கீகரிக்கக் கூடிய மாதிரியாக எடுத்துக் கொண்டது. அதுவரை அவர்களும் நாங்களும் ``பெரிய அணைகள்”-ஐ எதிர்க்கவே இல்லை. அதுவரை மேதா மக்களின் மறு வாழ்வுக்காக போராடுவதில் இருந்து மாறி பெரிய அணைகளை எதிர்க்கத் தொடங்கிய போது பரத் தும் கொய்னா அணைத் திட்டத்தில் வெளியேற்றப்பட்டவர்களுக்காக பல பத்தாண்டுகளுக்கு முன் நில மிழந்த விவசாயிகளுடன் சேர்ந்து கொய்னா அணைகட்டும் போது தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அடிப் படையிலேயே அழிவுத் தன்மையில் லாத, காட்டின் முக்கியப் பகுதிகளை மூழ்கடிக்காத சில பெரிய அணை கள்தான்-அதில் கொய்னாவும் ஒன்று -இருக்கிற தென்று உணர்ந்தார்.

ஒருவருக்கு ஏன் ``பெரிய அணைத் திட்டங்கள்” அல்லது ``பெரிய விவசாயத் திட்டங்கள்” தேவையாய் இருக்கிறது. அருந்ததி, அங்கே அது மிக எளிய கேள்வி. ஆனால் நகர மக்களுக்கு இது புரிந்து கொள்ள கடினமானது தான் - இது கேலியாக புரிந்து கொள்ளப்படக் கூடாதென்று நான் விரும்புகிறேன். தண்ணீர் குடிப்பதற்காக மட்டுமல்ல பாசனத் திற்கும் தேவைப்படுகிறது. என்.பி.ஏ. வின் ஆவணங்கள் குடிநீர் பற்றி நிறைய பேசியிருக்கின்றன. ஆனால் அவை நீர் பற்றி அதிகம் சொல்ல வில்லை. மகாராஷ்டிர மாநிலத்தின் கிருஷ்ணா சமவெளிப் பகுதியின் முக்கால் பகுதியும், சௌராஸ்டிரா, கட்ச் பகுதிகளை உள்ளடக்கிய குஜராத் தின் பெரும்பகுதியிலும் ஆண்டுக்கு 500 மி.மீ மழையே பெய்கிறது. மழை நீர் போக கால்வாய்கள் மூலம் கொஞ்சம் நீரும் அவசியம். இப்பகுதி களில் வாழும் லட்சக் கணக்கான மக்கள் வறட்சி யால் பாதிக்கப்பட்ட வர்கள். சேதமுற்ற பயிர்களாலும் துவண்டு வெடிப்புற்ற நிலங்களாலும் துக்கித்து இருப்பவர் கள். அவர்கள் வாழ்வைத் தேடி தங்கள் நிலங்களி லிருந்து நகரங்களுக்கு விரட்டப்படு பவர்கள் அல்லது கரும்பு வெட்டு வதற்கு கூலியாகச் சென்று இடம் பெயர்பவர்கள்.
அணைத்திட்டத்தால் வெளி யேற நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் இடம் பெயராமல் ஒரு மாற்று ஏற்பாட்டை விரும்புவது போல் அவர்களும் அவர்களது இருப்பிடத் திலேயே இருந்து வளப்படுத்திக் கொள்ள முயலலாம். இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்தே ஆயிரக் கணக்கான அணைகள் கட்டப்பட்டு மக்கள் வெளியேற்றத்துக்கும், நிலங் கள் மூழ்குவதற்கும் காரணமாய் இருக்கிறது என்று நீங்கள் சொல் கிறீர்கள். ஆனால் இது உண்மை யல்ல. எண்ணற்ற விவசாயிகள் பாசன நீரால் பயனடைந்திருக்கிறார்கள். லட்சக் கணக்கானோர் இதைக் காண முடியாவிட்டாலும் இது போன்ற பலன்களையும் விரும்பவே செய்கிறார்கள். பிரமாண்டமான பாசனத் திட்டங்களுக்கு எதிராக இதுவரையிலான நமது தர்க்கங்கள் இல்லை. ஆனால் மோசமாக உருவாக் கப்பட்ட கருதுகோளுக்கு எதிராக நமது தர்க்கங்கள் இருக்கின்றன. மையப் படுத்தாத பண்பில் பெரிய திட்டங்களை நிலைத்த பயனுடைய தாக மாற்ற முடியும்.

நூற்றாண்டுகளுக்கு முன்பு குறைவான மழை பெய்யும் பிரதேசங் கள் பெரும்பாலும் ஆயர் குடியின ரால் நிரம்பியிருந்தன. மக்களால் பாரம்பரிய வாழ்க்கை முறையை தொடர முடிந்தது. அதிக காலம் இது நீடிக்கவில்லை. மக்கள் தொகை பெருகியது. இயற்கை ஆதாரங்களை உணவாகவும், பொருளாகவும் வாழ்க் கைக்கான தேவைகளுக்கு மாற்றும் வழி இன்னும் மேம்பாடடைய வேண்டியிருக்கிறது. உற்பத்தித் திறன் அதிகரித்தே ஆக வேண்டும். இதற்கு பாசன திட்டங்களோ, மற்ற வகை தொழில் நுட்ப மேம்பாடோ அவசிய மாகிறது. குறைந்த மழை பெய்யும் பிராந்தியங்கள் தண்ணீர் சேகரிப்பு தொழில் நுட்பத்தில் புகழடையத் தொடங்கின. அதோடு மழை நீருக்குப் பதிலாக கால்வாய் நீரைத் துணையாக பயன்படுத்தத் தொடங்கினர்.
அணைத் திட்டங்களில் நிலங் களை இழப்பவர்கள் - ஆதிவாசி களாய் இருப்பினும் ஆதிவாசிகள் அல்லாதவர்களும் - விவசாயிகள் தான். அவர்களுக்கு பாசனத்திற்கான நீரின் தேவை நன்கு தெரியும். வளர்ச்சி யால் ஏற்படும் பாதிப்பிற்காக அவர் கள் மறுப்பு தெரிவிப்பது, வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அவர்கள் வளர்ச்சியை பங்கிட விரும்புகிறார்கள். அது நியாயமாகவும் நிலைத்த பலனுடனும் இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறார்கள்.
1991 ஆரம்பத்தில் நான் ஃபெர் குவாவை சந்தித்தேன். நன் சூரத்தில் இருந்து, என்.பி.ஏ. ஆதரவாளர்களால் ``வசதியான” குடியானவர் அமைப்பு எனக் கருதப்படும் அமைப்பின் பிரதிநிதிகளுடன் வந்திருந்தேன். அவர் தீவிரமாக அணைக்கு ஆதரவாய் இருந்தார். நான் வழக்கமான ஆட் சேபங்களைச் சொன்ன போது ஒரு கோப்பையில் அரைப்பகுதி நீர் இருக்கிறது. நீங்கள் அரைக் கோப்பை காலியாய் இருக்கிறதென்கிறீர்கள், நான் பாதி கோப்பை நிரம்பி இருக் கிறது என்கிறேன் என்றார். குஜராத் துக்கு தீவிரமாக நீர் தேவைப்படுகிற தென்றும் சொன்னார். எனக்கு தெரிந்த பெரும்பாலான குஜராத்தி களைப் போலவே எந்த சமரசத்தை யும் விரும்பாமல், வீம்பாகவே இருந்தார். அவரிடம் விவாதிக்கவும் முடியவில்லை. அவர் ஒரு காந்திய வாதி. அவர் பாபா ஆம்தேயையும், மேதாவையும் சந்திக்க விரும்பினார். இருவருமே அவருக்குத் தெரிந்தவர் கள் தான். குஜராத்திகள் தரப்பில் அரசே ஆதிவாசிகள் மற்றும் ஆதிவாசி யல்லாத விவசாயிகளைக் கொண்டு பெரிய பேரணிகளை ஒழுங்குபடுத்தி இருந்தது. அவர்கள் ``அழைத்து வரப்பட்டவர்கள்” என்றே எண்ணு கிறேன். மகாராஷ்டிராவில் என்.பி.ஏ. முகாமிட்டது. ஆதிவாசிகளும், சில விவசாயிகளும் நிமாட் பகுதியில் இருந்து வந்திருந்தனர். மேதாவின் உண்ணாவிரதம் தொடங்கியது. நிமாட் விவசாயிகளிடம் நான் சிறிதளவு பேசினேன். அவர்கள் ஒரு காலத்தில் தங்களை ``ராஜபுத்திரர்கள்” என்று அழைத்துக் கொண்டவர்கள்.

இது அவர்களின் பழைய உயர் நிலையை கோருவதற்கான கௌரவப் பட்டமே தவிர, நான் வாழும் மகாராஷ்டிர கிராமத்திலுள்ள குன்பி - மராத்தா குடும்பங்களின் நிலையிலிருந்து இவர்களின் நிலை ஒன்றும் வித்தியாசமானதல்ல. “இரு பக்கத்தில் உள்ளவர்களும் அமர்ந்து பேசித் தீர்க்க வேண்டும்” என்றார் கள் அவர்கள். “மக்கள்” தான் பேச வேண்டும். அரசு அல்ல. அமைப்புத் தலைவர்கள் கூட அல்ல. அவர்களைப் போன்ற “மக்கள்” மட்டுமே. இருதரப் பிலும் பேச வேண்டு மென்றார்கள். இது நடக்கவே போவதில்லை.

பராரிகளின் அருந்ததி நீங்கள் என்.பி.ஏ.-ஐ ராணுவமாய் அரசு மற்றும் உலக வங்கி போன்ற பெரும் சக்திகளுடன் போரிட வேண்டி இருப்பதாய் பார்க்கிறீர்கள். உலக அளவிலான கூட்டிணைப்புடன், ஓர ளவு கணிசமான பண உதவியுடன் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா விலுள்ள உயர் மத்திய வர்க்கத்தினரின் ஆதரவும் உங்களுக்கு இருக்கிறது. டில்லி, மும்பை மற்றும் நர்மதைச் சமவெளியிலுள்ள சிறிய உள்ளூர் ஆதரவையும் பற்றி இங்கு சொல்ல வேண்டியதில்லை. மேதா குறுக்கு வெட்டான பிளவுகளின் நடுவில் நிற்கிறார். என்.பிஏ.வில் சேர்வதற்கு உலகம் முழுவதிலிருந்து மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், கணக்காளர் எல்லாரையும் சேர்வதற்கு அழைக் கிறீர்கள். பெரும்பாலும் அவர்கள் தொடக்கத்திலிருந்தே அங்கே தான் இருக்கிறார்கள், அருந்ததி.

அப்படியெனில் என்.பி.ஏ. என்பது என்ன? ஒரு ஆதவாசி அமைப்பா? வகாருவைக் கேளுங்கள். அணை கட்டுவதற்காக வெளியேற்றப் படும் நிர்ப்பந்தத்திலுள்ளவர் களின் இயக்கமா? குஜராத்திலும், மகாராஷ் டிராவிலும் மறுவாழ்வுக்காக வேலை செய்யும் அமைப்புகள் வழியாக நிலங்கள் பெற்றுக் கொண்ட சில வெளியேற்றப்பட்டவர்களைக் கேட்டுப் பாருங்கள்.
மக்களைத் திரட்டுவதில் தவறு ஏதும் இல்லை. ஒரு பிரச்னைக்காக அல்லது பிரச்னைக்கு உதவுவதற் காக ஒருவரை முன்வைத்து ஆத ரவைத் திரட்டுவதிலும் தவறில்லை. ``பெரிய அணை” என்ற நிலை பற்றி கருத்து உருவாக்கியதில் என்.பி.ஏ. வெற்றியடைந்திருக்கிறது. அதோடு ``வளர்ச்சி” என்ற ஒட்டு மொத்த மான கருதுகோள் மீது ஒரு பெரிய கேள்விக்குறியை எழுப்புவதிலும். அதற்கு துணை போவதற்கு உங்க ளுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அப்படிச் செய்யும் போது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் யோசியுங்கள். சமவெளியில் உள்ள மக்களின் தலைவர்களாய் செல்லும் போதும் அல்லது வெளியே சமவெளி யிலுள்ள மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் போது உங்கள் தர்க்கங் களின் வழியாக அவர்கள் அடையும் பின்விளைவுகள் என்ன என்பதே கேள்வி? உங்களுடைய தர்க்கங் களை அவர்கள் வாய்களில் நிரப்பு வதில் என்ன அர்த்தமிருக்கிறது? பெரிய அணைகளுக்கு எதிரான போகிற போக்கிலான உங்களுடைய எதிர்ப்பு அவர்களின் சிறப்பான நலனுக்கென்பதில் நீங்கள் நிச்சய மாய் இருக்கிறீர்களா? இந்த விஷயத் தில் அவர்களின் உண்மை யான உணர்ச்சிகளை ஜனநாயகப் பூர்வமாய் நீங்கள் பிரதிபலிக்கிறீர் களா?

மாற்றுகள் பற்றி நீங்கள் பேசுவது ...

``மாற்று அபிவிருத்தி” பற்றி பேச்சை என்.பி.ஏ. தொடங்கியிருக் கிறது. அவர்களது குறிப்பிட்ட நிலையிலிருந்து பிரிந்து செல்லும் எந்த மாற்றுகளிடமும் அவர்களுக்கு ஈடுபாடில்லை. மகாராஷ்டிராவில் உள்ள போராட்டங்கள், பிரசாரங் களில் ஈடுபட்ட செயலாளிகள் சிலர் மாற்றுகள் குறித்த பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். மும்பை, மற்றும் புனேவைச் சேர்ந்த பொறி யாளர்களும், மற்றவர்களும் தொழில் நுட்ப கண்டு பிடிப்பு களையும், முன் முயற்சிகளையும் செய்து வருகின்ற னர். மாற்று களைப் பரிந்துரைப் பதில் அவர்கள் சில எளிய கொள்கை களை பயன்படுத்துகின்றனர். அவற் றில் சில...

அணைகளின் உயரத்தை குறைத்து நீரால் மூழ்கும் பரப்பு களையும் குறைப்பது, வாழ்வாதாரம் மற்றும் நிலங்களை இழக்கும் எல்லாருக்கும் நஷ்ட ஈட்டை உறுதிப்படுத்துவது, நிலத்திற்குப் பதில் நிலத்தை சாத்திய மாகுமளவு வழங்கச் செய்வது, வறட்சியால் பாதிக்கப்பட்டவர் களுக்கு பலனளிக்கும் வகையில் நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவது. உறுதியான தொழில்நுட்ப ரீதியில் கட்டுப்படியாகும் முறைகளில் தண்ணீரை எல்லாருக்கும் சாத்திய மாக்குவதற்கான கோஷமே ``சமமான நீர் பகிர்வு”.
நியாயமற்ற அணைகளுக்கு எதிராகவும் ஒருவர் தனது பூர்வீக நிலத்தை இழப்பதன் கொடூரங் களுக்கு எதிராகவும் நிச்சயமாக சக்திவாய்ந்த மக்கள் போராட்டத்தை உருவாக்க அணைப் பிராந்தியத்தில் உள்ள மக்கள் செல்வாக்கு உள்ளவர் களையும், நீர்ப்பிடிப்புப் பகுதியி லுள்ள செல்வாக்கு உள்ளவர்களை யும் சேர்த்து வறட்சியால் பாதிக்கப் படுபவர்களையும் அணைத்திட்டத் தால் பாதிக்கப்படுபவர்களையும் சேர்க்க வேண்டும். இல்லையெனில் அணையிலிருந்து வெளியேற்றப் படுபவர்களைப் பயன்படுத்தி அரசு லட்சக் கணக்கான வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் அபிலாசை களை வெறுமனே பயன்படுத்திக் கொள்ளும். அது அவர்களின் பிரித் தாளும் விளையாட்டு அணைத் திட்டத்திற்கு வெளியிலிருக்கும் மத்திய தர வர்க்க நகர்ப்புறத்தினரின் - அவர்கள் எவ்வளவு தீவிரமுடனும், லட்சியத்துடன் இருப்பினும் - ஆதரவுடன் இந்த விளையாட்டைத் தோற்கடிக்க முடியாது.

இவ்விதமான வரையறைகளுக் குள் சர்தார் சரோவர் அணைக்கான ஒரு மாற்றுத் திட்டம் பரிந்துரைக் கப்பட்டிருக்கிறது. இது சுகாஸ் பரஞ்சாபே மற்றும் கே,ஜே. ஜாயால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ``நிலைத்த பலனுக்கான தொழில் நுட்பம்; சர்தார் சரோவர் திட்டத்தை ஓரளவு பயனுடையதாய் ஆக்குவது”, இதுவே அப்புத்தகத்தின் தலைப்பு (அவர் களிடம் உங்கள் முகவரி இருந்தால் உங்களுக்கு அனுப்புவதில் மிகச் சந்தோஷம் அடைவார்கள்), மும்பை யைச் சேர்ந்த கே.ஆர்.டாத்யே மற்றும் பொறியாளர் குழு மகாராஷ்டிர மாநிலத்தில் செய்த போராட்டங் கள், பணிகள் மற்றும் பரிசோதனை களை அடிப்படை யாகக் கொண்டு இந்த பரிந்துரை அமைந்திருக்கிறது.

அவற்றிலுள்ள விஷயங்கள் எளியவை; அணையின் உயரத்தை ஒரேயடியாய் குறைப்பது; இப்போ துள்ள சர்தார் சரோவர் அணையின் கீழ் சௌராஷ்டா மற்றும் கட்சுக்கு நீர் எடுக்கும் வழியில் தடுப்பணை கட்டுவது. வருடம் முழுவதும் நிறைய தண்ணீரைச் சேகரிப்பிடத்தில் சேமிப்பதற்கு பதில் பெரும்பாலான நீரை விவசாயிகளுக்கு விநியோகித்து, வயல்களில் தாவர உயிர்க்கழிவாய் மாற்றி சேமிக்கும் திட்டம் அது. தாவர உயிர்க்கழிவு உணவை மட்டும் தராமல் நார், கால்நடைகளுக்கான தீவனம் முதலியவற்றையும் தரும். மையப் படுத்தப்பட்ட மின்சார உற்பத்தி செய்யும் அணைக்குப் பதிலாக மையப்படுத்தப்படாத நிலையில் வாயுக்கலன்கள் மற்றும் நவீன தொழில் நுட்ப சாதனங்களைக் கொண்டு விவசாயிகள் தாங்களாகவே மின்சார உற்பத்தி செய்து சென்ட்ரல் கிரிட்டுக்கு மின்சாரத்தை விற்கலாம்.

அணை இல்லாமல் இந்த மாற்றை அமுல்படுத்த இயலாது. ஆனால் இது அணiயின் உயரத்தை ஒரேயடியாகக் குறைத்து நிறைய மக்கள் நிலம் இழப்பதையும் குறைக்கும். சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியிலுள்ள வறட்சியால் பாதிக்கப்படும் மக்களையும், அணைத் திட்டத்தால் பாதிக்கப்படும் மக் களையும் ஒன்று சேர்க்கும்.

ஆனால் இந்த மாற்று ஏற்பாடு தீவிரமாய் ஒரு போதும் பரிசீலிக்கப் பட இயலவில்லை. குஜராத் அரசு வேறு இதை எதிர்த்தது. தற்போது அபிப்ராயங்கள் உறுதியடைந்து, நிலைப்பாடுகளும் கடினமடைந்து விட்டன. நசுக்கும் அரசிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது தான். ஆனால் என்.பி.ஏ.வாலும் இந்த மாற்று ஏற்பாடு பரிசீலிக்கப்படவோ, எடுத்துச் செல்லப்படவோ, பரப்பப் படவோ இல்லை. இன்னும் தீவிரமாய் மாற்று வடிவில் புதிய வாழ்வு கொடுப்பதற்கு அவர்கள் மொத்த மாக அழிக்கும் முயற்சியில் இருக்கும் போது - சர்தார் சரோவர் திட்டத்தை நடைமுறைப் பலனுள்ளதாய் மாற்று வது என்னும் யோசனை அவர்களை வருத்தப்படச் செய்யலாம். அவர்கள் உண்மையிலேயே மாற்று களை விரும்பவேயில்லை என்று நம்மால் முடிவுக்கு வரமுடியுமா?

தொடர்ச்சியாகவும், முறையா கவும் மக்களைப் பிரிக்கும் முயற்சியில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டுக் குள் இல்லாத போது அன்றாட வாழ்க்கையை நிர்வகிக்க தண்ணீரை நம்பியிருக்கும் லட்சக் கணக்கான குஜராத் விவசாயிகளுக்கு எதிராக என்.பி.ஏ. சமவெளி விவசாயிகளிடம் தனக்கான ஆதரவுத் தளத்தைக் கட்ட வேண்டுமா? சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் வாழும் மக்களிடம் மழைநீரை பயன்படுத்தி பாசனம் செய்யச் சொல்வது குரூர நகைச்சுவையாய் தெரியவில்லையா?

கிருஷ்ணா சமவெளி மாற்றுகள் :

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள கிருஷ்ணா சமவெளிலும் அணைத் திட்டங்களை ஒட்டிய இதே ரீதியிலான பிரச்னைகள் ஆரம்பித் துள்ளன. கொன்யா அணையை எடுத்துக் கொள்ளுங்கள், செயலாளி யும் நெடுநாள் சேவைப் பணியாளரும், என்.பி.ஏ. குழுவில் பங்குவகிப்பவ ரென கருதப்படும் அவினாஷ், பி.ஜே -வுக்கு அங்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. அவர் ரியோவில் நடந்த உலகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு கிருஷ்ணா, சமவெளி, கொய்னா அணைகள் குறித்துப் பேசியவர் என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது. நீர் சேகரிப்பிடத்திற்கு சுற்றியுள்ள நிலங்களையுடைய விவசாயிகள் குறித்து அவரது நிலைப்பாடு என்ன வெனில் அவர்கள் அந்த இடத்தை விட்டுச் செல்லக்கூடாதென்பதே. கொய்னா அணைத் திட்டத்தில் வெளியேற்றப் படுபவர்களுக்கான கமிட்டி தன் கோரிக்கைகளில் ஒன்றாக வேலை வாய்ப்பு தருவதை யும் வைத்திருக்கிறது. அவினாஷ், பி.ஜே -வின் நிலைப்பாடோ, விவசாயிகள் அங்கேயே தங்கி அணைக்குப் பக்கத்திலேயே வாழ்க்கையைக் கழிக்க வேண்டுமென்பது, பெரிய நகரங்களில் கேள்விக்கிடமான சூழல்களில் மக்கள் கூட்டத்தோடு கூட்டமாய் இவர்கள் கலக்கக் கூடாதென்று சொல்வது சரிபோல் தோன்றினாலும் இக்குறிப்பிட்ட நிலையில் நிலமில்லாத விவசாயியும், நிலம் குறைவாய் உள்ள விவசாயியும் பெரிய நிலச்சுவான்தார்களிடம் போய் விவசாய வேலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.

கிருஷ்ணா சமவெளியில் முழுமை யான ஆதரவு ஒன்றும் என்.பி.ஏ. வுக்கு இல்லை. நாகநாத் நைகௌடி, பரத் பதாங்கர் மற்றும் பிறரது தலைமையில் பெரிய மக்கள் இயக்கம் செயல்படுகிறது. குறிப்பாக சேத்மஜுர் கஸ்தகாரி சேத்காரி சங்காதனாவின் ஒருங்கிணைப்பில் நிறைய நீண்ட பெயர்கள் சொல்லி உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள வாசகர்களுக்கு சங்கடமென் றும், அவர்கள் குழம்பிப் போவார்கள் என்றும் என் வெளியீட்டாளர்கள் எப்போதும் சொல்வார்கள். ஓரளவு புரிந்து கொள்ளக் கூடிய பிரச்சனையே. பெரிய அணைகள் வேண்டாமென்று சொல்லும் என்.பி.ஏ.ஐப் பற்றி பேசுவது மிகவும் எளிய செய்திதான். அதிர்ஷ்டவசமாக பன்முகப்பட்ட அமைப்புகளை; பன்முகப்பட்ட கருத்துக்கள், இலக்கு களுடன் மக்களே உருவாக்கி விட்டார்கள்.

அணைகள் கட்டுவதின் மூல மாக மூழ்கும் நிலங்களுடைய கிராமத்தவர்களுக்காக சில இயக்கங் கள் நிற்கின்றன. உர்மோடியில் (சதாரா மாவட்டத்திலுள்ளது) அவர் களின் மறுவாழ்வுக்கான விஷயங் களுக்கு உறுதி வழங்கப் படாததால் அணைகட்டுவதை நிறுத்தி இரண்டு மாதங்கள் தர்ணா நடந்து வருகிறது. அஸ்ரா தாலுகாவில் (கோல்ஹாபூர் மாவட்டம்) உசங்கி அணை கட்டுவது, கிராமத்தினர் மாற்று ஏற்பாட்டை தயார் செய்வதற்கு வாய்ப்பு வழங்கு வதற்காக நிறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணா சமவெளியில் அணைத் திட்டங்களை விரைவாக முடிக்கும் நடவடிக்கையை இயக்கங்கள் கோரு கின்றன. அப்படி முடித்தால் தான் மே, 2000-ல் பச்சாவத் பரிந்துரைத்திருந்த காலக்கெடுவுக்குள் மகாராஷ்டிர மாநிலத்திற்கு நீர் வழங்கப்பெற்று அதை பயன்படுத்தவும் முடியும்.

ஆனால் மக்களோ, மேலிருந்து கீழாக, ஆட்சியாளரின் அதிகாரத்து வத்துடன் முதலாளித்துவ குணத்து டன் கூடிய அரசின் அணைகட்டும் முறை மாற வேண்டுமென நிர்ப் பந்தம் செய்கிறார்கள். நீர் வினியோக அமைப்பு கிருஷ்ணா சமவெளியி லுள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக் கச்செய்ய வேண்டும். வறட்சியின் நீண்ட சமுத்திர வெளியில் வளர்ச்சி யின் பசுமைத் தீவுகளை மட்டும் வெறுமனே உருவாக்குவதை விட, இது சாத்தியமாகக் கூடியது தான் என்பதற்கான சோதனைகளும், நிரூ பண விவரமும் அவர்களிட முண்டு.

இது குறித்து பரத் பதாங்கர் மராத்தி மொழியில் எழுதிய சிறு நூல், கருத்தரங்கு நடந்த நாளிலேயே பத்தாயிரம் பிரதிகள் விற்றது. (ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் வெளியிடப்படவில்லை) இந்த சட்டகத்துக்குள் அணைக் கட்டும் திட்டத்தை நிலைத்த சாத்தியமான பலனுடையதாய் ஆக்க கோருதல், முழு மறுவாழ்வு, சமமான நீர் பகிர்வு போன்றவற்றை முன்வைத்து வறட்சி வாய்ப்புள்ள ஐந்து மாவட் டங்களைச் சேர்ந்த 13 தாலுகாவைச் சேர்ந்த தெற்கு மகாராஷ்டிர பகுதி மக்கள் தாங்களாகவே திரண்டுள் ளனர். ஆனால் அவர்களால் ஆங்கி லத்தை விட மராத்தி மொழியிலேயே நன்கு தொடர்பு கொள்ள முடியும். உயர் மத்திய தரவர்க்க அம்சம் என்பது இக்குறிப்பிட்ட இயக்கத் தில் மிகவும் பலவீனமானது. உள்ளூர் தினசரிகள் (உள்ளூர் பதிப்புகள்) இச்செய்திகளை வெளியிடுகின்றன. அரசும் கவனத் தைத் திருப்புகிறது. ஆனால் மும்பை மற்றும் புனே நகரப் பதிப்புகள் இச்செய்திகளை வெளியிடுவதில்லை. 1998 அக்டோபர் மாதம் நடந்த ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட ஐந்து நாள் வரை நீண்ட போராட்டங் களை- அணை யால் பாதிக்கப்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திய போதும்-பெருநகர பத்தி ரிக்கைகளில் அச்செய்தியே வெளி யிடப்படவில்லை.

அதனால் நான் என்னையே ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த இயக்கம் என்பது என்ன? என்.பி.ஏ. என்பது எப்படியான இயக்கம்? யாருடைய இயக்கம் தான் இது? தானிய மூடைகள் வளர்ச்சிக்கான அர்த்தம் பற்றி...

வளர்ச்சிக்கான கேள்வி பற்றி சில கருத்துக்கள் தேவைப்படுகின் றன. அன்றாடம் சந்தையில் இருந்து உணவை வாங்கும் பெரும்பாலான ஐரோப்பிய, வடஅமெரிக்க மக்க ளும், உங்களைப் போன்ற நகரத்தவர் களும் இந்திய விவசாயிகள், விவசா யத்தை வணிக மயமாக்கி விட்டது குறித்து எதிர் மறையான கருத்தைக் கொண்டுள்ளீர்கள். ஒரு வேளை ஏழ்மையாய் இருப்பினும் சரி, அழகான, உணர்வு மயமானதாக, செழுமை யுடைய மரபு வழிப்பட்ட வாழ்க்கை சிதைவுறுவதாய் உங்க ளுக்குத் தோன்றுகிறது.

``தானிய மூட்டைகள்” விவசாயி கள் வீட்டில் இருப்பது பற்றியும், அதில் அவர்களுக்குள்ள பெருமை பற்றியும் எழுதியுள்ளீர் கள்.
``தானிய மூட்டைகள்” பற்றி நான் சிறிது விரிவாய் சொல்ல ஆசைப்படுகிறேன். இதோடு தொடர் புடைய விவசாயக் குடும்பத் தில் தான் எனக்குத் திருமணம் நடந் துள்ளது. கிருஷ்ணா நதியின் கரை களில் எங்களுக்கு 15 ஏக்கர் நிலம் உள்ளது. நாங்கள் இருந்து புழங்கும் அறைகளைக் கூட ``தானிய மூட்டை கள்” அறுவடைக்குப் பிறகு நிரப்பிக் கொள்ளும். தானிய மூட்டைகள் வைத்திருப்பது ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவம் உடையதல்ல.

ஒரு மூட்டை தானியத்தைப் பொறுத்து ஆயிரம் ரூபாய் இருக் கலாம். விவசாயிகள் விவசாயத்தை மட்டும் வைத்து பெருமளவு வாழ முடியாது. அவர்கள் இப்பொழுது மட்டுமல்ல பழைய காலத்திலும் அப்படி வாழ்ந்திருக்கவில்லை. அவர் களின் அன்றாட வாழ்க்கைக்குள் இந்த நவீன வணிக மயமாக்கப்பட்ட வேளாண்மை போன்ற இன்றைய சமூகக் கச்சாத்துகள் வருவதற்கு முன்பே இந்த நிலைதான் இருக்கிறது. இன்றைய வேளாண்மை தொழிலகங் கள் மற்றும் சமூகம் குறித்து நல்லது என்றும் தீயதென்றும் நிறையச் சொல்லலாம். ஆனால் மரபு என்ற ஒன்றை நாம் பரீட்சிக்க வேண்டும்.

ஒரு மராத்திய முதுமொழி உண்டு: பார்ப்பனர் வீட்டில் அறிவு; குன்பி இனத்தவர் வீட்டில் தானிய மணிகள்; மகர்கள் (தலித்கள்) வீட்டில் பாடல்கள் என்று. இதில் மகர் களைப் பற்றிச் சொன்னது உண்மை யானது. உண்பதற்கு உணவேயில்லை எனச் சொல்லும் அளவுக்கு அவர் கள் நிலை மோசமானது. ஏகப்பட்ட இடை நிலைச் சாதிகளுக்கு நடுவே சூத்திரர்களென அடையாளப்படுத் தப்படும் மகர்களும் குன்பி இனத் தவரும் அறிவிலும், படிப்பிலும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். பாரம்பரியமாகவே அவர்களுக்கான உணவை உற்பத்தி செய்தவர்கள் தான். பார்ப்பனர்களாலும், நிலப் பிரபுக்களாலும், வியாபாரிகளாலும் நிறைய உண்ணப்பட்டதன் சொற்ப மிச்சமே அவர்களுக்குக் கிடைத்தது. அதோடு கடுமையான சாதிய அடுக்கு கள் நிலவிய, சமூகம் அது. ஆனால் இன்றோ “அறிவு” தான் உள்ளதி லேயே மிக மதிப்பு வாய்ந்தது. தானியம் பாடல்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியக்கூடியது அறிவே.

குன்பி மக்கள் சூத்திரர்களாக வும், பணியாளர்களாகவும், கீழாகப் பார்க்கப்பட்டனர். தலித்களின் நிலை இன்னும் மோசம். அர்த்தசாஸ்திரம் எழுதப்பட்ட காலத்தில் சராசரி விவசாயம் மற்றும் அடிப்படை வேலைக் கூலித் தொகை என்ன விகிதத்தில் இருந்ததோ அதே பண வீக்கத்தில் தான் பிரிட்டீஷார் ஆண்ட காலத்திலும் சுதந்திரம டைந்து 50 ஆண்டுகள் ஆனபின்னும் தொடர்வதாய் பொருளாதார நிபுணர் கள் கூறுகின்றனர்.

இதுதான் உங்களுடைய, நீங்கள் கூறும் மரபான வணிக மயப்படாத சமூகத்தின் நிலை. ஆதிவாசிகள், தலித்கள், சூத்திரர் கள் அல்லது ராஜபுத்திர விவசாயி கள் இதே நிலையில் தொடர வேண்டுமென உண்மையில் விரும்பு கிறீர்களா? இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான அணைகள் யாவும் தீவிரம் குறையாத தீமைகள் என்ற கருத்தை முழுக்க ஏற்கிறீர்களா? அவைகளைப் புறக் கணிப்பதை விட புத்துரு வாக்கு வதும், அபிவிருத்தி செய்வ துமான இலக்கு இருக்கக் கூடா தென்கிறீர் களா? இந்த நவீன உலகில் வெற்றிக்காகவும் வளமான வாழ்க் கைக்கான தங்கள் ஆசைகளுக்கா கவும் வறட்சியால் பாதிக்கப்பட் டவர்களும், அணைத்திட்டங்க ளால் பாதிக்கப்பட்ட கிராம மக்களும், வெறும் எதிர்ப்புக்காக செய்யாமல், ஏன் ஒரு மாற்றத்திற்காக போராடக் கூடாது. இந்தியாவில் முன்னேற்றம் என்பது பெரும் பாலான மக்களுக்கு சாதிய ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுத்திய பாரம் பரிய பொறிகளிலிருந்து வெளிவருவதும், பிறப்பு நிர்ணயித்த விளையாட்டி லிருந்து தப்புவதுமே. அது எளிதான பொருளாதார அபிவிருத்தி சார்ந் தது மட்டுமல்ல. அறிவு, தானியம், பாடல்கள் எல்லாம் தேவைக்கேற்ப தாராளமாய் எல்லாருக்கும் கிடைக்கும் சமூகத் தில் பங்கேற்பதற்கான திறனும் சேர்ந்தது தான் முன் னேற் றம். அப்படியான அபிவிருத்தி சாத்திய மில்லை யென்று நீங்கள் மிகை யுணர்ச்சிப் பாங்கில் கருதினீர்க ளெனில், நீங்கள் உங்களுக்கு கிடைக் கும் எல்லாப் புகழையும், உதவியை யும் வளர்ச்சிக்கு எதிரான அமைப்பு களுக்குத் தருகிறீர்கள் எனில், அதற் கான கதவுகளை அடைப்பதற்கு நீங்களும் உதவுகிறீர்கள்.

உங்களிடமிருந்து பதில் வரு மென்ற நம்பிக்கையில்

கெய்ல் ஓம்வெத்
கசேகாவோன், சங்லி மாவட்டம்,
இந்தியா - 415404.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com