Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006
கடவு அமைப்பின் - மொழிபெயர்ப்புக் கவிதை நூல் மதிப்பீட்டுக் கூட்டம்

மது இன்றைய அரசியல் மிகச்சுலபமான வர்த்தகத்துக்கான நிறுவனமாகிவிட்ட பின்பு அதன் சாதக பாதகமான அம்சங்கள் கலைஇலக்கிய நுண்ணுர்வு தளத்தில் மனிதரோடு இயற்கை, நிலம், மற்றும் அதன் நம்பிக்கைகள், அதன் வாழ்வு நலன்கள் யாவற்றையும் எவ்வாறு உறுதி செய்கிறது என்பதோடு விடுதலை பற்றி எவ்வாறு பரிந்துரைக்கிறது என்பது அறம் சார்ந்த சமகால கேள்வியாகிறது. இதற்கிடையில் சிந்தனைக்கும் பருப்பொருளுக்குமான உறவை மாயை என்றும் இரண்டல்ல எல்லாம் ஒன்றுதான் என்றும் பல நூற்றாண்டுகளை கடத்திய தத்துவத்தின் வழியே உடலின் இயல்பூக்கங்களை கீழ்மைப்படுத்தி ஒழித்து வந்த ஒருவழிப்பாதை முடிவுக்கு வந்து இன்று பன்மைப்பட்ட பாவனைகள், வேண்டுதல்கள், பல்வேறு உலகங்கள் அதற்கான பல்வேறு சிந்தனைகள் என்று மாற்றம் பெற்று பழைய தீர்ப்புகளை ஒத்தி வைத்து இடையே புதிதாக அவதானம் பெறும் நடைமுறைகள் பலவும் அமுலுக்கு வரும் காலத்தில் அதன் கவிதை அதிகாரத்தை மட்டுமல்லாது பல்வேறு சாதி, சமய, மத, இன மதிப்பீடுகளையும் சரித்து கீழிறக்கும் என்பதுதான் இன்றைய நவீன கவிதைகளுக்குள் பொதிந்திருக்கும் இழைகளாக இருக்க முடியும். இதுபோன்ற உரையாடல்களை பெருக்கிக் கொள்வதற்கான தளமாக மதுரை கடவு இலக்கிய அமைப்பு எந்த பின்னணியுமற்று எல்லா அறிவுஜீவிகளுக்கான உரையாடலில் தன்னைப் பண்படுத்திக் கொள்கிறது.

இதன் ஓர் அம்சமாக கவிதை மொழிபெயர்ப்பு நூலிரண்டினை வெளியீட்டு நவீன கவிதையின் இன்றைய போக்குகள் பற்றிய ஒரு ஆரோக்கியமான விவாதத்தையும் முன்வைத்தது.

எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோர் மொழிபெயர்த்த மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள் மற்றும் பல புதிய கவிதைகளை இணைத்து அடையாளம் பதிப்பகம் மூலமாக மறுபதிப்பு செய்யப்பட்ட அன்னா அக்கமதோவா என்ற பெயரிலான அக்கரைப்பூக்கள் கவிதைத் தொகுப்பு ஆகிய இவற்றை முறையே தமிழ்ச்செல்வன் வெளியிட எழுத்தாளர் பிரபஞ்சனும் தொ.பரமசிவம் அவர்கள் வெளியிட கவிஞர் உமாமகேஸ்வரியும் பெற்றுக் கொண்டார்கள்.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கவிஞர் தேவேந்திரபூபதி இன்றைய நவீன கவிதைகளின் வடிவம் உள்ளடக்கம் பேசுபொருள் போன்றவை இம்மாதிரியான மொழிபெயர்ப்புகளின் தாக்கத்தால் வீரியம் பெற்றிருப்பதாகவும் இந்நூல்கள் மறுமதிப்பு செய்யத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் முதல் பதிப்பிலேயே இவற்றின் மீது தான் மிகுந்த கவனமும் தன்னளவில் பாதிப்பும் பெற்றிருந்ததாகவும் கூறினார். தன் கவிதைக்கான முனைப்பு, இம்மாதிரியான மொழிபெயர்ப்புகளின் வடிவங்களை உள்வாங்கி இருப்பதை தான் உணர்வதாகவும் கூறினார்.

தமிழ்ச்செல்வன் பேசும்போது அரசியல் கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவ்விரண்டும் புத்தகங்களும் மிகச்சரியான உதாரணங்கள் என்பதோடு தொடர்ந்து உலகளவிலான படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்க அயராது உழைத்து வரும் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லி மனமார பாராட்டினார்.

அழகிய பெரியவன் குறிப்பிடும்போது மொழிபெயர்ப்பில் இன்னொரு நிலத்தின் பண்பாட்டு உறவுகள் எவ்வாறு இன்னொரு மண்ணோடு உறவு கொண்டு அதன் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மொழியாக மாறுகிறது என்பது பற்றி விளக்கினார். தமிழில் தலித் கவிஞர்கள் ஒருசிலரையும் உதாரணம் காட்டினார்.
இன்றைய மொழிபெயர்ப்புகளின் அவசியம் தவிர தமிழ்க் கவிதைகளை மற்ற மொழிகளுக்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் பற்றி எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோருக்கு முருகேச பாண்டியன் வேண்டுகோள் வைத்தார். தமிழில் மிகப்புதியதாக இளைஞர்கள் பலரும் எழுதி வருவது உலக கவிதை இயக்கத்திற்கு சற்றும் குறைவுபடாதது என்றும் அதிகமும் மொழி பெயர்ப்புகள் மட்டுமே வருவது அதன் சொந்த மொழிக்கு ஆரோக்கியமாகாது எனவும் வலியுறுத்தினார்.

பேரா.தொ.பரமசிவம் அவர்கள் பேசும்போது தமிழிலில் மொழிபெயர்ப்புகள் என்று எடுத்துப் பார்த்தால் அனேக முன்னாள் இலக்கியங்கள் பலவும் வேற்றுமொழியில் இருந்து வந்தவைதான் என்பது ஆச்சரியமாக இருக்கும். ஆனாலும் தமிழில் இருந்து சென்றிருப்பவை உலக அளவில் பெரும் வரவேற்பைஅடைந்திருப்பது நமது மொழியின் சிறப்பான தன்மையாக இருக்கிறது என்றார். நவீன கவிதைகளில் இலக்கியத் தரம் குறைவது சொற்புழக்கம் குறைவது வறட்சியாக இருப்பது அதன் இன்பத்தை குறைப்பதாகக் குறிப்பிட்ட அவர் இன்றைய ஏகாதிபத்திய சூழலில் நமது மொழியில் அதிகமாக எழுதுவதற்கு காரணங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறினார்.
கலாப்ரியா தனது உரையில் கவிதை மீதான தீர்ப்புகள் வரையறைகள் விமர்சனங்கள் படைப்புகள் என்று இயங்கி வந்த ஒரு தலைமுறை சனாதனிகள் வழக்கொழிந்து மதம் கடந்தவர்கள், சூத்திரர்கள் எனப்படும் புதிய இளம் தலைமுறையினர் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் குறிப்பாக பெண்கள் என நவீன கவிதை தனக்குள் பெரும் பாய்ச்சல்களை கொண்டிருக்கிற காலம் இது என்று குறிப்பிட்டார்.

பெண்கள் தங்கள் மொழியில் கவிதைத் தளங்களை துணிச்சலுடன் முன்வைக்கும் காலமாக இன்றைய சூழலை வரவேற்கலாம் என்று கூறிய எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு மொழியில் அதன் சமூக மாற்றங்களை பெண்கள் எழுதும் போதுதான் அவை புதியதாகவும் மாற்றுப் பார்வையாகவும் பதிவாகிறது என்பதோடு நவீன கவிதையில் இன்று இருபது பேர்களுக்கு மேலாக சிறப்புடன் எழுதி வருவதை தான் தொடர்ந்து வாசிப்பதாகவும் இம்மாதிரியான கூட்டங்களை தொடர்ந்து நடத்தும் போது அதன் வீச்சுகளுக்கு நம்பகத்தன்மையான அங்கீகாரம் கிடைப்பதாக கூறினார்.

யவனிகா ஸ்ரீராம் பேசும்போது இன்றைய ஏகாதிபத்திய நெருக்கடிகள் அதன் கண்காணிப்புகள் மற்றும் வியாபார நிர்பந்தங்கள் போக மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் தகவல் தொடர்பு சாதனங்களிலிருந்து மனித உடலை ஒளித்து வைக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். மேற்சொன்னவை யாவும் நம் இயல்பூக்கத்தின் எளிமையையும் உடலின் வாய்ப்புகளையும் கீழ்மைப்படுத்தி சந்தை மயமாக்கும்போது அதற்கு அகப்படாமல் உடலை புதிர்களாக்கி புனைவா மாற்றி மறைக்கவும் கொடூரமான அதன் ஒற்றைத்தன்மையை மறுக்கவுமே மொழியை கவிதைக்குள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

தமிழில் இலக்கியத்திற்கு எதிரான போக்கு அதிகரித்திருப்பதாக கூறிய கோணங்கி புதிய இளைஞர்களை அடையாளமிட்டுக் காட்ட வேண்டிய அவசியத்தை விட்டு பழைய ஆள் சொல்லிகள் மௌனமாகி இருப்பது தந்திரமான அரசியல் என்றார். தமிழில் நவீன கவிதை புதிய சிக்கல்களை எதிர்கொண்டு தடைகளை தாண்டி இருப்பதாக பாராட்டிய அவர் உரைநடையும் கவிதையும் தொழிற்படும் இடத்தில் இயங்கிவரும் தனக்கு நவீன கவிதைகள் உந்துசக்தியாக இருப்பதாய் முன்மொழிந்தார். நாவலும் கவிதையுமே மிகச்சிறப்பாக இருக்கின்ற இன்றைய நிலையில் சிறுகதைகள் இறந்து கொண்டிருப்பதாகவும் அவதானித்தார்.

ஏற்புரையில் எஸ்.வி.ராஜதுரை ஒரு நீண்ட கட்டுரையை மொழிபெயர்ப்பில் ஏற்படும் அவஸ்தையாக முன்வைத்தார். ஆங்கிலம் வழியாக மொழிபெயர்க்கும் போது அதன் மூல மொழிக்கு செய்யும் துரோகத்தை ஒப்புக்கொண்டவர், ஆங்கில மொழி இல்லையெனில் உலகின் ஒரு மூலையில் இருக்கும் நமக்கு பல்வேறு இலக்கியங்களுக்கான அறிதலை எங்ஙனம் சாத்தியமாக்கிக் கொள்ளமுடியும் என்பதையும் கேள்வியாக வைத்தார். பல்வேறு மொழிகளில் ஒடுக்கப்பட்டவர்களின் கவிதைகள் புதிய சமத்துவத்திற்கான கேள்விகளை வைத்திருப்பவை என்பதையும் குறிப்பிட்டார். மொழிபெயர்ப்பு குறித்து அவர் எழுதிய முக்கியமான கட்டுரை ஒன்று இக்கூட்டத்தில் சிறப்பாக கவனம் கூரப்பட்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com