Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
சிகரங்களைத் தொட்ட அடூர் கோபாலகிருஷ்ணன்
ஏ.எம்.சாலன்

ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் மலையாளத் திரைப்படங்கள் தமிழ்த் திரைப்படங்களின் நிழலாகவே இருந்து வந்தன. திரைக்கதை, பாடல்கள், அபிநயம் என, எதை எடுத்துக் கொண்டாலும் இதனைக் காண முடியும். பின்னர்தான் மலையாளத் திரைப்பட உலகம் தனக்கென்று ஒரு பாதை அமைத்துக் கொண்டு அதன் வழியே முன்னேறத் துவங்கியது. புதிய புதிய மூலக்கதைகளும் திரைக்கதைகளும் பிறந்தன. பல கோணங்களில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. மலையாளத்திலுள்ள சிறந்த நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்தன. சிறந்த நாடகங்கள் திரைப்படங்களாயின. பல சிறந்த நடிகை-நடிகர்கள் உருவானார்கள். சிறந்த இயக்குநர்களும் பாடலாசிரியர்களும் தோன்றினார்கள். மொத்தத்தில் இக்காலக்கட்டத்தில் (1960) மிகச்சிறந்த திரைப்படங்களும், கலை இலக்கியங்களும் தோன்றுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

பிற மாநிலங்களின் திரைப்படங்களிலிருந்து மலையாளத் திரைப்படங்கள் சற்று வித்தியாசப்பட்டன. அன்றைய சமகால அரசியல், குடும்ப விஷயங்களை தத்ரூபமாக சித்தரித்துக் காட்டின. கேரளத்திலுள்ள அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு ரீதியான மாற்றங்களும், அம்மாற்றங்களுக்காக வேண்டி மக்கள் நடத்திய போராட்டங்களும் அக்காலத் திரைப்படங்களில் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன.

இந்த வேளையில் தான் அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்ற சிறந்த இயக்குநர்கள் மலையாளத் திரைப்பட உலகில் அடியெடுத்து, வைத்தனர். அடூரின் முதல் திரைப்படமான ‘சுயம்வரம்’(1972-ல்) வெளிவந்தது.

இப்படத்தின் கதாநாயகியும் (சீதை) கதாநாயகனும் (விஸ்வன்) நம் சமூகத்திலுள்ள வேர்கள் நஷ்டப்பட்ட மக்கள் பிரிவினரின் பிரதிநிதியாகப் படைக்கப்பட்டிருந்தார்கள். பணம் சம்பாதிப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாகக் கட்டமைக்கப் பட்டிருந்தது. ‘சுயம்வரம்’நம் கண்ணெதிரே காணும் அன்றாட மனிதர்கள், அவர்கள் படும் கஷ்ட நஷ்டங்கள், இந்த சமூகத்திற்கும் அவர்களுக்கும் இடையே உள்ள உறவுகளை, அத்திரைப்படம் தொட்டுக் காட்டியது. பொதுவான மனிதர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அவர்களுக்கே உரித்தான தனித்தன்மை, சமூகச் சூழல், மனிதர்கள் தனியாகவும் கூட்டாகவும் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் என, எண்ணற்ற விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதே மாதிரியான ஒரு படம்தான் அவரது ‘கொடியேற்றமு’ம் (1977). இது, ஒரு நடுத்தரக் குடும்பத்தில் எழும் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தை, நம் திரைப்பட உலகில் தென்னிந்தியாவில் புதிய சிந்தனைகள் தோன்றிய காலம் என்று கூடச் சொல்லலாம்! (வடக்கே- வங்காளம் போன்ற மாநிலங்களில் இப்போக்கை ஏற்கனவே சத்யஜித்ரேய், மிருணாட்சென் போன்றவர்கள் திரைப்பட உலகில் துவக்கி வைத்து விட்டனர்) காரணம், இந்த வேளையில் தான், தமிழில் இயக்குநர் பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’வெளிவந்திருந்தது. அந்த ஆண்டில் சிறந்த திரைப்படத்தைத் தேர்வு செய்யக் கூடியிருந்த திரைப்படக்குழு சற்று நேரமாகத் திண்டாடிப் போனதாம்!

சிறந்த நடிகராக ‘16 வயதினிலே’வில் நடித்த கமலஹாசனைத் தேர்வு செய்வதா? அல்லது ‘கொடியேற்றத்தி’ல் நடித்த மலையாள நடிகர் கோபியைத் தேர்வு செய்வதா? என்று இறுதியில் சிறந்த திரைப்பட நடிகருக்கான விருதினை கோபியே தட்டிக் கொண்டு வந்தார். இந்த பெருமை இயக்குநர் அடூருக்கே உரியது ஆகும்.

இத்திரைப்படத்திற்குப் பிறகு, அதில் கதாநாயகனாக நடித்த கோபி அவர்கள் ‘கொடியேற்றம் கோபி’அல்லது ‘பரத் கோபி’என அழைக்கப்பட்டார். இப்படம், அந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியிலும், சாதாரண திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் அறிவாளிகள் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து அடூரின் ‘எலிப் பத்தாயம்’(1981) வெளிவந்தது. இதில், கேரளத்திலுள்ள நிலவுடைமை சமூகத்தின் விஷயங்கள் உள்ளடக்கமாக்கப் பட்டிருந்தன.

1984-ல் அடூரின் ‘முகாமுகம்’வெளிவந்தது. இத்திரைப்படம் கேரள அரசியல் உலகைப் பிடித்து ஒரு குலுக்கு குலுக்கிவிட்டுச் சென்றது. கேரளத்தைப் பொறுத்தமட்டில் மிகச் சாதாரண மனிதர்கள் கூட, அரசியல் விஷயத்தில் தெளிவான அரசியல் அறிவுடையவர்களாக இருப்பார்கள். டெல்லியிலும் திருவனந்தபுரத்திலும் எடுத்தப் படம். அரசியல் தீர்மானங்களை அன்றாடம் தெரிந்து கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுபவர்கள், இங்குள்ள அன்றாடங் காய்ச்சிகள். அரசியல் ரீதியாக எப்போது, எந்தத் திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என தக்க சமயத்தில் முடிவு எடுப்பதில் இங்குள்ள மக்கள் நிபுணர்கள் என்று கூடச் சொல்லலாம்!

விமர்சனம் என வரும்போது, வலது-இடது எனப் பார்க்காமல் அவர்களது தவறுகளைச் சுட்டுவதில் கேரள மக்கள் ஏனைய மாநிலங்களில் வாழும் மனிதர்களை விட ஒருபடி மேல்தான். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் அடூர் அவர்களின் ‘முகாமுகம்’ (முகத்துக்கு முகம்) திரைப்படம். கேரளத்திலுள்ள இடதுசாரி இயக்கங்களும் அவைகளின் நடைமுறைகளும் கூட, இப்படத்தில் விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருந்தது.

இப்படி, அனந்தரம் (1987), மதில்கள் (1990), விதேயன் (1993), கதாபுருஷன் (1995), நிழல் கூத்து (2003) - என, பல திரைப்படங்கள் படிப்படியாக வெளிவந்தன. ‘மதில்கள்’ மறைந்து போன பிரபல மலையாள இலக்கியவாதியான வைக்கம் முகமது பஷீரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ‘விதேயன்’ திரைப்படம் பிரபல நவீன மலையாள எழுத்தாளர் சக்கரியாவினுடைய ‘பாஸ்கர பட்டேலர்’என்ற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ‘நிழல் கூத்து’ படம் காளியப்பன் என்ற ஆராய்ச்சியாளருடைய மானசீகப் பிரச்சனையை மையமாக வைத்து கட்டமைக்கப் பட்டது.

அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றவர்களுடைய வருகைக்குப் பின்னர் தான், மலையாளத் திரைப்படங்களின் தரம் தேசிய - சர்வதேச அளவுக்கு உயர்ந்தது. இம்மாதிரிப் படங்களின் வருகைக்குப் பிறகுதான் மலையாளத் திரைப்பட ரசிகர்களின் தரமும் உயர்ந்தது. வாழ்க்கையிலுள்ள நிஜங்களும் போலிகளும் மக்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டன. வாழ்வதற்காக வேண்டி மனிதர்கள் சமூகத்தில் அன்றாடம் நடத்தும் போராட்டங்கள், அவர்கள் அனுபவித்துவரும் துன்பங்கள், போன்றவைகளும் திரைப்படங்களின் கருப்பொருளாக்கப் பட்டன.

அடூரின் திரைப்படங்கள் சாதாரண ரசிகர்களையும் அறிவு ஜீவிகளையும் ஒரு போலக் கவர்ந்தன. இவரது திரைப்படங்கள் பொது மக்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தன. “நவீனத் திரைப்படம் என்ற லட்சியத்தை முன்வைத்து, அதற்குத் தோதான திரைப்படச் சூழலை அடூர் கோபால கிருஷ்ணன்தான் கேரளத்தில் உருவாக்கினார், என்னைப் போல இன்னும் பல மலையாளிகள் பூனா இன்ஸ்டிடியுட்டில் சென்று சேரவும், திரைப்படங்களைப் பற்றிப் படித்து, நல்ல ஞானம் பெற்றுத் திரும்பவும் அடூரின் திரைப்பட நடவடிக்கைகள் தான் காரணமாக அமைந்தன.” என்கிறார் பிரபல மலையாள இயக்குநர் திரு.கே.ஜி.ஜார்ஜ் அவர்கள்.

அவர் மேலும் தொடர்கிறார்: “1972ல் ‘சுயம்வரம்’ வெளிவந்ததோடு, மலையாளத் திரைப்பட உலகில் அடூருக்கே உரிய திரைப்படப்பாதை அமைந்து விட்டது. தான் தேர்ந்தெடுத்துப் பயணித்து வந்த அந்தப் பாதையிலிருந்து அவர் இன்றுவரையில் வழிமாறிச் செல்லவே இல்லை!” என்றும் கூறுகிறார். அடூரின் திரைப்படங்கள், இந்தியாவை நினைவூட்டும் வகையில் ஏராளமான சர்வதேச திரைப்படப் போட்டிகளில் கலந்து, பல விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்துள்ளன.(Certificate of merit, International film Review, Colombo, British Film Institute Award, UNICEF Film prize, Rotterdom critics prize- போன்றவைகள் அடூர் பெற்ற வெளிநாட்டு விருதுகள்)

அடூரின் படங்கள் அனைத்தும் அடூருக்கும், அவரது படங்களில் நடித்த நடிகர்-நடிகையருக்கும், (மம்முட்டி உட்பட) கேமிரா மேனுக்கும், பின்னணிக் குரல் கலைஞர்களுக்கும் ஏராளமானப் பரிசுகளைப் பெற்றுக் கொடுத்தன. ஆக, திரைப்பட உலகில் இவ்வளவு சாதனைகளைப் படைத்தளித்த அடூர் கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு, தற்போது, 2004-க்கான தாதா சாகிப் பால்கே விருது அளிக்கப்பட்டுள்ளது. அதைக் குறித்து அவர் மட்டுமல்ல; நாமும் பெருமைப்படலாம்!

தேசிய விருதைப் பெற்ற அடூரின் திரைப்படங்கள்
1. சுயம்வரம் (1972)
2. கதாபுருஷன் (1995)

சிறந்த இயக்குநருக்கான விருதை வாங்கிக் கொடுத்த படங்கள்
1. சுயம்வரம் (1972)
2. முகாமுகம் (1984)
3. அனந்தரம் (1987)
4. மதில்கள் (1989)

சிறந்த திரைக்கதாசிரியருக்குரிய விருதுகளை வாங்கிக் கொடுத்த படங்கள்
1. முகாமுகம் (1984)
2. அனந்தரம் (1987)

சிறந்த படத்திற்கான மாநில விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்த படங்கள்
1. கொடியேற்றம் ( 1977)
2. எலிப்பத்தாயம் (1981)
3. முகாமுகம் (1984)
4. விதேயன் (1993)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com