Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
அயல் மகரந்தச் சேர்க்கை

விழித்தால், விடியும்
பேரா. அப்துல் காதர்

மூக்குத்தியைக் கொடுத்து மூச்சினைத் திருடுகிறார்கள். குடம் தந்து விட்டு தண்ணீரைக் கொள்ளையடிக்கிறார்கள். மக்கள் அவர்கள் கட்டிக் கொடுத்த சிறுநீர்ப் பிரைகளைப் பராட்டிக் கொண்டிருக்கும் போது களவாடப்பட்ட சிறுநீரகங்களைப் பற்றி அறியாதவர்களாயிருக்கிறார்கள். சவப்பெட்டிகளைக் கொடுத்தவர்கள்தான் சாவுக்குக் காரணமானவர்கள் எனப் புரியாதிருக்கிறார்கள்.

தேர்தல் தேவதைக்கு எதனைப் படையலிடுவது பொருத்தமாக இருக்கும்? ‘சுருட்டு’ அநேகமாகச் சரியானதாக இருக்கும். வேட்பாளர்கள் வாக்குப்போட பணந்தருகிறார்கள். சலவை நோட்டுக்களால் மக்களை அழுக்காக்குகிறார்கள். நீட்டப்பட்ட 500 ரூபாய் நோட்டில் மகாத்மா சிரிக்கிறார். கோட்சே கூட ஒரு முறைதான் கொன்றான். ஆனால் இவர்கள்? கை ‘மை’ தாங்கும் போதே ஜனநாயகம் கைம்மையாகி விடுகிறது.

‘பட்டினப்பாலை’யில்

“விலைஞர் குரம்பை மாவீண்டவும்
வலைஞர் முன்றில் மீன் புரளவும்”

என்ற சாட்சி எதிர்மறையாக மீண்டும் பதிவாகியுள்ளது. கசாப்புக் கடைக்காரன் வீட்டிற்கு ஆடு, மாடுகள் ஆவலாய்ச் சென்றதையும், மீனவர்கள் முற்றத்திற்கு மீன்கள் துள்ளிச் சென்றதையும் பார்த்தோம். ஆம் வாக்குச்சாவடி முன் நின்ற ஓட்டு மந்தைகள் கூட்டமும் அப்படித் தான். பலி பீடத்திற்கு இழுத்து வரப்படும் பலியாடு கழுத்தில் கட்டப்பட்ட ‘இரட்டை மாவிலை’யை இரையென்று கருதி மகிழுமாம். தலையில் தெளிக்கப்படும் ‘மஞ்சள்’ நீரை, ஆகா மனிதன் சூரிய வெயில் சூட்டைத் தணிக்க நம்மீது கருணை கொண்டல்லவா நீரைச் சொரிகிறான் என்று எண்ணுமாம். திடீரென ஈரநீர் பட்டவுடன், ஆடு தலையைச் சிலுப்பும். ஆஹா சம்மதங் கொடுத்து விட்டதென அரிவாளால் ஒரே போடு போடுகிறார்கள். ஆட்டு மந்தைக்கு அறியும் அறிவில்லை.

மாட்டுப் பொங்கல் அன்றைக்கு மாட்டையே பொங்கல் வைத்து விடுகிறார்கள். மாட்டுப் பொங்கல் அன்று என்ன நடக்கிறது? 365 நாட்களில், மாட்டுப் பொங்கல் தவிர்த்த ஏனைய 364 நாட்களிலும் அந்த மாட்டைச் சாட்டையால் அடித்தவன், தாற்றுக் கோல் நுனி ஆணியால் கீறி இரத்தம் கசியச் செய்தவன், அடிமைப்படுத்திக் கழுத்தில் நுகத்தடி பூட்டியவன், 365 ஆம் அந்த ஒருநாள் மட்டும் மாட்டுக்கு மாலை போட்டுக் கும்பிடுவான். மாட்டுக்குப் போடும் கும்பிடும் ஓட்டுக்குப் போடும் கும்பிடும் ஒன்று தான்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை மூலம், பரமான்மாவைக் கூடும் பேரின்பத்தைக் கோட்டை விட்டு, சிற்றின்பத்தைத் தேடும் ஜீவான் மாக்களின் நிலையை விளக்குகிறார். ஆனால் அக்கதை தேர்தலை முழுக்க நம்பும் மக்களுக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது. கதை இதுதான். சர்க்கரைக் குவியலைச் சுற்றி சற்று இடைவெளி விட்டுச் சர்க்கரைத் துகள்களால் ஆன வட்டம் போடப்படுகிறது. சர்க்கரை வாசம் பிடிக்கும் எறும்புகள் சர்க்கரைக் குவியலை மொய்த்து விடாதவாறு போடப்பட்ட இனிப்பு வேலி அது. வளையத்திற்கு வந்த எறும்புகள் வட்டத்தில் உள்ள சில சர்க்கரைத் துகளை மட்டும் சந்தோஷமாக எடுத்துச் செல்கின்றன. சின்னச் சின்னச் சலுகைச் சர்க்கரைத் துகள் மட்டும் எறும்புகட்குத் திருப்தி அளிக்க, சர்க்கரை அம்பாரத்தை தங்கட்குத் தக்க வைத்துக் கொள்ளும் அரசியல் வணிகர்களைப் பார்க்கலாம். சர்க்கரை உங்களுக்குத் தந்து விட்டுச் சர்க்காரை நாங்கள் வைப்பாக வைத்துக் கொள்கிறோம் என்று எறும்புகளை ஏமாற்றுகிறார்கள் வியாபாரிகள். ஆனால் வியாபாரிகளைப் பாரிகளாக நம்புகிறார்கள் வாக்காளர்கள்.

செயற்கையான முறையில் சினையாக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் வாயும், வயிறுமாய் இருக்கின்றன. நேராட்சியாய் இருக்க வேண்டிய ஊராட்சிகள் இன்று ஏலம் விடப்படுவது உச்சபட்ச அவலம். களவாடும் தளவாடமாக வாக்குச்சீட்டு.
லல்லுபிரசாத் முதலமைச்சராகப் பீஹாரை ஆண்ட போது ஜப்பானிலிருந்து வந்த அமைச்சர்கள் குழு அவரைச் சந்தித்தது. பீஹாரின் அவல நிலையைப் பார்த்தது. முன்னெல்லாம் பீஹாரில் பெரும்பகுதி ஏழைகள் உண்ண உணவின்றி, அங்கு மேயும் மாடுகள் போடும் சாணத்தைக் கழுவி, அதிலுள்ள செரிக்காத கோதுமை மணிகளை எடுத்துச் சமைத்துச் சாப்பிடுவார்களாம். லல்லு வந்து அந்தக் கால்நடைகள் வயிற்றிலும் அடித்து விட்டார். பீஹாரின் பின்தங்கிய நிலையை மாற்ற வேண்டும் என விரும்பி, ஜப்பான் அமைச்சர் குழு, லல்லுவிடம் “பீஹாரை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள், ஓர் ஆண்டில் அதனை ஜப்பான் ஆக்கிக் காட்டுகிறோம்” என்றார்கள். அதற்கு லல்லு “அது வேண்டாம். நீங்கள் ஜப்பானை என்னிடம் ஒப்படையுங்கள், ஒரு மாதத்தில் பீஹார் ஆக்கிக் காட்டுகிறேன்” என்றாராம். துணுக்குற வேண்டிய நகைச்சுவைத் துணுக்கு தான். என்றாலும் இன்றைய ஊராட்சித் தேர்தலில் 15 நாட்களில் தமிழகத்தைப் பீஹார் ஆக்கி விட்டார்கள் என்பதே உண்மை.

“சிறந்த அறப்போர் அநியாய ஆட்சியாளன்
முன் சத்தியத்தை எடுத்துரைப்பதாகும்”

என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்கள் சொன்னதாக மிஷ்காத் என்ற தொகுப்பில் மற்றொரு சம்பவம் சுட்டிக் காட்டப்படுகிறது.

“ஒருமுறை இறைவன் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு ஓர் ஊரைப் புரட்டி அழிக்குமாறு உத்தரவிட்டான். ஜிப்ரயீல் (அலை) அவ்வூரில் ஒரு நல்லடியார் இருக்கின்றார், அவர் இறைவனுக்கு மாறு செய்ததில்லை” என்று கூற, இறைவன்

“அது சரி என்றாலும், அவர் நெற்றி, மாறு செய்யும் ஆட்சியாளனைக் கண்டு, ஒரு போதும் சுருங்கியதில்லை. குறைந்த பட்சம் கோபமோ, வருத்தமோ கொள்ளவில்லை. எனவே என் கட்டளையை நிறைவேற்றுங்கள்” என்றான். முதிர்ந்த பாராளுமன்ற ஜனநாயகவாதி திரு. செழியன், பத்திரிகையாளர் சோ, முன்னாள் காவல்துறைத் தலைவர் லட்சுமி நாராயணன் உட்படச் சிலர், உள்ளாட்சித் தேர்தல் முறைகேடுகளைக் கண்டிக்க ஒரு உள்ளரங்கக் கூட்டத்தை ஒழுங்கு செய்ததை, அரசு தடுத்தது முறைகேடானது. அகமும், முகமும் சுளிக்கச் சிந்தனையாளர்கள் முயன்றதை ஆள்பவர் தடுப்பதை ஆண்டவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். மக்களாட்சி பேச்சு சுதந்திரத்திற்கு வாய்ப்பூட்டும் என்று எதிர்பார்த்தால் வாய்பூட்டும் என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

குழந்தை கண் மூடிக் கொண்டு தான் பிறக்கிறது. ஆனால் யதார்த்தம் என்ன? பெற்றோர் இருவர் கண் விழித்தார்கள். குழந்தை கண் மூடிக் கொண்டு பிறக்கிறது. ஆம் இருவர் விழிப்போடு இருந்தால்தான் ஒருவர் கண்மூடி நிம்மதியாய் இருக்க முடியும் என்பதையே அது உணர்த்துகிறது. எனவே விடிந்தால் விழிக்கலாம் என்ற நிலையை விட்டு மக்கள், விழித்தால் விடியும் என்பதை உணரத் தலைப்பட வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com