Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006
நூல் விமர்சனம் : அகி -139 கவிதைகள்

பாசாங்கற்ற மெல்லிய கவிதைகள்
திருச்செந்தாழை

சில விரல்களால் வண்ணத்துப்பூச்சியை வரைய முடிகிறது. சிலவற்றால் அதனை பாடம் செய்து கண்ணாடி குடுவைக்குள் வைக்க முடிகிறது. உள்ளங்கைக்குள்ளிருக்கும் உயிருள்ள வண்ணத்துப்பூச்சியை ஒரு சிறுமியின் முகத்திற்கு முன் ஊதி பறக்க வைக்கின்ற வெகுசில விரல்களைப் போல எளிய, ஜீவனுள்ளது முகுந்த் நாகராஜனின் கவிதைகள்.

இ.மெயில் நண்பனின் பிறந்த நாளுக்கு பொக்கே அனுப்புகிறவர்களில் எத்தனை பேர் பேப்பர் போடும் சிறுவனுக்கு தங்களது பழைய சட்டைகளில் ஒன்றை பிரியமாய் தருகின்றனர்? பதின் பருவத்திலிருந்து தங்களது உடைக்கு இஸ்திரி போட்டுத் தரும் தள்ளுவண்டிக் கிழவனின் மரணத்தைக் கூட எளிதாய் புறந்தள்ளும் இன்றைய நகர வாழ்வின் மனிதாபிமானத்தை அதன் கோரமுகத்துடன் தன் எழுத்தின் வழி ஒளிபாய்ச்சி நம்முன் நிறுத்தி அதிரச் செய்கிறார்.

இவரது கவிதைகள் தனக்கான தனிமொழியை அமைக்க முற்படவில்லை. கரு தேடலிலும் மெனக்கெடவில்லை. நம்மை சுற்றி நிகழும் நுணுக்கமான நிகழ்வுகளை, அதன் உண்மைத் தன்மையுடன் நம்முன் நிறுத்துகின்றன. இந்த எளிய கவிதைகள் தீவிர இலக்கியம் பேசும் இதழ்களிலும் பெரும்பான்மையாய் பிரசுரம் ஆகியுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.

அகம், புறமென இரு பிரிவுகளான இத்தொகுப்பில் அகம் பற்றிய கவிதைகளின் பிரதான அங்கதத் தொனியில் நா.முத்துக்குமாரின் சாயலும், புறம் பேசும் மெல்லிய கவிதைகளில் கல்யாண்ஜியின் தொனியும் தோன்றுகின்றன. ‘ஒரே அம்மா’, ‘சூரியனை ரசித்தவள்’, ‘பூ விற்றவர்களில் ஒருத்தி’, ‘மழைப்பெண் சிரித்தாள்’, ‘போகும் பண்டிகை’, ‘காட்டுக்கு கலர் அடித்தவள்’, ‘சட்டென்று செவ்வகமான உலகம்’ போன்ற கவிதைகளின் வாசிப்பனுபவமும், புதிய, எளிய கருப்பொருள்களும் இத்தொகுப்பை முக்கியமானதாக்குகின்றன.

நறுக்கி, செதுக்கி சிலை செய்யாமல் மரத்துண்டை அதன் சுய ஓவியத் தன்மையுடன் பார்வையாளனுக்கு வைக்கின்ற மனப்பாங்குடன், தனது கவிதைக்கான வார்த்தை எல்லைகளை அதன் சுதந்திரத்துடன் நீட்டித்துள்ள முகுந்த் நாகராஜனின் முக்கிய பலவீனம் ஒரு குறுங்கவிதையின் கருவை வெகுவாய் நீட்டித்து அதனை சற்றே நீர்த்து போகச் செய்து விடுவதுதான். ஒரு வகையில் படைப்பாளியின் சுதந்திரம் என இதனை வரையறை செய்தாலும், திரும்பத் திரும்ப வரும் ஒரே சொல் ஒரு கவிதையின் நேரடித் தாக்கத்தை சற்றே வலுவிழக்கச் செய்துவிடுகின்ற அபாயம் இருப்பதை மறுக்கவியலாது. முகுந்த்தின் அடுத்த தொகுப்பில் இது போன்ற குறைகளுக்கு நிச்சயமாய் இடமிருக்காது என நம்பலாம்.

நூல் : அகி-139 கவிதைகள்
ஆசிரியர் : முகுந்த் நாகராஜன்
வெளியீடு : வரப்புயர
எண்.6, டாக்டர் ஜெயலெஷ்மி தெரு,
ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை-4.
விலை : ரூ.75/- பக்கம் :160



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com