Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
குஷ்பு-சர்ச்சை

கற்பு - இந்துத்துவம் - உலகமயம்
எம். அசோகன்

‘கலாச்சாரக் காவலர்களின் கோபம் ஏன் பெண்கள் மீது மட்டும் பாய்கிறது? ஆண்கள் குடிக்கலாம்; பெண்கள் குடிக்கக்கூடாது, இதே தர்க்கத்தை வைத்து, ஆண்கள் முத்தம் கொடுக்கலாம்; ஆனால் பெண்கள் முத்தம் கொடுக்கக் கூடாது என்று கருதிக் கொள்ளலாமா?’ என்று பிரபல கட்டுரையாளரும் சமூக சிந்தனையாளருமான கல்பனா சர்மா கேள்வி எழுப்புகிறார். (தி ஹிந்து, 16.10.05)

கேள்வியிலுள்ள நையாண்டியும் நக்கலும் புரிந்திருக்கும். பாலுறவு ஒழுக்க விஷயத்தில் பெண்ணுக்கு மட்டும் கற்பு இருக்க வேண்டும் என்பது எவ்வளவு அபத்தமானது என்பதை சுருக்கென்று தைக்கிற மாதிரி எழுதியிருக்கிறார்.

ஆண்கள் அயோக்கியர்களாக இருந்தால் எப்படி பெண்கள் எல்லோரும் கற்போடு வாழ முடியும்? எனினும் இதுதான் இந்துப் பண்பாடு எனப்படுகிறது; இதுதான் தமிழ்ப் பண்பாடு எனப்படுகிறது. இதுவே ஒன்றுக்கொன்று முரண்பாடானது. மொழிப் பண்பாடு என்று சொன்னால் அது மதங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். மதப்பண்பாடு என்று சொன்னால் அது மொழிகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அப்படியெனில் இந்துப் பண்பாடு எனச் சொல்வது மட்டுமே பொருத்தமாக இருக்கும். எனினும் இதுவென்றும் தனிப்பெருமை கொண்டு பீற்றிக் கொள்ளத்தக்கதல்ல. ஏனெனில் உலகமெங்கும் மிகப் பெரும்பாலான சமுதாயங்களில் பாலுறவு விஷயத்தில் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்கிற ஆணாதிக்கப் பண்பாடுதான் அமலில் இருக்கிறது.

ஆனாலும் கூட உலகம் சொல்லும் கற்புக்கும் இந்துத்துவம் சொல்லும் கற்புக்கும் வித்தியாசம் உண்டு. இந்துத்துவம் சொல்லும் கற்பின் தனித்தன்மைக்கு தலித்துகளின் தலைவர்களில் ஒருவரும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்களில் ஒருவருமான திருமாவளவனின் கூற்றை மேற்கோள் காட்டுவதே சாலச் சிறந்தது. 2001ல் கண்ணகி சிலை அகற்றப்பட்டபோது தமிழ் அமைப்புகளும், திராவிட இயக்கங்களும் ‘கற்பின் சின்னமாகிய கண்ணகி சிலையை அகற்றியதற்குக்’ கண்டனம் தெரிவித்தன. அப்போது ‘சாதிய முறையைப் பாதுகாப்பதற்காக பார்ப்பனீய சக்திகளால் பயன்படுத்தப்படும் இந்துத்துவ கருத்தாக்கமே கற்பு’என்று திருமாவளவன் சாடினார்.

ஆனால் இப்போது அவரே ‘கற்பு, கற்பு’என்று குதிக்கிறார். மதச்சார்பற்ற கட்சி என தன்னை அழைத்துக் கொள்ளும் பா.ம.க.வும் சரி, தமிழ் அமைப்புகளும் சரி, எப்படி பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத அமைப்புகளைப் போலவே கற்பு பற்றி கூச்சலிடுகின்றனர்? ஏன் இந்த கோரஸ் எழுகிறது?

குறுகிய அரசியல் காரணங்கள் இருக்கலாம். நடிகைகளை விபச்சாரிகளோடு ஒப்பிட்டார் தங்கர்பச்சான். நடிகைகளை இழிவுபடுத்தியதற்காக அவர் நடிகைகளின் பிரதிநிதிகளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். ‘இந்தியா டுடே’இதழ் நடத்திய பாலுறவு சம்பந்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்று குறித்து குஷ்புவிடம் கருத்து கேட்க அவர் ஏதோ சொன்னார். அது தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று அவருக்கெதிராக போரட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினரால். (பா.ஜ.க.வும் த.மு.மு.கவும் கூட கண்டனம் தெரிவித்தது.) சில திராவிடக் குடும்ப பத்திரிக்கைகளும் விடாப்பிடியாகக் குஷ்புவை உண்டு இல்லை என்று பண்ணும் நோக்கத்தோடு கற்பின் பெயரால் அவரைச் சாடிக் கொண்டு இருக்கின்றன.) தங்கர்பச்சான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழிக்குப்பழி வாங்கவும் நடிகர் சங்கத் தலைவரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தைச் சிக்கலில் மாட்டிவிடவும் கற்பின் பெயரால் இப்போராட்டங்கள் நடந்தன.

இத்தகைய அரசியல் காரணங்கள் இருந்தபோதும் இந்த சலசலப்புகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது கற்பு எனும் கருத்தாக்கம். மீண்டும் அது குறித்து திருமாவளவன் முன்னர் கூறியதற்கே வருவோம். அவர் சொன்னது மிகச்சரி. சாதியத்தைக் காக்க வேண்டுமானால் ரத்தத் தூய்மையை பாதுகாக்க வேண்டும். ரத்தத் தூய்மையைப் பாதுகாக்க வேண்டுமானால் கற்புச் சிறைக்குள் பெண்களை அடைத்தாக வேண்டும். இதுவே வர்ணாசிரமத்தின் சூழ்ச்சி.

ஆக இப்போது கற்பு என்பது தமிழர் பண்பாடு எனப்படுவதால் சாதியமும் தமிழர் பண்பாடு என்றாகிறது. அதுபோலவே சாதியும் இந்துத்துவப் பண்பாடு என்றும் ஆகிறது. ஒட்டுமொத்தத்தில் இவ்விஷயத்தில் தமிழ்-சாதியம்-இந்துத்துவம்-பார்ப்பனியம் எல்லாம் ஒரே அணியில் இருக்கின்றன. இங்கேதான் நாம் மேலும் அதிமுக்கியமான இரு பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் எழுப்பப்பட்ட வேண்டியிருக்கிறது.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினரும், இந்துத்துவவாதிகளும், பார்ப்பனீயவாதிகளும், சாதியவாதிகளும் ஓரணியில் சேர்வதற்கு எது காரணம்? இவர்கள் அனைவரும் உடமை வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்கள். வர்க்க முரண்பாடு மற்றும் வர்க்கச் சுரண்டல் பிரச்சனையை இவர்கள் கண்டு கொள்வதேயில்லை. அல்லது அதைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். அல்லது நேரடியாகவே முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவப் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கிறார்கள். இந்தப் பொதுத்தன்மையே பல விஷயங்களில் இவர்களை ஒத்த கருத்துடையவர்களாக ஆக்குகிறது. கண்மூடித்தனமான உலகமயக் கொள்கைகளை அமலாக்குகிறவர்களாகவோ அல்லது ஆதரிப்பவர்களாகவோ இருப்பதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.

வரதட்சனை இந்திய பெண்ணடிமைத் தனத்தின் இன்னொரு கூறு. இவர்கள் அனைவருமே தனித்தனியாகவோ பொதுவாகவோ எங்கள் பண்பாடு என்று பீற்றிக் கொள்ளலாம். ஏனெனில் உலகில் வேறெங்கும் இது இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கொடுமைக்கு எதிராக இவர்கள் எவரும் ஏன் குரல் கொடுப்பதில்லை? சினிமாவில் சிகரெட் ‘புகைக்கக் கூடாது’, ‘மது அருந்தக் கூடாது’ என்பவர்கள், தனது கட்சித் தொண்டர்கள் எவரேனும் மது அருந்ததுவதாகத் தெரிந்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று சவடால் பேசுகிறார்கள், ஏன் தங்களது உறுப்பினர்கள் எவரேனும் வரதட்சிணை வாங்கினால்/ கேட்டால் தங்களது மகளிரணியினர் விளக்குமாறாலும், செருப்பாலும் அடிப்பார்கள் என்று கர்ஜிக்கமாட்டேன் என்கிறார்கள்?

இத்தனைக்கும் பெண் கருக்கொலைக்கும், சிசுக்கொலைக்கும் ஆக முக்கியமான காரணமாக வரதட்சினை இருக்கிறது. இது சமுதாயத்தில் பெண்களின் எண்ணிக்கையை வேகமாகக் குறைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரும் காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டின் சீரழிவிற்கும், ஏன் பெண்கள் மட்டும் கற்புடன் இருக்க வேண்டும் என்கிற இவர்கள் கூறும் பண்பாட்டின் சீரழிவிற்கும் இட்டுச் செல்லும். ‘தமிழ்ப் பண்பாட்டையோ’, ‘இந்துப் பண்பாட்டையோ’பாதுகாக்க வேண்டுமானால் அதற்கு முக்கியமாகச் செய்ய வேண்டியவற்றில் ஒன்று வரதட்சிணை ஒழிப்பல்லவா?

இந்துத்துவமும் உலகமயமும் தமதே ஆன இருவகை ஒற்றைக் கலாச்சார திணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவ்விரண்டிற்கும் எதிராகப் போராட வேண்டுமேயொழிய ஏதேனுமொன்றை மட்டும் எதிர்ப்பது இன்னொரு அபாயத்திற்குச் சாதகமாகும்.

பெண்ணடிமை விஷயத்தில் வகுப்பு வாதத்திற்கும் உலகமயத்திற்கும் அடிப்படையில் வேறுபாடு ஏதும் இல்லை. வகுப்புவாதம் பெண்களை உயிருள்ள ‘பிராணியாக’நடத்துகிறதென்றால் உலகமயம் பெண்களை உயிரற்ற ‘சரக்கு’போல் நடத்துகிறது. இந்துத்துவத்தை எதிர்க்கிறோம் ஆனால் உலக மயத்தை ஆதரிக்கிறோம் என்ற முரண்பாடான நிலையால் கலாச்சார நெருக்கடிக்குத் தீர்வை இந்துத்துவத்திலிருந்தே பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றன முதலாளித்துவ மதச்சார்பற்ற கட்சிகள். அதன் மூலம் இந்துத்துவத்திற்குச் சாதகமான நிலை உருவாகிறது. உலக மயத்தை மட்டும் எதிர்க்கிறோம் என்று சொன்னாலும் அதே நிலைதான்.

‘சாதி முறையைக் காக்க பார்ப்பனீய சக்திகளால் பயன்படுத்தப்படும் இந்துத்துவ கருத்தாக்கமே கற்பு.’ சாதிய முறையைப் பாதுகாக்கும் முயற்சிக்கு இக்கட்சிகளின் நிலைப்பாடுகள் மறைமுகமாக உதவுகின்றன. கற்பு பற்றி பேசும் கட்சிகளில் பல சாதிக்கட்சிளாகவோ மதக்கட்சிகளாகவோ இருப்பதற்கு இது மேலுமொரு சான்று. ஆனால் தலித்துகளுக்காகப் போராடுவதாகச் சொல்லும் விடுதலைச் சிறுத்தைகள் சாதி ஆதரவு, இந்துத்துவ நிலைப்பாடுகளுடன் கரம் இணைவதாகத் தெரிகிறது. இந்நிலை எடுப்பதன் மூலம் இவர்களும் அந்த வலைப் பின்னலுக்குள் விழுந்து மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறார்கள்.

பண்பாட்டு அடையாளப் போராட்டம் என்பது ஏற்கனவே நம் வழக்கில் இருக்கும் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் காப்பாற்றுவதாக இருக்கக் கூடாது. ஏனெனில் வர்ணாசிரமப் பண்பாடும், பண்பாட்டு மதிப்பீடுகளும் ஏற்கனவே நம் சமூகத்தில், பரவலாக வேரூன்றியுள்ளது. அத்தகையப் பிற்போக்குத் தனங்களிற்கும் எதிராக போராட வேண்டும். இந்த அடிப்படையில் உலகமயம் திணிக்கும் கலாச்சார சீரழிவிற்கு எதிராகப் போராட வேண்டும். இல்லையெனில் மதவாதிகள் இந்த இடத்தையும் கைப்பற்றி பிற்போக்குத் தனத்தை மேலும் ஆழமாக வேரூன்றச் செய்துவிடுவார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com