Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
ஒரு கலைமாமணியின் கிளைமாக்ஸ்
ராஜசேகரன் - சாம் ஜெஃப்ரி உதவியுடன்

ரஞ்சனியம்மாள். தமிழக அரசின் கலைமாமணி, கலைமுதுமணி, பொற்கிழி பரிசுபெற்றவர். 75 வயதாகும் இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் மு.கருணாநிதியுடன் கதாநாயகியாக 250 மேடைகளுக்கு மேல் நடித்தவர். கலைஞர் முதல்வராக இருந்தபோது அவரிடம் பொற்கிழி வாங்கியவர். முதல்வர் ஜெயலலிதாவிடம் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கலைமுதுமணி விருதும் வாங்கிச் சாதித்தவர்.

ஆனால் இன்று சாப்பாட்டிற்கு வழி இன்றி மேலூர் தெருக்களில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார். கலைஞருடன் இவர் கதாநாயகியாக நடித்த தூக்குமேடை நாடகத்திற்கு அந்நாளைய அரசு 144 தடை விதித்திருந்ததாம். அந்தளவு புரட்சியோடு நடித்தவர்.

இவரது இளமைக்கால புகைப்படங்கள் நமக்கு நடிகை சரோஜா தேவியை ஞாபகப்படுத்துகின்றன. அந்தப் புகைப்படங்களை மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாத்து தனது இளமைக்கால நினைவுகளை அசைபோடுகிறார். பட்டங்கள், பரிசுகள், பொற்கிழிகளை வாங்கிக் குவித்த இவர் இன்று ஒரு வேளைச் சோற்றுக்கு வழியின்றி வறுமையில் சிக்கி வாடுகிறார்.

இரண்டு மகன்களிருந்தும் கவனிக்கப்படாத நிலையில் மேலூர் அருட்பெருஞ்சோதி அறச்சாலையில் கிடைக்கும் சோற்றை வாங்கி சாப்பிட்டு தன் வாழ்க்கைத் திரைக்கதையின் கிளைமாக்ஸில் நடித்து வருகிறார். பழங்கால நினைவுகளை ஆனந்தக் கண்ணீரோடு பகிர்கிறார்.

“வள்ளி திருமணம் நாடகமும், அதைத் தொடர்ந்து வந்த திரைப்படமும் பொய். பால்பான்அப்பு மாத்திட்டான். நான் அதை பெருமையை நிலை நாட்ட வள்ளி திருமண நாடகத்தையே மாற்றி நடித்தேன். அதனால் அன்று எனக்கு பலத்த எதிர்ப்பு. அதனாலேயே எனக்கு வருமானமும் பாதித்தது. ஆனால் நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. வரலாறு மாறாம நடிச்சதுனால இன்னைக்குக் கஷ்டப்படுறேன்” என்கிறார். வள்ளி திருமண நாடக மேடைகளை பயன்படுத்தி பல நடிகர்களும் அவரிடம் தங்கள் காதல் விண்ணப்பத்தை அளிப்பார்களாம் - பாடல் வழியே. இவரும் சளிக்காமல் மேடையிலேயே உடனடியாகப் பாட்டுக் கட்டி மறுப்புக் கூறுவாராம்.

நம்மிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பாடல் பாடத்துவங்குகிறார்.

“சுக சுதந்திரமும் நிதம் பெருகி
வளர்த்தனைய இதம் தரும்
மெய்க்காதல்
அனங்கனது கொடும் கணைகள்
திடும் திடுமென விழுந்திடும்
மெய்க்காதல்
அன்பதால் இன்பமே
கண்டுமே துன்பமே
கண்டிடா மெய்க்காதல்.
அருங்கலைச் சுரங்கினில்
கருங்கலக் குணந்தரும் காதல்
கனிவாயில் ரசம் பெருகும் காதல்
பரலோகம் காட்டி விடும் காதல்
பரதேசியாக்கி விடும் காதல்
முல்லைச் சிரிப்பூட்டும் காதல்
பல்லைப் பல்லைக் காட்டும் காதல்
காதல் கட்டுக் கடங்காத காதல்
காதல் சுற்றித் திரிந்தால்
அடுப்பில் சுடும் கொள்ளிக் கட்டைக்குள்
அடங்கி விடும் காதல்”.

இன்னும் பல வசனங்களை மறக்காமல் அட்சரம் பிசகாமல் பேசும் ரஞ்சனிஅம்மாள், பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். ஆனால் வாழ்க்கை நிலையோ பரிதாபம். ஒரு வேளை உணவு கூட கிடைக்காத நிலையில் கஷ்டப்படுகிறார். பிள்ளைகள் இருந்தும் எந்த ஆதரவும் கிடையாது என வருத்தத்தோடு கூறுகிறார். இளமைக்கால நினைவுகளை இனிமையாய்ப் பகிரும் இவர். “இந்த உலகம் ஆணாதிக்கம் நிறைந்தது. நடிகைகளைப் போகப் பொருளாக நினைத்து அவமதித்து-அபகரித்து-அழித்து விடுகின்றது. வசதியும் பெரிதாக இல்லை. இப்பக் கூட நான் கஷ்டப்படுறேன். என்னை மாதிரியே தமிழ்நாட்டில் ரொம்ப பேரு இருக்காங்க. அதுக்கு நான் உதாரணம். எங்களுக்கு மன அழுத்தம் மாற ஏதாவது மாற்றுச் சூழல் அவசியம். வேறு ஏதாவது ஒரு இயக்கத்தில் இருந்தால் மனசு லேசாகும். இப்படியே வறுமையில் அமிழ்ந்து அழிந்து போவதை யார் தடுக்கப் போகிறார்கள்” என வருத்தத்தோடு கூறுகிறார்.

இடையிடையே கண்களில் நீர்வழிகிறது. குரல் கம்முகிறது. விரக்திச் சிரிப்பு உதட்டுக் கோணத்தில் இழையோடுகிறது. அத்தனையும் சுத்தமான அக்மார்க் உணர்வுகள். . . ஒரு நடிகையின் நடிப்பு இல்லை என்பது உச்சியில் உறைக்க. . . ஆறுதலாக ஒரு ஒற்றைப் பார்வை பார்த்து விட்டு நகர்ந்தோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com