Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
பயணிகளின் சாலை
சிவகுமார் முத்தையா

இருட்டு லேசான அடர்த்தியில் நிரம்பியிருந்தது. அந்தி முடிவுற்ற பொழுது நிலவு நிர்மல்யமான தன்மையில் ஒளிரும் என்று தான் நினைக்கும் படி திடீரென்று ஒளி பாய்ச்சுவதும் என்று நிகழ்ந்து கொண்டிருந்தது. தெருவை பத்து மணி வரை சலனப்படுத்திய இடர்பாடுகள் ஓய்ந்திருந்தன. குடிகாரர்கள் இன்னும் தூங்காமல் வீட்டுக்காரிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளின் அலறலும், கெட்ட வசைகளும் லேசாக கட்டுக்குள் வந்திருந்தன. தெருநாய்கள் தாறுமாறாக தெருவில் குரைத்துக் கொண்டு ஓடுவதும், சண்டையிடுவதும் ஆண் நாய்கள் பெட்டைகளை புணர்ச்சிக்கு அழைத்து பிடிவாதம் செய்வதும் பெட்டைகள் ஊளையிட்டு தப்பித்து ஓடுவதும், என்று நிகழ்வுகள் தொடர்ந்தபடி தெரு சிறு சிறு சலனங்களில். . . சீரற்று இயங்கிக் கொண்டிருந்தது.

தெருவின் முக்கில் மின் கம்பத்தில் படுத்துக்கிடந்த ஆடும் குட்டியும் கொசு தொல்லை தாங்காமல் எழுந்து வாலை அடித்துக் கொண்டு நடைபோட்டன. குட்டி மார்பை அடிக்கடி முட்டியது. “பால்” இல்லாது ஏமாற்றத்தோடு திரும்பியது. மீண்டும் மோதி மோதி பார்ப்பதுமாக இருந்தது. இந்த நிகழ்வுகள் இயல்பான ஒரு விஷயமாகியிருந்து. விஜயாவுக்கு பகலெல்லாம் ஒரே தூக்கம். மதியம் வயிற்றுக்கு நாலு பருக்கைகள் போட்டுக் கொண்டு உடனே படுத்துவிட்டாள். ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தபோது உடம்பிலிருந்த அழுத்தம் எல்லாம் குறைந்து மிதக்கும் தக்கையாகியிருந்தாள். அம்மாக்காரி சுவற்றோரத்தில் கிழிந்த பாயில் நோய்த்தன்மையில் மிக லேசாக முனகிக்கொண்டும் அடிக்கடி காறிதுப்பிக் கொண்டிருந்தாள். “நகராட்சி” தண்ணி கிடைக்காததால் தெரு பீலியில் தண்ணீர் கொண்டு வந்து குடிசையின் பின்வழியே. . . நின்று குளித்தாள். இரண்டு தெரு தள்ளிய “மாடி” குடியிருப்பிலிருந்து இளைஞனோ, நடுவயதுக்காரனோ இவள் குளிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

தெரு பெண்கள் ஜாடையாக கேலி பேசிக் கொண்டிருந்தார்கள்... அவர்களின் பேச்சில் தன்னையும் குறிபார்த்து அம்பு எய்வதை இவள் அறிந்திருந்தாலும் எதிர்வார்த்தைகளோடு களத்தில் இறங்க உடன்பாடு இல்லை. “பேசி இனி என்ன ஆகப் போகிறது” என்றே நினைத்தாள். ஹமாம் சோப்பை பல முறை தேய்த்து அழுக்கை அகற்ற முயன்றாள். விதவிதமான அழுக்குகள் அவளில் கலந்திருந்தன. குளிர்மை ஏற்பட்டது. வெந்நீர் தன்மையில் சிறுநீர் வந்தது. தாய்மை ஏற்பட்டது போன்று சிலிர்ப்பு எழுந்தது. மயிற்கால்கள் குத்திட்டன. கூந்தலை நன்றாக துவட்டிவிட்டுக் கொண்டாள். “கண்களில் மையிட்டாள். தேகத்தில் ஒரு வறட்சி ஏற்பட்டிருந்தது. தேங்காய் எண்ணெய் எடுத்து தடவினாள். பூப்போட்ட இளமஞ்சள் புடவையில் லேசான வீச்சம் அடித்தது. அதை நிராகரித்து கருநீல புடவையை தேர்வு செய்தாள். அதில் ‘நூல்’ சிதைந்திருந்தன.

தெருமுனைக்கு வந்து பாக்கியத்திடம் பத்து இட்லி வாங்கி அம்மாவுக்கு “நாலு” தட்டில் எடுத்துப் போட்டாள். மீதியனைத்தையும் தான் தின்றாள். தண்ணியை குடிக்கவும் வயிறு முட்டியது. இலவச தொகுப்பு வீட்டில் ஒற்றை பல்பு ஒருவித வெறுமையோடு ஒளிர்ந்து கொண்டிருந்தது. சிறு கையடக்க முக கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். முகம் லேசாக சதை போட்டிருப்பது போலத் தோன்றியது. இவள் தெருவுக்கு தெரியாமல் அனைத்தையும் வைத்துக் கொள்ள விரும்பினாள். தெரு சனங்கள் உறங்கிய பிறகு தெருவை விட்டுக் கிளம்பி விடுவது, விடிவதற்குள் வந்து அடங்கிக் கொள்வது. இது வாடிக்கையாகி இருந்தாலும் இவள் போவதும் வருவதும் தெருவுக்கு தெரிந்தே இருந்தது.

இந்த இரவு கிளுகிளுப்பூட்டும் தன்மையில் பீறிட்டது. சீக்கிரம் கிளம்ப வேண்டும் போல் ஒரு உந்துதல் ஏற்பட்டது. “கொசு” மொய்த்து இரத்தம் குடித்தன. கூரையிடுக்கில் சொருகியிருந்த செருப்பை ஓசைபடாமல் எடுத்தாள். அம்மாக்காரி தலையைத் தூக்கிப் பார்த்து வாயிலிருந்து வார்த்தைகளை மிக சிறு சலனத்துடன் சிறு ஒலிக் குறிப்பில் வெளிப்படுத்தினாள். குவிந்து கிசுகிசுத்த குரலில் போயிட்டு வர்றேன்... அம்மாவிடம் பதிலேதும் எதிர்பார்க்காமல் தெருவில் இறங்கினாள். தெருவிலிருந்து சில நிமிடங்களுக்குள் வெளியேறி மிக சிறியதான நகரத்தின் முக்கிய சாலைக்கு வந்துவிட்டிருந்தாள். கடந்த ஆறு மாதத்துக்கு முன்புதான் இந்த சிறு நகரம், மாவட்ட அந்தஸ்த்தை பெற்றிருந்தது. நகரத்தில் பிரசித்தி பெற்ற விஷயங்கள் என்றால் கோவிலும் குளமும்தான். இதைத் தவிர கொஞ்சம் விவசாய நிலங்கள். எல்லாம் நெல் சாகுபடி.

இதை தவிர தியேட்டர்கள். ஒன்றும் அங்கு சுபிட்சம் இல்லை. இதை எதிர்பார்ப்பவர்கள், இவளிடம் தொடர்பு கொண்டவர்கள் இன்று இல்லை. அதைவிடவும் சிறு பிரச்சனை வந்துவிடுகிறது. சமயங்களில் வாடிக்கையாளர்கள் புது புது ஆட்களோடு வருவது மட்டுமல்ல, “பணம்” அதற்கு ஏற்றபடி கொடுப்பதில்லை என்பது கசப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒரு “ஆள்” கிடைத்தால் போதும்; சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தாலே போதும் என்று முக்கிய சாலையில் நடக்கத் தொடங்கினாள். இரண்டு புறம் மரங்கள் வளர்ந்திருந்தன. புங்க மரமும் தூங்குமூஞ்சி மரமும் பத்தடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் நின்று கொண்டிருந்தன. முன்பு இந்த பகுதி முழுவதும் புளிய மரங்கள் நிரம்பியிருந்தன. அடித்த புயலில் அவையெல்லாம் வீழ்ந்து விட்டிருந்தன. சாலையில் வாகனங்கள் ஒளி பாய்ச்சி பாய்ந்து கொண்டு இருந்தன.

லாரிக்காரர்களிடம் அதிகமான எந்த பிரச்சனையும் இருக்காது. அதிகமாக “பேரம்” பேச மாட்டார்கள். கேட்பதை கொடுத்து அதிக நேரமும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இரண்டாவது காட்சி ஓடிக் கொண்டிருக்கலாம். இருசக்கர வாகனத்தில் செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருந்தது. சைக்கிளில் இரண்டு பேர் வந்தார்கள். இவளைப் பார்த்ததும் சட்டென்று சைக்கிளில் இருக்கையிலிருந்து குதித்தவனுக்கு பதினெட்டு வயதிருக்கலாம் போல் தோன்றியது. ஆர்வத்துடன் இவள் அருகே ஓடி வந்தவன் முகத்தைப் பார்த்தான். சைக்கிளை மிதித்தவன் சத்தமாகவே கேட்டான் “வர்றீயா”. அவனுக்கு அரும்பிக் கொண்டிருந்தது மீசை.

அவர்கள் இருவரையும் ஒருகணம் உற்றுப் பார்த்தாள். “பொத்திக்கிட்டு போங்கடா” என்றாள். ‘நீ வல்ல ஒன்னே தொலைச்சிடுவோம்’நெருங்கி வந்ததும் குப்பென்று முகத்தில் படர்ந்தது. அவர்கள் குடித்திருந்த பிராந்தியின் மணம் இன்று அவர்களோடு போகவில்லை என்றால் பிரச்சனைதான் செய்வார்கள் என்று தோன்றியது. ஒருவன் நெருங்கி வந்தவன் சட்டென்று அவள் மார்பைப் பிடித்தான். பலமாக அவன் கையை தட்டினாள். “என்னடி பினாத்துறே, சந்தை பேட்டையில நேத்திகூட விரிச்சுகிட்டு” கெடந்தே என்றான் சைக்கிள் ஓட்டியவன். இவர்கள் பேச்சிலிருந்து இவர்கள் ஏதோ மோட்டார் ஒர்க்ஷாப்பில் வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இவர்களை சின்ன பையன்கள் என்று நினைத்த இவள் நினைப்பு தப்பாகியது. ஆனாலும் அவர்கள் மீது கொஞ்சம் பயம் இருக்கவே செய்தது. ‘மொளச்சு மூணு இலவுடல. அதுக்காட்டி தேவிடியா கேட்குதா? போங்கடா’இதை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பின்வாங்க தொடங்கினார்கள்.

டி.வி.எஸ். 50 ஒலி பாய்ச்சி பின் வந்து நின்றதும் அவர்கள் சைக்கிளில் ஏறி ஓடத்தொடங்கினார்கள். ஏட்டு மாணிக்க வாசகம். அவரைப் பார்த்ததும் லேசாக சிரித்தாள். இரண்டு மாசத்துக்கு முன்பு வார்டு செயலர் மூர்த்தியும், இளமாறனும், கட்சி மேலிட தலைவர்களின் ‘செயற்குழு கூட்டத்திற்காக’தலைவர்களை குஷிப்படுத்தவும், சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் இவளை “லாட்ஜ்,”ல் ரூம் போட்டு தங்க வைத்திருந்தார்கள். ஆனால் பகலிலேயே கூட்டம் முடிவுற்று இருந்ததால் தலைவர்கள் வேளாங்கண்ணிக்கு போய்விட்டார்கள். பிரியாணியெல்லாம் வாங்கி கொடுத்தார்கள். இளமாறனும், மூர்த்தியும் தலைவர்கள் வராத சோகத்தில் “லாட்ஜ்“க்கு வந்தார்கள். “புல்” பாட்டில் சரக்கை “மூன்று” பிளாஸ்டிக் குவளையில் ஊற்றினார்கள்.

இவள் எவ்வளவு தடுத்தும் அவர்கள் விடவில்லை. வற்புறுத்தினார்கள். வேறுவழியில்லாமல் குடித்தாள். அவள் இதற்கு முன் குடித்திருக்கிறாள், நாட்டு சாராயம். அதைப் போல “காரம்” இல்லை. மடமடவென்று குடித்து விட்டிருந்தாள். அவர்கள் ஊற்றிக் கொடுத்தும் குடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு எதுஎதுவோ பேசினாள். அவர்கள் இருவருமே மாறி மாறி புணர்ந்தார்கள் என்பது மட்டும் நினைவிருக்கிறது. அதிகாலையில் அறை கதவை திறந்துகொண்டு போலீஸ் எழுப்பிய போதுதான் பொட்டுத் துணி கூட இல்லாமல் நிர்வாணமாய் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. “இரண்டு நாள்” வைத்திருந்தார்கள். பிறகு அனுப்பி வைத்தார்கள்.

“என்ன அப்படி பாக்குறே,” ஏட்டைய்யா கேட்டார்.

“தெரியுதுங்க” என்றாள். . .

இன்ஸ்பெக்டர் கொஞ்சம் நல்லவர் போல் தோன்றியது. “கேஸ்” போட்டால் பதினைந்து நாள் உள்ளே இருக்கணும். யார் ஜாமீன் எடுப்பா? என்று கேட்டார். இவள் அழுது கொண்டே அவர் காலில் விழுந்தாள். “எழுந்திருடீ”. போடி. போடி. என்று விரட்டிவிட்டார். அவரை விசாரிக்க இவளுக்கு தோன்றியது. ஏட்டு மாணிக்கவாசகம் லேசாக சிரித்தவர் “அன்னக்கி நான் மட்டும் சொல்லாட்டி இன்ஸ்பெக்டர் ஒன்ன உள்ளே வெச்சிருப்பாரு”

நன்றியோடு ஒரு கும்பிடு போட்டாள். ஏட்டு சுற்றும் முற்றும் பார்த்தார். வரிசையாக மரங்கள் நின்றிருந்தது. . . அவள் கையை பற்றினார். மரத்தின் நிழல் கீழே இருட்டாய் நிரம்பியது. தொப்பையை தடவிப்பார்த்தாள். மரத்தில் சாய்த்து நிறுத்திக் கொண்டார். ஏதோ ஏதோ முனகினார். காக்கிச்சட்டையை சரிசெய்து கொண்டார். அவரை பார்க்க என்னமோ போலிருந்தது. ‘இந்தா’என்று பணத்தை குடுத்தார். ‘வேண்டாம்’என்று மறுத்தாள்.

‘வேண்டாம். . . சார். . .வேண்டாம்’.

இவள் ஜாக்கெட்டுக்குள் திணித்தார். இருட்டு குகையென விரிந்தது. சாப்பிட்ட இட்லி செரிமானத்துக்காக வேலையை தொடங்கியிருந்தது. வயிறு அதிர்ந்தது. நிலவு தெலைந்திருந்தது. மனம் வெறுமையடைய தொடங்கியது. கடந்த கால வாழ்வு சிறு புள்ளியாய் மறந்து தொலைந்து விட்டாலும் ஒருவகையான துயரம் மேலேழும்பி கனன்றது. கண்கள் ஈரமாகின. நாக்கு வறண்டது. வயிற்றை எதேச்சையாக தடவினாள். ‘உறைகள்’வாங்காமல் வந்திருந்தாள். அது பற்றிய சிந்தனையே எழாமல் இருந்தது. நம்மால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும். கொஞ்ச தூரம் நடந்தால் ஏதாவது மளிகை கடையில் இருக்கும். வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்நேரம் கடையிருக்குமா? ஏட்டு, வலுவிழந்து தொங்கிப் போய்விட்ட மார்பகத்துள் திணித்துவிட்டு போன நோட்டுக்களை எடுத்தாள். பழைய அழுக்கான நோட்டுக்கள் ஈரமாய் இருந்தன. கடைத்தெருவில் சிறு வியாபாரிகளிடமிருந்து மாமூலாய் பெற்றதாய் இருக்கலாம் என்றே நினைத்தாள். சிரிப்பாய் வந்தது.

இருட்டு வருவதும் நிலவு மறைவதும் தொடர்ந்தபடி இருந்தது. இருட்டு என்னவோ பிடிக்கிறது. கடவுள்களை விட சாத்தான்கள் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. துல்லியமற்று கிடக்கும் நட்சத்திர வெளி சிறகசைக்கும் மரங்களிலிருந்து எழும் துல்லியமான ஓசை. தனிமையாக விரிந்து கிடக்கும் சாலை. . . ரீங்காரமாய் சாலையோர புதர்களிலிருந்து கசிந்தது இரவு பூச்சிகளின் பாடல். தகிக்கும் மனவெளி துயரம் மேலெழும்புகின்ற வாக்கியங்களை முணுமுணுத்தது சாலையில் வீறிட்டுக்கொண்டு பாய்ந்து செல்லும் வாகனங்கள். இந்த இரவு இப்படியே கழிந்தால் தேவலாம் போலிருந்தது.

‘யாரது?’ கரகரப்பான குரல் இவளை சற்று பதட்டம் அடையச் செய்தது. “உறை” இல்லாதது குறித்து பதட்டமும், அச்சமும் ஏற்பட்டது. தற்பொழுது இவர்களிடம் தற்காலிகமாக விலகிக் கொள்ள முடியுமா? என்று பயமும் ஒரு வகையான சோர்வும் எழுந்தது. அவர்களை கூர்ந்து பார்த்தபடி நின்றாள். நடுநிசிக்குப் பிறகு வருவதால் இரண்டாவது சினிமா பார்த்து வருபவர்கள் என்பதை உணர முடிந்தது. இரண்டு பேரும் கச்சிதமான உடையலங்காரத்தையும் பேச்சு தன்மையையும் கொண்டிருந்தார்கள்.

‘நீயாரு’என்றான் ஒருவன். தன்னை பற்றியதொரு விளக்கத்தை அளிக்க முடியுமா? என்று தெரியாமல். . . அவர்களின் நோக்கத்தை அறிய முயன்றாள். மற்றொருவன் நெருங்கி வந்து.

“உறை வெச்சிருக்கியா” என்றான். . .

“வர்றப்போ மறந்திட்டு வந்திட்டேன். எங்கேயும் கடையும் இல்ல.”

“என்னா மயிருக்குடி உறை இல்லாம வர்ற. ஊருக்கெல்லாம் பரப்பி விட்டுட்டு போவலாமுன்னு நெனைக்கிறியா”

ஒரு கணம் அவர்களை கூர்ந்து பார்த்தாள்.

“என்னடி ஒரு பதிலும் சொல்ல மாட்டுறே”

வேகமாக அவர்களை விட்டு விலகி நடக்கத் தொடங்கினாள். சட்டென்று ஒருவன் இவளை வளைத்து பிடித்தான். கொஞ்சம் கூட இவள் எதிர்பார்க்கவில்லை. இவள் எதிர்பார்க்காத பொழுதில் அவர்கள் இவள் சேலையை உருவிவிட்டார்கள். அசுரவேகத்தில் சாலையில் லாரி ஒன்று விரைந்துக் கொண்டிருந்தது.

“இஷ்டமுன்னா. ‘வா’இல்லாட்டி பொத்திகிட்டு போ” என்றாள்.

அவர்கள் “என்னடி பீத்திகிட்டு இருக்கே” என்றபடி ஒருவன் இவளை “பளார்” என்று அறைந்தான். சுள்ளென்று நெருப்பு பொறி. கன்னத்தில் பட்டது போல வலியும் எரிச்சலும் ஏற்பட்டது. இவளுக்கு பயம் ஏற்பட்டது. புதிதாக வந்திருக்கும் போலீஸ்காரர்களோ? இருக்கலாம். அதற்காக இப்படியா நடந்து கொள்ள வேண்டும்.

“மொதல்ல சேலையை குடுங்க”. கோபத்தை வார்த்தையின் வேகத்தில் பதுக்கியபடி கேட்டாள். சாலையோர மதகில் அவள் புடவையை கீழே விரித்துப்போட்டு ஒருவன் உட்கார்ந்தபடி கேட்டான். “உன் அழக நாங்க பார்க்கனும்” நிலவு மிகுதியான வெளிச்சம் நிரப்பிக் கொண்டிருந்தது. விவரிக்கமுடியாத பெருந்துக்கம் தன்னை சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அவர்களிடம் பேசுவதற்கான வார்த்தைகளை தேடிப்பிடித்துக் கொண்டிருந்தாள்.

“சரிடி. நாங்க சொல்ற விஷயத்தை மொதல்ல செய்யி. அவர்களின் வார்த்தைகள் மிக ஆங்காரமாய் ஒலித்தது. அவர்களிடம் கெஞ்சி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தோன்றியது. சாலையின் வாகனங்களில் போக்குவரத்து என்பது முற்றிலுமாக நின்று போயிருந்தது. மனித நடமாட்டங்கள் அற்ற பெரும்வனத்தில் ஓநாய்களிடம் மாட்டிக் கொண்ட ஆடுபோல நின்றாள். ஒருவனுக்கு அதிகமாக வீரியத்துடன் போதை ஏறத் தொடங்கியது. அவன் பேச்சில் தடுமாற்றமும் குழறலும் ஏற்பட்டுவிட்டிருந்தன.

தீர்க்கமான முடிவோடு இவள் கேட்டாள், “ நான் என்ன செய்யணும் சொல்லுங்க”.

“துணிய அவுருடி.”

ஒரு கணப்பொழுது நிலவை பார்த்தாள். மதகில் உட்கார்ந்தபடி கட்டளையிட்டும், அதட்டியும் கொண்டிருந்தார்கள். முதலில் ரவிக்கையும் பிறகு இடுப்பில் கட்டியிருந்த பாவாடையையும் சுழற்றி அவர்கள் முகத்தில் வீசினாள். கூம்பியிருந்த மார்பகத்தையும் வாளிப்பற்ற தொடையையும் வதங்கிப் போயிருந்த அவள் முகத்தையும் பார்த்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர்கள் சிரிப்பின் குரூரம் நிச்சலன வெளியெங்கும் நிரம்பியது.

நிர்வாண உடம்பில் ஒளிர்ந்த நிலவு அவள் உடம்பில் “வடுக்களை” பிரதிபலித்தது. திடீரென்று அவளுக்குள் ஒரு தீவிரம் எழுந்தது. உடல் அதிர்ந்தது. அவமானம் சொல்லாக உருமாறத் தொடங்கியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com