Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
உழவர் பாதுகாப்புத் திட்டம்: அறுவடை செய்வாரா ஜெ.
ராஜசேகரன்

நீதிமன்ற உத்தரவையும் மீறி சென்னை நேரு விளையாட்டரங்கில் உழவர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் ஜெயலலிதா. கடந்த சுதந்திர தின விழாவின் போது உழவர்களின் நலன் கருதி (?) உழவர் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்திருந்த முதல்வர், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நீதிமன்ற உத்தரவையும் மீற வேண்டியதாயிற்று போலும்(!). வாக்குறுதியை நிறைவேற்றியதோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. ‘நானும் ஒரு விவசாயி’ என்று கூறி விவசாயிகளுக்கு நாமகரணத்தையும் போட்டு விட்டிருக்கிறார்? (!)

ஜெயலலிதாவுக்கு முளைத்திருக்கும் இந்த திடீர்ப்பாசத்தின் நோக்கம் என்னவென்று உங்களுக்கே தெரியும். வேறென்ன சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. மொத்த தமிழக வாக்காளர்கள் 4.72 கோடியில் கணிசமானவர்களையாவது கவர்ந்திழுக்க வேண்டுமே என்பது தான்.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பில் திட்டங்களை அறிவித்திருக்கிறார். இதன் வழியே 86 லட்சம் விவசாயத் தொழிலாளர்களும் 51 லட்சம் சிறு, குறு விவசாயிகளும் பயனடைவர் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் வழி ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் ஓட்டு வங்கியில் சிறு பகுதியையாவது பிரித்தாலும் அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு ‘போனஸ்’ தான். ஆனால் அந்தளவிற்கு தமிழக விவசாயிகள் மசிந்து போய் விடமாட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் கடந்த காலங்களில் ஜெயலலிதா தமிழக விவசாயிகளுக்கு அளித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

‘மின்சார ஒழுங்கு முறை ஆணையப் பரிந்துரையின் பேரில்’ என்று கூறி 2003ம் ஆண்டு சிறு விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ததை தமிழக விவசாயிகள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடமாட்டார்கள். அதே நிலைமைதான் காவிரி டெல்டா மாவட்ட மக்கள் பிரச்சனையும். அண்டை மாநில அரசுகளோடு மோதல் போக்கைக் கையாண்டு கொண்டு தண்ணீர் வர வழியில்லாமல் செய்தார். 2001-ல் அ.தி.மு.க. அரசு பதவியேற்றதிலிருந்து கரும்பு விவசாயிகளின் குறைந்த பட்ச கோரிக்கைகளைக் கூட பரிசீலிக்கவில்லை. பலமுறை போராடியும் மசியாத அரசு தேர்தல் வந்ததும் விலையை உயர்த்தித் தருவதாக அறிவித்திருக்கிறது. அதிலும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளுக்கு மட்டும் தானாம் இச்சலுகை. தனியார் ஆலைகளுக்கு கொடுக்க முடியாதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ‘பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல்’ என்ற பெயரில் விவசாயிகளை கடந்த நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது இந்த அரசு. ஏகபோக நெல் கொள்முதலை அமுல்படுத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 ஊக்கத் தொகை வழங்கவேண்டும் எனும் விவசாயிகளின் கோரிக்கை இத்தனை காலமும் கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறது.

மேலும் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன்களின் மீதான வட்டிகளை ரத்து செய்வதாக அறிவித்த அரசு, வங்கிகளை சீர்படுத்தி புதிய விவசாயக் கடன்களை வழங்குவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ள வில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கம் பல முறை வற்புறுத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் போது எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த அரசு இப்போது மட்டும் ‘குய்யோ முறையோ’ என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு சலுகைகளை அறிவித்திருக்கிறது.

இப்போதும் பல பிரச்சனைகள் தலையெடுக்க துவங்கியுள்ளன. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டு ஏதோ சாதித்து விட்டதாக அரசு தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. (கர்நாடக எல்லைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையின் விளைவாகத்தான் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தது என்பது ஊரறிந்த ரகசியம்) ஆனால் நிலைமையோ தலைகீழ். கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாத காரணத்தினால் இன்னும் தஞ்சையின் கடைமடைப் பகுதிக்கு தண்ணீரே வந்து சேரவில்லை. அப்படி வந்து சேரும் பட்சத்தில் விவசாயத்திற்கு தேவைப்படும் கால்சியம் உரங்களின் கையிருப்பு அரசிடம் போதுமானதாக இல்லை. ஆக விவசாயிகளின் தேவை என்ன என்பதையே புரிந்து கொள்ளாத அரசின் கீழ் வாழ வேண்டிய இக்கட்டான நிலைமை நம்மூர் விவசாயிகளுக்கு. இதில் ‘நானும் ஒரு விவசாயிதான்’ என்ற நாமகரணம் வேறு. விவசாயிகளுக்கான உருப்படியான திட்டங்களை அறிவிப்பதை விட்டுவிட்டு ‘பாதுகாப்புத் திட்டம்’ அமைக்கிறேன் என்று வாய்ஜாலம் காட்டுவதை இந்த அரசியல்வாதிகள் என்றைக்குத்தான் நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.

இன்னொன்று தமிழக வாக்காளர்கள் எல்லாவற்றையும் நம்பி விடத்தயாராகவும் இல்லை என்பது சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதே நிரூபணமாகிவிட்டது. இது தவிர ஏற்கனவே இருக்கக்கூடிய விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தை புறக்கணித்து விட்டு புதிதாக உழவர் பாதுகாப்புத் திட்டம் அமைக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன?

2001-ம் ஆண்டு துவக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தில் 7,32,000 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நபருக்கு தலா ரூ.100 வீதம் 7 கோடியே 32 லட்சம் ரூபாய் அரசிடத்தில் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் பணம் இருக்கிறது.

இதைப் புறக்கணித்து விட்டு புதிதாக உழவர் பாதுகாப்புத் திட்டம் அமைக்கப்படுகிறதாம். அதிலே உறுப்பினராவதற்கு ரூ.10 கட்டணமாம். அதையும் அரசே செலுத்திக் கொள்ளுமாம். விவசாயிகள் ‘பொம்மை’யான உறுப்பினர் அட்டை பெற்று எல்லாம் வல்ல இதய தெய்வத்திற்கு ஓட்டு போட்டுவிட வேண்டுமாம். இதெல்லாம் உலக மகா கொடுமையாகத் தெரியவில்லையா இந்த ஆட்சியாளர்களுக்கு? இதைவிட இன்னொரு கூத்தும் இருக்கிறது. கருணாநிதி காலத்தில் அமைக்கப்பட்ட விவசாய நல வாரியத்தை ஆதரிக்கும் தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் சாராம்சம் இது தான்: புதிதாய் அமைக்கப்படவிருக்கும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் உறுப்பினர் அடையாள அட்டையில் தமிழக முதல்வர் படம் இடம் பெறக் கூடாது என்பது. ஆனால் உயர்நீதிமன்றமோ ஏற்கனவே கருணாநிதி காலத்தில் அமைக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் வாரிய அடையாள அட்டையில் அப்போதைய முதல்வரின் படமே இடம் பெற்றிருந்தது என்பதைக் காரணம் காட்டி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். ஆக ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தங்கள் காலகட்டத்தில் அரசுப் பணத்தை எப்படியெல்லாம் தங்கள் செல்வாக்குக்கு பயன்படுத்த முடியுமோ அந்தளவிற்குப் பயன்படுத்தியும் விட்டு தங்களின் திருவுருவப் படத்தை அரசு நலத்திட்டங்களிலும் ‘பொறித்து’ உலா வருகின்றனர். இவர்களது வருத்தமெல்லாம் தங்களது ‘திருவுருவம்’ நீக்கப்பட்டது குறித்து மட்டும்தான்.

“இன்னும் சொல்லப்போனால் தமிழக ஆட்சியாளர்களின் அறிவிப்புச் சலுகையெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம் தான். 86 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் பயனடைவர் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ரூ.250 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையான நலன் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டுமெனில் ரூ.600 கோடியாவது ஒதுக்கப்பட வேண்டும். இல்லையெனில் கருணாநிதி அறிவித்து செயல்படுத்தாமல் விட்ட விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தைப் போலவே உழவர் பாதுகாப்புத் திட்டமும் அமைந்து விடும்” என்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கே. பாலகிருஷ்ணன்.

மேலும் பின்தங்கியுள்ள சிவகங்கை மாவட்டத்தில் ஒரு குக்கிராம வி.ஏ.ஓ.விடம், ‘இந்த பொறுப்பு உங்களுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளதே? எப்படி விவசாயிகளை (சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்) தேர்வு செய்வீர்கள்’ என்று கேட்டால், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; கிராமத்தில் யார்யாருக்கெல்லாம் ரேசன் கார்டு இருக்கிறதோ அவர்களெல்லாம் சிறு விவசாயிகள் தான்’ என்று போட்டு உடைக்கிறார்.

கால்வாய் பாசனமோ ஆற்றுநீர் பாசனமோ இல்லாத வானம் பார்த்த பூமியாய்க் கிடக்கும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் அனைவரும் கூலி வேலை செய்பவர்களாகவும், திருப்பூர், கோவை போன்ற ஊர்களுக்கு சென்று பஞ்சம் பிழைப்பவர்களாகவுமே உள்ளனர். இவர்களுக்கு தெரியாமலேயே இவர்களது பெயர்கள் சிறு விவசாயிகளாக சேர்க்கப்பட்டு உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் இடம் பெற்றிருப்பது வேதனைக்குரியது. முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் வழியே 60 வயதான விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.200 ஓய்வு கால ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அரசாணையின் விபரத்தைப் படித்துப் பார்த்தால் அதிலும் குளறுபடிகள் நிறைய இருக்கிறது. அதாவது 60 வயது முடிந்து, வேலை செய்ய முடியாமல், அதே சமயம் மகனோ, மனைவியோ, மகளோ இல்லாத நிலையில் உள்ள ஆதரவற்றவர்களுக்கே இது பொருந்தும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆக கொடுப்பது போல் கொடுத்து பிடுங்கி விடும் வேலைதான் இந்த அறிவுப்பும். இன்னொரு வகையில் சொல்லப்போனால் இது தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய திட்டமே அல்ல. ஏற்கனவே இருக்கக்கூடிய முதியோர் உதவித்தொகை திட்டம். அதன் செயல்பாடுதான் தெரியுமே!

முதியோர் திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்த கோலப்பன் கமிட்டியும் அதை ரத்து செய்து விட்டு 60 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிபந்தனையற்ற முறையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. ஆனால் அரசுக்கோ இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே விழுந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மக்கள் மீது பரிதாபம் வரத்தான் செய்கிறது. அரசின் அறிவிப்பில் மேலும் சில குளறுபடிகள் இருக்கின்றன. உழவர் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக வருவாய்த் துறை ஆணையர் தலைமையில் நிர்வாக அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் செயல்படுவார்கள் என்று சொல்லப் பட்டிருக்கிறது. வட்டாட்சியர்களின் செயல்பாடுகள் தான் உங்களுக்குத் தெரியுமே! கோட்டு சூட்டு போட்ட ஆட்களையே ஏறெடுத்துப் பார்க்காத அவர்களுக்கு எங்கே விவசாயிகளின் கோரிக்கைகள் கண்ணில் தெரியப்போகிறது? அது மட்டுமல்லாது இதற்கென்று ‘தனி வாரியம்’ அமைப்பதே உருப்படியான ஒன்றாக இருக்க முடியும்.

அதைவிட்டு விட்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது என்பதற்காக விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தையும் விவசாயிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்ட உழவர் சந்தை திட்டத்தையும் தமிழக அரசு முடக்கியது அதன் பழிவாங்கும் படலத்தின் ஒரு பகுதியே.

இப்படி ஆட்சிக்கு வருகிற அரசெல்லாம் தங்களது கோபதாபங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக சென்ற அரசின் நலத்திட்டங்களை முடக்குவது நல்ல அரசுக்கான தகுதியாக இருக்க முடியாது. அப்புறம் செய்வதையெல்லாம் செய்து விட்டு ‘நானும் ஒரு விவசாயிதான்’ எனவும் ‘இடஒதுக்கீடு குறித்து அரசு பரிசீலிக்கும்’ எனவும் வசனம் பேசுவதன் வழியே மக்கள் மனதை மாற்றிவிட முடியும் என நினைத்தால் அது அரசின் தப்புக்கணக்காகவே முடியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com