Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
அயல் மகரந்தச் சேர்க்கை

நெஞ்சில் முளைத்த நெற்றிக்கண்
பேரா. அப்துல் காதர்

மணநாள். காளையோ கயிறுகட்டும். கண்ணிமை மேளங்கொட்டும். பாளையோ, பந்தலில் அட்சதை அள்ளிச்சொட்டும். காளையோ, நேற்றிருப்பில் எழுப்பும் நல்லோரைக் குரவை விண்ணை முட்டும். ஆனந்தக் கண்ணீர்ச் சொட்டாய் நகக் கண்ணில் மிஞ்சிச் சதங்கை ததும்பி நிற்கும். அவன் மணவரசன்; அவள் மணவரசி. கொஞ்ச காலம் மன்னராட்சி; கொஞ்ச காலம் அரசியாட்சி கொஞ்ச கொஞ்ச காலம் தொடர்ந்து மக்களாட்சி மலரும்.

குழந்தை இல்லா வீட்டு வாழ்க்கை சதங்கை கட்டாத நாட்டியம். கவிநயமாக வேண்டிய அபிநயம் ஊமைச் சைகையாய் உலர்ந்து போகும். வாமனமாய் வாழ்க்கைப்படும் தாலிக்கயிறு, தூளிக்கயிறாய் விசுவரூபம் எடுக்க வேண்டும். இல்லையேல் தூக்கு கயிற்றில் கனவுகள் நான்று கொண்டதைப் போல கன்னங்களில் கண்ணீர்க்கயிறுகள் இறங்கிவரும். ‘மம்மி’கள் புதைந்து பிரமிடுகளாய் மார்புகள் இறுகும். பெறுவற்கு அரியது என்பதால் தான் பிள்ளைப் பேறு என்றார்கள். வீடு பேறு என்பதே பிஞ்சுப் பிறைவிரல்களால் கிறுக்கப்படும் பேறு பெற்ற வீட்டைத்தான் குறிக்கும்.

மாடுகள் கட்டுமிடத்தைத் தமிழர்கள் ‘தொழுவம்’(தொழுவதற்குரிய இடம்) என்றழைத்ததற்கான காரணத்தை, நாலாயிரத் திவ்யப்பிரபந்தப் படிஉரை வழங்கிய பெரியவாச்சான் ‘பிள்ளை’பொருத்தமாகக் குறிப்பிடுகின்றார். கன்று ஈனும் பசு ஈனும் பொழுது மூசுமூசுவென்று பெருமூச்சு விடும். உலகம் பேறுகால வேதனையின் வெளிப்பாடு என்று பார்க்கிறது. ஆனால் ஈனும் பசு, முதன்முதலாகத் தன்பிள்ளை காலடி வைக்கும் இடம் தூசியும், தும்பும் கூளமுமாக இருத்தலாகாது, என்று உள்ளுணர்வு உந்த, பெருமூச்சு விட்டுக் கொட்டிலைக் கூட்டிப் பெருக்கித் துலக்குகிறது. அதனாலேயே கும்பிடுதற்குரிய கோமாதா ஆகிவிட்டது மாடு. கட்டும் இடம் தொழுவம் ஆகிவிட்டது என்கிறார் பாது. மனிதர்க்கு மட்டுமே உள்ள தனியுடைமையன்று.

செட்டி நாட்டிலிருந்து பொருள் ஈட்ட மலாக்கா சென்ற செட்டியார் குடும்பத்தையும், குழந்தைகளையும் செட்டி நாட்டிலே விட்டு விட்டுச் செல்கிறார். மலாக்காவிலிருந்து செட்டி நாட்டிலிருக்கும் ஆச்சிக்கு ‘அஞ்சல் அட்டை’ஒன்று எழுதும் படி தன் கணக்குப் பிள்ளையிடம் சொல்கிறார். செட்டி நாட்டு வீட்டின் கொல்லைப்புறம் உள்ள கிணறு மூடிபோடாதது. கிணற்றின் கைப்பிடிச்சுவரும் உயரம் குறைவாகி இடிந்துள்ளது. சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கொல்லைப்புறம் கிணற்றருகில் போய்விடாதவாறு எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள் எனத் தன் ஆச்சிக்கு எழுதச் சொல்கிறார். கடிதம் எழுதிய பிறகு செட்டியார் கணக்குப் பிள்ளையைப் படிக்கச் சொல்கிறார். எழுதிய கடிதத்தைக் கணக்குப் பிள்ளை படிக்கிறார்.

“குழந்தைகளை கிணற்றுப் பக்கம் போகாமல் பார்த்துக்கொள்” என்ற வரி படிக்கப்பட்டவுடன் ‘அடப்பாவி குழந்தைகளைக் கிணற்றுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டாயே’ என அலறுகிறார். கணக்குப் பிள்ளைக்குப் புரியவில்லை. வேறொரு அஞ்சல் அட்டையை எடுத்து எழுதச் சொல்கிறார். “கிணற்றின் கைப்பிடிச்சுவர் குட்டையாயுள்ளது. இடிந்துள்ளது. எனவே குழந்தைகளைக் கவனமாகக் கொல்லைப் புறத்திற்குச் செல்லாமல் பார்த்துக்கொள்” என்று எழுதப்பட்ட மறுகடிதத்தைப் படிக்கக் கேட்டவுடன், செட்டியார் “அப்பாடி! இப்போது பரவாயில்லை. குழந்தைகள் தூரமாக இருக்கிறார்கள்” எனப் பெருமூச்சு விட்டாராம். கிணறு, குழந்தைகள் என அருகருகே எழுத்தால் எழுதுவது கூட அந்த ஈர இதயத்திற்குப் பொறுக்கவில்லை.

தெலுங்கில் பாகவதம் எழுதத் தொடங்கிய கவிஞர் சில பாடல்களைத் தன் குருவிடம் காட்டினார். ‘கஜேந்திர மோட்சம்’காட்சி எழுதப் பெற்றிருந்தது. யானை குளத்தின் நடுவில் பூத்திருக்கும் தாமரையைப் பறிக்க நீருக்குள் இறங்குகிறது. துதிக்கையில் தாமரையைக் கொய்து கரையேறும் போது, முதலை யானையின் காலைப் பற்றி இழுக்கிறது. யானை அலறுகிறது.

“பரந்தாமா பறந்து வா, முதலையால் செத்துப் போவேன் என்பதற்காக அவசரமாக அலறவில்லை நான். கிருஷ்ணா, இதோ என் துதிக்கையில் இருக்கும் மலர் வாடுவதற்குள் உன் பாதத்தில் அர்ச்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக அலறுகிறேன்”. அந்த நேரம் பரந்தாமன் ஆதிசேடன் படுக்கையில், பாற்கடலில், மகாலட்சுமியோடு நெருங்கிக் கலந்திருக்கிறான். பக்தனின் அவலக்குரல் கேட்டு அவசரமாக உடையள்ளிச் சுற்றிக் கொண்டு கஜேந்திரனை நோக்கி வந்து காப்பாற்றுகிறான். பின்னர்தான் தன்னைக் கவனிக்கிறான் கிருஷ்ணன். அபயங்கொடுக்க வந்த அவசரத்தில் கிருஷ்ணன் மகாலட்சுமியின் சேலையைச் சுற்றிக் கொண்டதைப் பார்த்து நாணுகிறான். இப்படிச் சீடன் எழுதியதைப் பார்த்துக் குரு கோபித்துப் பொங்குகிறார். சீடனைப் பார்த்து, “நாசமாய்ப் போச்சு, பக்தனுக்குப் பகவான் அருள் வழங்கும் காட்சியில் பாலுணர்வு நெடிதான் தூக்கலாய் இருக்கிறது. ஆன்மீக மணம் கமழ வேண்டிய இந்த இடத்தில் இப்படிப்பட்ட அபசுரம் வரலாமா? மாற்றி எழுதி வா” என்றார்.

மறுவாரம் சனிக்கிழமை. குரு எண்ணெய் தேய்த்து நீராடும் நாள். கோவணத்தோடு கொல்லைப் புறம், உச்சிமுதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, ஊறட்டுமே என்று முக்காலியில் குரு அமர்ந்திருக்கிறார். சீடன் குருவின் கோலத்தை எட்டிப் பார்க்கிறான். பின்னர் நுழைவாசல் கதவருகில் நின்று கொண்டு “ஐயோ குருவே உங்கள் பிள்ளை சாலை நடுவில் வண்டி மோதி” என்று அலறுகிறான். கொல்லைப் புறமிருந்து வீட்டுக்குள் ஓடி, வாசலுக்கு வந்து, சாலையில் வந்து பதற்றமாக நின்று பார்க்கிறார். வழிபடற்குரிய மதிப்புமிக்க குரு கோவணத்தோடு நிற்பதைச் சாலையில் சென்ற மக்கள் வியப்போடு பார்க்கிறார்கள். சாலையில் அவர் குழந்தை இல்லை. வீட்டின் தலைவாசலில் குருவின் குழந்தை சிரித்தபடி நின்றான்.

பக்கத்தில் சீடன் ஓடி வந்த குரு சீடனைப் பார்க்கிறார். சீடன், “மகாலட்சுமியின் புடவையைச் சுற்றிக் கொண்டு திருமால் வந்தான் என்று நான் எழுதியது உங்களுக்குச் சினமூட்டியது. மரியாதைக்குரிய குரு, கோவணத்தோடு தெருச்சாலையில் நின்றது ஏன்? குழந்தையைக் காக்கும் அவசர ஓட்டத்தில் கோவணக் கோலம் மறந்துவிட்டது. தாயும் தந்தையுமான ஆண்டவன் பக்தனைக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் இருக்கிறான். உடைந்து அழும் குரல்தான் மூளையையும், இதயத்தையும் நிறைத்துள்ளதே தவிர, கோலம் பற்றிய நினைவு எழ வாய்ப்பில்லை. குழந்தைக்காக மாராப்பு ஒதுக்கும் தாயின் சித்திரத்தில் ஆபாசம் இருக்காது. பாசம்தான் இருக்கும்” என்றான்.

குழந்தையின் நிழல் முள்ளில் விழுந்தால் நெஞ்சுக்குள் காயம்பட்டுப் போகும் தாய்மையை அறிவோம். ஆனால் வைக்கோல் திணிக்கப்பட்டுக் கன்றுத்தோல் போர்த்திய பொய்கன்றின் தோலைக் கடித்து உள்ளிருக்கும் வைக்கோலை உண்ணும் பசுக்களைப் போல் இன்று குழந்தைகளும் உண்ணப்படுகிறார்கள்; குழந்தைத் தொழிலாளர்களாக. குழந்தைப்பருவமும் உண்ணப்படுகிறது. ஒரு விநோதமான பிள்ளையார் சதுர்த்தி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முதுகில் தொந்தி முளைத்த கான்வெண்ட் பிள்ளையார்கள். வணிகக் கல்விச் சமூகத்தால் நிர்ப்பந்தமாகக் கரைக்கப்படுகிறார்கள். தொலைக்காட்சி செவ்வக சிலுவையில் அறையப்பட்டு குழந்தை ஏசுகள். இந்நிலையில் ஜப்பானியக் கவிதை ஒன்று ஏக்கத்தை விளைவிக்கிறது.

“குழந்தையைத்
தூக்கினால்
கைவலிக்கிறது
கீழே
வைத்தால்
மனது வலிக்கிறது”

குழந்தைகளையே சுமைதூக்க வைத்துள்ள அவலப் பின்னணியில் ஜப்பானியக் கவிஞனின் ஈரம் நம் இதயத்தை நனைக்கிறது. பட்டாம் பூச்சிகளின் மேல் ‘பேப்பர் வெய்ட்’ பரிதாபம் இனி வேண்டாம். சங்கினால் பால்கொடுத்தால் சந்தனவாய் நோகுமின்னு, நுங்கினால் பால்கொடுத்த பாரம்பரியம் எங்கே போனது? மற்றொரு ஜப்பானியக் கவிதை மனதைப் பிழிகிறது. இறந்த தன் கைக்குழந்தையைப் பார்த்துக் கவிஞன்

“சாவு தேவதையே!
தயவு கூர்ந்து
என் குழந்தையைத்
தோளில் சுமந்து செல்
என்
குழந்தைக்கு
நடக்கத் தெரியாது”

என்று வேண்டுகிறான். மரணத்திற்குப் பிறகும் மரிக்காத மனிதநேயம் அது. நேருவின் ஷெர்வானியில், அவர் நெஞ்சுக்கு அருகிருந்த வெள்ளை ரோஜா ஏன் சிவந்துள்ளது? சீருடை மெய்யிறுக்க, பூங்கழுத்தை டையிறுக்க, தளிர் வயிற்றைப் பெல்டிறுக்க, சிறகுப்பாதங்களை கருஞ்சாத்தான் ஷு இறுக்க, மூச்சுத்திணறும் முல்லைகளைப் பார்த்து நாணத்தால் சிவந்ததா? பழங்கொய்யப்பட்ட வாழைச்சீப்பினைப் போல் வற்றும் விரல்களோடு பட்டாசுத் தொழிற்சாலையில் பாடுபடும் சிறுவர், சிறுமியர்களின் இரத்தக் கசிவை உள்வாங்கியா? அல்லது அந்தச் சிவப்பு ரோஜா நேருவின் நெஞ்சில் முளைத்த நெற்றிக் கண்ணா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com