Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
தமிழ்ச் சிறுகதையின் புதுமுகம்
சரவணன்1978

2000க்குப் பிறகு நவீனத் தமிழ்ச் சிறுகதையின் கதை கூறும் மொழி நவீனத் தமிழ்க் கவிதை மொழியோடு பெருமளவில் கலக்கத் தொடங்கியுள்ளது. இதனால் புதுவகையான ‘கவிக்கதைகள்’, ‘கதைக்கவிகள்’ உருவாகியுள்ளன. இலக்கிய வடிவங்கள் ஒன்றோடொன்று கலப்பது என்பது தமிழுக்குப் புதிதல்ல. 2000 வருடங்களாகவே அதற்கான முயற்சிகள் பல்வேறு படைப்பாளர்களால் கையாளப்பட்டு வந்துள்ளன. ‘பாட்டிடை வைத்த குறிப்பினானும்’என்ற பாட்டினிடையே வரும் பொருட்குறிப்புகளைத் தொல்காப்பியர் உரையின் வகைகளில் ஒன்றாகக் கூறுகிறார். பாட்டிற்கு இடையில் உரை வடிவம் வருதல் இலக்கணமாகக் கருதப்பட்டதால் கவிதைக்கு இடையில் உரை வடிவம் கலப்பது மரபுதான் என்பது தெளிவாகிறது.

சிலப்பதிகாரம், ‘உரையிடைப் பட்ட பாட்டுடைச் செய்யுள்’தான். ‘தகடூர் யாத்திரையிலும்’ பெருந்தேவனாரின் பாரதத்திலும், நாட்டார் கதைப்பாடல்களிலும், தொடக்ககால நாடகங்களிலும் (வசனமும், பாடல்களும்), பாரதியாரின் வசனகவிதைகளிலும் இதன் நீட்சியைக் காணமுடிகிறது. ஜெயமோகனின், ‘பின்தொடரும் நிழலின் குரல்’நாவலில் சிறுகதை, கவிதை, நாடகம், கடிதம், நாவல் என்ற தற்காலத் தமிழிலக்கிய வடிவங்கள் அனைத்தும் வருவதைக் காணலாம். இந்நாவலைப் பின்பற்றி வேறு எந்நாவலும் இதேபோன்ற வடிவக்கலப்பில் உருவாகவில்லை. காரணம், வாசகர்கள் இம்மாதிரியான வடிவக் கலப்பை விரும்பவில்லை. வாசகர் அங்கீகாரம் இல்லாததால் இம்மாதிரியான முயற்சிகளைப் படைப்பாளர்கள் தொடர்ந்து மேற்கொள்ளவில்லை.

தற்போதைய சிறுகதைகளின் உரையாடல்களிலும் கதைகூறும் மொழிநடையிலும் நவீனக் கவிதையின் சாயலைக் காணமுடிகிறது. அவை உரைநடையில் எழுதப்பட்டக் கவிதைகளாகவோ, கவிதை நடையில் எழுதப்பட்டச் சிறுகதைகளாகவோ இல்லாமல், இரு வடிவங்களும் இரண்டறக்கலந்து செய்யப்பட்ட திருந்திய புதுமுகத்துடன் இருப்பதனைக் காணமுடிகிறது. “கதைகள் கவிதை நிரம்பியவையாய் ரஸபாவோபேதமாய் இருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்” என்று 1915-ல் வ.வே.சு ஐயர் கூறியிருந்தார். அவரது எண்ணம் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் முழுமையாக நிறைவேறியுள்ளது.

“சிறுகதைகள் வாசிப்பதில் ஒரு கிளர்ச்சி உண்டாகிறது. உணர்ச்சியும் பொங்கி எழுகிறது. இதற்குச் சாதனமாயிருப்பதற்குச் சிறுகதை ஆசிரியர்கள் தங்களுடைய வசனநடையில் ஆங்காங்கே கவிதா பாவத்தைப் புகுத்துவது வழக்கம். கலைத்தேர்ச்சியில் வல்லவர்கள்தான் இந்த முறையை ருசியுடனும், வரையறிந்தும் அநுஷ்டிப்பார்கள்” (ஏ.வி.சுப்பிரமணிய அய்யர், தற்காலத் தமிழ் இலக்கியம், மக்கள் வெளியீடு, சென்னை-02, மூன்றாம் பதிப்பு, டிசம்பர்-1985, ப.136). ஒரு படைப்பாளி கவிஞராகவும், கதையாசிரியராகவும் இருக்கும்போது மட்டுமே இம்மாதிரியான புதுமுக சிறுகதைகளைப் படைக்கமுடியும். விதிவிலக்காக, படைப்பாளர் ஒரு கவிஞராகவும், கூடவே கதைகூறும் திறனும் பெற்றிருப்பின் இது சாத்தியமாகும்; கதையாசிரியராகவும், கவிஞனுக்குரிய கவிமனம் இருந்தால்கூட இது கைகூடும்.

நவீன சிறுகதைகள் நவீனக் கவிதையின் சாயலைப் பெறுவது போலவே, நவீனக் கவிதைகளும் நவீனச் சிறுகதைகளின் சாயலைப் பெற முயன்றன. ஆனால் அவ்வகையான படைப்புகள் வாசக அங்கீகாரம் பெறவில்லை. உதாரணமாக, மு.மேத்தா எழுதிய, ‘வெளிச்சம் வெளியே’என்ற கவிதைச் சிறுகதையையும், ராணி திலக் ‘உயிர்மை’2003 அக்டோபர் இதழில் 13ஆம் பக்கத்தில் எழுதிய உரைநடைக் கவிதைகளையும் கூறலாம்.

இப்புதுமுகச் சிறுகதைகளின் பின்புலத்தில், கவிதை மட்டுமே வாசிக்கும் வாசகரையும், கதைகள் மட்டுமே வாசிக்கும் வாசகரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியைக் காணமுடிகிறது. ‘வாசிப்பு’என்ற நேர்கோட்டில் இருவேறுபட்ட இலக்கிய வடிவ வாசகரையும் ஒன்றிணைப்பதால் புதுவித ரசனைக்கும், நுண் விமர்சனத்திற்கும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளன.

சில படைப்பாளர்கள் தமது படைப்புகளில் வர்ணனைக்காகவோ, வாசிப்புச் சுவைக்காகவோ சில இடங்களில் ஒரு வரி அல்லது சில வரிகளைக் கவிதைச் சாயலுடன் அமைப்பது வழக்கம். ஆனால், தீவிரப் படைப்பாளிகள் கதையின் கூர்முனைகள் வெளிப்படும் இடங்களில் மட்டும் கவிதைச் சாயலைப் பயன்படுத்துவர். சில தருணங்களில் அவை தாமே அமைவு கொள்வதும் உண்டு. கவிதைச் சாயலுடன் சிறுகதைப் படைக்கும் கைதேர்ந்த படைப்பாளர்களாக உமாமகேஸ்வரி, ஜே.பி.சாணக்யா ஆகியோரைக் கூறமுடியும். தமிழினி பதிப்பகம் வெளியீடாக உமாமகேஸ்வரியின், ‘மரப்பாச்சி’, ‘தொலைகடல்’சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக ஜே.பி.சாணக்யாவின், ‘என் வீட்டின் வரைபடம்’, ‘கனவுப் புத்தகம்’ சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

“அப்போதைய அவனது முகம் அவளுக்குத் தன்னைப் பார்ப்பது போன்றும் தன்னைத் தானே அள்ளிப் பருகுவது போன்றும் இருந்தது. இமைகள் தொலைதூரத்திலிருந்து ஊரை வந்தடையும் மிகச் சீரான கோவில் மணியோசையைப் போல் திறந்து திறந்து மூடிக்கொண்டன. நீளும் ஒலியிலும் அதிர்வின் இடைவெளியில் காமத்துடன் போராடி மோகிக்கும் அவனது தீவிர முகத்தை இன்பத்துடன் பருகினாள்.” (நதியின் புன்னகை - ஜே.பி. சாணக்யா)

“உற்காகமும் துள்ளலும் கூடிய நடையோடு முந்தானை தத்தளிக்க மறுபடி சிறுமிகளாகி மலையின் அடிக்கோட்டைத் தொட ஓடினோம். மூச்சு வாங்க நின்று ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் குழந்தையின் தூளியை விலக்கும் விதமாக மிகமிக மெதுவாக எங்கள் பாதங்கள் மலையின் காலடியை வருடின. அதன் அசைவுறாத குளிர்ந்த மோனத்திற்குள் கால் பட்டபோது உடல் கிளுகிளுத்தது. சிற்றடிகளிட்டு நாங்கள் முன்னேறுகையில் உசுப்பப்பட்ட உறக்கம் கலைந்து மலை திமிறி எழுந்தது.” (மலையேற்றம் - உமா மகேஸ்வரி)

“வேர் ஓரிடத்திலுமாய் வளைந்து குளம் பார்க்கும் மாவிலிங்க மரத்தில் சிறுவர்கள் மேலேறி வானப் பின்னணியிலிருந்து உடலைச் சுழற்றிக் குதிக்கின்றார்கள். நீர் அனைவரையும் வரவழைத்துத் தனக்குள் வாரிப் போட்டுக் கொண்டிருக்கிறது.” (நதியின் புன்னகை - ஜே.பி.சாணக்யா)

“அம்மா தனக்கும் அவளுக்கும் இடையே தள்ளத் தள்ள முளைத்தாடும் திரைகளை விலக்க முயன்று தாண்டி முன்னேறுகையில் புதிது புதிதாய் திரைகள் பெருகக் கண்டு மிரண்டாள். நிரந்தரமான மெல்லிய திரைக்குப் பின்புறம் தெரியும் மகளின் வடிவக்கோடுகளை வருடத் தவித்தாள்.” (மரப்பாச்சி - உமா மகேஸ்வரி)

“நான் அதை வெறித்தபடி இருந்தேன். சற்றுச் சாய்ந்த கழுத்து உயிரற்றதோவென்று திகைக்க வைக்கும் கோலிக்குண்டுக் கண்கள். காகம் நளினமாகச் சுவர்த்திட்டில் நடை பயின்றது. ஒரு நீண்ட உரையாடலைத் துவக்கப்போவதுபோல தொண்டையைச் செருமிக் கொண்டது. இறக்கைகளை விரித்துப் படபடவென்று அடித்தது. அந்தச் செயல் தன்னைத்தூக்கித் தழுவ வேண்டுமென தரையிலிருந்து தாவும் பிள்ளையை நினைவூட்டியது. ஏதோ ஒரு உறவுக்கான ஏக்கம் அதன் அசைவுகளில் கசிந்து கொண்டிருக்கையிலேயே நான் சகிக்க முடியாத ஒரு நாடகத்திலிருந்து வெளியேறுபவனாக உணவுத் தட்டை அங்கேயே விட்டுவிட்டு படிகளுக்கு ஓடினேன். கண்கள் ஏனோ கசிந்தன. எரிபட்ட காகிதச் சுருளென அந்தக் காகத்தின் பறப்பு தாழ்வாரத்திலிருந்து மேலே பார்த்தபோது தெரிந்தது.” (அது - உமா மகேஸ்வரி)

“அதுவரை அவளுக்குப் பாதுகாப்பாக இருந்த அவள் புடவையே காமத்தின் சிறகுகள் போலக் காற்றில் படபடத்து அவனை மோகித்து அழைத்தது” (இரண்டாவது ஆப்பிள்-ஜே.பி.சாணக்யா)

“அவளோ அறைக்குள் புதையவே விருப்பம் கொண்டாள். இறுகிய சுவர்கள், இடைவிடாமல் சஞ்சலமுறுகிற திரைச் சீலைகள், திறப்பை வெறுக்கும் கதவு, அதனுடைய மூடிய இமைகள் போல இருக்கும் ஜன்னல்கள் என்றிருந்த அறை அவளை அரவணைத்துக் கொண்டது. மூலைகளிலிருந்து நீளும் அவன் நினைவுகளைப் பற்றியவாறே தனிமையின் சுழலுக்குள் முற்றிலும் மூழ்கிவிடாமலிருக்க முடிந்தது அவளால். முடிவே அற்ற பாலையாக விரியும் கட்டிலில் அவனுடைய அழியாத தடங்கள் அதிசயமளித்தன. அருந்தி மீந்த கோப்பையின் அடியில் படர்ந்த காபி படலம்போல் அவன் முகத்தோற்றங்களை விரல் நுனியால் தீண்டியவாறே இருப்பாள். தூங்கியும் மயங்கியும் அழுதும் நினைவுகளை அளைந்தும் தேறுதல் இல்லாதவளாய் இருந்தாள்.” (மணற்குமிழ் - உமா மகேஸ்வரி)

இவைகள் அனைத்தும் கவிதையின் சாயல்கொண்ட உரைநடைகள் - அச்சிறுகதைகளின் முக்கியமான பகுதிகள். கதையின் முக்கியப் பகுதிகளைப் படைப்பாளர் கவிதைச் சாயல் கொண்ட நடையில் அமைக்க வேண்டியதன் நோக்கம், ஒன்று: கதையின் பேரழகைத்தொட விழைதல், இரண்டு: கதையின் உட்பொருளைச் சொல்ல முடியாத-பலவீனப்பட்ட உரைநடைச் சொற்களின் மீதான காழ்ப்பு, மூன்று: நவீனச் சிறுகதையை நவீனக் கவிதை வாசகரை நோக்கி நகர்த்துதல், நான்கு தம் கதையாடலைத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றிலிருந்து தனித்துக் காட்ட விரும்பி, தம்மோடு நவீனச் சிறுகதையை அழைத்துக் கொண்டு வேறு திசையில் புதிய வாசகரைத் தேடிப் பயணித்தல்.

இத்தகைய சிறுகதைகள் வாசகருக்கு மட்டுமல்லாமல், விமர்சகருக்கும் புதிர்கள் அடர்ந்த புதியவாசல்களைத் திறந்தபடியே இருக்கின்றன. இளம் மற்றும் முதுநிலை ஆய்வாளர்கள் இம்மாதிரியான சிறுகதைகளை ஆய்வு செய்ய விரும்பினால், முன்னதாகவே தங்களுக்கு நவீனக் கவிதை பற்றிய தெளிவான புரிதலையும், தீவிர கவனத்தையும் ஏற்படுத்திக் கொள்வது அவசியம். இச்சிறுகதைகளில் போக்கு உச்சத்தைத் தொடும் காலகட்டத்தில், ‘கவிதை-கவிஞன்-கவிதை வாசிப்பு-கவிதானுபவம் போன்றவைகள் அனைத்தும் சிறுகதைகளிலிருந்தே பிறப்பவை” என்பதொரு பிம்பம் ஏற்படக்கூடும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com