Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
எல்.ஐ.சி. பொன்விழா

எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
ஜே.பி. அர்ச்சனா

“ஆயுள் இன்சூரன்சின் தேசிய மயமாக்கல் சமதர்ம சமுதாயத்தை அமைக்க நாடு தேர்ந்தெடுத்த பாதையில் ஒரு மைல்கல். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு இது பேருதவியாக அமையும். கிராமப்புறங்களில் வாழும் இலட்சக்கணக்கானவர் வாழ்வில் இன்சூரன்ஸ் மட்டுமே ஆழ்ந்த தன்னம்பிக்கை சார்ந்த, எதிர்காலத்தைக் கட்டுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்நடவடிக்கை மக்கள் சேவையை ஆழ்ந்த குறிக்கோளாகக் கொண்டது. சந்தேகக் கண்கொண்டு நோக்குபவர் எண்ணங்களை தவிடுபொடியாக்கி, இந்நடவடிக்கையை வெற்றி பெறச் செய்ய வேண்டியது மக்கள் தான்”.

இது ஆயுள் காப்பீட்டை தேசிய மயமாக்கி அவசரச் சட்டத்தைப் பிரகடனம் செய்து அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் இத்தேசத்திற்கு விடுத்த அறைகூவல்.

245 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களால் பல்வேறு விதமாக ஏமாற்றப்பட்ட ஆயிரக்கணக்கான பாலிசிதாரர்களை ஏற்றெடுத்து 1956ல் 5கோடி ரூபாய் அரசு முதலீட்டில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பின் நாட்டின் மூலை முடுக்கெங்கும் 2048 கிளைகளுடன் 3 லட்சத்து 67 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் எல்.ஐ.சி. விழுதூன்றிய ஆலமரமாகத் தழைத்து நிற்கிறதென்றால் அதற்கு காரணம் சி.டி.தேஷ்முக்கின் அறை கூவலை ஏற்ற இந்நாட்டின் கோடிக்கணக்கான ‘மன்னர்கள்’. ரூ.5கோடி முதலீட்டில் ஆரம்பமான எல்.ஐ.சி. சென்ற ஆண்டு மட்டும் மத்திய அரசுக்கு வழங்கிய டிவிடென்ட் 495 கோடி. தேஷ்முக்கின் அறைகூவலை நாட்டு மக்கள் எற்றுக் கொண்டார்கள்; நிறைவேற்றியும் காட்டி விட்டார்கள். ஆனால் அரசு?

எல்.ஐ.சி. 50 ஆண்டு துவக்க விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தனது முன்னவர்களின் தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல் கொள்கைகளை சிலாகித்து, இக்கொள்கைகளின் வெற்றிக்கு இன்சூரன்ஸ் துறை தனியார் மயமாக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருவதே முன்மாதிரி என்கிறார். எனவே ‘தாராளமயக் கொள்கைகளின் வருங்கால விளைவுகள் இன்சூரன்ஸ் துறை தனியார் மயம் போன்றதே’ என இக்கொள்கைகளின் பிதாமகனே கூறிவிட்ட நிலையில், இன்சூரன்ஸ் துறை தனியார் மயமாக்கப்பட்ட போது நாட்டு மக்களுக்குக் கூறப்பட்ட காரணங்கள், அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றைச் சற்று திரும்பிப் பார்ப்பதே கட்டுரையின் நோக்கம்.

தனியார் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் துறையில் நுழைந்தால் செயல்படத் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப்பின் நம்பிக்கைகளில் மெய்ப்பிக்கப்பட்டவையும், வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவையும் ஏதுமில்லை என்பதுதான் நெஞ்சைக் கனக்க வைக்கும் உண்மை.

இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. அரசினால் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை

1. மருத்துவக் காப்பீட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
2. அரசுத்துறை நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருக்கும் சமூகப் பாதுகாப்பு மற்றும்
3. புதிய நிறுவனங்கள் உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
4. ஐ.ஆர்.டி.ஏ. என்னும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்தது. இவை ஏற்கப்பட்டதால் அச்சட்டத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி கூறிக்கொண்டது.

புதிய தனியார் நிறுவனங்களின் அனைத்து திட்டங்களும் எல்.ஐ.சி.யின் திட்டங்களை வெள்ளையடித்து உருமாற்றியவை. புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. எல்.ஐ.சி. பாலிசியுடன் சாதாரணமாக வழங்கி வந்த இரட்டிப்பு விபத்துச் சலுகை போன்றவை மிகுந்த ஆரவாரத்துடன் அதிகச் சலுகைகளாக தனியார் நிறுவனங்களால் அறிவிக்கப்படுகின்றன.

தனியார் நிறுவனங்களின் புதிய திட்டங்கள் பெரும்பாலும் யுலிப் எனப்படும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் திட்டங்கள். இத்திட்டங்களின் முதிர்வுத் தொகை என்பது பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்குட்பட்டு பாதிக்கப்படும். சாதாரண இன்சூரன்ஸ் பாலிசிகள் போல் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்சத் தொகையை பாலிசிதாரர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இத்திட்டங்களுக்கு இல்லை.

தனியார் நிறுவனங்களின் பிரிமிய விகிதம் எல்.ஐ.சி.யை விட அதிகமாகவே உள்ளன. இன்னும் சொல்லப் போனால், துறை தனியாருக்கு திறந்து விடப்பட்டபின் எல்.ஐ.சி. அறிவித்து வரும் புதிய பாலிசிகளுக்கும் பிரிமியம் அதிகமாகவே உள்ளது. பிரிமியம் குறைய வாய்ப்பே இல்லை என்று எல்.ஐ.சி.யின் தலைவர் சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் அடித்துக் கூறியுள்ளார். தனியார் நிறுவனங்கள் அரசால் சொல்லப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அதிக நபர்களை காப்பீட்டு வளையத்திற்குள் கொண்டுவர முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக அதிக லாபம் தரும் பிரிமிய வருவாயில் கவனம் செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக தனியார் நிறுனங்களின் ஒரு பாலிசியின் சராசரி பிரிமிய வருமானம் ரூ.24,884,72. ஆனால் எல்.ஐ.சி.க்கு ரூ.8,234.73. தனியார் நிறுவனங்கள் வசதியானவர்களையே வளைத்துப் போடுவதில் கவனம் செலுத்துகின்றன. கிராமப் புறங்களுக்கும் ஏழைகளுக்கும் காப்பீடு என்பது கனவுத் திட்டமாகவே உள்ளது. இதில் வேதனை என்னவென்றால் எல்.ஐ.சி.யும் சமீபகாலங்களில் தனது குறைந்த பட்ச பாலிசியை ரூ10,000லிருந்து படிப்படியாக ரூ.50,000 ஆக உயர்த்திக் கொண்டு விட்டது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களிலும் தனியார் நிறுவனங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. மருத்துவச் சிகிச்சைக்கான பலனை, தங்கள் சாதாரண பாலிசியுடன் அதிக கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் உபரிபலனாகத்தான் வைத்துள்ளன. எல்.ஐ.சி.யும் தனியார் மயம் செயல்படத் தொடங்கிய பின் தன்னிடமிருந்த இரண்டு மருத்துவத் திட்டங்களை விலக்கிக் கொண்டது.

தனியார் நிறுவனங்கள் பாலிசிதாரருக்கு வழங்கும் முதிர்வுத் தொகையின் அளவு எல்.ஐ.சி.யுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகவே உள்ளது. மேலும் முந்தைய வருடங்களில் அறிவிக்கப்படும் போனஸ் தொகையை பிற்காலத்தில் பிடித்தம் செய்ய நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுக்காண்டு அதிக லாபம் ஈட்டும் எல்.ஐ.சி. நிறுவனமும் ஒழுங்கு முறை ஆணையத்தின் நெருக்கடியால் தான் வழங்கும் போனஸ் தொகையைக் குறைத்துக் கொண்டது. தனியார் நிறுவனங்கள் திரட்டும் நிதி உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்யப்படும் என்ற நம்பிக்கையும் பொய்த்து வருகிறது. தனியார் நிறுவனங்களின் பிரிமிய வருவாய் பெரும்பாலும் 50-75% (அதிகபட்சம் 86%) யுலிப் எனப்படும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் திட்டங்களிலிருந்து திரட்டப்படுபவை. இவை பங்குச் சந்தை ஊக வணிகர்களை ஊக்குவிக்குமே தவிர கட்டமைப்புக்கு பழைய எல்.ஐ.சி.யே கதி. தனியார் நிறுவனங்களால் உந்தப்பட்ட எல்.ஐ.சி.யும் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களை நோக்கி நகர்வது மற்றொரு சோகக்கதை. வரும் ஆண்டில் எல்.ஐ.சி.யின் மொத்த வருவாயில் 40% பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டங்களிலிருந்து திரட்ட முடிவு செய்திருப்பதாக அதன் மண்டல மேலாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் முகவர் பணி என்பது அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பாகும். ஆனால் தனியார் மயத்துக்கு பின் வங்கிகள், பல நிறுவனங்கள் பெயருக்கு ஏஜன்சி அளித்து அவை மூலமாக பாலிசிகளை விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றாலும் தனிநபர் ஏஜென்சி பாதிக்கப்படுவதால் வேலைவாய்ப்புகள் குறைகிறது. சென்ற ஆண்டில் எல்.ஐ.சி.யில் மட்டுமே தனிநபர் முகவர்களின் எண்ணிக்கை 3,00,000 குறைந்திருப்பதாக தகவல் உள்ளது.

இவை அனைத்திலும் வேதனையளிக்கும் விஷயம் காப்பீடு தனியார் மயமாக்கப்பட்ட பின் எல்.ஐ.சி. தனது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களாகிய நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தான் இலவசமாக வழங்கி வந்த குழுக்காப்பீட்டுத் திட்டத்தையும், ஒருங்கிணைந்த ஊரக வேலைவாய்ப்புக் கடன் காப்பீட்டுத் திட்டத்தையும் நிறுத்திக் கொண்டது தான்.

தனியார் நிறுவனங்கள் கிராமப்புறங்களில் செயல்பட வேண்டும் என்ற நிபந்தனை செயல்படுத்தப் படாததுடன், எல்.ஐ.சி.யும் தனது குவிமையத்தை கிராமத்திலிருந்து படிப்படியாக நகரத்தை நோக்கி நகர்த்துகிறது. தனியார் மயத்தின் அசுர வெற்றியை வியந்து பாராட்டிய பிரதமரின் கட்சி நிபந்தனையாக வைத்த கிராமப்புறப் புறக்கணிப்பு அபராதம் வெறுங்கனவாகவே உள்ளது. இந்திய விலையில் உலகத்தர சேவை என்பது இந்தியத் தரத்தில் உலகமய முறைகேடுகள் என்பதாக உருமாறிப் போயிருக்கிறது. காப்பீட்டு முகவர்கள், குறிப்பாக நிறுவன முகவர்கள் பாலிசிதாரர்களை மிகைப்படுத்திக் கூறி ஏமாற்றுவதாக ஒழுங்குமுறை ஆணையம் கவலை தெரிவிக்கிறது.

அன்னிய முதலீட்டு உச்சவரம்பு உயர்த்தப்படாது என பாராளுமன்றத்தில் அன்றைய நிதியமைச்சர் கூறியதன் எதிரொலி முடியுமுன்னரே, அமெரிக்க முதலாளிகளுக்கு காப்பீட்டு அன்னிய முதலீட்டு உச்சவரம்பை உயர்த்துவதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது நம்பிக்கைத் துரோகம் என அமெரிக்கதூதர் இந்திய அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறார்.

இவையனைத்தையும் நன்கு தெரிந்த பொருளாதார நிபுணராகிய நமது பிரதமர் உலக வங்கியின் ஆணைப்படி தனியார் மயம் வெற்றி என முழங்குகிறார். அடுத்து சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீட்டின் நன்மைகளைப் பட்டியலிடுகிறார். இரண்டொரு நாள் முன்னதாக செய்திப் பத்திரிகைகளில் கல்கத்தாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ஜோசியர் ‘எதிர்காலம் நன்றாக இருக்கும்’ என்று கூறியதால் தண்டவாளத்தில் வைத்து தனது வலதுகையை வெட்டிக் கொண்டதாக செய்தியொன்று வெளியானது. இந்தியாவின் பலதரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு ‘காட் ஒப்பந்தம்’, உலக வர்த்தக மையம், உலகவங்கி வழியில் தீர்வு காண முயல்வதற்கும், அந்த கல்கத்தா இளைஞனுக்கும் வித்தியாசம் காண முடியவில்லை.

காப்பீட்டுத் துறையில் தனியார் நுழைந்தால். . .

பாலிசிதாரர் சேவை மேம்படும் புதிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

நிறுவனங்களுக்கிடையேயான போட்டி மூலமாக பிரிமியம் (இனசூரன்ஸ் கட்டணம்) குறையும்.

எல்.ஐ.சி.யின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் அதிக மக்களை காப்பீட்டு வளையத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. தனியார் நிறுவனங்கள் அதிக நபர்களுக்கு இன்சூரன்ஸ் அளிப்பதன் மூலம் சமுகப் பாதுகாப்பு மேம்படும்.

அரசுத்துறை நிறுவனங்கள் முனைந்து மருத்துவக் காப்பீட்டுத்துறையில் செயல்படவில்லை. தனியார் நிறுவனங்கள் மருத்துவ காப்பீட்டை குறைந்த செலவில் அளிக்கும்.

எல்.ஐ.சி. தற்போது கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்தவில்லை. தனியார் நிறுவனங்கள் வந்தால் அவை கிராமப்புற மக்களைக் கவரும் திட்டங்களை அறிவிக்கும்.

பாலிசிதாரருக்கு அதிக லாபம் (போனஸ்) கிடைக்கும்.

தனியார் நிறுவனங்கள் முனைந்து செயல்படுவதால் நாட்டின் உள்கட்டமைப்புப் பணிகளாகிய சாலைகள், பாலங்கள், அணைக்கட்டுகள் மின்சார கிடைக்கும்.

இந்திய விலையில் உலகத் தரம்வாய்ந்த சேவை அளிக்கப்படும் என்பன போன்ற நம்பிக்கைகளும்,

விவசாயக் கூலிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

கிராமப்புறங்களில் செயல்படுவதற்கு தனியார் நிறுவனங்கள் பணிக்கப்படும். மொத்த வருவாயின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கிராமப்புறங்களிலிருந்து திரட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

எல்.ஐ.சி. நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சமூக பாதுகாப்புத் திட்டங்களை தனியார் நிறுவனங்களும் மேற்கொள்வது கட்டாயமாக்கப்படும்.

அன்னிய முதலீட்டு உச்சவரம்பு உயர்த்தப்படாமல் பாதுகாக்கப்படும்.

அரசுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்படும்.

என்ற உறுதி மொழிகளும் அன்றைய பிரதமர், நிதியமைச்சர் ஆகியோராலும் - பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மற்ற தாராளமய ஆதரவாளர்களாலும் அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com