Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006

உயர் கல்வி : இட ஒதுக்கீடும் தர மதிப்பீடும்
ஆர். பிரேம்குமார்

படிப்பு முடிக்கும் முன்னரே ‘வளாகத் தேர்வு’ (கேம்பஸ் இண்டர்வுயூ) மூலம் மாதம் தோறும் இலட்சக் கணக்கில் ‘வாடகைப்பணம்’ (HIRE) பெற்றுக் கொள்ள வாய்ப்பு அளிக்கிற ஐ.ஐ.டி/ஐ.ஐ.எம் படிப்புகளில் இடஒதுக்கீடு செய்வதைத்தான் ருசி கண்ட பூனைகளால் ரசிக்க முடியவில்லை.

Ambetkar இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு 1902ம் ஆண்டிலேயே கோல்காபூர் சிற்றரசில் தோற்றம் கொண்டது. தொடர்ந்து மைசூர், மெட்ராஸ், பாம்பே, திருவிதாங்கூர் சிற்றரசுப் பகுதிகளிலும் வடிவ, சதவீத மாற்றங்களோடு இடஒதுக்கீடு அறிமுகம் ஆனது.

சுதந்திர இந்தியாவில், பிற்பட்டோர் நலன் பேண காகா காலேல்கர் தலைமையில் 1953ல் நேரு அமைச்சரவை ஒரு கமிஷனை நியமித்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு தொழில் நுட்பம் மற்றும் நிபுணர் பணிப் படிப்புகளில் 70 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க இந்தக் கமிஷன் பரிந்துரை செய்தது. அவ்வளவுதான்; அந்தக் கமிஷனுக்கு முடக்கு வாதம் பாதித்தது. நீண்ட கால படுக்கைக்குப் பிறகு, பிற்பட்டோர் நலன் பற்றிய கனவு அரசுக்கு வந்தபோது மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தார். இந்தியாவில் 52 சதவீதம் வருகின்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் திரளுக்கு இடஒதுக்கீடு மூலம் நன்மை செய்ய முடியுமா என்பதறிய பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் ஒரு கமிஷனை 1978 டிசம்பரில் மொரார்ஜி அரசு அமைத்தது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பற்றிய (மண்டல்) இரண்டாம் கமிஷன் அறிக்கை 1980ல் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மத்திய அரசு வேலைகளில் 27 சதவீதம் பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்க வேண்டும் என்ற சமூகநலம் சார்ந்த பரிந்துரை பற்றி மட்டும் ஆர்வமும், விவாதமும் மேலோங்கி நின்றன. அதோடு கூட பரிந்துரைக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு, நிலச் சீர்திருத்தம், நில விநியோகம், குத்தகை சீர்திருத்தம், குடிசைத் தொழிற் பயிற்சி, பொருளாதார முன்னேற்றம், கிராமப்புற முன்னேற்றம் பற்றி எல்லாம் பெரும்பேச்சு எழவில்லை.

மண்டல் கமிஷனின் சமூக நலன்கள் சார்ந்த பரிந்துரைகளை 7.8.90ல் வி.பி.சிங் ‘மத்திய அரசு வேலைகளில் 27 சதவீதம் இடஒதுக்கீடு’ என அறிவித்து தலைப்புச் செய்தி ஆனார். மண்டலின் கல்வி சார்ந்த பரிந்துரைக்கு ஏற்ப மன்மோகன்சிங் அரசு தற்போது உயர் கல்வியில் இடஒதுக்கீடு அளித்து கை தட்டல் வாங்கி இருக்கிறது.

1951ல் அரசியல் சட்டப்படி பிற்பட்டவர் களுக்கான இடஒதுக்கீடு செய்ய வழி இல்லை என்று சம்பகம் துரைராஜன் (Chmpakam Dorairajan Vs State of Madras) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றமும் சொல்லி விட்டது. இதனைத் தொடர்ந்து சமூக நீதியை நடப்பிலாக்குவது எப்படி என்ற சிக்கல் எழுந்தது. அப்போது தமிழ்நாட்டு முதல்வராக இருந்த காமராஜர் பிரதமர் நேருவைத் தொடர்பு கொண்டு பேசினார்.

அதன் விளைவாக சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் துணிந்து இந்திய அரசியல் சட்டத்தை திருத்த முன் வந்தார். இந்திய அரசியல் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டு (First Amendment to the constitution of India - 1951), 15(4) என்ற புதிய வாக்கியம் (Clause) இணைக்கப் பட்டு, கல்வி-சமூக ரீதியில் பிற்படுத்தப் பட்டோருக்கு அரசு மற்றும் அரசுசார் வேலைகளிலும் படிப்பிலும் முன்னேற்றம் ஏற்பட எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்ற உறுதி அளிக்கப்பட்டது. இந்த அஸ்திவாரத்தின் பலத்தில் நின்று கொண்டுதான் 1990ல் வி.பி.சிங் மண்டல் கமிஷனின் சில பரிந்துரைகளை நடப்பிலாக்க ஆணை பிறப்பித்தார். மத்திய அரசுசார் வேலைகளில் 27 சதவீத ஒதுக்கீடு கிடைத்தது. தற்போது அர்ஜுன்சிங் மத்திய அரசு மற்றும் உதவி பெறும் கல்வி நிலையங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டினை உறுதி செய்து 104வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் பிரிவு 15(5) என்ற புதிய வாக்கியம் உருவாக்கிய பெயர் வாங்கியுள்ளார்.

1989ல் தனது பொதுத் தேர்தல் அறிக்கையில் ஜனதா தளம் ‘மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறை வேற்றுவோம்’ எனக் கூறியது. ‘இலவச அரிசி’ மாதிரியான பரபரப்பை அந்த தேர்தல் அறிக்கை உருவாக்க வில்லை. எனவே குளிர்காலக் கூட்டத் தொடரில், அரசியல் சட்டத்தின் 93வது திருத்த மசோதாவை நிறைவேற்றிய போது ‘இந்தியா ஒரு நாளும் மாறாது!’ என்ற எண்ணம் கொண்டவர்கள் வீறுகொண்ட விவாதமோ விமர்சனமோ கிளப்பவில்லை. அந்தத் திருத்தத்தின் வீரியம் தற்போது கதிரியக்கம் துவங்கி இருக்கிறது.

அதன்படி, “சிறுபான்மையினர் நடத்துகின்ற கல்வி நிறுவனங்கள் தவிர ஏனைய அரசு உதவி பெறுகின்ற / பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில், சமூக அளவிலும் கல்வி அறிவிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த மாணவர்களை முன்னேற்றும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள” அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவுதான் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு.

“அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட முடியாது!” என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு கூறியது. கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு பற்றிய வழக்கில் (P.A. Indamdar Vs State of Maharastra) ஏழு நீதிபதிகள் அடங்கிய குழு ஒரு மனதாக 2005 ஆகஸ்டு 12ல் வழங்கிய தீர்ப்பைக் கேட்ட உடனே தயிர் சாதமும் புளியோதரையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த பலர் பலமாகக் கை தட்டினார்கள். இட ஒதுக்கீடு என்னும் ‘திராவிட அரக்கன்’ தனியார் கல்வி நிலையங்களைத் தீண்டவிடாது செய்து விட்டோம் என்று ஆனந்தப் பாற்கடலில் நீந்தி நீந்தி எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள்.

ஆனால்

“கம்பளிப்பூச்சி
எல்லாம் முடிந்தது
என நினைத்து மயங்கும் போது
ஒரு
வண்ணத்துப்பூச்சி உருவெடுக்கிறது!”

சமூக அளவிலும் கல்வியறிவிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்கும் விதத்தில் அரசியல் சாசனத்தில் 104வது திருத்த மசோதாவை நாடாளு மன்றத்தில் மனிதவளத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் முன்மொழியும் போது அமோக ஆதரவு. அமர்ந்திருந்த 381 உறுப்பினர்களில் 379 பேர் ஆதரவாக வாக்களித்து உள்ளனர். ஒருவர் எதிர்த்து வாக்களித்தார். ஒருவர் வாக்கு அளிக்கவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப் படுவதற்கு முன் பா.ஜ.க.வின் தடுத்தல் தந்திரம் எதுவும் அரங்கேறவில்லை என்றாலும் தன்பாட்டுக்குச் சும்மா இருக்க முடியாது என்ற உறுத்தலில் வி.கே.மல்கோத்ரா எழுந்து, இந்த இடஒதுக்கீட்டிலிருந்து சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாது என்று கூறினார். அது எடுபடவில்லை. இந்த சட்ட திருத்தத்துக்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்து விட்டார்.

இந்த மசோதா சம்பந்தப்பட்ட விவாதத்தில் பங்களித்துப் பேசிய மக்களவை உறுப்பினர்கள் நீதித்துறையிலும், தனியார் தொழில் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று பேசியதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த முறை, எதிர்ப்பு காட்டி தீக்குளிப்பு நாடகம் நடத்த உயர்சாதி மாணவர்களைத் தூண்டி விட வாக்குப்பெட்டிக் கட்சிகள் எதுவும் தயாராகவில்லை. தனியார் டி.வி. சேனல்கள் சில எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பு நடத்திக் காட்டின. யாரும் எதிர்பாராத வகையில் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது என்ற காரணத்தினால் அர்ஜுன்சிங்கின் அறிவிப்பு வாக்காளர்களைக் கவரும் உத்தியா என தேர்தல் ஆணையத் தரப்பிலிருந்து விளக்கம் கேட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளதைச் சுட்டிக் காட்டிப் பேசுவது விதிமீறல் ஆகாது என அர்ஜுன்சிங் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டே ஆக வேண்டும் என்ற சாதித் திமிருடன் தலைநகரில் உலா வரும் மண்டைகள் கடுமையான மறைதிரை முயற்சிகளுக்குப் பின்னர் சிலநூறு உயர்கல்வி பயிலும் உயர்சாதி மாணவர்களை போராடத் தூண்டுவதில் வெற்றி கண்டுள்ளனர். தில்லி மாநகரின் 5 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் கிளர்ச்சியில் இறங்கி காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கண்ணீர்ப்புகை பட்டு கண்களைக் கசக்கியபடி சென்றுள்ளனர். இவர்கள் தங்கள் ‘ரெடிமேட்’ அமைப்புக்கு ‘சமத்துவத்துக்கான இளைஞர்கள்’ (Youth for Equality) என்று பெயரிட்டுள்ளதுதான் வேடிக்கை.

“ஒரு நாள் வரும்; அன்று அர்ஜுன்சிங் அமெரிக்க அரசாங்கத்திடம் 50 சதவீத விசாக்களை எஸ்.சி. / எஸ்.டி. / ஓ.பி.சிகளுக்கு வழங்கச் சொல்லுவார்!” என்பது இந்தக் கிளர்ச்சியில் கிளப்பப்பட்ட கிண்டல் கோஷம். ஆனால் அந்த நாள் வந்தாலும் தவறு இல்லை என்பதுதான் சமூக விஞ்ஞானிகளின் பதில்.

Students எம்.ஏ., எம்ஃபில் போன்ற உயர்கல்விப் படிப்புகளுக்கு இடஒதுக்கீடு அமுல் செய்யப் பட்டிருந்தால் உப்பரிகைகளிலிருந்து கண்டனக் குரல் எழும்பி இருக்காது. அவை எல்லாம் ‘விளங்காத படிப்பு’ ஆகி விட்டதே! படிப்பு முடிக்கும் முன்னரே ‘வளாகத் தேர்வு’ (கேம்பஸ் இண்டர்வுயூ) மூலம் மாதம் தோறும் இலட்சக் கணக்கில் ‘வாடகைப்பணம்’ (HIRE) பெற்றுக் கொள்ள வாய்ப்பு அளிக்கிற ஐ.ஐ.டி/ஐ.ஐ.எம் படிப்புகளில் இடஒதுக்கீடு செய்வதைத்தான் ருசி கண்ட பூனைகளால் ரசிக்க முடியவில்லை. ‘விருப்பம் போல் வாடகைக் கூலி; விருப்பம் போல் வேலை நீக்கம்’ (HIRE & FIRE) என்ற முதலாளித்துவநோக்குடன் அமையப் பெறுகின்ற வேலைகளில், வேலையாளுக்கும் நிறுவனத்துக்கும் இடையில் ‘விசுவாசம்’ என்ற உறவு துளியளவும் இருக்காது. பணம் மட்டுமே கொள்கை என்ற குறுகிய மனப்பான்மையை உருவாக்கும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் நுழையக் கூடாது என்ற எண்ணம் ஆச்சரியம் தருவது அல்ல. ஏற்கனவே இந்நிறுவனங்களில் 22.5 சதவீதம் பட்டியல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. அதனோடு கூட, அர்ஜுன்சிங் அறிவித்துள்ள 27 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மக்களும் சேர்ந்து விட்டால் 49.5 சதவீதம், ‘வியர்வை வம்சத்தின்’ வாரிசுகளால் நிரம்பி விடும். மீதி உள்ள 50.5. சதவீதம் திறந்த வெளிப் போட்டிகளிலும் 10 சதவீதம் வரை பிற்படுத்தப்பட்டோர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தத்தில் இந்த நிறுவனங்களின் மாணவர் கலவையே மாறிவிடும். எனவே இராணுவத்துறை; மருத்துவம் மற்றும் பொறியியலின் உயர்நிலைப் படிப்புகளிலும், மேலாண்மைப் படிப்புகளிலும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக் கூடாது என்று ‘வாசகர் கடிதம்’ எழுத வர்ணாசிரம தர்மசீலர்கள் சிலர் இருக்கிறார்கள்.

ஐ.ஐ.எம்/ஐ.ஐ.டிக்களில் மாணவர்களைத் தேர்வு செய்ய நுண்ணறிவினைப் பரிசோதிக்கும் முறையிலான நுழைவுத் தேர்வு உண்டு. இந்த நுழைவுத் தேர்வு எழுதி இருக்கும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள்தான் உள்ளே நுழையப் பேகிறார்களே தவிர, கைநாட்டுப் பேர்வழிகள் யாருக்கும் ‘அட்மிஷன்’ கிடைக்கப் போவது இல்லை. நுழைவுத் தேர்வு எழுதாமலே இடஒதுக்கீடு செய்யப்பட இருப்பது போல கிராஃபிக்ஸ் வரைப்பது உண்மைக்குப் புறம்பானது. நமது கேள்வி எல்லாம், நுழைவுத் தேர்வுக்குப் பிறகு நடக்க இருக்கும் குழு விவாதம் (Group Discussion) மற்றும் நேர்முகம் (Personal Interview) ஆகியவற்றின் நேர்மை பற்றி மட்டும்தான். அந்தத் தேர்வுக் குழுவில் கண்டிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள் (பிற்படுத்தப்பட்டோர் மனோபாவம் மாறாதவர்கள்) இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த மதிப்பெண்களில் மாணவர்களின் மேதாவிலாசம் எவ்வளவு என்பதைக் கண்காணிக்க வாய்ப்பு ஏற்படும்.

ஐ.ஐ.டி.க்களில் நடக்கும் ‘ஏகலைவ வதம்’ பற்றி மர்மக் கதைகள் உலா வந்த வண்ணமுள்ளன. “எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் 5 வருட பி.டெக் படிக்க வற்புறுத்தப் படுகிறார்கள். மற்றவர்களோ 4 வருட படிப்பில் முடித்துக் கொள்கிறார்கள். ஐ.ஐ.டி. வழங்கும் எம்.டெக் படிப்புக்கு சேர்க்கை முறை பல எஸ்.சி./எஸ்.டி. மாணவர்களுக்கு வாய்ப்பை தவறவிடும் வகையில் ஒருதலைப் பட்சமாய் அமைந்துள்ளது...” என்று சொல்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா.

இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் என்றால் ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி, எ.ஐ.எம்.எஸ், டாடா இன்ஸ்டிடூட் ஆஃப் ஃபண்டமென்றல் ரிசர்ச் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்படிப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, நாட்டின் மொத்த மாணவர் சமுதாயத்தில் 1 சதவீதம் மட்டுமே. இந்த மாணவர்களின் உயர்படிப்பு இந்தியாவுக்கு எந்த அளவுக்குப் பயன்படுகிறது என்பது கேள்விக்குறி. ஏனெனில் இங்கே படிப்பு முடிந்தவுடன் பெரும்பாலானோர் மேற்படிப்புக்கு என வெளிநாடு சென்று விடுகின்றனர். அமெரிக்காவில் மேற்படிப்புக்குச் செல்லும் 86சதவீத மாணவர்கள் படிப்பு முடிந்தவுடன் இந்தியாவுக்குத் திரும்புவது இல்லை. இந்தியாவில் உள்ள ‘தலைசிறந்த’ நிறுவனங்களில் இடம் பிடித்துப் படித்து விட்டு, வெளிநாடுகளில் பணிபுரிந்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பில் மண் விழுந்து விடக்கூடாதே என்பது பற்றிக் கவலைப்படுகின்ற குடும்பங்களில் இருந்துதான் இடஒதுக்கீட்டுக்கு எதிரான குரல் கிளம்பி வருகிறது.

அகமதாபாத்தில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’ (I.I.M-A) ‘அமெதான்-2006’ (AMAETHON-2006) என்ற தலைப்பில் ‘வேளாண் வணிகம்’ (Agro-Business) பற்றி மூன்றுநாள் ஆய்வரங்கம் நடத்துகிறது. இந்த நிகழ்வுக்கு ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் ஆதரவு அளித்துப் பங்கு பெறுகின்றன. மாணவர்கள் இந்தியாவின் வேளாண்மை சார்ந்த வணிகம் பற்றி விவாதிக்கிறார்கள். இத்தகைய அரங்கத்தில் இந்தியாவின் கிராமங்களில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களின் உறவுக்காரர் யாராவது பங்கெடுத்தால் அது தரத்தைக் குறைத்து விடும் என்று ஒரு பேராசிரியர் சொல்வாரேயானால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சமீபத்தில் டெல்லியில் வைத்து நடந்த இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் (CII) சந்திப்பின் போது பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவின் பெருமூலதன நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தும் தொழிலாளர்களில் சமூக ரீதியாகப் பின்தங்கி உள்ள வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க முன்வர வேண்டும் எனக்கூறி இருக்கிறார். அரசியல் ஆடுகளத்தில் இடஒதுக்கீடு என்னும் பந்து உருளத் துவங்கி விட்டது. இது பற்றிக் கேட்டதற்கு (WIPRO) தலைவர் அஸீம் பிரேம்ஜி பதிலளிக்கையில், “இடஒதுக்கீடு குறித்த பிரச்சினையில் நாடு எதிர்கொள்கின்ற நிர்பந்தங்களை புரிந்து கொள்கிறேன் என்றாலும் எங்களுடைய நிறுவனம் ஆட்களைத் தகுதி அடிப்படையில் மட்டுமே தெரிவு செய்யும்!” எனக் கூறுகிறார்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராகச் சிலர் கிளப்பும் கேள்விகளின் ஞானம் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒருவர் குத்தலாகக் கூறுகிறார்: “யுனெஸ்கோ நடத்திய ஆய்வின் படி சராசரியாக பட்டியல் இன மக்களில் 53 சதவீதம் மாணவர்கள் 10 வயதுக்கு உள்ளால் படிப்பை முடித்துக் கொள்கிறார்கள். அரசாங்கமோ இவர்களுக்காக ஐ.ஐ.எம்.மில் இடஒதுக்கீடு அளிக்கிறது!” இந்தப் பேச்சின் சமூக அக்கறை பற்றி யோசிக்க நேரத்தைச் செலவிடுவதை விட ஒரு ‘சுடோகு’ குடிப்பது மேல்.

டாடாவும், நாரயணமூர்த்தியும் இடஒதுக்கீடு உயர் கல்வியின் தரத்தைக் குறைத்து விடும் என்று கூறி உள்ளனர். வியாபாரத்திலும் தொழிற் துறையிலும் சமநிலைக் கோட்பாடு (level playing ground) பற்றிப் பேசுபவர்கள் உயர்கல்வி அளிப்பதில் அப்படிப்பட்ட கோட்பாடு அமுல் செய்யப்படுவதை எதிர்ப்பது ஏன்?

1990-ல் ‘மண்டல் கமிஷன்’ என்ற பூதம் உயிர்த்தெழுந்து வந்த போது பயந்து போன ‘சாய்வு நாற்காலி அறிவு ஜீவிகள்’முதலில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டியது வேலைகளில் அல்ல; வேலைக்குத் தகுதிப்படுத்தும் கல்வியில் என்று மாற்று கூறினார்கள். கல்வியில் இட ஒதுக்கீடு அளித்து, பொருத்தமான அறிவாளிகளைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து உருவாக்க முடிந்தால், பிறகு, அவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வேலை அளிப்பது பற்றி யோசிக்கலாமா என்று ஆய்வுக் கட்டுரை எழுதினார்கள். இப்போது ‘உயர் கல்வியில் இடஒதுக்கீடு’ என்றதும், கவிழ்த்துப் போட்ட கரப்பான் பூச்சி போலத் துடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக இடஒதுக்கீடு நடப்பில் இருக்கிறது. இதனால்தான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி/கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெறுகிற ‘இரண்டாவது தலைமுறை’ பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உருவாகி இருக்கிறார்கள். இதுதான் உயிர் உள்ள சாட்சி.

இனி தேவைப்படுவது தனியார் நிறுவனப் பணிகளில் இடஒதுக்கீடு. இயற்கை வழியில் அதுவும் நடக்கும்.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com