Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
கலை இலக்கியம் என்பது மக்களுக்கானது
திண்டுக்கல். ஐ.லியோனி

உங்களைப் பற்றி . . .

நான் பிறந்தது திண்டுக்கல். அப்பா, அம்மா இருவருமே ஆசிரியர்கள். அப்பா உடற்கல்வி ஆசிரியர், அம்மா ‘ஹையர் கிரேடு’ஆசிரியர். நாங்க மொத்தம் பத்துபேர். நான் மூணாவது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிறித்தவ போதகர் ஒருவர் இங்கு இருந்தார். எங்க அப்பா அவரிடம் கேட்டுத்தான் பிள்ளைகளுக்கெல்லாம் பேரு வைப்பார். அதனால எங்க குடும்பத்தில் எல்லோருக்கும் இத்தாலி பெயராக இருக்கும். வறுமையான ஒரு சூழ்நிலையில் தான் வளர்ந்தேன். பத்து குழந்தைங்க, அப்பா அம்மா. மொத்தம் பனிரெண்டு பேர். இரண்டு ஆசிரியர்கள் சம்பளத்தை வைத்து இத்தனைபேர் வாழ்வது சிரமமான ஒன்று. வறுமை என்றாலும் வீட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் எது சாப்பிட்டாலும் பகிர்ந்து சாப்பிடும் வாழ்கை எனக்கொரு பெரிய பலம்.

ஆரம்பக் கல்வி படித்தது அம்மா வேலைசெய்த பள்ளியிலேயே. எங்க தாத்தாதான் அந்தப் பள்ளியின் நிர்வாகி. அதனால அங்க வேலை செய்தவங்க எல்லாருமே பெரியம்மா, சித்தி, அத்தை என சொந்தக்காரங்க. அதனால் பள்ளிக்கூடமும் வீடுமாதிரிதான் இருந்தது. மூணாம் வகுப்புல அத்தை பாடம் எடுப்பாங்க. இரண்டாம் வகுப்பு பெரியம்மா எடுப்பாங்க. புனிதபால் நடுநிலைப்பள்ளியில் (இப்பொழுது அது உயர்நிலைப்பள்ளி) எட்டாம் வகுப்பு வரை படித்தேன். 9, 10, 11 வகுப்புகளை மரியன்னை மேனிலைப்பள்ளியில் படித்தேன். பி.யூ.சி., பி.எஸ்சி., திண்டுக்கல் ஜி.டி.என் கலைக் கல்லூரியில், திருநெல்வேலி சேவியர் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படிப்பு.

உங்கள் கல்வி சூழல் அறிவியல் சார்ந்தது. பொதுவாக அறிவியல் பிரிவு மாணவர்கள் கலை இலக்கிய ஆர்வம் இருந்தாலும் அதில் கால்வைக்கத் தயங்குவார்கள். நீங்கள் எப்படி தீவிரமாக இறங்கினீர்கள்?

நான் கல்லூரியில் படிக்கும் பொழுது படித்தது அறிவியல் பாடமாக இருந்தாலும் தமிழாசிரியர்கள் மீதுதான் அதிகம் ஈடுபாடு. அவங்க வகுப்புகள் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயற்பியல் வாத்தியார் போர்டுல கையை வச்சார்னா ஒரு மணிநேரம் சாக்பீஸை போர்டை விட்டு எடுக்க மாட்டார். அவரா பேசிக்கிட்டு இருப்பாரு. பையங்களுக்கு புரியுதா புரியலையா என்பது பற்றி கவலையே பாடமாட்டார். ஆனால் தமிழ்ப் பேராசிரியர்கள் வகுப்பு நடத்துவது, இலக்கியம் பற்றி பேசும் போது நிறைய திரைப்படப் பாடல்களை உதாரணமா சொல்லுவாங்க. அதனால அந்த வகுப்புகளுக்கு ரொம்ப ஆவலா காத்திட்டு இருப்போம். எங்க பள்ளியில் இருக்கக்கூடிய தமிழாசிரியர்கள் இரண்டு பேர் பெரிய பேச்சாளர்கள். புலவர் ராமசாமின்னு ஒருவர் திருவையாரில் இருக்கிறார். இன்னொருத்தர் இரட்சண்யதாசன், இரண்டுபேருமே மிகப்பெரிய பட்டிமன்ற பேச்சாளர்கள். அவங்க பட்டிமன்றங்கள் போய்வந்த அனுபவங்கள் பற்றி வகுப்பில் நிறைய சொல்வாங்க. அவங்க உள்ளூரில் எங்காவது பேசினார்கள் என்றால் போய் கேட்பேன். இப்படித்தான் தமிழ்ப் பக்கம் கவனம் திரும்பியது.

உங்கள் இசைப் பின்னணி சர்ச் சார்ந்த சூழல் காரணமாக கிடைத்ததா?

பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் நல்லா பாடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் சர்ச் பின்னணியைவிட எங்கள் குடும்பப் பின்னணி தான் இசையின் மீதான ஆர்வத்தை எனக்கு உண்டு பண்ணியது. எங்க குடும்பத்தில எல்லாருமே ரொம்ப அருமையா பாடுவாங்க. எங்க அம்மா, எங்க அப்பா எங்க சித்தி, எங்க பெரியம்மா எல்லோருமே பெரிய பாடகர்கள். எங்க அம்மா கூட பொறந்த தாய்மாமா லயோலா கல்லூரியில் தேர்வு கண்காணிப்பாளராக பணிபுரிகிறார். கர்நாடக இசையில் நல்ல தேர்ச்சி உள்ளவர். கிறிஸ்தவத்தில் கர்நாடக சங்கீதத்தின் பங்கு என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியிருக்கார். இந்த குடும்பப் பின்னணி இசையின் மீது ஆர்வத்தை அதிகப்படுத்தியது. வீட்டில் பொழுது போக்கு என்றால் உடனே ஆர்மோனியப் பெட்டியும் தபெலாவும் தான். அந்த ஆர்மோனியப் பெட்டியை எடுறாண்னு எங்க மாமா சொல்லிட்டாலே சந்தோசப்படுவோம். கிறிஸ்தவப் பாடல் மட்டுமல்ல திரைப்படப் பாடல்களும் பாடுவோம். பாடும் பொழுது இந்தப்பாடல் என்னராகம், யார் பாடினது, இந்தப்பாடல் வெற்றியடைய என்ன காரணம் என்பது பற்றியெல்லாம் சொல்லுவார். இதுவெல்லாம் எனக்கு இசையில் ஒரு வலுவான அடித்தளத்தை கொடுத்தது.

பேச்சுத்துறைக்குள் நீங்க வருவதற்கு முன்னால் இசையில்தான் நீங்க அதிகமா ஈடுபட்டிருக்கீங்க ‘ஹம்மிங் பேர்ட்ஸ்’என்ற குழுவையும் நடத்தியிருக்கிறீர்கள். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

கல்லூரிக்குள் நுழைஞ்ச உடனேயே மேடையில் பாடக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கல்லூரியிலே ஜி.டி.என். ‘ஆர்கெஸ்ட்ரா’ன்னு ஒரு ‘ஆர்கெஸ்ட்ரா’ இருந்தது. அதுல பாடுறப்ப எல்லாம் எனக்கொரு இனிமையான குரலோ, சுருதி ஞானமோ, தாள ஞானமோ கிடையாது. மூன்றாவது வருடம் படிக்கும் போது கல்லூரி ஆண்டுவிழாவில் எங்க ‘ஆர்கெஸ்ட்ரா’குழுவும் கலந்து கொண்டது. அப்பவந்து எல்லாரும் அந்த சமயத்தில் பாப்புலராக இருந்த ‘அதிசய ராகம்’, ‘மனைவி அமைவதெல்லாம்’, ‘தெய்வம் தந்த வீடு’இந்த மாதிரி ஸ்லோ பாடல்களாக பாடிகிட்டு இருந்தாங்க. பயலுக பாடுறவங்க கூடவே சேர்ந்து ஒப்பாரி வச்சு அழுதுகிட்டு இருந்தாங்க. ஒருத்தன் ‘தெய்வம் தந்த வீடு’ன்னு உருகி பாடிட்டு இருக்கான். பயலுக ஓ. . . ன்னு ஒப்பாரி வச்சாங்க.

நான் அப்ப வந்து ‘உன்னிடம் மயங்குகிறேன்’என்ற ஜேசுதாஸ் பாடலை பாட பயிற்சி எடுத்திருந்தேன். இந்தப் பாட்டு ரொம்ப ஸ்லோ. ஆர்கெஸ்ட்ரா நடத்துபவர்களிடம் போய் சொன்னேன். “தயவு செய்து அந்தப் பாட்டு வேண்டாம்”. அவர் கேட்டார் “அதற்கு பதில் என்னடா பாடப்போறன்னு”. ‘நான் பழைய சந்திரபாபு பாட்டு பாடுறேன்னு சொன்னேன்’. இன்னும் பிரக்டீஸே பண்ணலியே’ன்னு சொனனார். ‘நான் எப்படியாவது பாடுறேன் கித்தாரையும் பெட்டியையும் எப்படியாவது உள்ள கொண்டு வந்து சேர்த்திடுங்கன்னேன். “பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே” பாட்டைப் பாடினேன். பையங்க எந்திருச்சி ‘ஒன்ஸ்மோர்’ன்னு மூணு தடவை கேட்டாங்க. அன்னைக்குதான் பாட்டுப்பாடி நம்மளாலயும் கைத்தட்டு வாங்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

அதன் பிறகு திண்டுக்கலில் ஒரு பெரிய கல்யாணத்துல சங்கர்-கணேஷ் ‘மியூசிக் பார்ட்டி’நடந்துட்டு இருந்தது. கல்லூரி மாணவர்கள் எல்லோரும் கேட்பதற்கு வந்து உட்கார்ந்து இருந்தார்கள். அப்ப ‘காலேஜ் புரபொசர்ஸ்’ சங்கர்-கணேஷ் கிட்ட பேசி எங்க காலேஜ்ல ஒரு பையன் சந்திரபாபு பாட்டு ரொம்ப நல்லா பாடுவான் என்று சொல்லி பாடவைச்சாங்க. பயங்கர கைத்தட்டல். அதன் பிறகு வெளியில ஆர்கெஸ்ட்ரா காரங்க இந்த மாதிரி பாடல்களைப் பாட கூப்பிட்டாங்க. யாருமே பாடமுடியாத அபூர்வமான குரல்களை சந்திரபாபு, திருச்சி லோகநாதன், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற குரல்களைப் பாடினேன். இது எனக்கென்று ஒரு தனித்தன்மையான தன்மையை உருவாக்கியது. நல்லா பாடுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது ‘ஹம்மிங் பேட்ஸ் ஆர்கெஸ்ட்ரா’தான். அப்ப எனக்கு சம்பளம் பதினைந்து ரூபாய்தான்.

இசையிலிருந்து பேச்சுத்துறைக்கு எப்ப மாறினீர்கள்?

பேச்சுத்துறைக்கு மாறக்காரணம் ஏற்கனவே சொன்ன என்னுடைய தமிழாசிரியர்கள்தான். நான் படித்து முடித்து வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்திலும் அவங்க பட்டிமன்றத்துக்கு போய்ட்டிருந்தாங்க அவங்க போகமுடியாத ஒரு நிகழ்ச்சிக்கு பேசுவதற்கு என்னை அனுப்பினார்கள். ஐயா சாலமன் பாப்பையா தான் நடுவர். தலைப்பு கிறிஸ்தவம் தொடர்பானது. ஏசு செய்தது சமயப் புரட்சியா? சமுதாயப் புரட்சியா? நான் பேசினது சமுதாயப் புரட்சி என்ற தலைப்பில். நல்ல வரவேற்பிருந்தது. அதுலயும் சமயமும், சமுதாயமும் கலந்த திரைப்படப் பாடல்கள் இரண்டு மூன்று பாடினேன். பேச்சோடு பாடல்களைக் கலந்து பேசுவது. இந்த வடிவம் ரொம்ப நல்லா இருந்தது. இதுமாதிரி நிறைய வாய்ப்புகளை ஆசிரியர்கள் கொடுத்தார்கள்.

பாடல் தலைப்பு ஒரு முறை வந்திச்சு. கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது காதல் பாடல்களா? தத்துவப் பாடல்களா? காதல் பாடல் அணியில் ஒரு பேச்சாளர் வராததனால் மூணாவது ஆளா என்னைப் பேச விட்டுட்டாங்க. அதுக்கும் சாலமன் பாப்பையாதான் நடுவர். ஏற்கனவே கண்ணதாசன் பாடல்களை ஆர்கெஸ்ட்ராவில் பாடி இருப்பதனால எனக்கு நிறைய பாடல்கள் மனப்பாடமா தெரிஞ்சுது. அதனால நிறைய பாட்டுக்களைப் பாடிப்பாடி உதாரணங்களை சொல்லிகிட்டே இருந்தேன். ஆடியன்ஸ் என்ன ஆயிட்டாங்கன்னா பட்டிமன்றம் எல்லாம் முடிஞ்ச பிறகு அவரை ஒரு பத்து பாட்டு பாடிட்டு போகச் சொல்லுங்கன்னுட்டாங்க. ஐயாவும் நிறைய நேரம் ஒதுக்கித் தந்தார். அதன் பின் நாலைந்து நிகழ்ச்சிகளுக்கு என்னை கூப்பிட்டுப் போனார்கள். இசையிலிருந்து பட்டிமன்றத்துக்குள் நுழைந்த சூழல் இதுதான்.

தமிழகம் தழுவிய பேச்சாளர்களில் உங்களை மிகவும் ஈர்த்த பேச்சு?

என்னை மிகவும் கவர்ந்த பேச்சு குன்றக்குடி அடிகளாரோட பேச்சு. மிகக்கடினமான கருத்தைக் கூட எளிமையான உதாரணத்தில் சொல்வார். அதுல என்னை கவர்ந்த மிகப்பெரிய உதாரணம் வந்து, சுண்டல் கோயில்ல கொடுப்பாங்க. அதை வரிசையில் நின்று வாங்கிட்டு போகணும். பத்துபேர் வரிசைல நிற்கும்போது ரெண்டு பேர் முன்னால போய் வாங்குனா இந்த பத்துபேரும் அந்த ரெண்டு பேரை திட்டுவாங்க. ‘நாங்க எல்லாம் வரிசைல நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா, என்ன நீ முன்னால போய் வாங்குற’அப்படீன்னு சொல்லி, இவ்வளவூண்டு சுண்டலை பத்துநிமிஷத்துக்கு முன்னாடி ரெண்டு பேர் வாங்குறதுக்கு இவ்வளவு கோபப்படுறோமே, நம்ம அனுபவிக்க வேண்டிய செல்வத்தையும், உரிமையையும், பணத்தையும் வந்து காலங்காலமா எவ்வளவோ பேர் நமக்குத் தெரியாம அனுபவிச்சட்டு இருக்காங்களே அதைப்பார்த்து ஏன் நமக்குக் கோபம் வரமாட்டேங்குது அப்படீம்பார். அது வந்து மிகப்பெரிய புரட்சிகரமான ஒரு சிந்தனை. அப்படி உதாரணங்களைக் கூறும்போது ரொம்ப ஆசைப்பட்டு கேட்பேன்.

அடுத்து பட்டிமன்ற ‘டிரெண்டை’மாற்றியது நம்ம ஐயா சாலமன் பாப்பையாதான். அவருடைய பேச்சுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ‘அடவிடுய்யா’என்று அவர் சொல்கிற சத்தத்தைக் கூட ரசிப்பேன். இலக்கியங்களையும், சமுதாய தலைப்புகளையும் நகைச்சுவையோடு மதுரை ஸ்லாங்குக்குக் கொண்டு வந்து பட்டிமன்றத்தின் அடுத்த பரிணாமத்தை அவர்தான் உண்டாக்கினார். அவருடைய பாதிப்பு என்னுடைய பட்டிமன்றத்தில் நிறைய இருக்கு.

பட்டிமன்றத்தை மக்கள் திரளின் கலைவடிவமாகக் கொண்டு சேர்த்தவர் நீங்கள். எப்படி அது சாத்தியமானது?

நான் திட்டமிட்டு எதையும் உருவாக்கலை. எங்க குடும்பங்களில் நாங்க பேசிட்டு இருக்கிற நகைச்சுவைகளை அப்படியே மேடைக்கு கொண்டு வந்தேன். அது எல்லா குடும்பங்களுக்கும் பொருந்துகிற விஷயங்களா போயிடுச்சு. ரெண்டு பேர் வேலைக்குப் போகிற வீட்டில் காலையில் என்ன நடக்கும். அதை அப்படியே ‘டிரமடைஸ்’பண்ணி, குரல்களை மாற்றி பேசுறது. நான் ‘மிமிக்ரி ஆர்டிஸ்ட்’என்பது எனக்கு மிகப்பெரிய இன்னொரு பலம். பஸ், ஆஸ்பத்திரி, திருமணம், பஸ்நிலையம், சடங்குவீடு, கல்யாண நிகழ்ச்சி இவற்றிலிருந்து சம்பவங்களை உள்வாங்கினேன். இது கேட்கிறவர்களுக்கு இவன் நம்ம ஆளு என்கிற உணர்வும், அவர்கள் வீட்டிலிருந்து கேட்பது போன்ற உணர்வும் ஏற்பட்டது. “உங்க கேசட்டை போட்டாலே மூணு மணிநேரம் நீங்கள் எங்களுடைய வீட்டிலிருந்து பேசிட்டு போறது மாதிரி இருக்கு” என்பார்கள். படிக்காதவர்கள், கிராமப்புற மக்களின் வாழ்க்கையிலிருக்கும் நிறைய விஷயங்களை மேடையில் பயன்படுத்துவேன். அதை அப்படியே என்னுடைய ஸ்லாங்குல நான் பேசுவேன். அதை நான் பயன்படுத்த, எளிய தமிழ் கேட்பவர்களுக்கு அது பிடித்துப்போனது.

ஒருமுறை பத்திரிகை நிருபர் கேட்டார், “வாறான்க, போறான்க, சொல்றான்கன்னுட்டு மரியாதையில்லாமல் பேசுறீங்களே. இது பட்டிமன்ற மரபுக்கு நல்லாயில்லையே” என்று சொல்லிட்டு, ‘இந்த குற்றச்சாட்டை எல்லாரும் சொல்றான்க’என்றார். நான் அதை புடிச்சுகிட்டேன். இப்ப நீங்க என்ன சொன்னீங்கன்னு கேட்டேன். ‘நான் அப்படி சொல்லிட்டேனோ’என்று சொன்னார். உங்களாலேயே அந்த மரபிலிருந்து மாற முடியல. இது ஜனங்களின் சாதாரண பேச்சு. இதை மரியாதைக் குறைவான விஷயமாக என்னால் எடுத்துக்க முடியல. பெரியவங்களை நான் அப்படி சொல்வதில்லை. நான் எடுத்திருக்கும் வெகுஜன உதாரணங்களைத் தான் அப்படி சொல்லுவேன். மக்கள் தமிழ்தான் பட்டிமன்றத்தில் வெகுஜனத் தன்மைக்குக் காரணம்.

ஆரம்பத்தில் உங்களிடமிருந்து வெளிப்பட்ட பேச்சு, இன்று வெளிப்படும் பேச்சு இந்த இரண்டுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதாக தோன்றுகிறது. ஆரம்பகட்டத்தில் அரசியல் தொனி தூக்கலாக இருக்கும். இன்று அது குறைந்திருப்பது மாதிரி தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

என்னை வளர்த்தெடுத்தது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். விரிந்து பரந்த மேடைகளை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. அவர்கள் நடத்திய கலை இரவுகளில் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என மக்கள் திரள்வார்கள். அந்த அமைப்பின் கொள்கைகள் ‘கலை இலக்கியம் என்பது மக்களுக்காக. மக்களுக்குப் புரியவில்லை என்றால் அதற்குப் பெயர் கலை இலக்கியமே இல்லை’. பொது உடமை கருத்துக்கள் எல்லாம் நிறைய பேசினோம். இன்றும் அதை பேசுகிறோம். ஆனால் அன்று வலிமையாக இருந்ததற்குக் காரணம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போட்டுத்தந்த மேடை. இன்றும் அந்த அமைப்பில் மாநில பொறுப்பில் இருக்கின்றேன். இன்றும் அதிகமாக அதைப் பேசுகிறோம். இன்னும் பெரியார் குறித்து அதிகமாக பேசுகிறோம். பெரியார் பற்றி தொலைக்காட்சியில் பட்டிமன்றத்தில் பேசுவது அநேகமாக நாங்கள் மட்டும்தான்னு நினைக்கின்றேன்.

பொதுவாக பட்டிமன்ற நடுவர்களாக முத்திரை பதித்தவர்கள், குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா, ஞானசம்பந்தன், நெல்லை கண்ணன், தி.மு. அப்துல்காதர், நீங்கள் உட்பட அனைவருமே தென் தமிழகத்திலிருந்து வந்தவர்கள். என்ன காரணம்?

முக்கியமான காரணமாக நினைப்பது மதுரைக்கு இந்தப் பக்கம் இருக்கிற மக்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். திருச்சி வந்து படிப்பதற்கு என்றே உள்ள மாவட்டம். திருச்சியில் சத்தியசீலன் ஐயாவை பேன்ற நடுவர்கள் இருந்தார்கள், தஞ்சாவூர் தாண்டி போனீங்கன்னா நடுவர்களைப் பார்ப்பது ரொம்ப அபூர்வம். தஞ்சாவூர் மாவட்டம் கலைகளுக்கான மாவட்டம். வடக்கு மாவட்டத்தை குறைத்து மதிப்பிடவில்லை. தெற்குப் பக்கத்தில் இருக்கிற அளவுக்கு நகைச்சுவை உணர்வு, நகைச்சுவையை ரசிப்பதற்குரிய வாய்ப்புகள் வடக்கு மாவட்ட மக்களுக்கு மிகக்குறைவு. ஏனென்றால் மதுரையில் பார்த்தீர்களென்றால் தெருக்கூத்து, வள்ளித்திருமண நாடகம், பாகவதர்கள், நாடக நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள் நிறையப் பேர் மதுரையில் இருந்துதான் வந்தார்கள். ஜி.கிட்டப்பா, டி.ஆர்.மகாலிங்கம் எல்லாம் மதுரை வட்டாரத்தைச் சார்ந்தவர்கள். இன்றும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காமெடி நடிகர்களான விவேக், வடிவேல் எல்லோருமே மதுரையை அடிப்படையாகக் கொண்டவர்கள். அதனால் கூட நடுவர்கள் இந்தப் பகுதியிலிருந்து அதிகமாக வந்திருக்கலாம்.

நீங்கள் அறிமுகம் செய்த பாட்டு மன்றம் பட்டிமன்ற அளவுக்கு எடுபடவில்லையே?

இல்லை. பாட்டுமன்றத்தை நிறையபேர் விரும்பிக் கேட்கிறார்கள். நான் அதை வந்து ஆதரிக்கிறதில்லை. எதனால் என்றால் திரும்ப ‘மியூசிக் பார்டிக்கே’போயிவிடுவேனோ என்ற பயம் எனக்கு வந்திடுச்சு. லட்சுமண் ஸ்ருதி, விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆர்கெஸ்ட்ரா, சங்கர் சாதகப்பறவைகள், ஜி.கே.முரளி, தமிழநாட்ல என்னென்ன இசைக்குழுக்கள் இருக்கோ அவ்வளவு இசைக்குழுக்களோடும் சேர்ந்து பாட்டுமன்றம் நடத்திவிட்டேன். இதை நாம் உற்சாகப்படுத்தினால் லியோனி பாட்டு மன்றத்துக்கு தான் லாயக்கு, பட்டிமன்றத்துக்கு லாயக்கில்லை என்ற எண்ணம் வந்திடும். நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்ல முடியாமல் போய்விடும். பாட்டு, சினிமான்னு அந்த பழைய பார்முலாவுக்கே போயிவிடுவமோன்னு பயந்துட்டுதான் பாட்டுமன்றம் யாராவது ஏற்பாடு பண்ணச் சொல்லிக் கேட்டால் நான் மறுத்திடுவேன். டிக்கெட் புரோகிராம் மாதிரி யாராவது செய்யுறதா இருந்தா பண்ணிக் கொடுக்கிறோம்.

ஆனால் பாட்டுமன்றம் அடிமட்டம் வரையிலும் ஊடுருவியதே?

அதில் எனக்கு உடன்பாடு இல்லை. பட்டிமன்ற பேச்சாளர்கள் இந்தப் பக்கம் மூன்று பேர், அந்தப் பக்கம் மூன்று பேர் வைத்துக்கொண்டு தபெலா, கீபோர்டு வைத்துப் பாடப்பாட வாசிப்பது அது பட்டிமன்றத்தின் தன்மையை ரொம்ப குறைத்து விட்டது. இசையின் தன்மையையும் குறைத்து ரெண்டும்கெட்டான் தன்மையில் வந்துவிட்டது. ஏனென்றால் பேசுபவர்கள் அனைவரும் பாடுவதற்குரிய சுருதி ஞானமும், சொல்ல முடியாது. பட்டிமன்றத்தில் நல்ல கருத்துக்களை பேசுபவர்கள் நாமும் பாடினாதான் மக்கள் ரசிப்பார்கள் என்ற எண்ணத்தில் சொல்ல வந்த நல்ல கருத்தைக்கூட பாதியில் நிப்பாட்டிவிட்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால்தான் நான் அதை உற்சாகப்படுத்துவதை நிறுத்திவிட்டேன்.

பொதுவாக பட்டிமன்றங்கள் வெறும் நகைச்சுவைகளின் குவியல் என்ற குற்றச்சாட்டு குறித்து?

இது ஏறக்குறைய உண்மைதான். ஒரு சிலரின் நடவடிக்கைகளால் பட்டிமன்றங்கள் ஏறக்குறைய துணுக்குத் தோரணங்கள் மாதிரி ஆகிவிட்டது. நம்ம எவ்வளவுதான் நகைச்சுவையைச் சொன்னாலும் முடிவில் மக்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் போய்விட்டது. வரிசையாக ஒரு 25 ஜோக்கை எழுதிக்க வேண்டியது. முதல்ல ஒரு 5, அப்புறம் இடையில 5 அல்லது 6, தீர்ப்புக்கு ஒரு 5 ஜோக். கடைசியா தீர்ப்புன்னு சொல்லி அதுக்கிடையில் ஒரு ஜோக் என்ற பார்முலா மாதிரி ஆக்கிவிட்டார்கள். மக்கள் சொல்கிற அந்தக் குற்றச்சாட்டு உண்மைதான். யாருக்கும் சிந்திக்கணும், நகைச்சுகையை உருவாக்கணும் என்ற சிந்தனையே குறைந்து வருகிறது. நம்மளும் அடிகளார் மாதிரி, சுகி சிவம் மாதிரி, பாப்பையா மாதிரி தனித்தன்மையுடன் வரவேண்டும் என்ற எண்ணமே இல்லை. வணிக நோக்கம் வந்துவிட்டதால் மக்களுக்கு நல்ல செய்திகளை சொல்ல வேண்டும் என்ற தாகம் வந்து இல்லாமல் போய்விட்டது. கொள்கை ரீதியான உறுதிப்பாடோ, இலட்சிய நோக்கமோ எதுவுமில்லை. என்னாலெல்லாம் தைரியமாகச் சொல்ல முடியும். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொள்கைகளை அடிப்படையாக வைத்துதான் நான் பேசுகிறேன்.

மதச்சார்பின்மை, ஜாதி மதம் எல்லாம் தாண்டி மக்கள் ஒன்றுபட வேண்டும். கலை இலக்கியம் என்பது மக்களுக்கானது என்று என்னால் தைரியமாகக் கூறமுடியும். அந்த மாதிரி இன்றைய இளைய தலைமுறை பேச்சாளர்களால் கூற முடியவில்லை என்பது வருத்தமான விஷயம்.

சந்திப்பு : ஹாமீம் முஸ்தபா


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com