Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006

நேர்காணல் - டி. ராஜா
சந்திப்பு: ஹாமீம் முஸ்தபா

கேள்வி : தமிழக தேர்தல் நிலவரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

T.Raja தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்களிடம் ஏற்பட்ட அரசியல் எழுச்சியை விடவும் இந்த எழுச்சி அதிகம்; கோயம்புத்தூரிலும், திருச்சியிலும், மதுரையிலும் நான் இந்த எழுச்சியைப் பார்க்கிறேன். கடந்த ஐந்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்; அதிலிருந்து மக்கள் பெற்ற அனுபவங்கள்; அதன் மூலம் மக்கள் அடைந்திருக்கும் விழிப்புணர்வு; இதனால் மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஒரு ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சியை நடத்தியது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிற காரணத்தால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. அ.தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் மக்களை துச்சமாக மதித்து தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள். தங்களைத் தவிர மக்களுக்கு வேறு கதியில்லை என்ற ரீதியிலேயே ஆரம்பத்தில் அவர்களின் பேச்சு இருந்தது. அந்த நிலை, அ.தி.மு.க.விடமும் அதன் கூட்டணி கட்சிகளிடமும் இப்போது மாறியிருக்கிறது. மக்களைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள்.

கேள்வி : இலவசம் என்ற கருத்தாக்கம், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி இவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

யார் சொன்னார்கள் இலவசம் என்று. யாராவது தனிப்பட்ட முறையில் தங்கள் சொந்த செலவில் வழங்குகிறார்கள் என்றால் தான் இலவசரம். இது மக்கள் பணத்தில் வழங்கப் படுகிறது. மக்கள் பணத்தை மக்களுக்கே செலவழிக்கிற உறுதிப்பாடு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு வரவேண்டும். ஏழைகள் அதிகம் இருக்கிற மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இந்த நிலைக்கு தமிழகத்தைக் கொண்டு சென்றதில் சென்ற ஐந்தாண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க. அரசுக்கு பெரும்பங்கு இருக்கிறது.

இந்தியா முழுவதும் உணவு மற்றும் உரங்களுக்கு மானியங்கள் அதிகரிக்க வேண்டும் என்பது தேசிய கொள்கையாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் கொள்கை. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்றால் மானியத்தைக் கூட்ட வேண்டும் என்று பொருள். ஏற்கனவே ரேசனில் மூன்று ரூபாய் ஐம்பது காசுக்கு வழங்கி வருகிறார்கள். உணவுக்கான மானியத்தை மத்திய அரசு கூட்டினால் இரண்டு ரூபாய்க்கு வழங்க முடியும்.

அமெரிக்காவில் விவசாயிகள் மொத்த சமூகத்தில் ஒரு சிறுபகுதி. ஆனாலும் அங்கு மானியம் வழங்கப்படுகிறது. நியூசிலாந்தில், இங்கிலாந்தில், ஆஸ்திரேலியாவில் மானியம் வழங்கப்படுகிறது. டபிள்யூ.டி.ஓ. பேச்சு வார்த்தையில் முக்கியமான விசயம் மானியங்கள் தொடர்பானது. இந்தியா போன்ற வறுமை நிறைந்த நாடுகளில் உணவு என்பது அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும்.

கேள்வி : நிதியமைச்சர் ஒத்துக் கொள்வாரா?

அரசு என்பது ஒரு கூட்டுச் செயல்பாடு கொண்ட அமைப்பு. மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் அரசுக்கு உறுதிப்பாடு இருக்கும் என்றால் அதற்கான வழிவகைகளை அது ஆராயும்.

கேள்வி : வெங்கையா நாயுடு இது பற்றி விமர்சித்திருக்கிறாரே?

வெங்கையா நாயுடு தமிழகத்தில் இதுபற்றி பேசுவதை விடவும் அவர்களின் ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் இதைப் பற்றி பேசி இதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்று யோசிக்கலாம். அத்வானி, ராஜ்நாத் தலைமையில் ஒரு யாத்திரை நடை பெறுகிறது. ‘பாரத் சுரட்சா யாத்திரை’ என்று அதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். ‘பாரத பாதுகாப்பு யாத்திரை’ என்று அதற்கு பொருள். உண்மையில் அது பாரதீய ஜனதா கட்சியின் பாதுகாப்பு யாத்திரை. அந்த அளவுக்கு பா.ஜ.க. ஒரு தத்துவார்த்த, அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

கேள்வி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வைகோ அ.தி.மு.க அணியில் சேர்ந்தது அகில இந்திய அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

வைகோ அ.தி.மு.க. கூட்டணியில் போய் சேர்ந்தது அகில இந்திய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. வைகோவின் இப்போதைய செயல்பாடு சீரியசான அரசியல்வாதியின் செயல்பாடாகவே இல்லை. அ.தி.மு.க. அணியில் போனதற்கு இதுவரையிலும் அவரால் ஒரு அரசியல் காரணத்தைக் கூட சொல்ல முடியவில்லை. அவர் இப்பொழுது அரசியல் பேசுவதில்லை. அதனாலேயே அவருடைய பேச்சை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அரசியல் பேசாத ஒரு அரசியல் தலைவர் உண்டென்றால் அது வைகோதான். வெங்கையா நாயுடு கூறுகிறார்: ‘பொடா சட்டத்தை மட்டும் தான் நாங்கள் நிறைவேற்றினோம். அதை அமல் செய்தது அந்தந்த மாநிலங்கள்தான்’ என்று. வைகோ கூறுகிறார்: ‘பொடா சட்டத்திற்குக் காரணம் மத்திய அரசுதான். தமிழக அரசுக்கு அதில் பொறுப்பில்லை’ என்கிறார். பொடாவில் வைகோவை சிறையிலடைத்ததற்கு இன்று வரை ஜெயலலிதா மன்னிப்போ, வருத்தமோ தெரிவித்ததில்லை. வைகோ பேசிய அரசியல் நேர்மை, அரசியல் ஒழுக்கம் போன்றவற்றை அவரே கைவிட்டு விட்டு தடம் புரண்டு நிற்கிறார்.

கேள்வி : இடதுசாரிகள் நிர்ப்பந்தம் இருந்தபிறகும் ரயில்வேயில் மறைமுகக் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயரும் என்ற வதந்தி எல்லாம் நிலவுகிறதே?

ரயில்வே பட்ஜெட்டில் தாக்கல் செய்யும் போது இல்லாமல் மறைமுகமாக சில கட்டண உயர்வுகள் இருக்கின்றன. ஒரு இடத்திலிருந்து பயணம் செய்ய வேறு ஒரு இடத்திலிருந்து பதிவு செய்தால் பதிவுக்கட்டணம் ரூ.20 உயர்ந்திருக்கிறது. ரயில்வேயில் தனியார் துறையை படிப்படியாக நுழைக்கும் முயற்சிகள் தொடங்கி இருக்கின்றன. ஏழைகளுக்கு முழுவதும் ‘ஏசி செய்யப்பட்ட ரயில்கள்’ என்று கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால் ‘ஸ்லீப்பர் கிளாஸ்’ என்ற ஒரு வரையறையே இல்லாமல் ஆகிறது.
இந்த விசயங்களை எல்லாம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த அன்றே பேசினோம். அதுபோல விவசாயிகளின் கடன் வட்டி விகிதம் நான்கு சதவீதத்திற்கு வரவேண்டும் என்கிறோம். இன்னும் பல பிரச்சனைகள் மத்திய அரசில் இருக்கின்றது. எனவே ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்த பிறகு மே 21, 22 இந்திய அரசியல் சூழல் குறித்து ஆலோசித்து மதிப்பீடு செய்ய இருக்கிறோம். ஐக்கிய முன்னணி அரசுடனான அணுகுமுறையை மறுவரையறை செய்ய இருக்கிறோம்.

கேள்வி : நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நோபளத்தில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதில் மக்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள். மன்னராட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிரான ஜனநாயகப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது; இந்த முயற்சியில் நேபாளத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். ஏழுகட்சி கூட்டணியாக அது உருவாகி இருக்கிறது. மன்னர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் மாவோயிஸ்ட்களும் ஏழுகட்சி கூட்டணியும் அணி சேர்ந்திருக்கிறார்கள். இனி ஏழுகட்சி கூட்டணியும் மாவோயிஸ்ட்களும் கலந்துபேசி என்னவிதமான அமைப்பை உருவாக்குவது என்று திட்டமிட வேண்டும். அதுபோல் மாவோயிஸ்டுகளும் உருவாகி இருக்கின்ற புதிய அமைப்பில் தங்களுக்குரிய பங்கு என்ன? பணி என்ன? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

நோபளத்தில் இதுவரையில் ‘மன்னர்’, ‘பல கட்சி ஜனநாயகம்’ என்ற இரண்டு தூண்கள் இருந்தன. மன்னராட்சியை மக்கள் நிராகரித்ததின் மூலம் ஒருதூண் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த வெற்றியை இறுதி வெற்றி நோக்கி அழைத்துச் செல்வது அங்குள்ள ஏழுகட்சி கூட்டணிகளுக்கு முன்னிருக்கும் கடமையாகும்.

கேள்வி : இது இந்திய மாவோயிஸ்ட்களின் நிலையில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?

நேபாளத்தின் தன்மை வேறு. இந்தியாவின் தன்மை வேறு. நேபாளத்தில் மன்னராட்சி என்ற கொடுங்கோன்மைககு எதிரான போராட்டத்தில் மாவோஸ்ட்கள் ஆயுதமேந்தி போராடினார்கள். இந்தியாவில் அதுபோன்ற சூழல் இல்லை. ஆனால் நேபாளத்தில் மாவோயிஸ்ட்களின் செயல்பாடு இந்திய நக்சல் அமைப்புகளிடமும் இந்திய மாவோயிஸ்ட்களிடமும் மாற்றத்தை உருவாக்கும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com