Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
மௌனங்களுடன் விடைபெற்ற சுந்தரராமசாமி
களஞ்சியம்

சுரா. என்று செல்லமாக அழைக்கப்பட்ட சுந்தர ராமசாமி நம்மிடமிருந்து விடைபெற்று சென்று விட்டார். ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இலக்கிய உலகில் தீவிரமாகச் செயல்பட்ட படைப்பாளி அவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என எழுத்தின் எல்லா வழித் தடங்களிலும் யாத்திரையை மேற்கொண்டவர். இந்த ஐம்பது ஆண்டுகளில் புதிதாக எழுத வந்த எழுத்தாளர்களுக்கு அவர் ஓர் உந்து சக்தியாக இருந்தார். அவரோடு கருத்தியல் தளத்தில் நேர் எதிராய் நிற்பவர்களும் அவரிடம் இருந்த எழுத்தின் வலிமைக்கு மயங்கினார்கள். மார்க்சிய சிந்தனை- படைப்புத் தளங்களில் இருந்து தன் எழுத்தைத் தொடங்கிய சு.ரா. அறுபதுகளில் மெல்ல மார்க்சிய தளத்தில் இருந்து விடுபட்டு நவீனத்துவவாதியாக தன்னை அடையாளப்படுத்தினார். நவீனத்துவத்தின் உச்சாணிக் கொம்பை தொட்டவர் என அவரை நாம் மதிப்பிடலாம்.

சுயத்தைத் தேடுதல், ஏமாற்றமளிக்கின்ற, கறைபட்டுக் கிடக்கின்ற புற உலகை விட்டு விலகி தான் மட்டும் பரிசுத்தமானவனாக இருத்தல், அறமதிப்புகள் இழந்து போன இந்த உலகில் ஒரு சமூகம் சார்ந்த துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதல் என்பன போன்ற நவீனத்துவ சிந்தனைகளை அவர் இந்திய புரிதலுக்கு உட்படுத்தினார். ஐரோப்பிய சமூகம் போன்று இந்தியச் சூழல் தொழில் நுட்பச் சூழலாக இல்லாத நிலையில் சு.ரா.வின் நவீனத்துவ பார்வை சனரஞ்சக பண்பாட்டுக்கு எதிரான தளத்தில் மையப்பட்டது. இலக்கியம், நாடகம், சினிமா, பத்திரிகை என தமிழ் சமூகத்தின் சனரஞ்சக பண்பாடு திராவிட இயக்கங்களின் வசம் இருந்ததால் திராவிட இயக்க எதிர்ப்பு என்பது சு.ரா.விடம் வலுவாக இருந்தது.

தமிழ் படைப்புத் தளத்தில் திராவிட இயக்க அரசியலுக்குப் பின்னால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நலன் இருக்கிறது என்பதை முதலிலேயே சு.ரா. உணர்ந்து கொண்டார் என்றே தெரிகிறது. அதனால் தான் திராவிட இயக்க எதிர்ப்பு என்பது அவரிடம் தீவிரமாக வெளிப்பட்டதோடு அதற்கு எதிராக தலித் சிந்தனை உலகையும் தன்னோடு இணைத்துக் கொள்ள அவர் முற்பட்டார்.

சென்ற நூற்றாண்டின் கடைசி இருபது, முப்பது ஆண்டுகளில் மதத்தை மீட்டெடுத்தல் என்பது உலகெங்கிலும் நடைபெற்றது. தமிழ் சூழலில் இந்துத்துவம் மீண்டும் மேலெழும்பியது. நவீனத்துவத்தை இந்தியச் சூழலில் மதவாசிப்புக்கு உட்படுத்தியவர்களில் சு.ரா. முக்கியமானவர். இந்துத்துவத்திற்கு ஒரு ஐரோப்பிய எதிர்ப்பும், நவீனத்துவ எதிர்ப்பு போன்ற முகங்களும் இருந்தன. இந்துத்துவம் சுத்தப்படுத்தும் சாதி என்ற ஒற்றை செயல்பாட்டை ஐரோப்பிய நவீனத்துவம் உள்தேடல்/சாதிகாத்தல் வழி அங்கீகரித்தது. சு.ரா. இந்துத்துவத்திற்கும் நவீனத்துவத்திற்குமான ரகசிய உறவு குறித்து ஒரு போதும் வாய்திறக்கவில்லை.

நவீனத்துவவாதிகள் மார்க்சியர்களை எதார்த்தவாத வரையறைக்குள் வைத்து மட்டுமே தீவிரமாக விமர்சித்தார்கள். எதார்த்தவாதம் தொடருமா என்ற கேள்விகளெல்லாம் எழுப்பினார்கள். ஆனால் 70, 80களில் மார்க்சிய சிந்தனை உலகம் நாட்டுப்புறப் பண்பாட்டை நோக்கி வேகமாக நடைபோட்டது. நவீனத்துவத்திற்கு மாற்றாக மார்க்சிய சிந்தனை உலகம் நாட்டுப்புறவியல், விளிம்பு நிலை ஆய்வுகள், அடித்தள மக்கள் வரலாறு என பேரா.நா.வானமாமலை தொடங்கி வேகமாக நகர்ந்து வந்திருக்கிறது. இந்த நகர்வு இன்று தலித்தியமாக, பெண்ணியமாக, சிறுபான்மை இலக்கியமாக விரிந்து அடையாள அரசியலைப் பேசுகிறது. நவீனத்துவத்திற்கு மாற்றாக மார்க்சியர்களின் இந்நகர்வு குறித்தும் சு.ரா. கடைசிவரை மௌனமே சாதித்தார்.

இந்த மௌனம் அதனைத் தொடர்ந்து வந்த பின்நவீனத்துவச் சிந்தனையை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத இடத்திற்கு சு.ரா.வை கொண்டு சென்றது. சு.ரா. விரும்பிய பண்பாடு அல்லது சு.ரா. பேசிய நவீனத்துவ பண்பாடு பார்ப்பனியம் சார்ந்த பண்பாடு. அந்தப் பண்பாடு அடித்தள மக்கள் பண்பாட்டையோ, அடையாள அரசியலின் வழி கிளம்பிய பண்பாட்டையோ ஏற்றுக் கொள்ளாது. இம்முரண்பட்ட நிலையில் 90களுக்குப் பிறகு காலச்சுவடின் வழியாக தலித்துகளோடும், சிறுபான்மையினரோடும், ஈழத்தமிழர்களோடும் சு.ரா. உருவாக்கிக் கொண்ட உரையாடலை ஒரு தந்திரச் செயல்பாடாகவே காண நேர்ந்தது. சு.ரா.வின் கடைசி கால எழுத்துக்களில் ஓர் அவலம் தென்பட்டதைப் பார்க்கிறோம். இந்த அவலம் அவருக்குப் பிந்திய படைப்பாளிகள் தமிழ்ச்சூழலில் சாகித்ய அகடாமி உள்ளிட்ட அரசு விருதுகளை பெற்றிருக்க அவர் கடைசிவரை இதுபோன்ற அரசு விருதுகளைப் பெறாமல் போனதின் வெளிப்பாடாகாவும் இருக்கலாம். அல்லது அவரால் வளர்த்து விடப்பட்டவர்கள் தொடர்ந்து அவர் புறக்கணிக்கப்பட்டதை குறித்து கதைத்ததன் காரணமாகவும் இந்தத் தோற்றம் உருவாகி இருக்கலாம். சு.ரா. விஷயத்தில் பார்ப்பன எதிர்ப்பு என்பது தமிழகத்தில் கொடூரமாகத் தொழில்பட்டு இருப்பதாகவே தோன்றுகிறது. சு.ரா.வுக்கும் இவ்வாறு தொழிற்பட்டதில் கணிசமான பங்கு உண்டு.

சு.ரா. ஆரம்பத்தில் சனரஞ்சக வடிவங்கள் எல்லாவற்றிற்கும் எதிரான கருத்து நிலைப்பாடு கொண்டவராகவே இருந்தார். ஆனால் அதே சு.ரா.விடம் இருந்துதான் சனரஞ்சக தன்மை வாய்ந்த காலச்சுவடு இரண்டாவது முறையாக வெளிவந்தது. அதே சு.ரா.விடம் இருந்து தான் சனரஞ்சகத் தன்மை வாய்ந்த எழுத்தாளர் ஜெயமோகன் வெளிப்பட்டார் என்பதும் கவனத்திற்குரியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com