Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006
நர்மதை அணைத் திட்டம்

தேங்கி நிற்கும் கண்ணீர் ஆறு
ராஜசேகரன்

“நாட்டுக்காக ஒரு கிராமத்தைப் பலியிடுவது பாவமல்ல”- அதிகாரம் செய்யும் ஆட்சியாளர்களின் தீர்ப்பு காலந்தோறும் இப்படித்தான் இருந்திருக்கிறது. அவர்களின் உபதேசம் வழியே ஒரு கிராமம் பலியிடப்பட்டால் கூட பரவாயில்லை; 193க்கும் மேற்பட்ட கிராமங்களையே மூழ்கடிப்பதென்றால் குறைந்த பட்சம் உபதேசத்தை எதிர்ப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்? அந்த மூழ்கடிக்கும் வேலையைத்தான் குஜராத், ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய 3 லட்சம் பேர் வீடு, வாசல், நிலம் எல்லாவற்றையும் இழந்து தெருவில் நிற்கிறார்கள். இதில் 9,456 குடும்பங்கள் மட்டும் குஜராத்தைச் சேர்ந்தவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Narmatha Dam கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் தென்னிந்திய ஆறுகளில் மிகப்பெரிய ஆறான நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை எனும் திட்டத்தால் தான் இந்த மூழ்கடிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது குஜராத் அரசு. அரபிக்கடலில் போய் கலக்கும் உபரிநீரை‘சேமிக்கிறேன் பேர்வழி’ என்று சொல்லிக் கொண்டு 1961ல் அன்றைய பிரதமர் நேருவால் துவங்கப்பட்ட இத்திட்டம் இன்று வரைக்கும் இப்பகுதி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்நிலையில் அணையின் உயரத்தை 110 மீட்டரிலிருந்து 121.92 மீட்டராக உயர்த்தப் போவதாக நர்மதை பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார் நர்மதா பச்சோ அந்தோலன் தலைவரும் சமூக சேவகியுமான மேதா பட்கர். 1985லிருந்து தற்போது வரை அணையின் உயரத்தை படிப்படியாக உயர்த்தி வருகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் எதுவும் தரப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கும் வரை திட்டப் பணிகளை நிறுத்தக் கோரி வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.

தில்லி ஐந்தர் மந்தர் சாலையில் 20 நாட்களாக மேற்கொண்டிருந்த தொடர் உண்ணாவிரதத்தையடுத்து, மத்திய அரசு உடனடியாக நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் தலைமையிலான குழு நேரில் சென்று அணையைப் பார்வையிட்டு வந்து நிவாரணப் பணிகள் போதுமானதாக அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி அறிக்கையை சமர்ப்பித்தது. இதையறிந்த குஜராத் முதலமைச்சர் 51 மணிநேர தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்ததையடுத்து விஷயம் பெரிதாகி, உச்ச நீதிமன்றம் வரை சென்றது.

கடந்த ஒரு மாதங்களாக நடந்த இந்த தொடர் பிரச்சனைகள், அறிக்கைகள், நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வுகள், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் ஒரு சேரக் கவனித்தபின் ஒரு முழுமையான முடிவுக்கு இலகுவாக வர முடிந்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள எல்லா அரசுகளும் ஏழைகளை இயன்ற வரையில் நசுக்குவதில் ஆனந்தம் கொள்கின்றன என்பது தான் அது. ‘வளர்ச்சி’ எனும் மாயபோதை லட்சக்கணக்கான பூர்வ குடி மக்களின் மரணங்களில் தான் என்பதை நினைத்து கொஞ்சமும் கவலைப்படுவதாகவோ, அது குறித்தான குறைந்தபட்ச அனுதாபம் அரசியல் கட்சிகளுக்கு இருப்பதாகவோ தெரியவில்லை. சமீபத்திய நிகழ்வுகள் அதை ஊர்ஜிதமாகவும் ஆக்கியுள்ளன.

1989ல் நர்மதை அணைப் பகுதிகளில் ஆய்வு செய்யச் சென்ற மேதா பட்கர் அங்கே மலைவாழ் மக்கள், ஆதிவாசி மக்களுக்கு எதிராக நிகழும் ‘இடம் விட்டு துரத்தலை’முடிவுக்குக் கொண்டு வர நினைத்து, தன்னை அவர்களுடனான வாழ்வோடு இணைத்துக் கொண்டார். அந்தளவிற்கு தொடர்ச்சியாக அந்தப் பகுதி மக்களுக்கு எதிரான தொடர் துரத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த தொடர் துரத்தல்கள் பாதிக்கப்படும் மக்களுக் கெதிரானது மட்டுமல்ல; அவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய அப்பகுதி தன்னார்வ குழுக்களுக்கும் சமூக சேவகர்களுக்கும் எதிரானதாகவே இருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் தொடர் உண்ணாவிரதம் இருந்த ‘மேதா பட்கர்’மீது தற்கொலை முயற்சி பதிவு செய்து வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றதும் அவரது ஆதரவாளர்களை அடித்துப் போட்டு காவல் நிலையத்திற்கு அள்ளிச் சென்றதும். ஒன்று இரண்டல்ல; இன்றைக்கு அவர்கள் மீதான வழக்குகள். நர்மதை மீட்பு இயக்கத்தின் மீதும் அதன் தோழமை அமைப்புகள் மீதும் இதுவரை 217 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மறுவாழ்வுப் பணிகளை தடுப்பதாகக் கூறி ‘மறுவாழ்வுப் பணிகள் வேண்டுமென்று குரல் கொடுப்பவர்களுக்கு’எதிராகவே அரசுத் தரப்பு வழக்கு தொடர்ந்திருப்பதும் இதில் விசித்திரமானது. அந்தளவிற்கு அரசு எந்திரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி எதிர்ப்புக் குரல்களை அடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

1979ல் அணைத் திட்டத்திற்கான முதலீடாக இருந்த ரூ.2100 கோடி இன்றைக்கு ரூ.27,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை யோசிக்காத மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் குறித்து நீண்ட மௌனம் சாதித்து வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடுகள்யாவும் தரப்பட்டு விட்டன என்ற மாநில அரசுகளின் அறிக்கை பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ‘திட்டப்பணிகளால் எத்தனை ஆதிவாசிகள், தலித்துகள் பாதிக்கப் பட்டனர் என்பது குறித்த விபரங்களைக்கூட மாநில அரசால் சரிவரத் தர முடியவில்லை’ என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தர குடும்பம் ஒன்றிற்கு ரூ.10லட்சம் செலவிடப் படவேண்டும் என்று உச்சநீதிமன்ற வழி காட்டல் நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்த மறுவாழ்வு செலவு ரூ.4000 கோடி என்று அரசால் கணக்கிடப்பட்டுள்ளது.

இழந்த நிலத்தைப் பணத்தால் ஈடு செய்ய முடியாது என்று சொல்லி, பணத்தை ஏற்க மறுத்த மக்களை வலியுறுத்தி, ‘அப்பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும்’ என்ற ஒரேகாரணத்திற்காக இழப்பீடு தருவதாக அறிவித்தன மாநில அரசுகள்.

“ரூ.10 லட்சம் இழப்பீடு என்றனர். அதில் 1 லட்சத்தை வருமான வரி என பிடித்துக் கொண்டனர். அதையும் பல தவணைகளில் தந்தனர். ஒவ்வொரு முறையும் ரூ.20,000 தர வேண்டும் என்று இழவு வீட்டிலும் பிடுங்கிக் கொண்டனர் அரசு அதிகாரிகள்” என்கிறார் பாதிக்கப்பட்ட ஆதிவாசி இளைஞர் மோகன்லால். 2004 ஆம் ஆண்டுக்கான மத்தியப் பிரதேச அரசின் தணிக்கைத் துறை அறிக்கையில் ரூ.15.78 கோடி அளவில் போலியான பெயர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வெகுஜன மக்கள் நலன்’ என்ற காரணத்தை முன்னிட்டே காலங்காலமாக இது போன்று நடந்து வரும் மலைவாழ் ஆதிவாசிகள் மீதான இந்த நெருக்குதல்கள் கடந்த 50 ஆண்டுகளில் விசுவரூபம் எடுத்துள்ளதாக ஐநாவின் மனித உரிமை ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி குறித்த இவர்களின் மனோபாவத்தில் ஏற்பட்டுள்ள புரிதல் சிக்கல்களும் ‘அடுத்தவன் குடியைக் கெடுத்தாவது தான் மட்டும் சுகபோகமாக வாழும்’ இந்த சுயநல மனோபாவம் சமூகவியலாளர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.

‘சிறுகக் கட்டிப் பெருக வாழ்’எனும் உயரிய கிராமத் தத்துவத்தை ஆட்சியாளர்கள் ஒருபோதும் உணர்வதாகத் தெரியவில்லை. “காடுகளை மூழ்கடித்து, வாழ்விடங்களை அழித்து, மக்களை வருத்திக் கட்டப்படும், பெரிய அணைகளை விடவும் ஏரி, குளங்களை மேம்படுத்துவதே சிக்கனமான, நிலைத்த நன்மை தருவது” என்கிறார் நீரியல் நிபுணர் சாண்ட்ரா போஸ்டல்.

Metha Patkar ஆட்சியதிகாரத்தில் இருந்த போதும் மென்மையான அணுகுமுறைக் கைக்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், சமீபத்தில் நடைபெற்ற இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் கருத்தரங்கில் இது குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் சற்று ஆறுதல் தருபவையாக உள்ளன.

“சுற்றுச் சூழலைப் பாதிக்காத வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற நம்பகமான அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டிய கட்டாயச் சூழலில் நாம் இருக்கிறோம். மேம்பாட்டுப் பணிகளில் வழிவழியாய் தாங்கள் வாழ்ந்து வந்த இடத்திலிருந்து மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படுகிறது. அடிக்கடி இத்தகைய பிரச்சனைகள் நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ச்சிப் பணிகள் இருக்கக் கூடாது. திட்டப் பணிகளால் கிடைக்கும் வளர்ச்சி, அதனால் மக்கள் இடம்பெயரும் நிலை, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நேரம் வந்து விட்டது. வளர்ச்சித் திட்டங்களை அமல் செய்யும் போதே திட்டத்தால் இடம்பெயரும் மக்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்” எனும் பிரதமரின் பேச்சு கடந்த காலப் பிரதமர்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த மனோபாவத்திலிருந்து சற்றே மாறுபட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தமைக்காக இந்தி நடிகர் அமீர்கான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவர் நடித்த விளம்பரப் பொருட்களை உடைப்பதும் உருவ பொம்மைக்கு தீயிட்டுக் கொளுத்துவதிலும் குஜராத்தின் மோடி ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதே நிலைமைதான் எழுத்தாளர் அருந்ததிராய்க்கும் ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் சகிப்புத் தன்மையற்ற போக்கின் நீட்சியாகவே இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இத்தகைய சர்ச்சைகளுக்குப்பின் திட்டப் பணியை பார்வையிட ஐ.நா.சபையின் 3 பேர் கொண்ட மனித உரிமை நிபுணர் குழுவும் “பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வரை சர்தார் சரோவர் அணை மட்டத்தை உயர்த்தும் பணியை நிறுத்தி வைக்கலாம்” என்று பரிந்துரைத்துள்ளது. ஆனால் குஜராத்தில் ஆளும் மோடி அரசு இதை காதில் போட்டுக் கொள்வதாகவே இல்லை.

சர்தார் சரோவர் அணை மட்டுமல்லாது 30 பெரிய அணைகள், 135 நடுத்தர அணைகள், 3000 சிறிய அணைகள் என நர்மதை நதியின் குறுக்கே புதிய அணைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணியின் போது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குரல்களையோ அந்தப் பகுதி மக்களின் குறைந்த பட்ச கோரிக்கைகளையோ ஆளும் அரசுகள் செவிமடுத்து கேட்பதாகத் தெரியவில்லை. மத்தியப் பிரதேசம் இதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதற்கான காரணம் இந்த அணை மூலம் அதிக மின்சாரம் கிடைக்கும் என்பதற்காகத் தான். ஆனால் நடப்பதோ தலைகீழாக இருக்கிறது. 2005ல் மத்தியப் பிரதேசத்திற்கு சர்தார் சரோவர் அணை மின் நிலையம் வழியே 370 மெகாவாட் மின்சாரம் தரப்படும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் கிடைத்ததோ 85 மெகாவாட்தான். இதன் மூலம் குறைந்த அளவு மின்சாரம் கிடைப்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவைகள் கணக்கில் கொள்வதுமில்லை. மத்தியப் பிரதேச அரசால் 4000 பேருக்கு நிலம் தந்ததாகக் காட்டப்பட்ட அரசுக் கணக்கும் பொய்யானதாக இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான இழப்பீடுகள் தராமல் எந்த வளர்ச்சிப் பணியையும் தொடரக் கூடாது என்பது நீதிமன்றத் தீர்ப்பு ஆகும். நிலத்தைச் சார்ந்தே வாழும் விவசாயிகளுக்கு 25ரூ நிலத்தையாவது பாசனம் உள்ள நிலமாகத் தரவேண்டும். குறைந்த பட்சமாக 2 ஹெக்டேர் நிலமாவது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தரப்பட வேண்டும் என்ற நீதிமன்ற வழிகாட்டுதலை அரசுகள் மதிக்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது.

அணைகள், ஆலைகள், அணுஉலைகள், சுரங்கங்கள் என வளர்ச்சி முகமூடி போட்டு வரும் ஒவ்வொன்றும் மக்கள் வாழ்விடத்தை, விளைநிலத்தை, குடிநீரை, இயற்கையை பலிவாங்கிக் கொண்டுதான் உள்ளது. இது குறித்து ஆட்சியாளர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.

அணையின் உயரத்தை 110 மீட்டர் அளவில் நிறுத்தி விட்டாலே, பாதிக்கப்படும் நிலையிலுள்ள மக்களில் 80% பேர் மாற்றிடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்காது என்பதையும் நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத்தினர் சுட்டிக் காட்டுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு மறைமுகமாக உதவும் இதுபோன்ற மெகா அணைத் திட்டங்கள் சமீப காலங்களாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இது ஆரோக்கியமான நிலையல்ல. இத்தகைய மெகா திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்னதாக அந்தந்தப் பகுதிகளில் மக்களின் நலனை முன்னிறுத்திச் செய்ய வேண்டியது மிக முக்கிய அவசியம். தண்ணீரைத் தேக்கி வைக்க அணைகள் தேவைதான்; அதே நேரம் அது மக்களின் வாழ்க்கையை மூழ்கடித்து சாகவைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில் அடுத்து வரும் சந்ததியினர் சென்ற தலைமுறை ஆட்சியாளர்களை ‘கொடுங்கோலர்கள்’ என்று சித்தரிப்பதை தவிர வேறொன்றும் நிகழாது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com