Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006
சிறுகதை

ஆனக்குண்டு காசியார் புளியமரம்
ஹஸன்

புளி சாயுபு வீட்டின் பின் பக்கம் உள்ள மதிற்சுவரில் குடி வந்ததிலிருந்து மாசத்திற்கொரு முறை ராத்திரி ஊதுபத்தி மணமும், சூடவாடையும், ஒன்றோ, இரண்டோ பெண்களின் கீச்சுக்குரலும், அந்த குரல்களை, தொடர்ந்து துரத்தியடிக்கும் இரண்டோ, மூணோ ஆண்களின் சப்தமும், அவனின் பாயைச் சுற்றி தடவப்பட்ட வசம்பு விழுதின் நெடியைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். அவனின் தமிழ் வாத்தியார் ஆரோக்கியமுத்து, எப்பொழுதெல்லாம் முகச்சவரம் செய்து கொண்டு வருவாரோ. . . அன்று கதகளியும், குச்சிப்புடியும் ஆடி முடித்து விடுவார். அவர் ஒருமுறை சொன்னார். ‘அக்னி தேவதையின் நாக்குகள் தான் காளி, நீலி, பண்டார முழுங்கி. . .

‘ஐயா. . எழுதாமெ வெளையாடிட்ருக்கான்’

‘எவம்புலெ. . .’

‘வொசென்’

ஆரோக்கியமுத்து ஜயா வீசியெறிந்த, நோட்டுப் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்த கருஞ்செவலைப் பசு. . . மிச்சம் மீதி வைக்காமல் அசைபோட்டு தின்று தீர்த்தது. பசுவின் நாக்கு தீப்பிழம்பாய் தரையில் கிடந்து எரிந்து கொண்டிருந்தது. பசுவிற்கு பின்னால் பூசையில் அவன் பார்த்த தீயின் நிழலில், அடுத்த வீட்டு சுவரில் மேய்ந்த நிழல்களில் ஆரோக்கியமுத்து அம்மணமாக நின்று கொண்டிருந்தார். அன்றைய இரவின் தொடக்கத்திலிருந்து எழுந்த, எல்லா வகையான பொருட்களின் நிழல்களும், அவனைப் பொருட்படுத்தாமல் இருக்கின்றனவோ என்று அவனுக்குத் தோன்றியது. அந்த நிழல்களில் எரிந்து கொண்டிருந்த நாக்குகள், சிலரின் பெயரை காதில் கிசுகிசுத்தன. அவன் அந்த பெயர்களைப் பற்றி அதற்குமுன் கேள்விப்பட்டதேயில்லை. எனவே இன்னும் அதிகம் வசம்பு விழுதை பாயைச் சுற்றிலும் தடவினான்.

சில நாட்களுக்கு முன், அவனின் வாப்பாவைப் பெற்ற ‘பெத்தா’- கண்ணாடியை மூக்கில் மாட்டிக் கொண்டு, சொளவில் நாக்குகளைப் போட்டு புடைத்துக் கொண்டிருந்தாள். அவன் கண்களை கசக்கி விட்டுக் கொண்டு, பாயைத் திருப்பிப் போட்டு படுத்தான். தலையைத் திருப்பி பெத்தாவை உற்று நோக்கினான். அவனின் பெத்தா கையில் பிடித்திருந்த நாக்கின் மேல், ஆயிரத்துக்கும் அதிகமான சின்னச்சின்ன நாக்குகள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்ததைக் கண்டான். அவன் பாயைச் சுருட்டி ஏணிப்படிக்கு அருகிலுள்ள நாற்காலியில் வைத்தான்.

விடியற்காலையில் அவன், வாண்டுகளாகிப் போன நண்பர்களை அழைத்து, நேற்று நடந்ததைச் சொன்னான். கேட்டுக் கொண்டிருந்த வாண்டுகளாகிப் போன, நண்பர்களுக்குள் எந்தவித சலனமோ, வியப்போ உண்டாகவில்லை. அவன் ஆச்சர்யத்தோடு, சுற்று முற்றும் பார்த்தான். எதிர் வீட்டு காஜா காக்கா மட்கார்ட் இல்லாத சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தார். சேக்மைதீன் ஹஸறத்து, லுங்கியை அவிழ்த்தும் உதறியும், அவிழ்த்தும் உதறியும் வயிற்றுக்கு மேலே கட்டிக் கொண்டிருந்தார். சவுடாலி தோட்டத்தில் அடைத்து கிடக்கும் புதரிலிருந்து, திடீர் திடீரென ஒரே மாதிரியான வண்ணத்துப் பூச்சிகள் - எருக்கஞ் செடிகளை சுற்றி சுற்றி நேரத்தைப் போக்குகின்றன. கடைசியாக அவன் ஒரு முடிவெடுத்தான். இனி வாண்டுகளாகிப் போன நண்பர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ எதுவும் சொல்லக்கூடாது என்று.

ஆனக்குண்டு காசியார் புளியமரத்தில் ‘நொண்டைங்கா’ பறிச்சிக்கிட்டிருந்த போது, ஜெயில் போலெ, பட்டை பட்டையா, நாலு வெரக்கெடெ வீதியுள்ள மரச்சட்டத்துக்குள், அடைபட்ட மஞ்ஞெண்ணெய் பூசிய பீடத்தில் தன்னந்தனியா ஒரு நாக்கு தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கீழ் ஒரு வெட்டரிவாள் சாரி வைக்கப்பட்டிருந்தது. அன்று, நொண்டங்காயைப் பறித்து பள்ளி ஹவுளில் (தண்ணீர் தொட்டி) உள்ள கல்லில் தேச்சு, அதுலெ திரண்டு வரும் விழுதை, பூவரசு இலையில் வழித்தெடுத்து, நாடார் கடைலெ, பத்து பைசாக்கு தூள் சர்க்கரை வாங்கி, விழுதுலெ கலந்து தின்னா... தேனாமிர்தமா இரிக்கும். நாடாரு... எப்பெ குளிப்பாரோ... எப்பெ பல்லு தேய்ப்பாரோ... காலைலெ கடையெ தொறந்தா. . ராத்திரி பதினொரு மணிக்குத் தான் அடைப்பாரு... எப்பவோ வாங்குனெ சவ்மிட்டாய், கண்ணாடித்தாள் பையில் தொங்கிக் கிடக்கும். சவ்மிட்டாயெ கட்டெறும்பு அரிச்சு, எலும்புக கூடு போலெ, அந்த மிட்டாயெ பொதிந்திருந்த, கண்ணாடித்தாளு மெலிந்திருந்தாலும் அதை குப்பையில் வீச அவருக்கு மனம் வராது. கடையில் தராசு, சும்மா பெயருக்குத் தான் தொங்கும், எல்லாம் கைத்தாப்பாத் தான் அளந்து கொடுப்பார்.

‘பாட்டா... இது அழுவுனெ பாக்காம்... வேண்டாமாம்’- இது சேன்றம் வீட்டு மாஹீன்.

‘கொண்டலெ... இங்கெ... எப்பம்லெ வாங்கிட்டு போனே...’ நாடார் மாஹீனிடமிருந்து பாக்கை வாங்கி, மோந்து பாத்துக் கொண்டே ‘ஹ்ம்... எங்கனலெ வச்சே பாக்கெ... இப்பிடி நாறுது...’

‘போவும் பாட்டா... வேறெ தாரும்’.

நாடார், அழுகின பாக்கை, பாக்குபெட்டியில் போட்டுவிட்டு வேறொரு பாக்கை எடுத்து மாஹீனிடம் கொடுத்தார். நாடாரின் பொண்டாட்டி ஞானப்பழம் தான். காளி கோயிலில் அடைபட்டு கிடக்கும், பத்ரகாளியம்மனுக்கு, அடிக்கடி பூசை நடக்கும். பூசை ராத்திரி பெட்ரொமாஸ் விளக்கு வெளிச்சத்தில் சிவப்பு சாரியுடுத்திய நாடார் பொண்டாட்டி இன்னொரு காளியாட்டம் பயம் காணிப்பாள். முகத்தை திருப்பி பார்த்தா - ரவாலாடு சைஸ்லெ சிவந்த பொட்டு பெட்ரோமாஸ் மேன்டல்லெ நின்னு எரியும். கோயில் வாசலில், பொங்கலிட தேங்காய் துருவி, குவிச்சு வச்சிருந்ததை அவன் பார்த்தான். தேங்காய் தூவலும் ரத்தத்தில் பிசைந்து வைத்ததைப் போலிருந்தது.

அவன் நடந்து வந்து நொண்டைங் காய்களைத் தேடினான். தூக்கம் கலைந்த காகங்கள் சிறகடித்துப் பறந்து, பக்கத்தில் நின்று கொண்டிருந்த தென்னைகளில் புகுந்து கொண்டன. விடிந்தால் தெரியும் கூத்து, காகங்களுக்கு ஏற்பட்ட இடமாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை மற்ற காகங்களிடம் சொல்ல நடத்தும் கூப்பாடும் இரைச்சலும்; அவனைக் கண்டதும் தான் காகங்கள் நடத்தும். அவனுக்கு இனிமேல் நடப்பவைகள் எல்லாம் துச்சமாகப் பட்டது. சிலர், ஒரு நார்ப் பெட்டியைச் சுமந்த தடியனின் பின்னால் பேசிச் சிரித்துக் கொண்டே வேகமாக நடந்து சென்றனர். அவர்களின் பேச்சின் விவரம் அவன் அறிந்திராத போதிலும், அந்தக் குரல்கள்தான், நிழல்களில் எரிந்து கொண்டிருந்த இரவு நேரச் சடலங்களின் குரல் என்பது மட்டும் அவனுக்கு தட்டுப்பட்டது. அவன் கைகள் நொண்டங்காய்களைப் பறிப்பதற்காக - புளியமரக்கிளைகளில் வளைந்தும் நெளிந்தும் ஊர்ந்து கொண்டிருந்தன.

நவீனத்துவம் எப்போழ்து முடிந்தது என்று அவனுக்கு தெரியவில்லையாம். இப்போழ்து நண்பர்களாகிப் போன, வாண்டுகளிடம் சொல்லிப் பார்த்தான். அவர்கள் அவனை மலங்க, மலங்க பார்த்துக் கொண்டேயிருந்தனர். வெட்டு மலத்து காஜாக்கும், வொரு சட்டி கபீருக்கும், வாழத்தண்டு அனீபாக்கும், கறுப்பூஸ் சுலைமானுக்கும், கருவாடு அப்துல் அலிக்கும் சுண்டு புழுத்தி மாஹீனுக்கும், சுண்டெலி அய்யூபுக்கும் அவன் பன்னிக்கு மோற போல தெரிந்தான். அவன் மரத்தில நொண்டங் காய்களுக்குப் பதில், பருவமடைந்த சேறு காய்களை பறித்து போட்டான். அவை தரையில் விழுந்ததும், தண்டு மரம் வழியாக ஊர்ந்து சென்று, பறிக்கப்பட்ட காம்புகளில் பொருந்திக் கொண்டன. கற்பைச் சுமந்து, காய்த்து போன மண்டையை தொங்க விட்டபடி அந்த பெண்கள் நெருப்பு பந்து போல உருண்டு போனார்கள். நாக்கைக் சுழற்றிக் காண்பித்தபடி, புளியமரத்தில் வெளிச்சங்கள் முளைத்துத் தொங்கின. அவன் நொண்டைங்காய்களைப் பறித்து போடுவது போல பாவனை செய்து கொண்டிருந்தான்.

புளிய மரத்தடியில் மெத்தை நடை நடந்து வந்த கடுவன் பூனையொன்று, அவனை அண்ணாந்து பார்த்து, மெல்லிய குரலில் முனகியது. தூரத்தில் ஓடைக்கரை சாமியை சேவிக்க வந்தவர்களில், நார்ப்பெட்டியை சுமந்து சென்றவன், பூனையின் சிணுங்கலில் துணுக்குற்று திரும்பிப் பார்த்தான். இரண்டு இரவுகளும், இரண்டு பகல்களும் சொல்லிக் கொள்ளாமல் அவனை விட்டு விலகிச் சென்றன. திடீரென அவனுக்கு வீட்டு நினைவு வரவே, மரத்திலிருந்து சாடினான். ஏற்கனவே பறித்துப் போட்ட சேறுகாய்கள் தவிர. நொண்டைங்காய்கள் காய்ந்து, மண்ணுக்கடியில் புகுந்து - இதற்கிடையில் மழை பெய்ததோ, வெயில் அடித்ததோ, நண்பர்களாகிப் போன வாண்டுகளின் பாலியல் பேச்சுக்கள் பரவினவோ, என்னவெல்லாமோ நடந்திருக்கலாம். ஆனால், அவனின் உயரம் ஒரு அடியோ, இரண்டு அடியோ குறைந்திருந்தது போலவும் மரத்திலிருந்து சாடியபின், இன்னும் ஒன்றோ, இரண்டோ அடி குறைந்து குறுகி விட்டது போலவும் உணர்ந்தான்.

சிறிய இடைவெளிகளிலும், புலன்களில் தாங்காத ஏதோ ஒரு பிம்பம் தரையிலிருந்து எழுந்து, வளர்ந்து போவதையும், சிறிது தூரம் சென்றபின் களைப்பாக ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதே, பிம்பம் காணமல் போவதையும் உணர்ந்த அவன், தான் மட்டும் அசைவதை உணரும் நினைவுகளை மாயப் பொருள் போல் எண்ணி விடக்கூடாதே என்ற கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. ஆனக்குண்டு சாயுபு புளிய மரத்தை நிமிர்ந்து பார்த்தான். மரத்தில் இலைகளுக்குப் பதிலாக நாக்குகளும், காம்புகளுக்குப் பதிலாக தீப்பிழம்புகளும் தகதகக்க, மரத்தின் வேர்மூண்டுகளில் நொண்டங்காய்கள் முளைத்திருந்தன. அவன் அசாதாரண முறையில் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போனான். புளியமரத்தின் மீது அவனுக்கு அலட்சியம் உண்டானது. பிரபஞ்சங்களைப் பிழிந்து, பெறப்பட்ட ஞானங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு நடந்தவர்கள் பற்றி, நிறைய கதைகள் கேள்விப்பட்டிருந்தும், இவற்றைக் கொண்டெல்லாம், நண்பர்களாகிப் போன வாண்டுகளிடம் சொல்லி புரிய வைக்க முடியுமா? என்று ஆலோசிக்கத் தொடங்கினான்.

மறைந்து கொண்டிருக்கும் மொழியில் உடல்களை நக்கிக் கொண்டு, அலையும் நாக்குகளுக்கு, வாழ்வை எந்த வகையிலும் அடைய முடியாத ஒலிகள் தினமும் கழிவுப் பொருள் கூடையில் வீசப்பட்டுக் கொண்டிருந்தன. பன்னெடுங்காலமாக, புற உலகத்தோடு தொடர்பில்லாத நாக்குகளின் தலைவன் நாக்கு, வேறு எங்கேயும் மேயாமல், தன்னை நக்கியே சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. தன்னை இருத்திக் கொண்டிருந்த இடத்திலிருந்தே, தூரத்தில் போகிறவர்களையும் நக்கிப் பார்க்க துடித்தது. அவனுக்கு இதில் விருப்பம் குறைவாக இருந்த போதும், சட்டைப்பையில் தூங்கிக் கொண்டிருந்த நொண்டைங்காய்கள், சைகை காட்டிகளாக மாறி, அவனின் முன்னே ஒவ்வொன்றாக வரிசையாய் நின்றுக் கொண்டு வழி காண்பித்தன. அவன் கடித்துத் துப்பிய அவலெட்சணமான நொண்டைங்காய்கள் ஜன்னல் வழியாக வீட்டினுள் பிரவேசிப்பதை கண்டான். மறுபடியும் அவனின் நினைவுகள் உறங்கத் தொடங்கின.

நாடார், கடைப்பெட்டியில் சாய்ந்து கிடந்து கொண்டு, அடுப்புலெ போட்டாலும் எரியாத முண்டால் முகத்தை, தேய்த்து தேய்த்து அழகுபடுத்திக் கொண்டிருந்தார். கடையில் தொங்கிய பல்பு வெளிச்சத்தில், கருப்பட்டி இருக்கிற இடம் கரப்பான் பூச்சிகளுக்கு நல்லாவே தெரிந்தது.

‘பாட்டா... பப்படப்பூ இருக்கா’

‘. . . . . . .’ நாடார் காதில் வாங்காதது போல் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டிருந்தார்.

‘பாட்டா... பப்படப்பூ...’ அவன் சொல்லியனுப்பிய வாண்டு அவரிடம் கேட்டு முடிக்கும் முன்

‘போலெ... வோம் அம்மைட்டே போயிகேளுலெ... தாயிளீ... தண்ணியெ கோரி தலெவழியெ ஊத்திடுவேன். . .’ நாடார் படபடத்தார்.

பப்படப்பூக்கும், நாடாருக்கும் உள்ள உறவு பற்றி வாண்டுகளாகிப் போன நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி சிரித்தான். வாண்டுகளாகிப் போன நண்பர்கள் ‘ஆ’ன்னு வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அவனுக்கு இதெல்லாம் வீண்முயற்சியாகவே பட்டது. நொண்டைங்காய்கள் அவனைப் போன்ற பலருக்கும் பயன்பட்டதென வாண்டுகளாகிப் போன நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு அலைந்தான். அவன் வாண்டுகளாகிப் போன நண்பர்களோடு பெரியாத்துக்கு குளிக்கப் போனான். வழியிலே பிள்ளைக்காயைப் பறிச்சு வொடச்சு பாத்து ஆம்புளெபிள்ளெயையும், பொம்புளெ பிள்ளேயும் எண்ணிக் கொண்டே நடந்தான். ஆம்புளெ புள்ளெ நாலு, பொம்புள பிள்ளே பதுனாலு, ஒவ்வொரு தடவையும் பிள்ளைக்காயை உடைக்கும் போதும் அவனுக்கு பயம் அதிகமாகிட்டே இருக்கும். பதினெட்டாம்படி கோயில்லெ தொங்க விட்டிருக்கும் சிவப்பு பாவையும் பிள்ளக்கா பிள்ளைகளும் ஒண்ணு போலெ இருக்கும்.

ஆத்துக்கு வலப்பக்கம் சுமை தாங்கி சாமி, சாமியைத் தாண்டி கொஞ்சதூரம் போனா சுடுகாடு. பிணம் எரியும் போது, அந்த பொகையை மணத்துனா ஒத்தெத் தலைவலி போவும். தவளெ லத்தீஃப் சொன்னான். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. கம்பும், தடியும், அரளிப்பூவும், பொரியும், வாழை இலையும் மிதந்து வந்து கொண்டிருந்தன. அவன் ஆறுவரும் வழியை திரும்பிப் பார்த்தான். நாலைந்து ஆட்கள் ஈரிழை தோர்த்தும் உடுத்தி, அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் அன்று புளியமரத்துலெ ஏறினப்போ நார்ப் பெட்டியோடு நடந்து போன அதே தடியன். அவனுக்கு இப்போழ்து பிள்ளக்காவிலுள்ள, பிள்ளைகளெல்லாம் உயிர் பெற்று அதே உருவத்தில் கை கால் இல்லாத முண்டங்களாக நடந்து வருவதுவோல் தோன்றின.

சமாளித்துக் கொண்டு வேகவேகமாக ஆற்றில் இறங்கி லுங்கியை இடுப்பளவு நனைத்தான்;
முட்டைகட்டி நீந்தி அக்கரை போவதற்கு, நண்பர்களாகிப் போன வாண்டுகள், ஆற்றின் நடுப்பகுதியை தொட்டுக் கொண்டிருக்கும் முண்டத்து தென்னந்தடி வழியாக வேகமாக ஓடி, சாடி, நீந்திப் போனார்கள். அவர்களின் கும்மாளத்தில் ஆறு அலைந்து அலைந்து உலைந்து போனதோடு, உடைந்தும் போனது. வேட்டியை மடித்துக் கட்டி முட்டை போட்டான் அவன். முட்டையை சுமந்து தென்னந்தடியில் நடந்து குதித்தான். தண்ணீர்த் திவலைகள் அவனை வாயைப் பிளந்து விழுங்கின. முட்டை உடைந்து அவன் மூழ்கும் போது, வெளிச்சம் ஒரு வரிபோலெ தெரிந்தது.

கண்ணாடியின் முன், அவன் இல்லாமல் ஆனதை அவன் இருப்பதாக உணர்ந்து விழித்தான். ஆனக்குண்டு காசியார் புளியமரம் அவன் முன்னே நடந்து வந்து கொண்டிருந்தது. நேற்றெல்லாம் எதுவும் புரியாமல் சுற்றிக்கிறங்கி அலைந்து கொண்டிருந்த அவனின் வாண்டுகளாகிப் போன நண்பர்களின் நாக்குகள், அவர்கள் தோன்றிய போது இருந்த வயதைக் கடந்து இளமையாக இருந்தும், இருமல்களால் அவன் காதுகளை நிரப்பினர், புளியமரம் அவர்களைக் கட்டி இழுத்து வந்து கொண்டிருந்தது. அவன் கண்களைத் திறந்தான. அதில் தீச்சுவாலை எழுந்து, புளியமரத்தின் அடிப்பகுதியில் வளையம் போல மாய வலை பின்னியது. அவனிடம் முறைத்து விட்டுப் போன நார்ப்பெட்டித் தடியன் நொண்டங்காய்களை மரத்தில் ஒட்ட வைக்க, அவன் நண்பர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com