Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
விளையாட்டென்றால் விளையாட்டா?
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

நான்கு சுவர்களுக்குள் நடப்பது நான்கு பேருக்கு தெரியக்கூடாது என்பது சாதாரண குடும்பங்களில் கூட கடைபிடிக்கப்படும் ஒரு பண்பாடு - நாகரிகம். ஆனால் தனக்கும் பயிற்சியாளர் சேப்பலுக்கும் அறையில் நடந்ததை அம்பலத்துக்கு கொண்டு வந்து இந்திய கிரிக்கெட் அணியை மட்டுமல்ல பொதுவாக இந்தியர்களையே உலக அரங்கில் நாற அடித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் வங்கப்புலி கங்குலி.

அது பரவாயில்லை என்பது போல் இருக்கிறது. கங்குலியைப் பற்றி சேப்பல் அனுப்பிய ரகசிய அறிக்கையை வாரியத்தில் இருக்கும் யாரோ அதை ‘அம்ரித் பாஸார்’பத்திரிகைக்கு கசிய விட்டது. உடனே அறிவு ஜீவிகள் என்று கருதப்படும் ‘கொல்கத்தா பாபுக்கள்’சேப்பலின் உருவ பொம்மையை எரிந்திருக்கிறார்கள். நல்ல ‘போமில்’ இருக்கும் முகம்மது கைஃபுக்கு இடம் கொடுத்து ‘போமில்’இல்லாத கங்குலி விலகி நிற்க வேண்டும் என்று சேப்பல் சொன்னது, அவர் பயிற்சியாளர் என்கிற நிலையில் மட்டுமல்ல; பன்னெடுங்காலம் இந்த ஆட்டத்திலே கிடந்து, உருண்டு, புரண்டு, பெற்ற அறிவின் பயனால் தான் என்பதை கங்குலி புரிந்து கொள்ளாமல், வடிகட்டின சுயநலத்துடன் நடந்து கொண்டது இந்திய கிரிக்கெட்டுக்கே இழைக்கப்பட்ட அவமானம். 275 பந்துகளில் சதமடித்ததன் மூலம் சேப்பல் சொன்னது தவறு என்று நிரூபித்து விட்டதாக கங்குலி இறுமாப்பு கொள்ளலாம். ஆனால் இவ்வளவு நாளும் என்ன செய்து கொண்டிருந்தார் என்கிற கேள்வி கங்குலி தன்னை தரம் தாழ்த்திக் கொண்டதையே காட்டும்.

அதுமட்டுமல்ல நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற வம்புகளும், வழக்குகளும், ஒளிபரப்பு உரிமைக்காக நீதிமன்றங்களில் நடக்கும் குஸ்திகளும் இந்தியாவிலேயே பணக்கார விளையாட்டு நிறுவனமான கிரிக்கெட் வாரியத்தில் எதுவுமே நன்றாக இல்லை என்பதைத்தான் நமக்கு புலப்படுத்துகிறது.

‘கனவான்கள் ஆட்டம்’ என்று அழைக்கப்படும் கிரிக்கெட் ஆட்டத்துக்கு தலைவன் கூட கனவானாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் ‘நாங்கள் கடையர்கள்’என்று நிரூபித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் போலும். மாற்றம் தேவை என்பது அணித் தலைமையில் மட்டுமல்ல; அலுவல்களை கவனிப்பவர்கள் மத்தியிலும் தான் என்றால் அதில் தப்பில்லை.

ஆஸ்திரேலியா ‘சாம்பல்’தொடரை 18 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்திடம் கோட்டை விட்டது. முத்தரப்பு ஆட்டத்தில் பங்களாதேசிடம் கூட ஒன்றில் தோற்றது. ஆனால் சொந்த மண்ணில் உலகத்தின் அத்தனை திறமைசாலிகளும் ஒன்று சேர்ந்த உலக அணியை மூன்று ஒருநாள் ஆட்டத்திலும் முட்டுக்குத்த வைத்து, விட்டதைப் பிடித்து, தன் கௌரவத்தை நிலை நிறுத்திக் கொண்டது. என்ன காரணம்? டேமியன் மார்ட்டின் போன்ற சிறந்த ஆட்டக்காரரைக் கூட சோபிக்கவில்லை என்று கூறி, முகதாட்சன்யம் பாராமல் தூக்கித் தூரப்போட்டது. இந்தத் துணிவு நம் தேர்வாளர்களுக்கு வருமா என்பது சந்தேகமே! அவ்வளவு தூரம் சுதந்திரமாகச் செயல்பட்டால் அடுத்த முறை அவர்கள் தேர்வாளர்களாக நிச்சயம் தேர்ந்தெடுக்கப் படமாட்டார்கள். இது உறுதி.

இந்தியக் கிரிக்கெட்டைப் பிடித்திருக்கும் சாபம் எல்லா மட்டத்திலும் ‘நான் இதை உனக்குத் தருகிறேன், நீ எனக்கு அதைத் தா’என்கிற சுய பண்டமாற்று முறை. பணத்துக்கும் புகழுக்கும் ஏங்கும் நம்மவர்களின் மனோ நிலை மாறாத வரை இதுவும் மாறாது.

கேளரத்தில் ஒருகாலத்தில், திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் இளையராஜா பெயரில், கொல்லத்தில் லால்பஹதூர் சாஸ்திரி பெயரில், கோட்டயத்தில் மலையாள மனோரமா மாமன் மாப்பிள்ளை பெயரில், எர்ணாகுளத்தில் நேரு பெயரில், திருச்சூரில் சாக்கோலாஸ் பெயரில், கோழிக்கோட்டில் சேட் நாக்ஜி பெயரில், கண்ணூரில் நாராயணகுரு பெயரில், இப்படி மாவட்டம் தோறும் அகில இந்திய அளவிலான கால்பந்தாட்டப் போட்டி ஆட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனம் இதில் என்று மூக்கை நுழைத்ததோ, அன்று முதல் இவை அம்பேல்!!!

என்னுடைய கிரிக்கெட் தமிழ் வர்ணனைக்கு உந்து சக்தி, மலையாளத்தில் நாகவள்ளி செய்த கால் பந்தாட்ட வர்ணனைதான். தங்கு தடையற்ற அந்த அருவி போன்ற சரளம் வர்ணனை கற்றுக் கொள்பவர்களுக்கு நல்ல பாடம். ஆனால் இன்று அவர் நம்மிடையே இல்லை.

அது மட்டுமல்ல; கேரளத்தில் எந்த (கோவில்) விழாக்கள் என்றாலும், கச்சேரி, கதாப்பிரசங்கம், நாடகம், இவற்றோடு நிச்சயம் ஒரு விளையாட்டுப் போட்டியும் இடம்பெறும். தமிழ்நாட்டில் அப்படியா? விட்டால் ஒரு மெல்லிசைக் கச்சேரி அல்லது ஒரு பட்டிமன்றம்!

கேரளத்தில் கிரிக்கெட்டைத் தவிர மற்ற எல்லா விளையாட்டுக்களும் குறிப்பாக தடகளப் போட்டிகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், போன்ற பல தட்டுகள் போக, வட்ட, மாவட்ட அளவிலும் நடத்தப்படுகின்றன. அதன் பயனாகத்தான் நம்பியார், யோகன்னான், சுரேஷ்பாபு போன்ற ‘துரோனாச் சாரியார்கள்’! பி.டி.உஷா, ஷைனி ஆப்ரஹாம், அஞ்சு ஜார்ஜ் போன்ற சர்வதேச அளவில் மின்னும் நட்சத்திரங்கள்!!!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல், சினிமா மாயைகளிலிருந்து முற்றாக இல்லாவிட்டாலும், ஓரளவாவது விடுபடாத வரை, விளையாட்டுத்துறையில் அதற்கு விமோசனம் கிடைக்குமா என்பது 64,000 டாலர் கேள்வி? ஜோஸ்னா சின்னப்பா போன்ற விதிவிலக்குகள் மன்னிப்பார்களாக!!!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com