Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
தமிழ்ச் சினிமா இசை

கே.வி. மகாதேவனை முன்வைத்து சில குறிப்புகள்
குருசாமி மயில்வாகனன்

‘ஹீரோ என்ட்ரி’யாகும் காட்சிகளுக்கு ஒய்டான பாடல்கள் வேண்டும்; அது பரபரப்பூட்டுவதாகவும் இருக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து ரஜினி ஊடாக இன்று வரை தேவைப்பட்டு வரும் சங்கதியாகும்.

‘ஒருவன் ஒருவன் முதலாளி’ - ‘முத்து’வைத் தாண்டி, ‘சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறிய’ ‘படையப்பா’வைத் தாண்டி, ‘டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்புக் குமரி’‘பாபா’வோடு “ஆளவிடுங்கடாசாமி என்று ரஜினியிடமிருந்து ரஹ்மான் விடைபெற்றதற்குக் காரணமே ஹீரோ என்ட்ரி பாடல் விஷயம் தான்.

டைட்டிலாக கதாநாயகப் பாத்திரத்தின் பெயரையே வைத்து அதுவும் பாடலின் துவக்கமாக வேண்டும் எனும் போது இசையமைப்பாளர்களின் சிரமங்கள் பரிதாபமானவை. ‘படையப்பா’என்பதை எப்படி எப்படி சொல்லிப் பார்த்தார்கள். ‘பாபா’, ‘அருணாச்சலம்’, ‘தெனாலி’. . . எவ்வளவு ஜவ்விழுத்தார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ராஜா ‘கில்லாடி’. இவரது பாடல் வரிகளே பல படங்களுக்குத் தலைப்பாகியுமிருக்கின்றன. அது மட்டுமில்லாமல் விருமாண்டியை மிகப் பிரமாதமாக ‘விருவிருமாண்டி, விருமாண்டி’என வைத்திருப்பார்.

1967ல் ‘மன்னவன் வந்தானடி” கூட ஹீரோ என்ட்ரி பாடல் தான்.

ஒரிஜினல் டிவிடி இருந்தால் ஹோம் தியேட்டரில் போட்டுப் பார்க்கலாம். ஒருவேளை தியேட்டரில் ஓடினாலும் கூட ஓடிப்போய் பார்க்கலாம். மன்னரின் சகலத்தையும் வாழ்த்தும் பெண்கள் குரலும் அதைத் தொடரும் வீணை இசையும், முடிவில் வீணை வாசிப்பு முடிந்ததும் ஒரு போடு “ஜிங்+டங்+ஸ்”. மூன்றும் சேர்ந்த ஒலி. பாட்டின் ஒட்டம். சுசீலாவின் கச்சிதமான குரல். ஜதி சொல்பவரின் குரல் அதைவிடக் கச்சிதமாய்ப் பாட தெளிவான ஒலிப்பதிவும் பாடலின் சிறப்பம்சமாகும். மேலும். . . வேண்டாம் வார்த்தைகள். பாடலையே கேளுங்கள். இதே பாடலை டி.எம்.எஸ் பாடியும் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது எஸ்.பி.பியையாவது பாடவைத்துக் கேட்டுப் பார்க்கலாம்.

1968ல் ‘தில்லானா மோகனாம்பாள்’. சிவாஜி-பத்மினி ஜோடி. இசைக் கலைஞர்கள் குறித்த படம். வண்ணப்படம். ஆனால் சிவாஜிக்குப் பாட்டில்லை. பாடி நடிக்காத ஒரே படம் இதுதான். ‘சுசீலாவின் மறைந்திருந்தும், நலந்தானாவும்’, “எம்.பி.என். சேதுராமன்-பொன்னுச்சாமி”யின் நாதசுரங்களும் சிறப்பானதுதான் என்றாலும், மனோரமாவிற்காக எல்.ஆர். ஈஸ்வரி பாடும் “பாண்டியன் நானிருக்க” பாட்டுதான் சூப்பர். உண்மைதான். கிராமியக் கூத்துப் பாடல்களின் சூப்பர் மிக்ஸ் இது. அதுவும் அந்த, ‘அஜக்தா, ஜினுக்தா, சதக்தா. . . சதக்-சதக்’- 1964ன் நவராத்தியில் வரும் அற்புதக் கூத்தை நினைவு படுத்தும்.

இன்றைய இசையமைப்பாளர்கள் இவைகளையெல்லாம் கேட்பார்களா? இதன் கம்போசிங்கை அலசி, ஆராய்ந்து, பரிசீலிப்பார்களா? தெரியவில்லை. புதியவர்களின் புதிய பாடல்களைக் கேட்கும் போது அப்படியெல்லாம் ஏதும் நடைபெறாதது போலத்தான் தோன்றுகிறது.

1969ல் ‘அடிமைப்பெண்’. ‘தாயில்லாமல் நானில்லை’யின் பறவைகள் குரல்களின் துவக்கமும், தாளமும், “உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது”, இரண்டையும் தாண்டி விழுகின்ற பாடல் “காலத்தை வென்றவன் நீ!” இதுவும் டிடிஎஸ்ல் கேட்டுப் பார்க்க வேண்டிய பாடல்தான். ‘சரவுண்ட்’ கிடைக்காது தான் இருந்தாலும் இந்த எபெக்ட் கே.வி.மாகாதேவனுக்கு மட்டும் 1969ல் சாத்தியமானது எப்படி?

1970ல் ‘வியட்நாம் வீடு’. “ஜானகிக்கும் ராமனுக்கும்” கோரஸ் பாடல். ‘என் அண்ணன்’- “நீலநிறம் வானுக்கும் கடலுக்கும்” என்கிற பாடல். இன்றளவும் சலிப்பூட்டாத பாடல். இது போன்ற டியூன்கள் கே.வி.எம்.மிடம் அதிகமாகக் கிடைக்கின்றன.

1971ல் ‘ஆதி பராசக்தி’- “அழகாக. . .கண்ணுக்கு அழகாக”. 1972ல் ‘அன்னமிட்டகை’- பாடலின் துவக்க இசையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இன்றைய இளம் பாடல் ரசிகர்களிடம் இந்தத் துவக்க இசையைக் கேட்கச் சொல்லி கருத்தும் கேட்க வேண்டும். எம்.ஜி.ஆருக் கென்றே உருவாக்கப் பட்டிருந்த படிமம் இப்பாடல் முழுக்க இருக்கும். படம் பார்க்காத ஒருவரை இப்பாட்டிற்கு நடிக்கச் சொன்னால் இது எம்.ஜி.ஆர். பாணியிலேதான் இருக்கும். அதாவது கையைக் காலைத் தூக்கித் தான் பாடுவார்.

அதே வருடம் வந்த ‘வசந்த மாளிகை’, “குடிமகனே! ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’- இரண்டிலும் இசையமைப்பும், 30 வருடங்களுக்கு முன்னர் திரை உலகிற்கு வந்த கே.வி.எம்.மின் மாற்றங்களை என்னவென்று நாம் வகைப்படுத்த முடியும்?

“ஒரு கிண்ணத்தை”- பாடலை வைத்து ஒரு தகவல். பாடலின் சரணம் இந்திப் பாடல்களில் வருவது போல் ஆ. . .(தபேலா பின்னணியில்) எனத் துவங்கும். அதையே டி.எம்.எஸ் வேறு மாதிரி மாற்றிப் பாடுவார். படம் வந்த நேரம் எம்.ஜி.ஆர் Vs சிவாஜி நேரம்.

பாடலின் இரண்டாவது சரணம் “கட்டழகான தோர் கற்பனை ராஜ்யம்” எனத் துவங்கும். முடிக்கையில், ‘அதில் நான் சக்கரவர்த்தியடா!” என சிரிப்போடு டி.எம்.எஸ் முடிப்பார். படத்தில் பேன்டின் முன் வயிற்றுப் பட்டியை இழுத்து விட்டுக் கொண்டு பாடி நடிப்பார். தியேட்டரே அதிரும். இந்தப் பாடலும் காட்சியும் சிவாஜி ரசிகர்களைக் கடுமையாகத் தாக்கியிருந்தது.

2004. பாலாவின் “பிதாமகன்” கதம்பப்பாட்டு. சூர்யா பாடி நடிக்கிறார் “கட்டழகான தோர் கற்பனை ராஜ்யம்”. சுற்றிலும் மக்கள் கூடியிருக்க உயரமான மேட்டில் நிறுத்தப்பட்டுள்ள கம்பத்தின் அருகில் போய் காலரை இழுத்து விட்டுக் கொண்டு நாக்கை மடித்து வெளியில் பிதுக்குவார். காட்சி கம்பத்தின் உச்சக் கோணத்திலிருந்து படமாக்கப் பட்டிருக்கும். “பாலா” ‘வசந்தமாளிகை’ ரசிகர் கூட்டத்தில் இருந்திருப்பார் என்பது உறுதி.

1973ல் ‘எங்கள் தங்கராஜா’. ஹிட் பாடல்கள் ஆனாலும் ‘பட்டிக்காட்டுப் பொன்னையா’வில் வருகிற “பொட்டுப் போலே பூவைக் கொஞ்சம்” எனும் பாடல் முன்னர் சொன்ன சலிப்பூட்டாத ரகம் அல்லது ராகம்.

அதே ஆண்டில் ‘அன்புச் சகோதரர்கள்’. கண்டசாலா கடைசியாக “முத்துக்கு முத்தாகப்” பாடினாலும் கூட, எஸ்.பி.பி.யும் பி.சுசீலாவும் பாடிய “எதிர்பார்த்தேன்” பாடல் ‘மெலடி’.

1975ல் ‘பல்லாண்டு வாழ்க’- “போய்வா நதி அலையே”, “சொர்க்கத்தின் திறப்பு விழா”.

1976ல் ‘உத்தமன்’- ஒலிப்பதிவில் மிகவும் தெளிவும், துல்லியமும் தான் மிச்சம். “தேவன் வந்தாண்டி” என்கிற பாடலும் சேர்த்து குரல் எப்போதும் இருக்கிற எக்கோ எபெக்ட் உடன்.

சக்கரம் தேய்ந்தது. 1977ல் ‘வாணிஜெயராமி’ன் குரலில் “மங்கல வாத்தியம்’படம் ‘தாலியா? சலங்கையா? பிரபலமானது. 1979ல் ‘ஏணிப்படிகள்’- “பூந்தேனில் கலந்து’இப்பாடல் இளையராஜாவின் ஹிட்டில் இருக்கிறது. வெப்சைட்டில் கூட ஏணிப்படிகள் இளையராஜாவின் லிஸ்டில் இருக்கிறது.
ஆர்.சுந்தர்ராஜன் 1981ல் ‘அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை’1983ல் ‘தூங்காத கண்ணின்று ஒன்று’- என இரண்டு படங்கள் செய்தார். கே.வி.எம்.மோடு கடைசியா பழகிய இளைய தலைமுறை இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்.

‘பேஸ்’ எபெக்ட்டிற்காக அவர் தீவிரமாக இயங்கியிருக்க வேண்டும் என்பது அவரது பாடல்களின் அமைப்பு மூலமாக தெரிந்து கொள்கிறோம். கே.வி.எம்.மின் பாடல்கள் தவிர அவரது கால கட்டத்தில் வேறு எவரது பாடல்களிலும் இந்த நுட்பம் கேட்கக் கிடைக்கவில்லை. சரி! இதனால் என்ன பிரயோஜனம் என்கிற கேள்வியும் எழும்புவது வாஸ்தவம் தான்! என்ன செய்வது? காதில் விழுகிறதே!

அமுதும் தேனும் எதற்கு நீ. . .
அருகினில் இருக்கையிலே. . . எனக்கு!

நன்றி : வாமனன் எழுதிய ‘திரை இசை அலைகள்’


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com