Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
ஊடகங்களில் பெண்கள் சித்தரிப்பு
வி. கீதா

நாம் டி.வி.யை ஆன் பண்ணினால் நூற்றுக்கணக்கான சேனல்கள் வருகின்றன. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தகவல்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. தகவல்கள் மற்றும் காட்சிகள் நம்மீது திணிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாகவே பெரும்பாலான ஊடகங்களில் பெண்களை பிற்போக்குத் தனமாகத்தான் சித்தரிக்கிறார்கள். அழகுப் பதுமையாக பார்க்கிறார்கள் அல்லது மரபாக பெண்களுக்கு கொடுத்திருக்கிற மனைவி, தாய் போன்ற பாத்திரங்களாகப் பார்க்கிறார்கள்.

இயல்பான ஒரு பெண்; அவளுக்கு இருக்கிற இயல்பான ஆசா பாசங்களுடன் ஊடகங்கள் சித்தரிப்பதில்லை. விளம்பரங்களில் ஒரு பொருளை விற்பதற்கான இன்னொரு பொருளாகத்தான் பெண்களைப் பார்க்கிறார்கள். முகத்தில் பூசப்படும் கிரீம் விளம்பரங்களை எடுத்துக் கொண்டோமென்றால் பெண்களுக்கு எதிராக அந்த விளம்பரங்கள் மிகப்பெரிய அநீதியை இழைக்கின்றன.

இந்திய மண்ணுக்கு ஏற்ற ஒரு தோல் என்றால் கறுப்புதான். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு தான் வெள்ளையாக இருக்கணும்; சிகப்பா இருக்கணும் என்கிற ஆசை இருக்கு. இந்த ஆசையைப் பயன்படுத்தி மேலும் மேலும் இதை வலுப்படுத்துகின்றன விளம்பரங்கள்.

முகத்தில் பூசப்படும் கிரீம் தொடர்பான ஒரு விளம்பரம். அப்பா, அம்மா, ஒரு பெண் இடம்பெறும் காட்சி; மகள் மாநிறமாக இருக்கிறாள். அந்த அப்பா வந்து சொல்லுகிறார்:. ‘எனக்கு இதுவே ஒரு பையன் பொறந்திருந்தா என் வாழ்க்கை நல்லா இருக்கும்’என்று. அதை கேட்டுவிட்டு அந்தப் பெண் கண்கலங்குகிறாள். ‘நான் நல்ல கலரா இருந்தேன்னா நல்ல வேலைக்குப் போகமுடியும்’என்று கண்கலங்குறா. குறிப்பிட்ட நிறுவனத்தின் கிரீம் பூசுறாங்க. உடனே பார்த்தீங்கன்னா விமானப் பணிப்பெண் ஆயிடுறாங்க. இந்த விளம்பரம் எவ்வளவு பிற்போக்குத்தனமான கருத்தை உறுதிப்படுத்துகிறது.

ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சமம் என்று எல்லோரும் வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருக்கும் வேளையிலும் ‘எனக்கு பெண் குழந்தை வேண்டாம். ஆண் இருந்தால் பரவாயில்லையே’என்று ஒரு அப்பா சொல்றாரு. இன்னொன்று எவ்வளவு கல்வித் தகுதிகள் பெற்றிருந்தாலும் அளவற்ற திறமைகள் இருந்தாலும் கறுப்பாக இருப்பதுதான் பெரிய பிரச்சினை. ‘கறுப்பாக இருப்பதனால் உனக்கு வேலை கிடைக்காது’என அந்த விளம்பரம் பேசுகிறது. மற்ற தகுதிகள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, ‘சிகப்பாக இருக்கிறாள்’என்ற ஒரே காரணத்திற்காக அவளுக்கு ஒரு வேலை கிடைக்கிறது. அதனால் அந்தக் குடும்பம் சந்தோசமாக இருக்கிறது என்று காட்டுகிறார்கள்.

இது எவ்வளவு பெரிய அநீதி. சமூகம் இப்படியா இருக்கிறது. இன்று கோலோச்சுகிற எத்தனையோ பெண்கள் இந்த விளம்பரங்கள் வரையறுத்திருக்கிற ‘அழகு’க்கு அப்பாற்பட்டவர்கள். மாடல்கள் மாதிரி இருக்க வேண்டும் என்று விளம்பரம் வலியுறுத்துகிறது. மாடல்கள் ஸ்லிம்மாக இருப்பார்கள்; சிகப்பாக இருப்பார்கள்; முடி அழகா இருக்கும் என்பது போன்று மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.

நீங்கள் இந்தப் பொருளை உபயோகப்படுத்தினால் இந்த மாடல் மாதிரி ஆகலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு சராசரியான சமுதாயத்தில் எத்தனைபேர் மாடல் மாதிரி இருக்கிறார்கள். 5% இருக்குமா? ஏன் திரும்பத் திரும்ப அவர்கள் இத்தகைய கருத்தை வலியுறுத்துகிறார்கள். நீ ஒரு அழகுப்பொருள்; உன் அழகு தான் இந்த சமுதாயத்திற்கு முக்கியம் மற்றபடி உன்னுடைய பங்களிப்பு எதுவும் இந்த சமுதாயத்துக்கு முக்கியமில்லை.

இன்னொரு விளம்பரம் - நண்பர்கள் சுற்றுலா செல்கின்றனர். அங்கே ஒரு பெண் நண்பரிடம் சொல்லுகிறாள்: ‘போட்டோ ப்ளீஸ்’என்று. இரண்டு பேரும் சேர்ந்து நின்று போட்டோ எடுக்கிறார்கள். நண்பன் போட்டாவை பார்த்துவிட்டு கிழித்துப் போட்டு விடுகிறான். ஏன் கிழிக்கிறான்? அவள் மாநிறமாக இருக்கிறாள். கலராக இல்லை. உடனே அந்தப் பெண் அவமானப்பட்டுப் போகிறாள். இன்னொரு பெண் அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். ‘கிரீம் பயன்படுத்தினா சிகப்பாயிடுவே’என்று. அவள் பயன்படுத்த ஆரம்பிக்கிறாள். அடுத்து எல்லாரும் ஜாலியா என்ஜாய் பண்ண ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பையன் கேட்கிறான் ‘இன்னொரு சான்ஸ் கிடைக்குமா’ன்னு. உடனே இந்தப் பொண்ணு சிரிச்சுகிட்டே அவன் பின்னாடி போகிறாள்.

ஒரு ஆண் தன்னை மறுத்துவிட்டான் என்பது பெண்ணுக்கு மிகப்பெரிய அவமானம் மாதிரியும், தன் மாநிறமான தோல்தான் இதற்கு காரணம் என்பது மாதிரியும், அதற்காக இந்தப் பெண் தன்னை மாத்திக்க முயற்சி பண்ணுறது மாதிரியும்; திரும்ப அவ சிகப்பாகிவிட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக, அந்த ஆண் திரும்ப அவளிடம் வருவது மாதிரியும், அந்தப் பெண் தன் சுயமரியாதை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவன் பின்னாடி போறது மாதிரியும் இந்த விளம்பரம் பெண்ணை சித்தரிக்கிறது. பெண் சுயமரியாதையற்றவள் என்று வலியுறுத்துவது மாதிரிதான் எனக்குத் தோன்றுகிறது.

விளம்பரங்கள் வலுவான பாதிப்பை உருவாக்கும். படிக்கிறதை விடவும் பார்ப்பது, சொல்லுவது, அந்த அழகான சூழல் முதலானவைகள் நம்மை அறியாமலேயே மனதின் ஆழத்தில் பதிவாகி விடுகிறது. நம்மை அறியாமலேயே அதை நோக்கி நாம் செயல்பட ஆரம்பிக்கிறோம். ஒவ்வொரு விளம்பரத்தையும் கூர்ந்து கவனித்து, இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை பார்த்தோமென்றால் பெரும்பாலான விளம்பரங்கள் பெண்ணுக்கு எதிராகத்தான் இருக்கின்றன.

விளம்பரத்தில் காட்டுகின்ற பெண் பெரும்பாலும் அம்மாவாக இருப்பாங்க; மனைவியாக இருப்பாங்க; இல்லை என்றால் செக்ஸ் சிம்பலா இருப்பாங்க; இதைமீறி வேறு எதையாவது காட்டியிருக்காங்களா? பெண்களுக்கு வேறு ரோலே இல்லையா? பெண்கள் இந்த வரையறைக்குள் இருப்பதாக இவர்களே முடிவு செய்து விடுகிறார்கள். விளம்பரங்களில் வருகிற அம்மா கிராமத்துப் பெண் இல்லை. ‘மாடர்ன்’ உடை உடுத்தியிருக்கிற நகரத்து அம்மா. ‘மாடர்ன்’அம்மாக்களைப் போன்று நகரத்து அம்மாக்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

பெரிய பதவியிலிருக்கும் பெண் என்று சொல்லி விளம்பரத்தில் காட்டுவார்கள். அல்லது வசதியான வீட்டுப் பெண்ணாக காட்டுவார்கள். அந்தப் பெண் கறைபட்ட கணவரின் ஆடையை ‘சர்ப் எக்ஸல்’போட்டு கழுவிக்கொண்டு இருப்பாள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வீட்டில் பெண்ணுடைய வேலை கணவரின் ஆடைகளை துவைப்பதுதான் என்று விளம்பரங்கள் சொல்கின்றன. ‘வாசிங்மிஷினில்’போட்டு கணவரின் ஆடையை கறையில்லாமல் கழுவிக் கொடுத்து, அதனால் கணவனுக்குப் பெருமை கிடைத்தால் பெண்ணுக்கு சந்தோசம் என்று காட்டுகிறார்கள். இது அநீதியாக தோன்றவில்லையா?

சேமிப்பு குறித்த விளம்பரங்கள் என்ன சொல்கிறதென்றால் மகள் திருமணத்திற்காகவும் மகன் உயர்கல்விக்கும் பாலிசி எடுக்கச் சொல்கிறார்கள். மகளுக்கு திருமணம் செய்வது மட்டும்தான் லட்சியமா? இன்னும் இந்த சமூகத்தில் பெண் சுமையாகத்தான் கருதப்படுகிறாளா? ஆக பெண் என்பவள் சுமை; ஆணுக்கு செலவு பண்ணுவது ஒரு முதலீடு. உயர் கல்வி கற்று பின்னர் காப்பாற்றுவான் என்று சொல்கிற முதலீடாகத்தான் விளம்பரம் சித்தரிக்கிறது.

‘பெண்ணின் திருமணத்திற்கு சேமியுங்கள்’என்று சொல்பவர்கள் ‘ஆணின் திருமணத்திற்கும் சேமியுங்கள்’ என்று சொல்கிறார்களா? ஏன் அப்படி திருமணம் என்று வருகிறபொழுது பெண்வீட்டார்தான் எல்லாச் செலவையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறீர்கள்? இந்த விளம்பரம் மறைமுகமாக வரதட்சணையை ஆதரிக்கிறதா? ஆணுக்காக வெளிநாட்டில் கிடைக்கும் உயர்கல்விக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டுமோ அந்த அளவு பெண்ணின் திருமணத்திற்கு செலவழிக்க விளம்பரம் சொல்கிறது. இந்த விஷயங்களை மகளிர் அமைப்புகள் மட்டும் தான் எதிர்க்கின்றன. மற்றவர்கள் எதிர்க்கத் தயங்குகின்றனர்.

அதைப் போன்று தற்போது வருகின்ற சீரியல்கள் அனைத்தும் பெண்களை மிகைப்படுத்தப்பட்ட உருவமாகவே காட்டுகின்றன. ‘மெட்டி ஒலி’சரோ மாதிரி ரொம்ப அனுசரித்துப் போகிற மருமகள் வேணும்;. இல்லையென்றால் ‘சித்தி’யில் யுவராணி மாதிரி ரொம்ப கொடூரத்தின் உச்சமாகக் காட்டுவார்கள். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஒரு சராசரிப் பெண்ணை எந்த சீரியலாவது காட்டுகிறதா? இல்லை. ஆனால் நடைமுறையில் அப்படி பெண்கள் இல்லை. நியாயமாக யோசித்துப் பாருங்கள். பெண்ணுக்கு பெண் எதிரி என்பது ஆண்களாக உருவாக்கி வைத்த கருத்தாக்கம். அது தொலைக்காட்சித் தொடர்களில் ஆண்களால் வலியுறுத்தப் படுகின்றன. ஆண்களால் ஆண் பாதிக்கப்படுகிறான். ஆனால் ஆணுக்கு எதிரி ஆண் என்று யாரும் சொல்வதில்லை.

சீரியல்களை விடவும் ஆபத்தான ஒன்று புதிய டிரெண்டாக உருவாகி இருக்கிறது. செய்தி சேனல்களின் லைவ் டெலிகாஸ்ட் நிகழ்ச்சிகள் தான் அது. இது பெண்களின் உணர்வுகளை காசாக்கும் ஆபத்தை நோக்கிப் போகிறது. குடியா என்கிற ஒரு பெண். உ.பி.யைச் சேர்ந்தவர். 1999-ல் திருமணம். கணவர் பெயர் ஆரிப். ஒரு ராணுவவீரர். திருமணமான 10 நாளில் காஷ்மீரில் திராஸ் பகுதிக்கு பணிக்கு போகிறார். போனவர் திரும்பவில்லை. அவர் இறந்துவிட்டாரா? இல்லை பாகிஸ்தான் இராணுவச் சிறையில் இருக்கிறாரா? என்ற எந்தத் தகவலும் இல்லை. 4 ஆண்டுகளாக காத்திருந்து விட்டு உறவினர்கள் எல்லாம் சேர்ந்து குடியாவை தபீர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அந்த பெண் கர்ப்பமாகிறாள். இந்தச் சூழலில் முதல் கணவர், ‘என்னோடுதான் வாழணும். ஆனால் அவளுடைய குழந்தையை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை’என்கிறார். இரண்டாவது கணவர் சொல்கிறார்: ‘குழந்தையோடு குடியா என்னோடுதான் இருக்கணும்’என்று. குடியாவுடைய விருப்பமும் இரண்டாவது கணவரோடு வாழவேண்டும் என்பதே.

ஆனால் பஞ்சாயத்து ஒத்துக் கொள்ளவில்லை. பஞ்சாயத்து என்ன சொல்லியதென்றால் ‘குடியா முதல் கணவரை விவாகரத்துப் பண்ணவில்லை; எனவே அவரது இரண்டாவது திருமணம் செல்லாது. அவர் முதல் கணவருடன் தான் வாழவேண்டும்’என்று தீர்ப்பு கூறியது.

இது பெரிய விவாதமாகியது. இதை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அந்த ஊருக்கு போய் நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். ‘டாக்க்ஷோ’ மாதிரி விவாதித்தார்கள். அதற்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் விளம்பரம் செய்கிறது. முதல் கணவர் ஒரு இராணுவ வீரராம். அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவது அந்த டி.வி. சேனலின் கடமையாம். இதில் பெண்ணின் ஆசைக்கும் உரிமைக்கும் இடமே இல்லையா? குடியாவின் விருப்பம் அங்கு என்ன ஆனது? ஒரு டி.வி. சேனல் இங்கு நம்மை மூளைச் சலவை செய்து இப்படி ஒரு விஷயத்தை தீர்மானிக்கிறது என்றால் நாம் எங்கு போகிறோம்?

சீரியல் புனையப்பட்ட கதை. அது இன்று ஒரு மாதிரியும் நாளை வேறுமாதிரியும் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை எப்படி டி.வி. சேனல் ஒளிபரப்பலாம்? அதை காசாக்குவதுதான் அந்த சேனலின் நோக்கம். அன்றைய டி.ஆர்.பி. ‘ரேட்டிங்கில்’ அதுதான் ‘ஹை!’ இந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம், விளம்பரதாரர்கள் என எல்லாம் அதிகம். இதை எப்படி நியாயப்படுத்துவது? தமிழ் சேனல்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நிஜம், குற்றம் முதலான நிகழ்ச்சிகள் இவ்வகைப்பட்டவை தான். இதில் இடம் பெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமென்றால் ஒரு கொலை அல்லது ஒரு பெண்ணின் ஒழுக்கம் பற்றியதாக இருக்கும்.

பிரின்ட் மீடியா’விலும் இதுதான் இருக்கிறது. மற்ற செய்திகளை விடவும் ஒரு பெண் தொடர்பான விஷயம் என்றால் அதைத்தான் முக்கியத்துவப் படுத்துகிறார்கள். குறிப்பாக பெண்களின் ஒழுக்கம் குறித்த விஷயம்தான் அதிகம் விவாதிக்கப்படுகிறது. ‘அழகிகள் கைது’என்ற வாக்கிய அமைப்புகள் வழியே பெண்ணுக்கு ஒவ்வொரு பட்டப்பெயர் கொடுக்கிறார்கள். இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். யார் இந்தப் பட்டப்பெயரை கொடுப்பது.? பத்திரிகைகளே அந்தப் பெண் எப்படிப் பட்டவள் என்பதை தீர்மானிக்கலாமா? இவர்கள் எப்படி அந்தப் பெண் இப்படிப்பட்டவர்தான் என்று தீர்மானிக்கமுடியும். எத்தனையோ மனிதர்கள் செய்தித்தாள்கள் சொல்வதுதான் உண்மை என்று நம்புகிறார்கள். பத்திரிகைகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அனைத்து ஊடகங்களுக்கும் உடனடி சுயபரிசோதனை தேவை. இவை பெண்களைப் பற்றிய தவறான சித்தரிப்பை மாற்றி, தங்களை சரி செய்து கொள்ள முன்வர வேண்டும். பெண்கள் அமைப்புகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு பெண்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அநீதிகளை அகற்ற முனைப்புடன் உழைக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com