Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
சென்னை தினம் - சிறப்புக் கட்டுரை

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
ரெ.பழனி

நெய்தல் நிலப்பகுதியாக சென்னை இருந்ததால் மீனவர்களின் புகலிடமாக இருந்துள்ளது. அருகிலுள்ள சக கடற்கரை பகுதிகளிலிருந்து பொருட்கள் இங்கிருந்து துறைமுக இருப்பில் வந்து இறங்கி, தென்னகத்தின் பல பகுதிகளுக்கு சென்றிருக்கின்றன. இங்கிருந்த பொருட்களும் ஏற்றுமதியாகி இருக்கின்றது. இத்தொழிலை மேற்கொண்ட பணியாளர்களும், முதலீட்டாளர்களும் அருகிலுள்ள பாக்கங்களிலும், பாடிகளிலும் சிறுசிறு குடியிருப்புகளை அமைத்து வாழத் தொடங்கி இருக்கிறார்கள். தங்களால் இயன்ற அளவு நெசவு உள்பட அனைத்து கை வேலைப்பாட்டு பொருட்களை உற்பத்தி செய்ய சிறிய அளவில் பேட்டைகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தனர். இத்தகு சூழல் இருந்தும் ஏனைய கடற்கரைப் பகுதிகளுக்கு இருந்த முக்கியத்துவம் சென்னைக்கு அன்றைய கால கட்டத்தில் இல்லாமல் இருந்திருக்கிறது. அருகிலுள்ள ‘காஞ்சி மாநகர்க்கு’ இருந்த சரித்திரக்கூறுகள் கூட இப்பகுதிக்கு இல்லாமல் இருந்தது வியப்பான விஷயம்தான்.

ஆங்கிலேயர் நுழைவுக்கு முன்பும், பின்பும் மொகலாயர்கள், நவாபுகள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என வரிசையாக இங்கே வந்திருந்தாலும் ஆங்கிலேயர்கள்தான் சென்னையை தக்க வைத்துக் கொண்டனர்.

பண்டைய தொண்டை நாட்டின் பகுதிக்கு உட்பட்டிருந்த இப்பகுதியில் சம்புவராயர்களை வென்று சதுரகிரியிலிருந்து விஜயநகர மன்னருக்கு உட்பட்டு ராஜ்ஜியம் பண்ணிக் கொண்டிருந்த தாமருவ சகோதரர்களில் ஒருவரான வேங்கடப்பா நாயக்கர் அவர்களிடம் இருந்து கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே என்ற அதிகாரி 1639ல் சாந்தோமுக்கு அருகில் 5 ச.கி.மீ. தொலைவில் மதுரேசன் என்ற மீனவருடைய பகுதியை வாணிப வசதிக்காக பெற்றார் என்பது சரித்திரக் குறிப்பு. இந்த மதுரேசன் - பிரான்சிஸ் இருவருடைய பெயர்கள் இணைந்து மதராஸ் என வழங்கப்பட்டதாக சொல்வர். இதற்கு எதுவும் ஆதாரம் இருக்கிறதா என்பதும் ஆய்வுக்குரிய விஷயம்தான். சென்னை என அழைக்கப்படுவதற்கு வேங்கடப்ப நாயக்கரின் தந்தையான ‘சென்னப்ப நாயக்கர்’ அவர்களுடைய பெயரால் அழைக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆங்கிலேயர் தாங்கள் பெற்ற இக்கடற்கரை பரப்பில் தங்களுடைய சக போட்டியாளர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவும்; பொருட்களின் பாதுகாப்பிற்காகவும்; அலுவலக மேலாண்மைக்காகவும் 1640-ல் கோட்டை கட்டி ‘புனித ஜார்ஜ் கோட்டை’ என அழைத்துக் கொண்டனர். கட்டிய அடுத்த ஆண்டே இக்கோட்டை ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் சோழ மண்டலக் கரைக்கு தலைமையிடமாயிற்று. கப்பல்களுக்கு கரைதெரிய கோட்டையின் மேல் கலங்கரை விளக்கமும் ஏற்படுத்தினர். இது 1841 ஆம் ஆண்டு வரை இங்கே செயல்பட்டிருக்கிறது.

கோட்டை கட்டிய கையோடு, அதனை ஒட்டிய பகுதிகளின் மீது கவனத்தை திருப்பினர். கோல்கொண்டா மன்னரிடமிருந்து திருவல்லிக்கேணி பகுதியை 1676ல் வாடகை அடிப்படையில் உரிமை பெற்று வைத்துக் கொண்டனர். மொகலாய அரசன் ஒளரங்கசீப்பிடமிருந்து எழும்பூர், தண்டையார் பேட்டை, புரசைவாக்கம் ஆகிய பகுதிகளை 1693ல் பெற்றனர். 1708ல் ஆர்க்காட்டு மன்னர் தாவூத்கானிடமிருந்து எண்ணூர், திருவெற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி ஆகிய பகுதிகளை பெற்றனர். மேலும் 1742ல் ஆர்க்காட்டு மன்னரிடமிருந்து வேப்பேரி, பெரம்பூர், புதுப்பாக்கம், பெரியமேடு முதலிய பகுதிகளைப் பெற்றனர். 1749ல் கோல்கொண்டா மன்னருடன் உறவாடி சாந்தோமை கைப்பற்றிக் கொண்டனர். இப்படி சிறிது சிறிதாக இடங்களை கையகப்படுத்தி அகன்ற பட்டணமாக ‘சென்னை’ உருவாக்கப்பட்டது. இந்த பகுதிகளில்தான் சென்னைக்கு பூர்வீக குடிகளாக கருதப்படுகிற மீனவர்களும் அடிப்படைப் பணிகளை செய்யக்கூடிய தொழிலாள வர்க்கங்களும், இவர்களை நம்பி தொழில் நடத்திய மேல்தட்டு சாதியினரும், நாயக்கர் மன்னர்கள் தங்களின் சேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு அழைத்து வந்த அவர்களுடைய இனத்தார்களும், நவாபுகளின் இன மக்களான முஸ்லிம்களும் வாழ்ந்து வந்தனர்.

ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைவராக இருந்த சோசியா சைல்ட் என்பவரின் முயற்சியால் 1687-ன் சாசனச் சட்டத்திற்கு ஏற்ப, 1688ல் ‘சென்னை மாநகராட்சிக் கழகம்’ அமைக்கப்பட்டது. ‘இந்தியாவில் முதன் முதல் அமைக்கப்பட்ட மாநகராட்சிக் கழகம்’ என்கிற சிறப்பு சென்னைக்குத்தான் உண்டு. ஆங்கிலேயர்கள் தங்களின் வசதிக்கும், மேன்மைக்கும் தொடங்கப்பட்டதாக இதனைக் கூறினாலும் நகர் வளர்ச்சியின் முதல்படியாக இதனைத்தான் கருத வேண்டியிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் தங்களின் வாணிபக் கழகத்திற்கு பொருட்களை கொண்டு வரவும், வியாபாரம் செய்ய ஒரு இடத்திற்கு விரைந்து செல்லவும் ரயில் விட்டனர். அந்த ரயிலை தமிழகம் முதன் முதல் கண்டது சென்னையில்தான். 1856ல் ரயில் பாதை உருவாக்கம் பெற்று படிப்படியாக வளர்ச்சி கண்டது. 1931ல் மின்விசை இரும்புப் பாதையாகவும் மாற்றம் கண்டது. உள்ளூருக்குள் கம்பிளிப் பூச்சி போன்று ஊர்ந்து கொண்டிருந்தது டிராம் வண்டி. சுதந்திரத்திற்கு பின்பும் ஓடிக் கொண்டிருந்த ‘டிராம்’ இராஜாஜி காலத்தில் நிறுத்தப்பட்டு விட்டது. ஆங்கிலேயர்களால் அகமதாபாத், மும்பை, கொல்கத்தாவுக்கு மேலாக வளர்ந்த நகராக சென்னை முன்னிலை படுத்தப்பட்டது. 1857ல் பல்கலைக் கழகம், 1862ல் உயர்நீதிமன்றம், 1876ல் துறைமுகம், 1867ல் வானிலை ஆய்வுக்கூடம், 1835ல் மருத்துவ கல்லூரி, 1884ல் மெரீனாபீச், 1882ல் உருவாக்கப்பட்ட நெசவாலைகள் (இதுவே பின்னாளில் பின்னி), 1870ல் மாநிலக் கல்லூரி, 1904ல் இந்தியாவின் முதல் சிமிண்ட் தொழிற்சாலை, 1905ல் கிங் இன்ஸ்ட்டியூட், 1938ல் வானொலி நிலையம் என ஒவ்வொன்றாக ஒவ்வொரு வருடமும் அறிமுகப்படுத்தி சென்னையை ஆங்கில மாநகர்க்கு இணையாக உருவாக்க முயற்சி கொண்டனர் ஆங்கிலேயர்கள்.

சுதந்திரத்திற்குப் பின் ஒவ்வொரு 5-ஆண்டு திட்டங்களின் மூலம் அடுத்தடுத்து அதாவது தென்னக இருப்புப் பாதை மண்டலம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, கிண்டி-அம்பத்தூர் தொழிற் பேட்டைகள், ஆவடி ராணுவ பீரங்கி தொழிற்சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கனரக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், எண்ணூர் அனல் மின் நிலையம், பன்னாட்டு விமான நிலையம், ஏற்றுமதி இறக்குமதி வளாகங்கள், கார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என சென்னையில் உருவாக்கப் பெற்று ‘பெருநகர்’ தகுதியை தொடர்ந்து தக்க வைக்கப்பெற்றது.

1941ல் எஸ்.எஸ். வாசன் அவர்கள் ஜெமினி நிறுவனம் ஏற்படுத்தியபின் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் திரைப்படப்பிடிப்பு அரங்குகளை உருவாக்க சென்னைக்கு சினிமா கவர்ச்சியும் கூடியுள்ளது. வடக்கே ‘மும்மை பாலிவுட்’ என்றால் தெற்கே ‘சென்னை கோலிவுட்’ என்றாகி விட்டது. 80களுக்குப் பின் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு சென்னையை தனித்து காட்ட வைத்தது. சகல விதத்திலும் இப்படி தொழில் மேலாண்மை சிறிது, சிறிதாக நுழைந்து ‘சென்னைப்பட்டிணம்’ சிறப்பு பெற்றதால் நாடு முழுவதிலிருந்தும் பலதரப்பட்ட ஆற்றல்கள் கொண்ட தமிழக மக்களும், பிற மாநில மக்களும் ஈர்ப்பு கொண்டு குழுமத் தொடங்கி விட்டனர். இன்று சென்னையின் சில பகுதிகளில் நாம் வலம் வரும் போது வட மாநில மாநகரின் ஏதாவதொரு பகுதியில் இருக்கிறோமா என்கிற உணர்வோடு, சென்னைவாசிகளின் ‘உடை, உணவு, பழக்க வழக்கம்’ ஆகியவற்றின் மாற்றத்திற்கு இதுவே காரணமாகவும் இருக்கலாம்.

தமிழகத்தில் வேறெங்கும் காண முடியாத பிரம்மாண்ட தொழிற் கூடங்களும், கணிப்பொறி மையங்களும், அகன்ற சாலைகளும், பிரமிப்பூட்டும் பாலங்களும், வெள்ளையர்களையும், நவாபுகளையும் நினைவூட்டும் பழமையான கட்டடங்களும், அவர்களின் பெயர்களால் அமைந்த வீதிகளும், அனைத்து மதச்சின்னங்களும், அரசியல் இயக்கங்களின் தலைமைக் கூடங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும், சீறிப்பாய்ந்து செல்லும் வாகனங்களும், ‘நவீனம்’ என்கிற பெயரில் கவர்ச்சியான ஆடைகளில் உலா வரும் இளசுகளும் பெரிய அந்தஸ்திலான உணவு விடுதிகளும், பறக்கும் ரயில்களும், பறவைகளாய் பறந்து செல்லும் தொழிலாளர்களும், பிரமாண்ட நகைக் கடைகளும், ஜவுளிக் கடைகளும் இதர வகையிலான வர்த்தக வளாகங்களும், பன்னாட்டு அலுவலகங்களும் இது தவிர எல்லாவற்றுக்கும் மேலாக கோடம்பாக்கத்து கனவுலக கொத்தளங்களும் சென்னைக்கு பிரமிப்பு ஊட்டி திகைக்க வைக்கின்றன. நாம் சந்திக்கும் எந்தவொரு சென்னைவாசியும் தொடர்ந்து ஐந்து நிமிடம் பிறமொழி கலக்காமல் முழுக்க தமிழில் பேச இயலவில்லை என்பதும்தான் வருத்தம் தரக்கூடியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com